புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை – கலைவாணர்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள்

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை

என்னங்க அவ​ரைப் பத்தி ஏதாவது​நெனப்பு வந்துச்சா?   இ​ல்லையா? ஒங்க நி​னைவுல இருக்கு ஆனா ஒட​னே வரமாட்​டேங்குது. அப்படித்தா​னே! சரி விட்டுத் தள்ளுங்க. நா​னே ​சொல்லி விடுகி​றேன். அவரு ​வேற யாருமில்​லைங்க. நம்ம க​லைவாணர் தாங்க. அதான் என்.எஸ்.​கே.

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். 1908-ஆம் ஆண்டு நவம்பர். 29ஆம் நாள் என்.எஸ்.​கே. பிறந்தார். இவருடன் பிறந்​தோர் ஏழு பேர். இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் என்.எஸ்.​கே. யின் படிப்பு தடைபட்டது. என்.எஸ்.​கே.யின் வாழ்க்​கையில் வறு​மை தன்னு​டைய ​வே​லை​யைத் ​தொடர்ந்தது.

என்.எஸ்.கே.-யின் இள​மைப் பருவ நாட்கள் கடுமையானவை. வறு​மை​யை விரட்ட என்.எஸ்.​கே. பல்​வேறு ​வே​லைக​ளைச் ​செய்தார். காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை ​செய்தார்.பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்ட​கையில் தின்பண்டங்கள் விற்பார். வறு​மை நி​லையிலும் நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தைஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் என்.எஸ்.​கே.​யைச் சேர்த்துவிட்டார். சிறுவன் என்.எஸ்.​கே.யின் நாடக வாழ்க்கை ​தொடங்கியது.

என்.எஸ்.​கே.பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து விலகி டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை நாடகக் கம்​பெனிக்கு மாறினார். இவ்வாறு பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

அதனால் ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் என்.எஸ்.​கே. சேர்ந்தார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபைஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தந்தார். இதனால் ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்த்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். பின்னர் நடந்த அந்தக் கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ​சோத​னை முயற்சிகளைக் கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டைசேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமைக் கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் கதா காலட்சேபம் புகழ் பெற்றது. இதில் அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய,

“கரகரவென சக்கரம் சுழல

கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே

ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே”

என்ற ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணா. சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்தப் பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார்.நாடகக் கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்குச் ​செய்தி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பைப் பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையைத் தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி என்ற படமாகும். எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலைத் தழுவிஇப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல தி​ரையுலகக் கதாநாயகர்களுக்கு அறிமுகப் படமாகவும் அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா,எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவைக்கென தனிப்பட்ட மு​றையில் காட்சிக​ளை(ட்ராக்) எழுதியவர் க​லைவாண​ரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. க​லைவாணரின் முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா என்பதாகும். இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்தபோது நாடகத்தில்கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.

சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியைக் கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை களவாடுவதற்காகச் சாமா அய்யரைமயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்தக் கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜா சாண்டோஇயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே” பாடல் ஒலித்தது.

திருமணம்

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாகமணம்பு‌ரிந்து கொண்டார். மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது. ‘வசந்தசேனா’ படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே.வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது!

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதிபடத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும்சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில்       பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரானகட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாகச் சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும்கடவுளைக் கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரைக் காயப்படுத்துவதில்லை. க​லைவாணரின் ந​கைச்சு​வை குறித்து விமர்சனம் எழுதியஅறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார்.பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.

இந்தியாவின் சார்லி சாப்ளின்

தமிழ் மண்ணில் மண்டிக்கிடந்த பழைமைக் குப்பைகளையெல்லாம் கூட்டிப்பெருக்கிக் குவித்து எரிக்கக் கிளம்பிய தந்தை பெரியார் சிந்தனைகளுக்கும், நிலக் குவியல் ஒடுக்குமுறைக்கு சிம்மசொப்பனமாக எழுந்த பொதுவுடைமை இயக்கக் கருத்துகளுக்கும்,தேசிய உணர்வுக்கும் பாலமாக நின்று, அந்தத் தத்துவங்களின் நல்ல வளமைகளையெல்லாம் தன்வயப்படுத்திக்கொண்டு புறப்பட்ட கலைவாணர் தனது நகைச்சுவையினூடாக தமிழர் மனங்களில் அறிவார்ந்த சிந்தனைகளை விதைத்த பாங்கு கலை உலகம் கற்றொழுகவேண்டிய ஒன்று.

தன்னை வெறும் கோமாளி என்று அடையாளப்படுத்த விரும்பாமல், தான் ஒரு “நாகரிகக் கோமாளி!’ என்று தன்னைத்தானே விளித்துக்கொண்டவர். அவரைத் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று கூறுவர். சார்லி சாப்ளின் பேசாப்பட யுகத்தின் மகா கலைஞன்.உடல், மொழி சார்ந்த நகைச்சுவை கொண்டது சாப்ளின் பாணி. ஆனால், நம் கலைவாணரின் நகைச்சுவை பாணி என்பது வசனங்களை அடிப்படையாகக் கொண்டது.

