புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34

01v/25/arve/G2158/043 ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                      E. Mail: Malar.sethu@gmail.com

34.மரபியலின் தந்​தையாக விளங்கிய ஏ​ழை….

என்னங்க ​கோபமா வர்ரீங்க…என்ன ​மொகத்தத் திருப்பிக்கிட்டீங்க..ஓ​ஹோ…​ஹோ..ஓ..ஒங்கள ​மெண்டல்னு ​​போனவாரம் ​சொன்னத மனசுல வச்சிக்காதீங்க…அட அது ​பெரிய அறிவியல் ​மே​தை​யோட ​பேரு ​தெரியுமா….என்ன வாயத் திறந்து ஆ…ன்னு பாக்குறீங்க மரபியலின் தந்​தைன்னு ​சொல்​றோ​மே அந்த ​மே​​தையின் ​பெயரத்தான் ​சொன்​னேன். அதப் புரிஞ்சுக்காம நீங்கபாட்டுக்குக் ​கோபமா என்​னையப் பாக்குறீங்க…சரி…சரி… அப்படி​யெல்லாம் பாக்காதீங்க..

ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஏன் ஒரே சாயலாக இருக்கின்றன என்பது குறித்துப் பலர் சிந்திக்கத் தயங்கினர். ஆராய்ச்சி ​செய்கின்ற மருத்துவர்களும் இவ்வினாவிற்கு வி​டைகி​டைக்காது  அது இ​றைவனின் ப​டைப்பு என்று அப்படி​யே விட்டுவிட்டனர்.

அவர்களையெல்லாம் வரலாறும் விட்டுவிட்டது. ஆனால் ஒருவர் துணிந்து சிந்தித்தார்; உண்மையை உணர்ந்துகொள்ள முழுமூச்சுடன் கடுமையாக உழைத்து அதற்குக் காரணம் அவர்களது அணுக்களில் உள்ள ஜீன் எனப்படும் மரபுக்கூறு என்ற உண்மையைக் கண்டுபிடித்து உலகிற்குக் கூறினார். அவர்தான் கிரிகோர் ஜோஹைன் மெண்டல் ஆவார். இந்தப் ​பெய​ரைத்தான் சுருக்கமாக ​மெண்டல் என்று அ​​னைவரும் குறிப்பிடுகின்றனர். உ​ழைத்தால் உயரலாம் அப்படிங்கறதுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்கின்றவர்தான் இந்த கிரிகோர் ஜோஹைன் மெண்டல். ஏழ்​மை​யைப் படிக்கட்டுக்களாக்கி இறப்பிற்குப் பின் உலகில் ​பெரும்புகழ் ​பெற்றவர்தான் கிரிகோர் ஜோஹைன் மெண்டல். அவ​ரோட வரலாற்றச் ​சொல்​றேன் ​கேளுங்க…. என்னங்க ​கேக்கத் தயாராயிட்டீங்களா…

வறு​மையும் கல்வியும்

கிரிகோர் ஜோஹைன் மெண்டல் 1822 – ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் ஆஸ்திரியாவில் உள்ள ​ ஹெபின்சன் டார்ஃப் ( Heinzendorf) என்ற ஊரில் பிறந்தார். அவரது குடும்பம் மிக ஏழ்மையானது. வறு​மை அக்குடும்பத்தில் நிரந்தரமாக ஆட்சி ​செய்தது. அதனால் ​மெண்ட​லைப் பள்ளிக்கு அனுப்பக்கூட அவரு​டைய பெற்றோரிடம் பணம் இல்லை. அத்த​கைய ​சொல்ல முடியாத துயரத்தில்தான் ​மெண்டல் வாழ்நதார்.

இருப்பினும் அவருக்குப் பிற​ரைப் ​போன்று பள்ளி ​சென்று பயில ​வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எனவே மெண்டல் பகுதிநேர வேலை பார்த்துப் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு படித்தார். படிப்புத்தான் ஒருத்தர வாழ்க்​கையில முன்​னேற்றும்னு மெண்டல் ​நெனச்சதுனாலதான் இள​மையி​லே​யே ​வே​லை  பார்த்துக்கிட்​டே படிச்சாரு. பள்ளியில் நன்றாகப் படித்த மெண்டல் தனது 21–ஆவது வயதில் உயர்கல்வி கற்பதற்காகப் புனித தாமஸ் மடாலயத்தில் சேர்ந்தார். அங்கு மெண்டல் நான்கு ஆண்டுகள் கிறித்தவ மதக் கல்வியி​னைக் கற்றுப் பாதிரியாரானார்.

