புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை

author
0 minutes, 1 second Read
This entry is part 6 of 14 in the series 8 நவம்பர் 2015
முனைவா்,பெ,பகவத்கீதா
உதவிப்பேராசிாியா் , தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லுாாி
திருச்சி 22

சமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில் ரணகளமாகும் சமூகம் மலர்களின் அமைதியை எவ்வாறு காண இயலும் . ஒரு சிறு சமூகக் குழுவிலிருந்து உலக நாடுகளிடையே உருவாகும் கருத்துவேறுபாடு சிறுபுசல் சண்டை போர் உலகப்போர் என விரிந்து பரவும் தோற்றத்தில் தனிமனிதனிலிருந்து குழுக்கள் வரை மனதிற்குள்ளே கண்களுக்குள்ளே கருணையும்
இரக்கமும் அன்பும் நிறைந்திருப்பது மறைந்து கத்தியும் கொடுவாளும் ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் ஆயதங்களும் மறைந்திருப்பது உண்மை . இவ்வுண்மைகளைப் பொய் தோற்றமாக்க பெருமுயற்சி கொண்டாலும் வெற்றி என்பது மறுபக்கத்தின் உண்மையே .

மன்னராட்சியில் நிலவுடைமையாக்கும் பெருமுயற்சியில் மன்னர்களுக்கிடையில் போர் என்பது மண்ணாசையாக விளங்க ஒரு
மன்னருக்கு இலக்கணம் ‘ நாடு பிடிப்பது ’ மட்டுமல்ல மக்களும் என்று அறிவுறுத்திய துறையாக ‘ சமூக அமைதியை ’ ஏற்படுத்திய துறையாக விளங்கியது பொருண்மொழிக் காஞ்சி . பொருள் பொதிந்தமொழிகளை அறிவுறுத்தும் துறையாக அமைவது .

“பொருண்மொழிக் காஞ்சி ’ என்பது பழமொழியைப் போல நுண்பொருளை அகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும்நன்
மொழியாகும் . இது நம் தமிழ் நூல்களில் ‘பொருளுரை’ என்றும் ;பொருண்மொழிக்காஞ்சி’ என்றும் வழங்கப் பெறுகின்றது .
‘பொய்யில் புலவன் பொருளுரை ’ என்று சீத்தலைச்சாத்தனாராலும் மூதுரை பொருந்திய என்ற சூத்திரத்துள் ‘ பொருண்மொழிக்காஞ்சி ’ என்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க .
‘எரிந்திலங்கு சடைமுடிமுனிவர் புரிந்து கண்ட
பொருண் மொழிந்தன்று ’ என்பர்
பொருண்மொழி விழுமிய பொருளைத் தன்னகத்தே கொண்டு பெருகியும் சுருங்கியும் வருதல் தம் நூல்களில் காணலாம். ”
( ஒளவை.து.துரைசாமி பிள்ளை :பக்-122)
இவ்வகைச் சிறப்புகளைக் கொண்ட பொருண்மொழிக் காஞ்சித்
துறையில் அமைந்த புறநானூற்றுப் பாடல்கள் 16 பாடல்கள்
24, 75, 121, 182, 183, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 195, 214 ஆகியன .

அரசனும் சமூகஅமைதியும் :
அரசனுக்குப் போரினை வலியுறுத்தும் பெரும்பாலான
புறப்பாடல்களுக்கு மாற்றாக போரினை விலக்கி அரசனுக்குரிய
பெரும்பண்புகளில் வீரமிக்க போர் மட்டுமே முதன்மையன்று
குடிமக்களைக் காப்பதும் ஏமாற்றாது நேர்மையான முறையில்
ஆட்சி செலுத்துவதும் கொடுப்பதில் அவரவர் தகுதி அறிந்து
கொடுப்பதும் சான்றோர் அறவழியிலே நடப்பதும் மிக
முதன்மையானவை என்று வலியுறுத்தகின்றன .
அறவழி என்னும் சொல்லே சமூகஅமைதியை ஏற்படுத்தும்
மந்திரம் . அம்மந்திரத்தை அறிந்து அரசாட்சி புரியும் அரசனின்
செங்கோல் நிமிர் செங்கோல் . அரசனின் குறியீடுகளாக அமையும்
வெண்கொற்றக்குடையும் செங்கோலும் நல்ல அரசனுக்குச்
சான்றாகும் வெற்றிக் குறியீடுகளாக விளங்கும். இல்லையெனில்
தோன்றிற் புகழொடு தோன்றா அரசனைப் பனித்துளியாக்கி
மறைத்துவிடும் . அத்தகைய அரசாட்சி அரசனுக்குப் பாரமாவது
எப்போது என்னும் கேள்வியை முன்னிறுத்தும் கருத்துக்களைப்
பார்க்கலாம் .
அரசபாரம் :
மூத்தோர் இறந்துபட அரசுரிமையை ஏற்றுக் கொண்டு
குடிகளைக் காப்பது அவரவர் மனஇயல்பால் இரு வகைப்படும் .
குடிகளிடம் வரி வேண்டி இரக்கும் சிறுமை உடையவனுக்கு அது
பெரும்பாரமாகத் தோன்றும் பேராற்றலும் சால்பும் உடையவனுக்குக்
(கிடேச்சித் தக்கை ) நெட்டியைப் போல் சுமப்பதற்கு மிகவும்
இலேசாகத் தோன்றும் என்பதை
“ மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தெனப்
புhல்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனக்
—————————————————– ————–’’
(புறநானூறு :75)
என்னும் பாடல் சமூக அமைதி என்பது மக்களிடம்
வரி வாங்கும் முறையையும் உள்ளடக்கியது என்பதை
எடுத்துரைத்துள்ளது . அரசன் முறை தவறி வரி வாங்கினால்
அதுவும் வன்முறையின் பேயாட்டமே . சமூக அமைதி சிதைந்து
மக்கள் போர்க்கொடி தூக்கும் உண்மை அதில் மறைந்துள்ளது .