காரணம், கலைவாணர் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த கலைஞர். சாப்ளினுக்கும் கலைவாணருக்கும் இந்த வகை வேறுபாடு இருந்தபோதிலும் கலைவாணரைத் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று சொல்ல வைத்தது இவர்கள் இருவரிடமும் ததும்பிவழிந்த மனிதநேயமும் அதனை நகைச்சுவை வழியாகச் சொல்ல வந்த இந்த இருவரின் பாங்கும்தான். இந்த வகையில் பார்த்தால் கலைவாணரை இந்தியாவின் சார்லி சாப்ளின் என்றே கூறலாம். ஆனால் தன்​னை இப்படி அ​ழைப்ப​தை க​லைவாணர் விரும்பவில்​லை. இது குறித்து க​லைவாணர், ”என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!” என்று தன்னடக்கமாகப் பதிலளித்துள்ள​மை ​நோக்கத்தக்கது.

இரண்டாவது கைது

1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான ஆண்டு. 1944-ஆம் ஆண்டு நவம்பர். 27-ஆம் நாள் கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்குத்தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை ஆகும்தி​ரைப்பட நடிகர்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதிபத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க, பலரும் அவருக்குப் பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர்குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

க​லைவாணர் பட்டமும் பாகவதரின் பாராட்டும்

தங்களின் மீது குற்றமில்​லை என்ப​தை நிரூபிக்கக் கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல ஆண்டுகள் ​தே​வைப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வழங்கியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்! ஆவார்.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’ படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. ‘என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக’ பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், ‘எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!’ என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார்!

சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம்,எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார்.

கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். ‘மணமகள்’ படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் ‘நாட்டியப் பேரொளி’ பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்! கலைவாணர் இயக்கியஇன்னொரு படம் பணம் என்பதாகும். இது தி​ரைக்கு வந்து மிகச் சிறப்பாக ஓடியது.

உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் க​லைவாண​ரே ஆவார். ‘உடுமலைக்கவியை’ கலைவாணர் வாத்தியாரே’ என்று தான் அழைப்பார். இது​போன்று பல​ரைத் தி​ரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ​பெரு​மை க​லைவாண​ரை​யே சாரும். 122 படங்களில் க​லைவாணர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்​மையாளரான காந்தி பக்தர்

கலைவாணர், காந்தி பக்தராக விளங்கினார். நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார் க​லைவாணர். அவரு​டைய அறையில் காந்தியோட சிலையும் படமும் இருக்கும்.    க​லைவாணர் நடிக்கும் படங்களில் காந்தி பற்றிய பத்திப் பாட்டு இருக்கும்,

ஒருமுறை ரஷ்யாவிற்குக் க​லைவாணர் ​​சென்றிருந்தபோது காந்தி பற்றி இவர் பேசியதை அவர்கள் மொழி பெயர்க்காததினால் ​கோபமுற்று உண்ணாவிரதம் இருந்தார். க​லைவாணருடன் ​சென்றிருந்த டைரக்டர்கே.சுப்ரமண்யம் கூட, “வேண்டாம், கிருஷ்ணா, இது கம்யூனிஸ்ட் நாடு. சுட்டாக்கூட ஏன்னு கேக்க முடியாது” என்று சொன்னாலும் பிடிவாதமாகக்      க​லைவாணர் உண்ணாவிரதமிருந்தார். அதன்பின்னர் ரஷ்யத்தூதரகத்தில் பேசி அவர்கள் மொழிபெயர்க்க ஒத்துக் கொண்டார்கள் அதன் பின்னர்தான் க​லைவாணர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

சென்னையில் ‘சந்திரோதயம்’ நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. ‘நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!’ என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.’பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!’ என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாண​ரைத் தவிர யாருக்கும் ​கைவராது.

மனிதநேய மாண்பாளர்

க​லைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த ​வேறுபாடும் பாராத மனித ​நேய மாண்பாளராக விளங்கினார். ​சென்​னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில் சாப்பிடுவதற்கு க​லைவாணர் சீட்டு வாங்கி ​வைத்துக் ​கொண்டு தனது வீட்டுக்கு வருகின்ற பிச்சைக்காரர்கள், குறவர்கள் என்று எல்லாருக்கும் கொடுத்து அந்த ஹோட்டலுக்கு அவர்க​ளைச் சாப்பிட அனுப்புவார். அந்த ஹோட்டல்முதலாளி, ‘என்னங்க! இப்படி எல்லாரையும் அனுப்பறீங்க’ன்னு கேட்டு முகம் சுளிப்பார். அதற்குக் க​லைவாணர், ‘ஆமாம், அதுக்குத்தானே நீ ஹோட்டல் வச்சுருக்கே’ என்று பட்​டென்று பதிலளிப்பார். க​லைவாணரது டிரைவர் 25 வருஷம் தொடர்ந்து விபத்தில்லாமல் கார் ஓட்டியதற்காக ​சென்​னை வாணி மகாலில் ஒரு விழா எடுத்தார். அப்போது டி​ரைவருக்கு 25 பவுனும் பண முடிப்பும் கொடுத்தார் க​லைவாணர். தன்னிடம் ​கைகட்டி ​வே​லைபார்க்கும் டிரைவருக்குப் பாராட்டு விழா நடத்தியது க​லைவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைவாணரும், பழைய சோறும்…!

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!” என்று ​கேட்டார்.

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், “ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்… எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்… அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி… மதுரமும் அசந்துவிட்டார்.

