புன்னகை எனும் பூ மொட்டு

 

தமிழர்தம் பண்பாட்டுப் பெருமை என்பது குடும்பவாழ்வில்தான் நிலைத்து நிற்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தமிழர் வாழ்வில் நிகழ்த்தி வருகின்றன அற்புதங்கள் பலப்பல. குடும்பம் என்பது கூடிவாழும் நடைமுறை. இது கணவன், மனைவி, மக்கள் அனைவரும் கொண்டும் கொடுத்தும் இன்புற்று வாழும் செயல்முறை. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. வாழ்க்கையின் எழுபத்தைந்து விழுக்காடு இந்தக் கற்பு சார்ந்த வாழ்க்கை முறையில் நடக்கின்றது.

கணவன் மனைவியிடம் கற்றுக் கொள்ளுகிற பாடங்கள், மனைவி கணவனிடமிருந்துக் கற்றுக் கொள்ளுகின்ற பாடங்கள், குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்துக் கற்றுக்கொள்ளுகின்ற பாடங்கள், உறவினர்கள், சுற்றத்தார், அக்கம் பக்கத்தார் என்று அனைவரிடமும் கற்றுக் கொள்ளுகின்ற அனுபவப் பாடங்கள் என்று கற்பியல் வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் கற்றுக் கொள்ளுகின்ற பாடங்கள் அ்ளவிடற்கரியன.

 

மனங்களைப் புரிந்து கொள்ளுகின்ற பக்குவ நிலை திருமணத்திற்குப் பின்புதான் ஏற்படுகின்றது. திருமணம் செய்து கொள்ளாவதர்களுக்கு வாழ்க்கை வேறு மாதிரி அமையலாம். திருமணம் செய்து கொண்டவர்கள் எளிதாக மனித மனங்களைப் புரிந்து கொள்ளுகிறார்கள்.  புரிந்து கொண்டு முரண் படவும் செய்கிறார்கள். ஒன்றுபடவும் செய்கிறார்கள். குடும்பத்தில் கணவன் மனைவியின் மனதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மனைவி கணவனின் மனத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவர் இன்ன நேரத்தில் இப்படி நடப்பார், இவரை இப்படி நடக்கச் செய்ய என்ன செய்யலாம் என்ற மந்திர தந்திர வேலைகள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் அளந்தறிந்து வைத்திருக்கிறார்கள்.

 

குடும்பத்துடன் ஒரு நிகழ்விற்குக் கிளம்பிப் பார்த்தால்  போதும்….குடும்பப் புரிதல் என்பது எத்தகையது என்பது தெரிந்துவிடும். தனக்கான பொருள்களை எடுத்துவைப்பது ஒருபுறம், மற்றவர்க்கான பொருள்களை எடுத்துவைப்பது ஒருபுறம், தான் வாழும் வீட்டைப் பாதுகாப்பாகப் பூட்டுவது ஒருபுறம், கணவன் மனைவி ஆகியோருக்குள் ஒற்றுமை, செல்வம் , புரிதல் ஆகியன இருப்பதை மற்றவர்க்குக் காட்ட நகைகள் அணிந்து கொள்வது, ஒன்று பட்ட நிறத்தில் ஆடைகள் அணிந்து கொள்வது   போன்றன ஒருபுறம்

எவ்வளவு நிகழ்வுகள் இந்தச் சிறு நிகழ்வில் நடந்துவிடுகின்றன. இதையெல்லாம்தாண்டி சென்றிருக்கும் நிகழ்வில் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பது, அவர்கள் நடந்து கொள்வதைக் காண்பது,  அவர்களைப் போன்று நாம் இன்னும் எட்டவேண்டிய வசதிகள் என்ன என்று சிந்திக்கின்ற குடும்ப முன்னேற்றச் செயல் திட்டம் …… என்று இந்தச் சிறு நிகழ்விற்குள் குடும்பத்தின் ஒட்டு மொத்த வெற்றியே கணக்கிடப்பட்டு விடுகின்றது,

 

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளில் இருந்து எழுபது ஆண்டுகள் வரை இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் ஒன்றாய் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை தொடர்ந்து மகிழ்வுடன் நடைபெற குறைகள் குறைய வேண்டும். நிறைகள் நிறைய வேண்டும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. குறைகளைச் சுட்டிக்காட்டினால் எல்லாருக்கும் மனத்தாங்கல் வருகின்றது. காட்டாமல் விட்டுவிட்டால் தவற்றைத் திருத்த முடியாது என்ற எண்ணம் எழுகின்றது.  என்ன செய்வது.

 

குறைகளே இல்லாமல் ஒரு கணவன் இருக்க முடியுமா….. குறைகளே இல்லாமல் ஒரு மனைவி இருக்க முடியுமா….. இந்தக் கேள்விகளைச் சற்று மாற்றிக் கேட்டுப்பாரக்கலாம். நிறைகளே இல்லாத கணவன் யாராவது உண்டா? நிறைகளே இல்லாத மனைவி யாராவது உண்டா? நிறைகளைக் கணக்கில் கொண்டுவிட்டால் குறைகள் குறைந்து போகின்றன. நிறைகளை மட்டும் கணக்கில் கொள்வது என்பது இல்லற வாழ்வின் இனிமையைக் கூட்டுகின்றது.

