புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)

Spread the love

அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம்.

எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள்.

“கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல்.

“இந்தப் புத்தகம் கமலாவுக்கு நல்லா அறிவியல் கத்துத் தரும்ன்னு நினைக்கிறேன்” என்று மற்றொரு குரல்.

“வைரமுத்து எழுதிய புத்தகம் இருக்கிறதா?”

“சுஜாதா எழுதிய புத்தகம் இருக்கிறதா?”

சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்.

அதற்கிடையில், “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலும்.

இதைக் கேட்டதும், “என்னடா இது.. இந்த இடத்தில் இப்படியா?” என்று எண்ணத் தோன்றியது.

இருந்த இடம் எங்கே என்று முதலில் சொல்லிவிடுகிறேன். பிறகு என் எண்ணம் சரியா தவறா என்று சொல்லுங்கள்.

600க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தக வெளியீட்டாளர்களும் புத்தக நிலையத்தாரும் கடை விரித்திருந்த 35ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியின் ஓரரங்கில் தான் இதைக் கேட்டேன்.

என் இளைய பருவத்தில், தீவுத்திடலில் நடத்தப்படும் பொங்கல் கண்காட்சியை வருடம் தவறாமல் பார்த்த ஞாபகங்கள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. ஆனால் இந்த முப்பத்தைந்தாண்டுகளாக நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியை பற்றி கடந்த மூன்று ஆண்டுகளில் தான் எனக்குத் தெரியும். ஹாங்காங்கில் எனது நண்பராக இருந்தவரின் தந்தை டாக்டர் ஹரிஹரன். ரேவதி என்ற பெயரில் 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். சிறுவருக்கான பத்திரிக்கையான கோகுலத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த எழுத்தாளர் விருதினைப் பெறும் விஷயத்;தைக் கூறிய போது தான் கண்காட்சி பற்றிய விவரம் தெரிந்தது.
கல்லூரியில் படிக்கும் போதும் சரி, திருமணமாகி பெங்களுர் நகருக்குச் சென்ற பிறகும் சரி, பல வருடங்களாக ஹாங்காங்கில் வாழ்ந்த போதும் சரி, இந்தியாவிற்கு வருடாவருடம் வந்து சென்ற போதும், பெரிய கண்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியதேயில்லை. கடந்த சில வருடங்களாக புத்தகக் கண்காட்சி நடக்கும் சமயத்தில் நான் சென்னையில் இருந்த போதும், பார்க்கச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்த போதும், செல்ல முடியாமல் போனது. இந்த பல இலட்சம் மக்கள் கண்டு களிக்கும் கண்காட்சியைக் காணும் தீராத ஆவலினால், பல சங்கடங்களுக்கு இடையில், கடைசி நாளான 17ஆம் தேதியன்றாவது சென்று விட வேண்டும் என்று 16ஆம் தேதி பெங்களுரிலிருந்து சென்னைக்கு செல்லும் வண்டியில் ஏறினேன். நேரத்தோடு சென்றால் பல மணி நேரங்கள் செலவிடலாம் என்று வீட்டை விட்டு காலையிலேயே கிளம்பினோம் நானும் என் தாயும். இத்தனை வருடங்களில், தினம் ஒரு புத்தகத்தைத் தவறாமல் படிக்கும் என் தாயும் இதற்குச் சென்றதில்லை. வெற்றிகரமாக இந்த முறை தான் கண்காட்சியின் வாயிலில் காலடி வைக்கும் பாக்கியம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம். பிடித்த புத்தகங்களை வாங்கச் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம்.

செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தின் முன்பாகம் முழுக்க பலகைகளால் மூடப்பட்டு, பெரிய முகப்பு வரவேற்றது. நுழைந்ததும் ஒரு பக்கம் கார்கள் நிற்குமிடம். நேரே நடக்க நடக்க, பக்கவாட்டில் பெரிய பெரிய பானர்களில் எழுத்தாளர்களின் படங்களோடு புத்தக விளம்பரங்கள். அதற்கு அடுத்து களைப்பாற, பசியாற பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வெளியே அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கில் கண்காட்சி நடந்த 12 நாட்களிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் என்று பெரிய பலகை இருந்தது. தினம் இரு எழுத்தாளர்களின் நேர்காணல்கள், மற்றும் பிற சுவையான நிகழ்ச்சிகள் என்று பார்வையாளர்களுக்கு இலக்கிய விருந்து படைத்துக் கொண்டிருந்தது அந்த அரங்கு. உரை அரங்கம், பட்டிமன்றம், வினாடி வினா, சிந்தனை மன்றம், சொல்லரங்கம், கவிதை மொழிதல் என்று அவற்றைக் காணக் காண மனதில் மகிழ்ச்சி குடிகொண்டது.

ஒவ்வொரு முறையும் செய்திகளில் பல இலட்ச மக்கள் வந்து போயினர் என்ற செய்தியைக் கேட்டிருந்த காரணத்தினால், உள்ளே நுழைய கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டுமோ என்ற எண்ணம், நுழைவாயிலிலேயே தவிடு பொடியானது. வாயிலில் நுழைவுச் சீட்டைக் கொடுக்க பல கூடுகள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் அதிக பட்சம் 2-3 நிமிடங்களில் சீட்டுகள் வாங்க முடிந்தன.

நுழைந்ததும் பல வரிசைகளில் அரங்குகள். ஒவ்வொரு வரிசைக்கும் எழுத்தாளர்களின் பெயர்கள் கொண்ட பலகைகள் வழிகாட்டியாக அமைந்தன. தேவநோயப்பாவாணர் பாதை, ஜெயகாந்தன் பாதை என்பதைக் கண்ட போது, மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர்கள் அனைவருக்கும் மதிப்புக் கொடுக்கும் இடமாக இக்கண்காட்சி அமைந்திருந்தது மனதிற்கு இதமாக இருந்தது. ஒவ்வொரு வரிசையிலும் அமைக்கப்பட்டிருந்த அரங்கப் பட்டியலை, முகப்பில் வைத்திருந்தது சிறப்பான அம்சம். வேண்டிய பதிப்பாளரை எளிதில் அறிய பயனுள்ளதாக இருந்தது. இதற்கெல்லாம் கண்காட்சி அமைப்பாளர்களை மனதிற்குள்ளேயே பாராட்டிக் கொண்டேன்.

முதல் வரிசையிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வரிசையாக செல்ல முடிவு செய்து கொண்டு அரங்குகளைக் காணச் சென்றேன். ஒரே அரங்கில் எண்ணிறந்த புத்தகங்கள். ஒரு வரிசையைப் பார்க்கவே அரை மணிக்கு மேல் ஆகலாம் என்று தோன்றியதும், முதலில் சுற்றி வந்து விட்டு பிறகு புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அரங்குகளின் மத்தியில் நேர்காணல் கூடமும் இருந்தது. குறிப்பிட்ட நேரங்களில் வாசகர்கள் தாங்கள் விரும்பிய எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் சென்ற போது, மதியம் எழுத்தாளர் ஞானி வருவதாக இருந்தது.
நான் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு புத்தகம் வாங்க வேண்டும் என்ற முடிவு செய்து கொண்டு சென்றேன். பல அரங்குகளைச் சுற்றி வந்து வேண்டிய புத்தகங்களைச் சிரமமின்றி வாங்கும் வாய்ப்பு இங்கு கிடைத்தது.

புத்தக வெளியீட்டாளர்கள் பலரும் தாங்கள் வெளியிட்ட புத்தகங்களுடன், இதர வெளியீட்டாளர்களின் புத்தகங்களையும் வைத்து விற்றது மட்டும் மனதில் சற்று நெருடலை ஏற்படுத்தியது. கல்கியின் பொன்னியின் செல்வன் ஒரே விதமான ஐந்து பாகங்களில் பல விலைகளில் பல இடங்களில் வைத்து விற்கப்படுவதைக் காண முடிந்தது. அவை ஒவ்வொரு அரங்கில் பல விலைகளில் இருந்தது சற்றே வித்தியாசமாக இருந்தது. திருக்குறள், பாரதியார் பாடல்கள், மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட பல புத்தகங்கள் பல அரங்குகளில் விற்பனைக்கு இருந்தன.