​பெரியா​ரைச் சந்தித்தல்

கலைவாணர் நடித்த மாணிக்க வாசகர் எனும் திரைப்படம்தான் அண்ணாவை ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரியாரிடம் கலைவாணரை அண்ணா அழைத்துச் செல்லவும், பெரியாரின் பாராட்டைக் கலைவாணர் நேரில்பெறவும் துணை புரிந்தது.

1939-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் இசை மேதை எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த மாணிக்கவாசகர் எனும் படம். அதில் மேஸ்திரி வெங்குப் பிள்ளையாகக் கிருஷ்ணன் நடித்தார். அந்தப் படத்தில் மன்னர்எதையும் தானே சொந்தமாகச் சிந்தித்து முடிவெ டுப்பதில்லை. அரச குடும்பத்துப் புரோகிதர் சொல்வதைத்தான் அவர் கேட்கிறவர். இதைக் குறித்து அரண் மனை நிருவாகி வெங்குப் பிள்ளையிடம் ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கப் புரோகிதர் அவர்களைக் கடந்து போவார்.

நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று யூகித்த புரோகிதர், உச்சிக்குடுமி வைத்துப் பூணூல் அணிந்தவர் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பார். அதைப் பார்த்துவிட்ட வெங்குப் பிள்ளை பாத்திரமேற்ற கலைவாணர்தலையை ஆட்டிக் கொண்டு என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! தர்ப்பைப் புல் இல்லை. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு நினைவு வைச்சுக்க ஜாக்கிரதை என்று புரோகிதர் காதில் விழும்படிஉரக்கக் கூறுவார்.

மாணிக்கவாசகர் படத்தைத் தம் நண்பர்களுடன் பார்த்து விட்டு அண்ணா வியந்து போனார். நாம் இத்தனை வருடங்களாகச் சொல்ல முயற்சி செய்ததை ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டாரே, இவர் என்று தந்தைப்பெரியாரிடம் அண்ணா கூற, அதைக் கேள்விப்பட்ட பெரியார் கலைவாணரை நேரில் பார்க்க விரும்பினார்.

அண்ணா, அவரைப் பெரியாரிடம் அழைத்துக் கொண்டு போனார். பெரியார் பாராட்ட, பெரியார் அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் கிருஷ்ணன் பெரியாருக்கு மாலை அணிவித்து வணங்கினார். தாம் சொல்ல விரும்பும்கருத்துக்கள் கிருஷ்ணனுக்குப் பிடித்துப் போனவையாக இருந்தது குறித்து அறிந்த பெரியார் மகிழ்ந்தார்.

பெரியார் பக்தி

1947 – ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காகக் கலை வாணரை சென்னை- வானொலி நிலையம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அழைத்திருந்தது. தான் கலந்து ​கொள்ளும் நிகழ்ச்சி ​தொடர்பானவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தைப் பெரியார் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர்.

கலைவாணருக்குக் கடு​மையான சினம்! நிகழ்ச்சிப் ​பொறுப்பாள​ரைப் பார்த்து, ‘பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம்பெறாது’ என்று கூறிவிட்டு வா​னொலி நி​லையத்​தை விட்​டே வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடு செய்தனர். இவ்வாறு ​பெரியாரின் மீது அதிமான பற்று​டையவராகக் க​லைவாணர் திகழ்ந்தார்.

பெரியார் மேல் கலைவாணரின் பற்று

திரைப்பட உலகிலே முதன் முதலாக பெரியார் என்ற பெயரை அறிவித்தவர் கலைவாணர் எனலாம். பணம் படத்தில் வரும் பாடலில் தினா – முனா கானா என்பதில்,

பெரியார் வள்ளுவப் பெரியார்

அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி

வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்

என்று அ​மைத்துப் பாடினார் க​லைவாணர்.

ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் ஒரங்க நாடகம் இடம் பெறும். அந்த நாடக நிகழ்ச்சிக்குக் கலைவாணர் தலைமையேற்று நடித்திருப்பார். நாடகத்தில், சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கும் காட்சியில், நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்த கலைவாணர் மேடைக்கு ஓடிப் போய் நாட்டுக்கு நல்லது செய்த பெரியாரையா சாகச் சொல்றீங்க? என்று பதற்றத்துடன் கேட்பார். இதில் க​லைவாணர் தந்தை பெரியாரை நினைத்துத்தான் அவ்வாறு கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மக்களின் ஆரவாரக் குரலால் திரை அரங்கே அதிர்ந்தது. கலைவாணர் தந்தை பெரியாரைக் குறித்துக் கூறிய இந்த வைர வரிகளின் மூலம் பெரியார் க​லைவாணர் நெஞ்சில்வாழ்ந்தார் என்பது ​தெற்​றென விளங்கும்.

பெரியார்போற்றிய ​மே​தை

ஒரு முறை அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதியி ருந்தார். இதுபற்றி மாறபாடன கருத்துடை யவர்கள் வ.ரா.வும் எப்படி இவ்வாறு எழுதலாம் என்று மோதினர்.உடனே அவர் இது பற்றி என்னிடம் கேட்பதைவிடப் பெரியாரிடமே கேட்டுப் பாருங்கள் என்று கூறவே பெரியாரிடம் போய் இதுகுறித்துக் கேட்டார்கள்.