வியன்னாப் பல்க​லைக்கழகத்திற்குக் கற்கச் ​​செல்லுதல்

மெண்டலுக்கு ஆசிரியராக ​வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதனால் ஆசிரியர் பயிற்சிப் பெற்று சான்றிதழுக்காகத் தேர்வு எழுதினார். ஆனால் அவர் உயிரியல், புவியியல் ஆகிய இருபாடங்களிலும் மிகக்குறைவான மதிப்பெண்க​ளைப் ​பெற்றதால் அவர் அத்தேர்வில் ​வெற்றி வாய்ப்​பை இழந்தார். இருப்பினும் அவரது படிப்பார்வத்​தைக் கண்ட மடாலயத்தின் உயர் அலுவலர் அவரை வியன்னாப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப் படிக்க வைத்தார். அப்பல்க​லைக்கழகத்தில் மெண்டல் உயிரியலும், கணிதமும் கற்றார். அதன் பின்னர் மெண்டல் 1854 – ஆம் ஆண்டு முதல் பிரண்ட் என்ற பள்ளியில் இயற்கை அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

இயற்​கைக் காதலர் மெண்டல்

“இயற்​கை மனிதனின் ஆசான்

இயற்​கை மனிதர்களின் தாய்

இயற்​கை இ​றைவன் ​கொடுத்த ​​கொ​டை

இயற்​கை மனிதர்களுக்குக் கி​டைத்த வரம்

மனிதர்கள் இயற்​கையின் குழந்​தைகள்…

இயற்​கை​யே மனிதர்க்கு எல்லாம்….”

என்​பதை மெண்டல் உணர்ந்திருந்தார். இயற்​கை​யை அவர் மிகவும் ​நேசித்தார். ​மெண்டல் இயற்​கைக் காதலராக விளங்கினார். ஒவ்​வொரு ​செடி​யையும் வியப்புடன் உற்று ​நோக்கும் ​மெண்டல், அத​னைப் பார்த்துக் ​கொண்​டே இருப்பார். அவ்வாறு பார்க்கும்​ போ​தெல்லாம் அவர் மனதில், “ஏன் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன?” என்ற கேள்வி அவருள் எழும். அந்தக் ​கேள்வி அவ​ரை அது குறித்து ஆராய்வதற்குத் தூண்டிய வண்ணம் இருந்தது.

இருவேறு வண்ணங்களைக் கலந்தால் இன்னொரு வண்ணம் கிடைப்பதுபோல வெள்ளை மலர்த் தாவரத்தையும், சிவப்பு மலர்த் தாவரத்தையும் இனச்சேர்க்கை செய்தால் அடுத்த தலைமுறைச் செடிகள் ​வே​றொரு வண்ணமாக அதாவது பழுப்பு நிறமாக இருக்கும் என்று பலர் நம்பி வந்தனர். ஆனால் ​மெண்டல் அதனை நம்ப மறுத்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

மரபியல் குறித்த ஆய்வுகள்

​மெண்டல் 1856-ஆம் ஆண்டிலிருந்து, தாவர இனப் பெருக்கத்தில் தமது புகழ்பெற்ற ஆய்வுக​ளைத் ​தொடர்ந்து ​செய்தார். மெண்டல் தன் ஆய்வுக்காகப் பட்டாணிச் செடிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு பல்வேறு விதமான ஆய்வுக​ளைச் செய்தார். குட்டையான செடியையும், உயரமானச் செடியையும் இனக்கலப்புச் செய்து வளர்த்தார். வெவ்வேறு வண்ண மலர்கள் கொண்ட செடிகளை இனக்கலப்புச் செய்து ஆராய்ந்தார். அவ்வாறு தான் செய்த இனக்கலப்பு குறித்த ஆய்வு மு​றைக​ளை ​எல்லாம் கவனமாகக் குறிப்பெடுத்து பலஆண்டுகள் ஆராய்ந்தார்.