சில அரங்குகளில் புத்தகங்கள் குறைவாகவே இருந்த போதும், பதிப்பாளரின் வெளியீடுகள் மட்டுமே இருந்தது ஆறுதலாக இருந்தது.
வெளிநாட்டில் இருக்கும் எனக்கு, இன்றைய புத்தக போக்கு(டிரென்ட்) எப்படி என்று அறிய இது உதவியது. மேலும் பொறுமையாக புத்தகத் தலைப்புளைக் காண ஏதுவாக, பல அரங்குகளில் இருந்த வெளியீட்டாளர்களின் விலைப்பட்டியல்களைச் சேகரித்தேன்.
கடமையே கண்ணாக ஒரு முஸ்லீம் அன்பர்;, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு, திருக்குரான் புத்தகத்தை இலவசமாக தந்த கொண்டிருந்தார். நான் வேண்டாம் என்று கூறிய போதும், பெண்களுக்கு இஸ்லாமியத்தில் என்ன பங்கு இருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி, ஒரு புத்தகத்தை வலுக்கட்டாயமாகத் தந்தார். சரி.. தெரிந்த முஸ்லீம் நண்பருக்குத் அதைக் கொடுக்கலாம் என்று வாங்கிக் கொண்டோம். பதிப்பாளர்களின் விலைப்பட்டியலும் புத்தகங்களையும் சேர்த்து என் பை கனத்தது. நான் வைத்திருந்த புத்தகங்களில் அதிக எடை கொண்ட புத்தகம் இந்த குரான் புத்தகமே.

கட்டாந்தரையில் கம்பளங்கள் விரித்து, அரங்கை அமைத்திருந்ததால், தரையில் பல இடங்களில் மேடு பள்ளங்கள் சற்றே பயத்தை ஏற்படுத்தின. பல இடங்களில் அரங்குகளை சுத்தம் செய்த வண்ணம் இருந்தது ஆறுதலாக இருந்தது. ஆனால் வெளியே வந்ததும் தான் பார்க்க வேண்டுமே. திரும்பிய இடங்களிளெல்லாம், காலி காப்பி கோப்பைகள், காகிதங்கள் என்று முகப்பு வரைக்கும், இந்தக் குப்பையிலான பாதையாக மாறியிருந்தது சற்றே வருத்தத்தைத் தந்தது.

நாம் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதை பள்ளிப் பருவத்திலிருந்தே கற்றிருந்த போதும், பொது இடங்களில் அந்தச் சுத்தத்தைக் கடைபிடிக்க பெரும்பாலானோர் மறந்து விடுகின்றனர். குப்பைகளை குப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்ற கொள்கையை இதைப் போன்ற இடங்களில் கொண்டு வருவது மிகவும் அவசியம். சமூக ஆர்வலர்களையோ மாணவர்களையோ கொண்டு பொது மக்களுக்கு இதை, இந்த இடத்தில் அறிவுறுத்துவது நன்மை பயக்கும் என்று நான் எண்ணுவது சரியானதா என்று கூட எனக்கு தெரியவில்லை.

அரங்கில் வளைய வரும்போது, ஒரு சுவையான அறிவிப்பைக் கேட்க நேர்ந்தது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறையுங்கள் என்பது. ஆனால் அரங்குகளில் ஒரு புத்தகம் வாங்கினாலும், அதை பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். 60 இலட்சம் புத்தகங்கள் இக்கண்காட்சியில் விற்கப்பட்டதாக செய்தியில் கேட்ட போது, அதற்கு இணையாக பல இலட்சப் பைகளும் நிச்சயம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற எண்ணம் தான் என் மனதில் ஓடியது. அடுத்த முறையேனும், அதை சற்றே கவனம் செலுத்தி பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க வேண்டுமே என்று மனதில் வேண்டி கொண்டேன். இந்நிகழ்வின் அனுசரணையாளர்களின் விளம்பரங்கள் பல இடங்களில் இருந்தன. அவர்கள் துணிப்பைகளைத் தந்தோ, காகிதப் பைகளைப் பயன்படுத்தியோ இதைச் சாதிக்க முயலலாம்.

களைப்புடன் திரும்புவோருக்கு இதமாக ஜூஸ், ஐஸ்கீரிடமும், பசியோடு திரும்புவோருக்கு உணவும், நொறுக்குத் தீனி வேண்டுவோருக்கு அத்தகையப் பலகாரங்களும் வெளியே இருந்தது பயனுள்ளதாக இருந்தது.

பல வருடங்களாக பற்பல கண்காட்சிகளை மிகப் பிரம்மாண்டமான கட்டடத்தில், குளு குளு குளிர்பதன வசதியுடன் இருக்கும் அரங்கில், அழகாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடிய வாய்ப்புப் பெற்ற எனக்கு இந்தியாவில் அத்தனை வசதியான கண்காட்சியை எப்போது காணப்போகிறோம் என்ற ஏக்கம் ஏற்பட்டது.