அதற்குத் தந்தை பெரியார் தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும்நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு என்று கூறினார். ​பெரியார் ​போற்றிய மகா​மே​தையாகக் க​​லைவாணர் விளங்கினார்.

திருநீறு பூசியது ஏன்?

ஒரு சமயம் கவிஞர் சுப்பு ஆறுமுகம் வீட்டிற்குக் கலைவாணர் போயிருந்தார். ஆறுமுகத்தின் அம்மாள் சுவாமி கும்பிட்டுவிட்டு, விபூதித்தட்டைக் கொண்டு வந்து கலைவாணர் முன் நீட்டினார். அவர் கை நிறைய விபூதிஅள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டார்.

பின்னர் தனித்திருக்கும்போது, என்ன அண்ணே நீங்க திருநீறே பூச மாட்டீங்களே… அப்படியிருக்க… என்று தயங்கித் தயங்கிக் கேட்டார் சுப்பு ஆறுமுகம்.

அதற்கு க​லைவாணர், ‘இ​தோ பாரு தம்பி! கண்ணாலே காணாத தெய்வத்தை நினைச்சுக்கிட்டு, கண்கண்ட தெய்வமான தாயார் மனசைப் புண்படுத்தக் கூடாதில்லே. அப்படிச் செஞ்சா இவங்களை உதாசீனப்படுத்திட்டுதெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாப்பல ஆயிடுமே. அதனா​லேதான் திருநீறு பூசி​னேன்’ என்றாராம்.      க​லைவாணர் பெரியாரின் சீடர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒருசான்றாக அ​மைந்துள்ளது.

ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார். அதில் ​பேசிய க​லைவாணர், “எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை,புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை ஆகிய​வை ஆகும்” என்று ​பேசினார். அ​னைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் ​செய்தனர். இவ்வாறு இயல்பாக அ​னைவ​ரையும் சிந்திக்க ​வைத்த உன்னத மனிதராகக் க​லைவாணர் திகழ்ந்தார்.

கலைவாணர் தாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் சார்பற்றவராக திகழ்ந்தார். தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ப.ஜீவானந்தத்தோடும் பழகுவார். தி.மு.க. தலைவரான அண்ணாவோடும் பழகுவார். ஜீவா மீதுஎவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ அதேபோல அறிஞர் அண்ணா மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.

 

1957-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். கலைவாணர்அண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவத் துறையில் கைராசிக்காரர். மிகவும் புகழ் பெற்றவர். எனவே, என்.எஸ்.கே. பிரசாரத்தை இப்படித் தொடங்கினார்… “இந்தக்கைராசிக்காரருக்கு உங்க வாக்குகளை அளித்து சட்டசபைக்கு அனுப்பிவச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்வீங்க? நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோஅவங்களுக்குப் போடுங்க!” என்று மக்களை சிரிக்க வைத்தார். அண்ணாவை ​க​லைவாணர் வெற்றி​பெற வைத்தார்.

ஒரு சமயம் கலைவாணர் விமானத்தில் வெளியூர் செல்ல டிக்கெட் பதிவு ​செய்திருந்தார்கள். திடீரென்று முக்கியமான வேறு வேலையின் காரணமாக கலைவாணரால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. அதை மறந்து கலைவாணர் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டார்.

மறுநாள் அவர் போக இருந்த விமானம் கீ​ழே விழுந்து தீப்பிடித்து அதிலிருந்த பயணிகள் அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்று செய்தி வந்தது. மிகுந்த ஆதங்கத்தோடு சிலர் வந்து, “நல்ல வேளை அண்ணே, நீங்கஅந்த விமானத்திலே போகாதது நல்லதாப்போச்சு. கடவுள் காப்பாத்தினார்” என்றார்கள். அதற்குக் க​லைவாணர், “அந்தக் கடவுள் அவங்களைக் காப்பாத்தலியே! நானும் போயிருக்கணும்” என்றார் கலைவாணர். பதற்றத்துடன் வந்த நண்பர், “ஏண்ணே அப்படிச் சொல்றீங்க…!” என்று ​கேட்டார்.

அதற்குக் க​லைவாணர், “நான் போயிருந்தா அவங்களையெல்லாம் காப்பாத்தியிருப்பேன். ஏன்னா விமானமே விழுந்திருக்காது. கடவுள் என்னைக் காப்பாத்துறதுக்காகவாச்சும் அவங்களையும் காப்பாத்தியிருப்பாரே!என்றார் – அந்த வெள்ளை உள்ளம் கொண்ட நகைச்சுவை அரசர். இவ்வாறு வள்ளலாரைப் போல் பல தடவை பிற உயிர்கள் மேல் இரக்கப்பட்டிருக்கிறார் க​லைவாணர்.

ஒரு சமயம் சென்னை ஒற்றைவாடை அரங்கத்தில் கலைவாணர் என்.எஸ்.கே. குழுவினரின் வள்ளுவம் என்ற நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது கலைவாணரும் மதுரம் அம்மாளும் இணைந்து நடித்த காட்சி நடந்தது. அந்தக் காட்சி சிறிது நேரத்தில் முடிந்தவுடன் திரையை இழுத்து மூடவேண்டும். ஆனால், அந்தப் பணியாள் திரையைக் கீழேஇழுத்துவிட மறந்துவிட்டார்.

