புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்

ஆட்சி மாறி விட்டதே, அதனால் சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில், இந்த முறை சந்தை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். பொய்த்து விட்டது.
வழக்கமாக டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பிப்பார்கள். இம்முறை சனவரி ஐந்து. அதே தமிழ் மைய மைதானம். அப்படித்தான் சொன்னார்கள்.. தமிழ் மையம் காஸ்பர் பரிந்துரைப்படி கடந்த ஆட்சியில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக..
சென்னை மைலாப்பூரிலிருந்து இங்கு வருவதே கடினம். என் கதை இன்னமும் சோகம். அதுவும் தவிர கண்காட்சிக்கு எதிரில் ஒரு பேருந்து நிறுத்தம் கிடையாது. ஒன்று அமைந்தகரை அல்லது கே எம் சி.. குறைந்தது அரை கிலோ மீட்டராவது நடக்க வேண்டும் கண்காட்சி வாயிலுக்கு. உள்ளே நடப்பது தனி. நுழைந்து விட்டால் உட்கார இடம் கிடையாது. வரும் வழியிலும், போகும் வழியிலும், ஆங்காங்கே நடுத்தர வயதைத் தாண்டியவர்களும், சிறு குழந்தைகளுடன் வந்தவர்களும், தரையிலேயே உட்கார்ந்திருந்தது, பார்க்க பரிதாபமாக இருந்தது.
இம்முறை அதிசயமாக க.நா.சு. எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு அரங்கம் என்று ஒரு இடத்தை ஒதுக்கியிருந்தார்கள். அங்கேயும் ஓய்வெடுத்துக் கொண்டவர்கள் தான் இருந்தார்கள். எழுத்தாளர் தன் புது நூலை வெளியிட்ட பதிப்பக அரங்கின் முன்னாலேயே வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ராவிற்கு முன்னால் கூடிய கூட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனைப் பார்த்தேன். ‘ சந்தைக்கு சந்தைதான் சந்திக்கிறது’ என்றேன். சிரித்தார்.
பொதியவெற்பனைப் பார்த்தேன். கோவையிலேயே செட்டில் ஆகிவிட்டாராம். இருபது ஆண்டுகளுக்கு பின் ‘ பறை ‘ மீண்டும் வரப்போகிறது என்றார். ஆண்டுக்கொரு இதழ்.
டிராட்ஸ்கி மருது இளைஞர்களூடன் உட்கார்ந்திருந்தார். நவீன விருட்சம் அரங்கில் லதா ராமகிருஷ்ணனைப் பார்த்தேன். ஏழாம் பொருத்தம் என்பதால் விலகி விட்டேன். வழக்கம்போல அழகியசிங்கர் இல்லை. கிழக்குக்கு இரண்டு அரங்குதான். வேறு எங்கும் ஆக்கிரமிப்பு இல்லை. இந்த முறை சாகித்ய அகாடமி அரங்கம் கண்ணில் படவில்லை. இருவாட்சியும் காணோம். காவ்யா புத்தகங்கள் அரங்கை விட வெளியே நடைபாதையில் கொட்டிக் கிடக்கின்றன சலுகை விலையில்.
இலக்கியம் பேச வந்த தா.பாண்டியனைச் சுற்றி வீடியோ கேமராக்கள். மனிதருக்கு கம்பனும் வள்ளுவனும் அத்துப்படி. சரளமாக மேற்கோள் காட்டிப் பேசினார். ‘ பல்லுயிர் என்று சொன்னதனால் கார்ல் மார்க்ஸை விட வள்ளூவனே உயர்ந்தவன்.’ என்றார். அது அவர் கட்சி ஆட்களுக்கே பிடிக்காமல் போயிற்றாம். ‘ அவங்களுக்கு கார்ல் மார்க்ஸையும் தெரியாது.. வள்ளுவனையும் தெரியாது.. ‘ இன்னும் சில தெறிப்புகள்:
‘ வெள்ளைக்காரன் வச்ச பேரு மை லார்ட்.. மன்னராட்சி ஒழிஞ்சு, பிரபுத்துவம் ஒழிஞ்சு, வெள்ளைக்காரன் வெளியேறின பின்னும் அதையே சொல்லிக்கிட்டிருக்கோம் நம்ம நீதிமன்றங்கள்ல..நீதிபதி பார்த்தார், ஓ லார்ட் என்கிறார்களே நாம பிரபு போலிருக்குன்னு நெனச்சு பத்தாயிரம் ஏக்கரை வளைச்சு போட்டுட்டார்..’