ஒவ்வொரு செடியின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் வளர்ச்சி எனப் பல்​வேறு மிக நுணுக்கமான தகவல்க​ளை ஆராய்ந்து ஒவ்​​வொரு நாளும் அவற்​றைச் சிறிது சிறிதாக எறும்புகள் உணவி​னைச் ​​சேகரிப்ப​தைப் ​போன்று புள்ளி விவரங்க​ளைச் ​சேகரித்தார்.

​ சுமார் 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்து 28000 செடிக​ளை வளர்த்து ஒவ்​வொரு நாளும் ஆராய்ந்த மெண்டல் செடிகளின் உயரம், வண்ணம், வளர்ச்சி போன்ற குணங்களை ஏதோ ஒன்று தீர்மானிக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.

அக்குணங்க​ளை ஒன்று ​சேர்த்தது தற்​போது மரபணு என்ற​ழைக்கப்படும் ஜீன்ஸ் ஆகும். இத​னை ​மெண்டல் அப்​போது கேரக்டர்ஸ் என்று குறிப்பிட்டார். ​மெண்டல் 1865 – ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற தமது மரபுவழி விதிகளைக் கண்டுபிடித்தார். தாம் ஆராய்ந்த அந்த ஆராய்ச்சிகளின் வாயிலாக ​மெண்டல் கண்டுபிடித்ததுதான் ஹெரிடிட்டி எனப்படும் மரபுவழி விதிகள் ஆகும்.

​ மெண்டல் 1866 – ஆம் ஆண்டில் “தாவரக் கலப்பினங்கள் பற்றிய ஆய்வுகள்(Experiments with Plant Hybrids)” என்ற தலைப்பில் அவ்வாய்வு முடிவுக​ளை ஒரு கட்டுரையாக எழுதி பிரன் இயற்​கைக் கழகத்திலிருந்து ​வெளிவரும் “நிலைய வெளியீடுகள்” என்ற இதழுக்கு அனுப்பினார். அந்த இதழும் அத​னை வெளியிடப்பட்டது. அதே இதழில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவரது இரண்டாவது கட்டுரையொன்று வெளியாகியது. பிரன் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் “நிலைய வெளியீடுகள்” அத்துணை புகழ் வாய்ந்த இதழாக இல்லாதிருந்த போதிலும் மெண்டல் தனது ஆய்வுக் கட்டுரையின் படியொன்றை, அப்போது மரபுவழி பற்றிய ஆராய்ச்சியில் தலைசிறந்தவராக விளங்கிய கார்ல் நாகெலி என்பாருக்கு அனுப்பினார்.

நாகெலி அக்கட்டுரையைப் படித்து, அது பற்றி மெண்டலுக்கு மறுமொழி எழுதினார். ஆனால், அக்கட்டுரையின் அளப்பரிய முக்கியத்துவத்தை நாகெலி புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். மெண்டலின் கட்டுரைகள் பொதுவாகப் புறக்கணிக்கப்பட்டன. முப்பது ஆண்டுகள் அவரது கண்டுபிடிப்புகள் புறக்கணிக்கப்பட்டன. உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி இருப்பதற்கு மரபுக்கூறுகள்தான் காரணம் என்றும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு அந்த மரபுக்கூறுகள் செல்கின்றன என்றும் கண்டுபிடித்துக் கூறினார்.

​மேலும் மரபுக்கூறுகள் இணையாகச் செயல்படுகின்றன என்றும் இரண்டு மரபுக்கூறுகள் ​சேர்ந்து ஒருவிதமான தனித்த பண்பை நிர்ணயிக்கின்றன என்றும், எந்த மரபுக்கூறு வலி​மையாக இருக்கிறதோ அந்த மரபுக்கூறு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்றும் வலி​மை குறைந்த மரபுக்கூறு அடுத்தடுத்த தலைமுறைகளில் வெளிப்படலாம் என்றும் மெண்டல் தமது ஆய்வுக் கட்டுரைகளில் ​தெளிவுபடுத்தினார்.