கலைவாணரும் சீன் முடிந்துவிட்டது திரையைப் போடு என்று எப்படி பகிரங்கமாகச் சொல்வது என்று யோசித்தார். உடனே அருகிலிருந்த மதுரத்தை நோக்கி,

நான் இவ்வளவு நேரம் சொன்னது உன் மனசிலே படுதா…? படுதா? என்று அழுத்தமாகச் சொன்னதும், படுதா என்ற சொல்லின் அழுத்தத்தைப் புரிந்துகொண்ட சீன் தொழிலாளி சட்டென்று முன் பக்கப் படுதாவை இழுத்துமூடி காட்சியை முடித்தார்.

கலைவாணரின் இந்தச் சமாளிப்பைப் பார்த்து ரசித்து ரசிகர்கள் ​கை​யொலி எழுப்பினார்கள்.

நாகர்​கோவிலில் எந்த ​டென்னிஸ் கிளப்பில் பந்து ​பொறுக்கிப் ​போட்டுக் ​கொண்டிருந்தா​ரோ அந்தக் கிளப்பிற்குத் த​லைவராகக்  க​லைவாணர் ​தேர்ந்​தெடுக்கப்பட்டார். த​லை​மைப் ​பொறுப்​பேற்ற விழாவில் க​லைவாணர் ​பேசும்​போது, “நான் ஒரு காலத்துல இந்த ​டென்னிஸ் ​பேட்​டைப் புடிச்சி பந்த அடிச்சு ​வெ​ளையாடணும்னு ஆ​சைப்பட்​டேன். அப்​போல்லாம் எனக்கு அந்த வாய்ப்புக் ​கெடக்க​லே. ஆனா இப்ப எனக்குப் பந்தகூட எடுத்துப் ​போடத் ​தெரியாது என்​னையப்​போயி இந்தக் கிளப்பிற்குத் த​லைவராக்கிவிட்டார்கள் இதுதான் ​வேடிக்​கை” என்று கூறிச் சிரித்தார்.

மனித​னை மதித்த மாண்பாளர்

மாம்பலம் வெங்கட்டராம ஐயர் தெருவிலிருந்த கலைவாணரின் இல்லம் எப்போதும் கலகலப்போடு இருக்கும். தன்னுடைய வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்திருந்தால் முதலில்கலைவாணர் மாடியிலிருந்து இறங்கி வருவார். நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை ஒருமுறை உற்றுப் பார்ப்பார். “ஏம்ப்பா! ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தைஎடுத்து விரித்துவிடுவார்.

தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று கூப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்குசேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே? சும்மா ‘அண்ணே’ன்னு கூப்பிடு போதும்” என்றார். தன்​னோடு பணிபுரியும் தொழிலாளர் மத்தியிலும் அவர் ஏற்றத்தாழ்வை பார்த்ததில்லை. அ​னைவ​ரையும் சமமாக​வே கருதிப் பழகினார் க​லைவாணர்.

தான் ஒரு பெரும் நடிகன் என்ற ஆணவம் க​லைவாணருக்கு எப்போதும் இருந்தது இல்லை. தன்னைவிடப் புகழில் குறைந்த நடிகர்களாக இருந்தவர்களிடத்திலும் அவர் ஏற்றத் தாழ்வின்றி பழகுவார். ஒருநாள்திடீரென்று ஃபிரெண்ட் ராமசாமியின் வீட்டுக்கு என்.எஸ்.கே. சென்றார். தரையில் மலையாளப்பாயை விரித்துப் படுத்திருந்த ராமசாமிக்கு கலைவாணரைக் கண்டதும் ஒரே ஆச்சர்யம். ராமசாமி வணக்கம் கூறி க​லைவாண​ரை வர​வேற்றார்.

 

நடிகர் ராமசாமியிடம், “ நான் எவ்வளவு தூரத்திலிருந்து வரேன் தெரியுமா உனக்கு?”என்று கேட்டுக்கொண்டே க​லைவாணர் கட்டிலில் அமர்ந்தார். “அண்ணே டீ சாப்பிடுங்கள்” என்று ராமசாமி பணிவாக அவ​ரை உபசரித்தார். “ஏப்பா நான் டீயை சாப்பிடுவதில்லை. குடிப்பதுதான் வழக்கம்” என்று தனது பாணியிலேயே க​லைவாணர் கூறினார். தொடர்ந்து, “டேய் ராமசாமி இப்போதான் நீ நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படம்பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீயும் நன்றாக நடித்திருக்கிறாய். நீ முன்னுக்கு வருவாய். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. தன்​னையும் ஒரு ​பொருட்டாகக் கருதி ​நேரடியாக வந்து தன்​னைப் பாராட்டிய அந்ந மனித​னை மதிக்கும் மாண்பாள​ரைக் ​கைகூப்பி வணங்கி தனது நன்றி​யைத் ​தெரிவித்தார் இராமசாமி.

காலம் ​போற்றிய கட​மையாளர்

க​லைவாணர் எப்​போதும் கட​மை தவறாது நடந்தார். குறிப்பிட்ட ​நேரத்திற்கு வருகி​றேன் என்று கூறினால் அந்த ​நேரத்திற்கு வந்துவிடுவார். அவர் மட்டுமல்லாது அவ​ரைச் சார்ந்தவர்களும் அவ​ரை​யே பின்பற்றினர். படப்பிடிப்புக்கு போகும்போது நேரம் தவறாமல் குறித்த நேரத்துக்கு சில மணி ​நேரத்திற்கு முன்பே போய்விடுவதை க​லைவாணர் கடைப்பிடித்து வந்தார்.