‘ பணம் பட்டுவாடாவிலேதான் நம்ம நாடாளுமன்றமே நடக்குது.. ஆனா அதைக் கூட்டணின்னு சொல்லிக்கறாங்க ‘
கிட்டத்தட்டட் நாலு மணிநேரம் ஆகிறது வெறுமனே பெயர்பலகைகளைப் படித்து அரங்குகளுக்குள் எட்டிப் பார்க்க. சிறிது வயிற்றுக்கு ஈயலாம் என்று வெளியில் வந்தால், உணவரங்கத்தில் ஒரு தோசை எழுபத்தி ஐந்து ரூபாய். அண்ணாச்சியே தேவலாம் என்று ஆகிவிட்டது.
மூன்று பஸ் ஏறி, போரூர் முச்சந்திக்கு வந்து, முழு தோசை சாப்பிடுவதற்குள், முழி பிதுங்கி விட்டது.
டி.ஆர். மன்னிப்பாராக..
0

அவுட் ஆப் அர்டினரி விசயங்கள் என் கண்களில் படுவது தவிர்க்க முடியாதது.
புத்தகச் சந்தை விஸிட்டில் அப்படித்தான் ஆனது.
ஒரு கும்பலாக இருபது முப்பது மாணவர்கள் சீருடையுடனும், அடையாள அட்டைகள் கழுத்தில் தொங்கியபடியும், ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஆசிரியர்கள் யாரும் அருகில் இல்லை. அவர்கள் தேடலுக்கு போய்விட்டார்கள் போலிருக்கிறது. அதில் ஒரு மாணவன் அராபிக் இங்கிலீஷ் டிக்ஷனரி வாங்கியிருந்தான். ஒன்று அவன் இஸ்லாமிய மதத்தவனாக இருக்க வேண்டும். அல்லது அவன் தந்தை துபாயில் வேலை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் பலருக்கு உருது தெரியாது என்பது நான் அறிந்த ஒரு உண்மை. எனது முப்பது ஆண்டுகால நண்பன் முகமது அலி, வீட்டில் பேசுவது தமிழில்தான்.
மாணவர்கள் தலைக்கு மேலே ஒரு விளம்பர அட்டை. ‘ திரைப்படங்கள் மனதில் பதிவது போல பாடங்கள் பதிய வாங்குங்கள் எங்கள் எடுகேஷன் டிவிடி ‘ எப்படி இருக்கிறது பாருங்கள். இது கல்விக்கு விளம்பரமா? அல்லது திரைப்படத்திற்கு விளம்பரமா? கல்வி வியாபாரமாகிவிட்ட சூழலில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் இவர்களிடம்.
வம்சி பதிப்பக ஸ்டாலில் பவா.செல்லதுரையைத் தேடினேன். அவரது மனைவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறகு இதழ் ஒன்றைக் கொடுத்து விட்டு பவாவின் செல் நெம்பரை வாங்கிக்கொண்டேன். எண்ணை நான் என் செல்லில் பதியும் வரை பவாவின் மனைவி எழுந்து நின்றது ஆச்சர்யமான அனுபவம்.
இளம் மனைவியும் இரண்டாம் கிளாஸ் குழந்தையுமாக வந்த ஒரு தம்பதியின் சம்பாஷணை சுவாரஸ்யம்.
‘ எனக்கு ஏதாவது வாங்கணும்னு வந்தேன்.. குட்டிக்கு வாங்கியே எல்லாம் சரியாப் போச்சு.. அபாக்கஸ் ஐநூறு ரூபா என்கிறான்.. காசில்ல..’ – இளம் தாய்.
‘ புளியங்கொட்டைய வச்சு சொல்லிக்கொடுங்க.. அந்தக் காலத்தில அதான் பண்ணாங்க.. அதைதான் இப்ப அபாக்கஸ்னு சைனாவிலேர்ந்து கொணாந்திருக்காங்க’ – ‘புளியங்கொட்டைக்கு எங்க போறது? பெபில்ஸ் யூஸ் பண்ணிக்கலாம் ‘
‘ பல்லாங்குழி ஒழிஞ்சு போச்சு.. அதிலயே கணிதத்திற்கான பாடம் இருந்தது ‘
பொன்னியின் செல்வன் படங்களுடன் எட்டு நூறு.. ஆ.வி. பிரசுரம் ஆயிரத்தி முந்நூத்தி ஐம்பது.. சீதை பதிப்பகம் இருநூறு ரூபாய்க்கு படங்கள் இல்லாமல் ஐந்து பாகங்களையும் தருகிறது.. அதான் சீப். வானதி பவுண்ட் எடிஷன் முந்நூற்றி ஐம்பது. இன்னமும் பொ.செ.வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் தற்கால இளைஞர்களும் அடக்கம் என்பது சர்ப்ரைஸ் ஸ்கூப்.