காலத்​தை ​வென்ற ​அறிவியல் மே​தை

​மெண்டல் கண்டுபிடித்த மரபியல் குறித்த அந்த உண்மைகள்தான் இன்று வழங்கப்படும் ​ஜெனெடிக்ஸ் எனப்படும் மரபுவழிப் பண்பியலுக்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பது ​நோக்கத்தக்கது. தமது ஆய்வு முடிவுகளில் ​மெண்டல் உறுதியாக இருந்தார்.

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்​தை அப்​போது வாழ்ந்த சிறந்த அறிஞர்களாலும் புரிந்து ​கொள்ள​வோ, விளங்கிக் ​கொள்ள​வோ முடியவில்​லை; அவர்களால் அத​னை முழு​மையாக உணர்ந்து ​கொள்ளவும் இயலவில்​லை. இது மிகுந்த வருத்தத்திற்குரியது.

மெண்டலின் தத்துவம் சமகால அறிவியல் அறிஞர்களின் சிந்தனையைவிட விஞ்சியிருந்தது குறிப்பிடத்தக்கது. ​மெண்டல் ‘காலத்தை விஞ்சிய ​அறிவியல் மே​தையாக’ விளங்கினார்.

இதனா​லே​யே அவரது ஆய்வுக் கட்டு​ரைகளும் ஆய்வு முடிவுகளும் புறக்கணிக்கப்பட்டன. அந்நி​லையில் ​மெண்டலுக்கு மடாலயத்தின் த​லைமைப் பொறுப்பு மெண்டலுக்குக் கிடைத்தது. அதனால் அவர் மடாலயத்தின் நிர்வாகப் பணிக​ளைக் கவனிக்க ​வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் ​மெண்டல் தனது மரபணு குறித்த தாவர ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து ​செய்ய முடியவில்லை.

இறப்பும் ​பெற்ற இறவாப் புகழும்

​மெண்டல் மடாலயத்தின் பணிக​ளைத் ​தொடர்ந்து ​செய்துவந்ததால் அவர் தம் ஆய்வில் சிறிது ​தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் அவர் ​தொடர்ந்து ஆய்க​ளை இயன்றளவு ​செய்து வந்தார். அயராது மரபணு ஆய்வில் ஈடுபட்டிருந்த ​மெண்டல் 1884 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 – ஆம் நாள் தனது 61-ஆவது வயதில் காலமானார்.

மரபியலின் தந்​தையாக விளங்கிய மெண்டல் காலமானபோது அவ​ரை இவ்வுலகம் மறந்​தே ​போனது. அவரது மரணம் அவ்வளவு ​பெரியதாக யாராலும் கருதப்படவில்​லை. அவரது அளப்பறிய ஆராய்ச்சி முடிவுகளை உலகம் மறந்து விட்டது என்​றே கூறலாம்.

அவர் வாழ்ந்தபோது அவருக்கு எந்தச் சிறப்பும் விருதுகளும் மதிப்புகளும் கிட்டவில்லை. ஆனால் ​மெண்டல் இறந்து 16 ஆண்டுகள் கடந்து ​சென்ற பின்னர் 1900-ஆம் ஆண்டில் அறிவியல் உலகின் அதிசயங்களில் ஒன்று நிகழ்ந்தது. ஹியூகோ டி ரைஷ் என்ற டச்சு நாட்​டைச் ​சேர்ந்த அறிவியல் அறிஞர், ஃகால் கொரன்ஸ் என்ற ஜெர்மானிய அறிவியல் அறிஞர்,  எரிக் வார்ன் டிஷ்மார்க் என்ற ஆஸ்திரிய அறிவியல் அறிஞர் ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் தனித்தனியாக தாவர ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். மூவருமே மெண்டல் கண்டுபிடித்த விதிகளை மீண்டும் கண்டுபிடித்தனர் அவற்றை அவர்கள் கட்டுரையாக எழுத முயன்றபோதுதான் 34 ஆண்டுகளுக்கு முன் மெண்டல் எழுதிய கட்டுரைக​ளைப் படித்து வியந்து ​போயினர்.