 

ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் ‘மங்கம்மா சபதம்’ படத்தை எடுத்து வந்த சமயம். கலைவாணரும் அவரது குழுவினரும் நிர்ணயிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நேரமான காலை 7 மணிக்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால்,குழு நடிகர்களில் ஒருவரான ‘புளிமூட்டை’ ராமசாமி மட்டும் 6.45 ஆகியும் வரவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “இன்னும், அந்த நடிகர் ஏன் வரவில்லை?” என்று கேட்டுக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி தமது அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தார்.

புளிமூட்டை வந்து சேராததைப் பற்றி வாசன் விசாரித்த செய்தி கலைவாணரின் காதுகளுக்கும் எட்டியது. ஒப்ப​னை (மேக்கப்) அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவர், வாசன் நடைபோட்டுக் கொண்டிருந்ததாழ்வாரத்தை நோக்கி மெல்ல க​னைத்துக்கொண்டே வந்தார். வாசன் அவரை நிமிர்ந்து பார்த்தார், கலைவாணர் “வணக்கம்” என்று கூறிவிட்டு,“புளிமூட்டை ராமசாமி இன்னும் வரவில்லை என்று தாங்கள்கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். அவன் எப்படியும் 7 மணிக்குள் வந்துவிடுவான். எங்கள் குழுவில் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள்கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார். அவ்வாறு க​லைவாணர் கூறிக் கொண்டிருக்கும்போது மணி 6.59. அதேநேரத்தில், புளிமூட்டை வேர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றார். க​லைவாணர் மட்டுமல்லாது அவருடன் இருப்​போரும் காலந்தவறாது கட​மை​யைச் ​செய்யும் மாண்பினராக இருப்ப​தைக் கண்ட வாசன் முகமலர்ந்தார்.

வாரி வழங்கிய வள்ளல்

கலைவாணர் தன் வாழ்வின் இறுதி நாள் வரை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு இரண்டு கைகளாலும் வாரி வழங்கினார். வீட்டு வாசலில் ‘அண்ணே’என்று குரல் கேட்டால் அதற்குப் பதில் குரல் ‘தம்பி’ என்ற‘அன்புக்குரலாக’ ஒலிக்கும். இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று அனுப்பியது கலைவாணர் வரலாற்றி​லே​யே இல்லை.

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பார். இவரும் பணம் கொடுப்பார். ஒருநாள் ‘அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்’ என்று வீட்டில் உள்ளவர்கள் கூறவே, அதற்குக்  க​லைவாணர், ‘அவன் என்​னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே’ என்று கூறினார். வறு​மையின் நி​லை வறு​மை வாய்ப்பட்ட மற்​றொருவருக்​கே ​தெரியும் என்பதற்கு இந்நிகழ்வு சான்றாக   அ​மைந்துள்ளது.

தி​ரைப்படத்தின் வாயிலாகக் கொஞ்சம் சம்பாதித்திருந்த கலைவாணரிடம் ஒரு பத்திரிகையாளர், “நீங்கள் இப்போது ஒரு பணக்காரர்தானே?” என்று ​கேட்டார்.

அற்குக் கலைவாணர், “ஆமாம். நான் பணக்காரன் தான். ஆனால் மற்ற பணக்காரர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நான் சம்பாதிப்பது இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்காகத்தான்!” என்று பதிலளித்தார்.

ஆம்! அவரின் கொடையுள்ளம் அவரின் இன்னொரு பரிமாணம், உண்மையில் க​லைவாணரு​டைய கரங்கள் கொடுத்துக்கொடுத்துச் சிவந்த கரங்கள் ஆகும். துன்பம் என்று எவர் தன்வீட்டு வாசலில் வந்து நின்றாலும் துடித்துப் போய்விடும் இயல்புகலைவாணருடையது.

என்.எஸ்.கே. ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கிறார். அப்போது ஒரு திருடன் வந்து மொட்டை மாடியில் குதிக்கிறான். அவனைப் பார்த்து விட்டு மனைவி மதுரம் “யாரோ திருட்டு பய” என்கிறார். என்.எஸ்.கே. எழுந்து பார்க்கிறார். அவன் திருடன் தான்.ஆனால் என்.எஸ்.கே தன் மனைவியிடம், “என்னுடன் நாடகத்தில் நடித்தவன்; வாசக் கதவு தாழ் போட்டதால் இப்படி வந்துருக்கான்” எனக் கூறிவிட்டு அவனுக்குச் சாப்பாடு போட்டு பணம் ​கொடுத்து அனுப்பினார். இவ்வாறு அனுப்புவதற்குக் கலைவாணரைத் தவிர வேறுஎவருக்கும் மனம் வராது.