பழசு. பழனியப்பனின் கம்பராமாயணம், மூலமும் உரையும், எங்கும் கிடைக்கவில்லை. விலை விசாரித்தேன்.. மூவாயிரத்து சில்லறை. மூலம் மட்டும் இரண்டு பாகங்கள் பேப்பர் பாக்கில் நானூற்றி ஐம்பது. அதில் ஐந்து பாகங்கள் ஒரு புத்தகம். அதே அளவு பக்கங்களுடன் யுத்தகாண்டம் மட்டும் தனி புத்தகம். கம்பர் யுத்தப் பிரியர் போலிருக்கிறது.
அரு.ராமநாதனின் பிரேமா பிரசுரம், அவர் நூல்களை வைத்துக் கொண்டு, கொள்வாரில்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்தார்கள். போன தடவை பிரபலமாக கட் அவுட் வைத்த அப்துல் ரகுமான் இந்த தடவை காணவே காணோம். ஞானக்கூத்தன் ஆல்ஸோ மிஸ்ஸிங்.
கண்ணதாசனுக்கும் தமிழ்வாணனுக்கும் இன்னமும் கொஞ்சம் கூட்டம் இருக்கிறது.
ஒரு அரங்கில் ‘ மதிப்புக்குரிய வாசகர் ‘ என்று எழுதிய நிலைக்கண்ணாடியை தொங்க விட்டிருந்தார்கள். வழுக்கைத் தலையர்கள் வாரிக்கொள்ளத்தான் அது பயன்பட்டது.
சாலையிலிருந்து உள் வரை குமுதம் பேனர்கள் தான். அரங்கு என்னமோ ஒதுங்கி ஓரத்தில் இருந்தது. உள்ளேயும் பெரிய சுவாரஸ்யம் இல்லை.
அம்ருதா முத்துக்கள் பத்து என்று ஆதவன் படத்தை போட்டிருந்தது. பக்கங்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் ஒரு கதைக்கு கூட காணாது போலிருந்தது. ஆதவன் நெடுங்கதை எழுதுபவர்.
ஆனந்த விகடன் நூல் பட்டியல் அழகான வண்ணப்படங்களுடன் தெளிவான குறிப்புகளுடன் நேர்த்தியாக அச்சிடப்பட்டிருந்தது. தினமலர் பழைய பேப்பர்களைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா புதிய ஆண்டு சலுகை சந்தாவை சேர்த்துக் கொண்டிருந்தது. கொடுத்த சந்தாவிற்கே சரியாக பேப்பர் வருவதில்லை போரூரில் என்றேன். வெண்டர் ப்ராப்ளம் என்று முடித்துக் கொண்டார் ஊழியர். உபரி தகவல்: ஹிந்து பத்திரிக்கை ஒரு நாள் அச்சிட 16 ரூபாய் ஆகிறது. அதில் விளம்பர வருமானம் ஒரு நாளைக்கு 13 ரூபாய். விலை 3 ரூபாய். டைம்ஸ¤க்கு விளம்பரங்கள் கிடைப்பதில்லை அவ்வளவாக. வாரச் சனிக்கிழமை அன்று இலவசமாக விநியோகிக்கப்படும் போரூர் டாக், மைலாப்பூர் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் வரும் விளம்பரதாரர்களுக்கு தொலைபேசி, அதே கட்டணத்தில் டைம்ஸில் வெளியிடு கிறோம் என்கிறார்களாம்.
அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்திப்பத்திரிக்கை வருகிறது. விலை ஒரு டாலர். ரயில் பயணத்திலேயே படித்துவிட்டு தூக்கிப் போட்டு விடுகிறார்கள் அதற்கென இருக்கும் தொட்டியில். அமெரிக்காவிற்கு ஒரு டாலர் என்றால் இந்தியாவுக்கு ஒரு ரூபாய். கர்னாடகாவில் கன்னட பேப்பர் ஒரு ரூபாய்க்கு சிக்னலில் எல்லாம் விற்கிறார்கள். பேருந்து கண்டக்டர்களும் டிரைவர்களும் வாங்கிக் கொள்கிறார்கள். இங்கு முடியாதா என்ன?
0

Series Navigationகவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ………..மீண்டும் …………..