ஆட்சியாளர்கள் ஒரு பெரிய நிலையான கட்டடத்தை அழகாக அமைத்து, வருடந்தோறும் பற்பல கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் காலம் சென்னையில் அமையுமா?

ஹாங்காங்கை வெள்ளையர்கள் சீனாவிற்கு கொடுக்கும் விழாவினை செய்ய, 1997இல் அதற்காகவென்றே சகல வசதிகள் கொண்ட ஒரு கண்காட்சி வளாகத்தை அமைத்தார்கள். இத்தனை செலவில் இவ்வளவு பெரிய வளாகமா னஎ;று நாங்கள் அப்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் இன்று நாள் தவறாமல், ஏதோவொரு சர்வதேசக் கண்காட்சி அங்கு நடப்பதைக் காணும் போது, ஒரு நாட்டிற்கு அடையாளமாக அத்தகைய அரங்குகள் இருப்பது, எத்தனை அவசியம் என்பது புரிகிறது.

இந்தக் கண்காட்சியைப் பற்றி ஒரு பதிப்பாள நண்பரிடம் கேட்ட போது, இத்தகைய கண்காட்சி புத்தக விற்பனையை அதிகரிப்பது உண்மை. ஆனால் அரசு சில வருடங்களுக்க முன்பு வைத்திருந்த பதிப்பாளர் நூலகத் திட்டத்தை கைவிட்டதைப் பற்றி வருத்தத்துடன் தெரிவித்தார். வருடந்தோறும் பல்வேறு பதிப்பாகத்தாரிடமிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கை நூல்களை அரசு வாங்கி தமிழகமெங்கிலும் இருக்கும் நூலகங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் அது. அந்தத் திட்டம் இருந்த போது, பதிப்பாளர்கள் பலரும், ஊக்கத்துடன் அதிக அளவில் புத்தகங்களை வெளியிட்டு வந்தது என் தந்தையின் பதிப்பாள நண்பரிடமிருந்து, என் பள்ளி நாட்களிலிலேயே நான் அறிந்த விசயம். புதிய அரசு பல்வேறு திட்டங்களை ஒவ்வொன்றாக அமுல்படுத்திக் கொண்டு தான் வருகின்றதே, அதனால், இத்திட்டத்தையும் விரைவில் கொண்டுவர மாட்டார்களா என்ற என் கேள்விக்கு, கல்விக்கு முக்கியத்துவம் தந்து அதை விரைவில் கொண்டு வந்தால் நன்றாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஹாங்காங் நகரம் கிட்டத்தட்ட 1000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்டது. அந்தச் சிறிய நகரில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வசதிக்காக, அவரவர் வாழும் பகுதிகளிலேயே இலட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட சகல வசதிகளுடன் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றன. 70க்கும் மேற்பட்ட இத்தகைய நூலகங்கள் நகரெங்கும் பரவலாக இருக்கின்றன. படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு புதிய புதிய நூல்கள் கிடைக்கும் வகையில், அவ்வப்போது நூலகங்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாற்றப்படுவதும் உண்டு. நான் அந்நகருக்குப் புகழாரம் சூட்டுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் எத்தனை தான் தொலைக்காட்சி கணிப்பொறி வசதிகள் இருந்த போதும், மக்கள் படிப்பதைக் கைவிடக் கூடாது என்ற அரசின் நோக்கம் இதன் மூலம் வெளிப்படுவதைச் சுட்டிக் காட்டவே இதைக் குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த 15 வருடங்களாக நாங்களும் எங்கள் நண்பர்களும் இத்தகைய நூலகங்களால் பல பயன்களை பெற்றிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது போன்று இங்கும் நம் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு தன் நூலகத் திட்டத்தை புதிப்பித்து, பதிப்பாளர்களையும், புத்தகம் படிக்க விரும்புபவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பது என் அவா.