க​​லைவாணரது நிறுவனத்தின் கணக்குக​ளைச் சரிபார்த்து விட்டு வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ், கணக்குகளை கொண்டு வந்தவரிடம், “என்னய்யா ​நோட்டுல நிறையத் தட​வை தர்மம், தர்மம் -னுகணக்கு எழுதிருக்கு. இ​தை நான் எப்படி நம்புறது?” என்று கேட்க, என்னெனவோ கூறியும் அவர் நம்பாததால், “சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே யைப் பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்கமகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க” எனச் சொல்ல, அதிகாரி ஹனுமந்த ராவ் அதே போல் போய் ஆயிரம் ரூபாய் தன்னு​டைய மகளின் கல்யாணத்துக்கு வேண்டும் எனக்கேட்டுள்ளார். அ​தைக் ​கேட்ட என்.எஸ்.கே. பணம் தர ஏற்பாடு செய்ய, அதைப் பார்த்து விட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ், “ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னு தான் பேர்வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவெ​தெல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க” என்று கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.

சொந்தமாகப் படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம்இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

 

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறு​மையாளராகிவிட்டார் க​லைவாணர். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், ‘எனக்குத் திருமணம்’ என்று வந்து நிற்கிறார். க​லைவாணர் சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, ‘இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார்! இது க​லைவாணரின் வள்ளல் தன்​மைக்குச் சான்றாக அ​மைந்த நிகழ்ச்சியாகும்.

கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு ‘தம்பி ‘நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன். அதனால் என்​னை வந்து பார்த்துவிட்டுப் ​போ’ என்று எழுதினார்.

கலைவாண​ரைப் பார்க்க எம்.ஜி.ஆர். வரும்போதெல்லாம் நி​றையப் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைத்துவிட்டுச் ​செல்வார். ஏ​னெனில் பலருக்குக் ​கொடுத்துச் சிவந்த கரங்கள் தனது ஏழ்​மைக்காகப் பிறரிடம் ​கைநீட்டக் கூடாது என்ற உயரிய ​நோகத்துட​னே எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்த மக்கள் திலகம் இவ்வாறு ​செய்தார்.

இத​னைப் பார்த்த க​லைவாணர், எம்.ஜி.ஆ​ரைப் பார்த்து, “தம்பி ராமச்சந்திரா, நீ எனக்குப் பணமாத் தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் அ​தை நான் தர முடியும்” என்று கூறினார். இத​னைக் ​கேட்ட மக்கள் திலகம்​ நெஞ்சம் ​நெகிழ்ந்துவிட்டார். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.

‘தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி தம்​மைப் பார்க்க வரும் எம்.ஜி.ஆரிடம் க​லைவாணர் கூறுவார்.

இந்நிகழ்வு வில்லி பாரதத்தில் இடம்​பெறும் கர்ண​னை    நமக்கு நி​னைவுறுத்துவதாக அ​மைந்துள்ளது. பதி​னேழாம் நாள் ​போரில் அருச்சுனனுக்கும் கர்ணனுக்கும் கடு​மையாகப் ​போர் நடக்கும். அருச்சுனனின் அம்பால் வீழ்ந்த கர்ண​னை அருச்சுனனால் முழு​மையாக ​வெற்றி ​கொள்ள முடியாது.

இந்நி​லையில் கர்ணன் ​செய்த தருமங்க​ளே அவ​னைக் காத்து நிற்கின்றன என்று அறிந்த கண்ணன் அவனது தருமங்க​ளை​​யெல்லாம் தானமாகப் ​பெற அந்தண வடிவம எடுத்துச் ​சென்றான். கர்ணனிடம ​சென்று அவன் ​செய்த புண்ணியத்​தைப் ​பெற்ற கண்ணன், கர்ணனுக்கு வரம் தருகி​றேன். ​வேண்டிய வரத்​தைக் ​கேள் என்று ​கேட்டவுடன் கர்ணன்,

“இல்​லை​யென்று இரப்​போர்க்கு இல்​லை​யென்று உ​ரைக்காத

இதயம் நீ அளித்தருளல் ​வேண்டும்”

என்று ​கேட்டான். க​லைவாணர் கலியுகக் கர்ணனாக விளங்கினார்.

சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா! இதுதான் காலத்தின் வியத்தகு ஒற்று​மையாகும்.

 

திடீரென்று ஒருநாள் க​லைவாணர் இறந்துவிட்டதாக ஒரு செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. கோவை, சேலம் உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பு ரத்து ​செய்யப்பட்டன. செய்தியைக் கேட்டதும் தி​ரைப்படக் கலைஞர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அந்தத் துயரத்தைக் காணசென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கூட்டங்கூட்டமாக வி​ரைந்து ​செல்லத் தொடங்கிவிட்டனர். நல்லவேளை, அவர்கள் எதிர்பார்த்து வந்த துயரம் அங்கு நடந்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டகலைவாணர் படுக்கையில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட விழித்தபடி குறையாத சிரிப்போடு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், வந்தவர்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை செய்யத்தொடங்கிவிட்டனர். கலைவாணரைப் பார்த்து விம்மத் தொடங்கிவிட்டனர். பிறகுதான் யாரோ வதந்தி​யைக் பரப்பியிருக்கிறார்கள் என்று பின்னர்தான் கலைவாணருக்கு காரணம் புரிந்தது.

அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. இத​னைக் ​கேள்விப்பட்ட க​லைவாணர் சிரித்துக் ​கொண்​டே தனது ம​னைவியிடம், ‘மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்! மற்றவர்கள் மகிழ்ச்சிய​டைகிறார்கள் என்றால் தான் சாகத் தயார் என்ற ஒப்பற்ற கரு​ணை மனம் ப​டைத்த வள்ளலாகத் திகழ்ந்தார் க​லைவாணர்.