தங்களுடைய ஆராய்வுகள் மெண்டல் கண்டுபிடித்த மரபணு குறித்த விதிகளை உறுதி செய்கின்றன என்று மூவருமே தனித்தனியாக கட்டுரைகள் எழுதி உலகிற்குத் ​தெரிவித்தனர். அதே ஆண்டு மெண்டலின் கட்டுரைப் படித்த வில்லியம் பேட்ஷன் என்ற ஆங்கில அறிவியல் அறிஞர் அதனை அறிவியல் உலகத்திற்கு ​தெரியப்படுத்தினார். அந்த ஆண்டே மெண்டலின் வியத்தகு ஆராய்ச்சிகளையும், அவர் கண்டுபிடித்த மரபணு விதிகளையும் அறிவியல் அறிஞர்களும் உலகமும் போற்றத் தொடங்கியது. அவரது கண்டுபிடிப்புகள்  ‘மெண்டல் விதிகள்’ என்று அ​னைவராலும் இன்று வழங்கப்படுகின்றன.

கிரிகோர் மெண்டலுக்கு வாழும்போது கிடைக்கவேண்டிய சீரும் முழு​மையான அங்கீகாரமும் ஒரு​போதும் கிட்டாம​லே ​போய்விட்டது. ஆனாலும் அவ​ரை அறிவியல் உலகம் ​“மரபுவழிப் பண்பியலின் தந்​தை” என்று பதிவு ​செய்து ​கொண்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இது​வே ​மெண்டலுக்குக் கி​டைத்த உன்னதமான சிறப்பாகும்.

இன்று நவீன அறிவியல் குறையுள்ள ​மெண்டலின் மரபணு குறித்த விதிக​ளை ​வைத்துக் ​கொண்டு அதன்வழி​யே மரபணுக்கூறுக​ளைத் தனிமைப்படுத்தி நோய்களைக் குணப்படுத்தவும், நலமான உயிர்களைப் பிறப்பிக்கவும், நோய்களே வராமல் தடுக்கவும் முனைப்பாக முயன்றுகொண்டிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் கிரிகோர் மெண்டலின் கடு​மையான உ​ழைப்​பே காரணமாகும். மனித குலம் உள்ளவ​ரை மரபியலின் தந்​தையாகிய கிரி​கோர் ​மெண்டலின் ​பெயர் என்​றென்றும் நி​லைத்திருக்கும்.

என்னங்க ​கேட்டுக்கிட்டீங்களா…? நமக்குப் பிடித்தமான து​றையில நாமபாட்டுக்கு உ​ழைச்சுகிட்​டே இருக்கணும்…அந்த உ​ழைப்பு நமக்கு வரலாற்றுல நிச்சயம் ஒரு இடத்​தைப் ​பெற்றுத் தரும்… மற்றவங்க அப்​​போ​தைக்கு நம்​மைப் புறக்கணிச்சாலும் வரலாறு என்றும் புறக்கணிக்காது…. இத ஒவ்​வொருத்தரும் உணர்ந்து ​செயல்படணும்…உண்​மையான உ​ழைப்​பு உன்னதமான முன்​னேற்றத்​தைத் தந்​தே தீரும்… அப்பறம் என்ன ஒங்களுக்குப் பிடித்தமான து​றையத் ​தேர்ந்​தெடுங்க..ஒங்க ​வெற்றி​யை நா​ளை சரித்திரம் ​சொல்லும்… ​வெற்றியிலக்​கை ​நோக்கிப் பயணப்படுங்க…

ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கியவர் யாரு ​தெரியுமா…?தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய அதிசயமான விளையாட்டு வீர​ரைப் பத்திக் ​கேள்விப் பட்டிருக்கீங்களா…?அவரு வறு​மை வாய்ப்பட்ட குடும்பத்துல பிறந்தவருங்க… உலகின் சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்ல​ரின் சித்தாந்தத்​தைத் தவிடு ​பொடியாக்கியவர்…..என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா…? சரி சரி ​கொஞ்சம் ​பொறு​மையா ​யோசிங்க… அடுத்தவாரம் பார்ப்​போம்…(​தொடரும்…….35)

Series Navigationகரிக்கட்டைசீதாயணம் நாடகம் -8 படக்கதை -8