அங்கு பள்ளிகளில் படித்தல் என்பது ஒரு பாடமாகவே இருக்கிறது. மொழி என்று எடுத்துக் கொண்டால், எழுதுவது மட்டுமே கிடையாது. எழுதுவது, படிப்பது, கேட்பது என்று மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் குழந்தைகளின் படிக்கும் திறனை வளர்க்கின்றனர். உலக அளவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச மாணவர்கள் மதிப்பீட்டுத் திட்டத்தில் இந்தியா உட்பட 73 நாடுகள் பங்கேற்றன. 15 வயதில் இருக்கும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் படித்தல் என்ற மூன்று பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் இந்தியா எநதந இடம் பெற்றது தெரியுமா? கிரைகிஸ்தான் நாட்டிற்கு ஒரு படி முன்னே 72வது இடத்தைப் பெற்றதாம். இதைப் படிக்க நேர்ந்த போது, சற்று அதிர்ந்தேன். இந்தியா கல்வித் தரத்தில் உயர்ந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகையச் செய்தி அதிரத் தானே செய்யும். தேர்வுக்குச் சென்றவர்கள் ஏதோ பின் தங்கிய மாநிலத்திலிருந்து சென்றவர்களாக இருக்கும் என்ற எண்ணம் உடனே எனக்குள் வந்தது. ஆனால் செய்தியை மேலும் படித்த போது, இன்னொரு அதிர்ச்சி. கல்வித் தரத்தில் உயர்ந்தது என்று எண்ணி தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பிய மாணவர்களுக்குத் தான் இந்த கதி. அவர்களுடன் ஹிமாச்சலப் பிரதேச மாணவர்களும் சென்றிருந்தனராம்.
கணிதம், அறிவியல் பாடங்கள் ஒரு புறம் இருக்க, ஆங்கிலம் படித்தலிலும் அவர்களால் தங்கள் திறமையைக் காட்ட முடியாமல், அதிலும் 72ஆவது இடத்தையே பெற்றனர். மற்ற நாட்டவர்களைக் காட்டிலும் உரையைப் படிப்பதிலும் அவர்களுக்கு குறைவான திறன் இருப்பதையே இது காட்டுகிறது. இத்தேர்வில் முதல் ஐந்து இடங்களில் வந்தவர்கள் : சீனா, தென் கொரியா, பின்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர். இந்நாட்டினர் அனைவருமே, மாணவர்களுக்கு படிக்கும் திறனை வளர்க்கும் வகையில் சகல வசதிகளையும், பாட திட்டத்தையும் வைத்திருப்பதே இதற்குக் காரணம்.

ஆங்கிலம், தாய்மொழி இரண்டிலுமே எழுவதைத் தவிரவும், படித்தலும் கட்டாயப் பாடமாக இருப்பது அவசியம். இது பல வகையிலும் அவர்களது கற்கும் திறனையும் அறிவையும் நிச்சயம் வளர்க்கும் என்பது என் கருத்து. அதற்கு புதுப் புதுப் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். இது போன்ற கண்காட்சிகள் இதற்கு வடிகால்களாக அமையும் என்பது நிச்சயம்.

கண்காட்சியின் நிகழ்ச்சி நிரலில் ஓவியப் போட்டியும் பேச்சுப்போட்டியும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டதைக் கண்டேன். இந்தப் போட்டிகளின் நடுவே, படித்தல் போட்டியையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் படித்துக் காண்பிப்பதோ, அல்லது புதிய புத்தகம் ஒன்றைப் படித்து அதன் விமர்சனத்தைத் தருவதோ கூட சுவையானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

கண்காட்சியைச் சுற்றிப் பார்த்து வேண்டியதை வாங்கி முடித்ததும், கிளம்பினோம். ஆட்டோவில் கிளம்பி யூ வளைவில் திரும்பிதும், கண்காட்சிக்கு நேர் எதிர் சாலையில் ஏகப்பட்ட கூட்டம். என்ன விற்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எட்டிப் பார்த்து போது, ஆச்சரியமாக இருந்தது. மக்கள் புத்தகங்களை பிரித்து பார்த்துக் கொண்டும் வாங்கிக் கொண்டும் இருந்தனர். கண்காட்சியில் பங்கு கொள்ள முடியாத கடைக்காரர்களா என்று பார்த்தால் அது தான் இல்லை. பழைய புத்தகங்களை அங்கே குவித்திருந்தனர். கடைக்காரர்கள் பலரும் இந்த பன்னிரண்டு நாட்களில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தவற விடக்கூடாது என்று தங்களிடம் இருப்பில் இருந்த பழைய புத்தகங்களையெல்லாம் கொண்டு வந்து கடை விரித்திருந்தார்கள். அங்கும் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆரம்பத்தில் கேட்ட “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலில் எந்தவிதத் தவறும் இருந்ததாக அப்போது எனக்குத் தோன்றியது.

Series Navigationசந்திரலேகா அல்லது நடனம்..இறந்து கிடக்கும் ஊர்