 

குறைகளை எப்படிச் சொல்வது….. அல்லது மனதில் உள்ளதை எப்படி வெளிப்படுத்துவது. சொற்களால் வெளிப்படுத்தலாம். சொற்கள் நம்முடையவை. பொருள்கள் கேட்பவரின் காதுகளைப் பொறுத்தது. சொற்களால் முரண்பாடுகள் அதிகம் தோன்றிவிடுகின்றன. சொற்கள் இல்லாமல் மனதில் உள்ளதைச் சொல்ல முடியுமா?

 

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு (1274)

 

மலர் என்பது எத்தனை அழகான இயற்கையின் படைப்பு. அழகான வடிவம், கண்களுக்குக் குளிர்ச்சியான நிறம், நுகர்வதற்கு வாசனை மிக்க மணம், தொடுவதற்கு மென்மையான இதழ்கள் என்று இயற்கை தந்த உன்னதமான படைப்பு மலர்.

 

மலர் எவ்வாறு தோன்றுகிறது. அது எப்படி மலருகின்றது. மலர் மலருவதற்கு பதிமூன்று படிநிலைகள் இருக்கின்றனவாம்.

 

(1)  அரும்பு – அரும்பும் நிலை
(2) நனை – அரும்பு வெளித்தெரியும் நிலை
(3) முகை – முத்துப்போன்ற வளர்ச்சி நிலை

(4) மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
(5) முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
(6) மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
(7) போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
(8) மலர்- மலரும் பூ
(9) பூ – பூத்த மலர்
(10) வீ – உதிரும் பூ
(11) பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
(12) பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
(13) செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம்பெற்றழுகும்நிலை

என்று இந்நிலைகளை ஒரு மலர் பெறுவதாக தமிழன் கண்டறிந்திருக்கிறான்.

 

மொட்டு என்பது காற்று புகாமல் இயற்கை மூடிவைத்திருக்கும் ஒரு சோதனைக்குழாய். அந்தக் குழாய்க்குள் எப்படியோ மணம் வந்து சேர்ந்துவிடுகின்றது. மலர் மலர்வதற்கு இயற்கை சக்தியைத் தரும்போது மலரில் மணமும் வெளிப்பட்டுவிடுகின்றது.

 

இப்படித்தான் மனைவி என்பவளும். அவள் தனக்குள் செய்திகள் பலவற்றைச் சேமித்து வைத்திருக்கிறாள். நேரம் வருகையில் அவை மெல்ல அவளி்ல் இருந்து வெளிப்படுகின்றன. அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் ஒவ்வொருவனும் மனைவியை அவளின் அசைவுகளைக் கொண்டே அவளின் திறத்தை உணர்ந்து கொள்ளவேண்டும்.

 

மனிதர்கள் ஒவ்வொருவரும் மலரை விரும்புகிறார்கள். அம்மலர் தரும் நுண்ணிய வாசனையை விரும்புகிறார்கள். மலரை விரும்பும் மனிதர்களால், மலரின் நாற்றத்தை அறிந்து கொள்ளும் மனிதர்களால் மனைவி என்பவள் உணர்த்தும் குறிப்பினை உணர்ந்து கொள்ளமுடியாதா என்ன.  மலர் போலவே மனைவியும். அழகானவள். தனக்குள் பல குறிப்புகள் கொண்ட வாசம் மிக்கவள். தொடுவதற்கு மென்மையானவள்.

 

 

‘‘நகை மொக்கு’’ என்று வள்ளுவர் மலருடன் பெண்ணின் சிரிப்பினை ஒப்பு நோக்குகின்றார். மனைவி ஒன்றும் பெரிதாகச் சிரித்துவிடவில்லை. சற்றே சிரிப்பு முகம் காட்டினாள்.

 

மலர் மலரவே பதிமூன்று படிநிலைகள் என்றால், மனைவி சிரிக்க எத்தனைப் படிநிலைகள் வேண்டும். மூடிநிற்கும் மனைவியின் மனத்தைத் திறந்து காட்டுகிறது அவளின் சிறு புன்முறுவல். சிறு புன்முறுவலுக்குத்தான் அவளுக்கு நேரம் இருக்கிறது. கடமைகள் பற்பல அவளை எந்நேரமும் அழைக்கின்றன.

 

இதே போலக் கணவனும். மலராவான் மனைவிக்கு. அவனுக்குள் இருக்கும் குறிப்பினையும் மனைவி அறிந்து கொள்ள வேண்டும். கணவனின் சிரிப்பு, சொல் உதிர்ப்பு இவற்றுக்குள் இருக்கும் உள்குத்துகளைக் கவனித்து மனைவி நடந்து கொள்ளவேண்டும். குறிப்புகளை உணர்ந்தால் குண்டுவெடிப்புகளைத் தவிர்த்துவிடலாம்.

 

மலர் கொண்டு கற்பியல் பாடம் நடத்துகிறார் வள்ளுவர். மலரையும் நுகர்வோம். இல்லறத்தையும் இனிமையுடன் நடத்துவோம்.

 

Series Navigationசீதாயணம் நாடகப் படக்கதை – 18வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”