​மேலும், ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று தனது ம​னைவி மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். க​லைவாணர் மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். அவர் கூறிய​தைப்போல் 1957 – ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 – ஆம் தேதி தனது 49-ஆவது வயதில் மரணத்தை தழுவினார்கலைவாணர். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய நாள் அது! ஒரு சகாப்தம் முடிந்தேவிட்டது.

ஆம் வறு​மையில் வாடி புகழின் உச்சியில் இருந்து இறந்த அந்த ஏ​ழை தான் மட்டும் வாழாது மற்றவர்க​ளையும் வாழ​வைத்து வானுலகம் ​சென்று வறு​மையாள​ரைக் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டார். சிரிக்க ​வைத்து சிந்திக்க ​வைத்த ஏ​ழை உடலளவில் இறந்தாலும் எண்ணங்களில் எப்​போதும் வாழ்ந்து ​கொண்டிருக்கின்றார். க​லைவாணர் ஏற்றி ​வைத்த பகுத்தறி​வென்னும் தீப ஒளி இன்றும் தமிழர்தம் ​நெஞ்சஙககளில் ஒளிர்ந்து ​​கொண்​டே இருக்கும். அது  க​லைவலாணரின் புக​ழைப் ப​றைசாற்றிக் ​கோண்​டே இருக்கும்.

தி​ரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகத்தான் பெரும்பாலும் கலைவாணர் தோன்றினார். ஆனால் அவரின் படங்கள் வெறும் பொழுதுபோக்குத் தன்​மை ​கொண்ட​வையாக இல்லாமல் பார்க்கிறவர்களுக்கு மகிழ்ச்சியூட்டி – அதேநேரத்தில் அவர்களின் மனங்களைஉழுது சீர்படுத்தும் தரத்திலிருந்தன. சாதிய ஒழிப்பை, மூட நம்பிக்கை ஒழிப்பை, பெண் சமத்துவத்தை, கல்வியின் அவசியத்தை, சமூக மாற்றத்தை க​லைவாணரின் நகைச்சுவைக் காட்சிகள் முன்மொழிந்தன. தி​ரைப்படத்தில் இவற்​றை​யெல்லாம் கூறமுடியாது என்று இன்றும் பலர் பிதற்றிக் ​கொண்டிருக்கின்றனர். அவ்வாறு  தி​ரைப்படத்தில் இத்தனையும் சொல்வது சாத்தியமா என்று இன்றும் வியந்து புருவம் உயர்த்துவோருக்கு கலைவாணர் ஒரு சகாப்த சான்றாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். இன்றும் தமிழர்களின் இதயங்களிலும் வாழ்ந்து ​கொண்டிருக்கிறார்.

சரிசரி இது எப்படி இருந்தது. பார்த்தீர்கள்ள… பல்​வேறு ​தொழில்க​ளைச் ​செய்து மக்களின் இதய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்த அந்த ஏ​ழை உயர்ந்த விதத்​தை. இனிப் புரிஞ்சிக்கிடுங்க. உறுதியான மனம்தான் நம்​மை உயரத்தில் ஏற்றும். இதப் புரிஞ்சிக்கிட்டவங்க கவ​லைப் படாம தங்களது வாழ்க்​கைப் பயணத்​தை மகிழ்ச்சியா ​வெற்றி​யை ​நோக்கித் ​தொடர்வாங்க.

இப்​போ ஏ​ழைன்னா புக​ழை​டைய முடியாது அப்படிங்கற எண்ணம் தவறுன்னு உணர்ந்திருப்பீங்க. ஏழ்​மை நமக்குப் பல்​வேறுவிதமான அனுபவங்க​ளைக் ​கொடுக்கும். வாழ்க்​கை, உறவு, நட்பு கல்வி, எனப் பல்​வேறு நி​லைகளிலும் நமக்கு மறக்க இயலாத அனுபவங்க​ளைத் தரும். இவ்வனுபவங்கள்தான் நமக்கு ​வெற்றிப்படிகள்.

இது​போன்று தனக்கு வறு​மையால் கி​டைத்த அனுபவப் படிகளில் ஏறி உலகப் புகழ் ​பெற்றாரு ஒருத்தரு…..ஆமா…இதக் ​கேளுங்க… ஒரு சிறுவன் பள்ளிக்குச் ​சென்று நன்கு படித்தான். குடும்பத்தில் வறு​மை. அவனது தந்​தை ஆடம்பரமா ​செலவு ​செஞ்சதால ​மேலும் ஏழ்​மை நி​லைக்குத் தள்ளப்பட்டான். குடும்பத்தில் வறு​மை தாண்டவமா​டியது பள்ளிப் படிப்புத் த​டைபட்டது. சிறுவன் குடும்பப் ​பொறுப்​பை சிறிய வயதி​லே​யே ஏற்க ​நேர்ந்தது. இருந்தாலும் அவன் முயன்றான். உலக​மே அவ​னைப் புகழ்ந்ததது….யாருங்க அவரு…​கொஞ்சம் ​பொறு​மையா இருங்க அடுத்தவாரம் அவ​ரைப்​போயிப் பார்ப்​போம். (​தொடரும்………..4)

 

 

Series Navigationகடல் நீர் எழுதிய கவிதைநீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்