நாடு காவல் என்னும் சகடம் :
“ கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு ” ( புறநானூறு :185)
என்னும் பாடலில் உலக இயற்கையை நிலைநிறுத்தி நாட்டில்
செலுத்தப்படும் நாடு காவலாகிய சகடத்தினைச் செலுத்துவோன்
மாட்சிமை உடையவனாயின் உலக வாழ்வும் கேடற்றுச் சான்றோர்
வகுத்த நெறி வழியே நன்கு நடக்கும். அவ்வாறு காத்தல் இலனாயின்
எந்நாளும் பகையென்னும் சேற்றிலே அழுந்தி அவன் கெடுவதுடன்
அவன் குடிமக்களும் பலப்பல துயரங்களுக்கும் உள்ளாகிக் கெடுவர் .
நாட்டினைக் காவல் புரியும் அரசனின் கடமை மக்களையும்
நாட்டினையும் காப்பது சான்றோர் அறவழியிலேயே நடக்க வேண்டும்.
என்னும் உண்மையை ஒவ்வொரு அரசனும் தம் கருத்திலே கொள்வது
முதன்மையானது .

வேந்தர்க்குக் கடனே :
உலக உயிர்களைக் காப்பது நெல்லும் நீரும் மட்டுமன்று .
பரந்த இவ்வுலகம் வேந்தனின் முறையான காவற்சிறப்பாலேயே
செவ்விதாக நிலை பெறுவதனால்அரசனே உண்மையான உலகுக்கு
உயிராவான் . அதனால் வேலால் மிக்க படையையுடைய
வேந்தனுக்கு உலக நல்வாழ்வின் உயிர்ப்பாக விளங்கவேண்டும்
ஏன உணர்ந்து அதற்கேற்ப மக்களைப் பேணி நடப்பதே
கடமையாகும் என்பதை
“ நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே ” (புறநானூறு:186 )
என்னும் பாடல் எடுத்துரைத்துள்ளது . அதனால் அரசவாழ்க்கை
சுக போக வாழ்க்கையன்று .மக்களின் அமைதியை உள்ளடக்கிய
வாழ்க்கை பாதுகாவலைத் தரும் அரண் என்பதால் மன்னன்
உயிர்த்தே மலர்த்தலை உலகம் என்கின்றது .
சமூகஅமைதிக்கான சிந்தனைகள் :
சமூக அமைதிக்கான சிந்தனைகளை வலியுறுத்தும்
பொருண்மொழிக் காஞ்சித் துறையில் சமூகஅமைதி அரசனுக்குமட்டும் உரிய ஒன்றல்ல . மக்களும் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் உள்ளன என்பதை சில பாடல்களிலிருந்து அறியலாம் .
“ யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா :
…………………………….
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ’’ ( புறநானூறு:192 )
என்னும் பாடலிலும்
“ பல்சான்றீரே!பல்சான்றீரே!
புயனில் மூப்பின் பல்சான்றீரே! ” ( புறநானூறு :195)
என்னும் பாடலிலும்
நாம் செய்யும் நன்மைகளும் தீமைகளும் நமக்கே என்பதை உணர்த்தியுள்ளன . வாழ்க்கையில் சமூகஅமைதி ஆட்சியாளர்களிடம்
மட்டுமல்ல மக்களிடமும் என்பதை ஆட்சியாளர்களும் மக்களும்
புரிந்து கொண்டு செயல்பட்டால் சமூக அமைதி வன்முறையின்
வேர்களில் மலர்ந்திடும் மலர்களாகும் .
புhர்வை நூல்கள் : 1. புறநானூறு மூலமும் பொருளும்
2. செம்மொழிப் புதையல் –
ஒளவை துரைசாமிப்பிள்ளை

Series Navigationஅவன், அவள். அது…! -9இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *