புலவிப் பத்து

This entry is part 2 of 12 in the series 29 ஜனவரி 2017

வளவ துரையன்

புலவிப் பத்து
ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே புலவியைக் காட்டுவதுதான் ஆயினும். தலைவியும், தோழியும் தலைவன் முன்னிலையில் ஊடல் கொண்டு கூறியதை மட்டுமே இங்கு கூறப்படுவதால் இப்பகுதி ‘புலவிப் பத்து” என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களில் தலைவிய சொல்வதாக ஆறு பாடல்களும் தோழி சொல்வதாக நான்கு பாடல்களும் அமைந்துள்ளன.
புலவிப் பத்து—1
’தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவன் ஊர்’ என்ப; அதனால்
தன்சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போற் செய்யும் ஊர் கிழவோனே!
[அன்பில்=அன்பில்லாத; வெண்பூ=ஆம்பல் மலர்; தன்சொல் உணர்ந்தார்=அவன் சொல்லைக்கேட்டு உண்மை என்று கருதி அவன்மீது காதல் கொண்டோர்; பொன்ப்போல் செய்தல்=பொன் நிறப் பசலை பூணல்]
சிலபேரு வராங்க; வந்து அவகிட்ட இனிமே அவன் அவங்க ஊட்டுக்கெல்லாம் போக மாட்டான்; அவனை நீ சேத்துக்கிட்டு வாழணும்னு சொல்றாங்க; ஆனா மனசளவிலே துயரதோட இருக்கறா; அதால நான் அவன் பேச்சை நம்ப மாட்டேன்னு சொல்றா. அத்தோட அவன் குணத்தையும் மறைவா இழிவா பேசற பாட்டு இது.
”அவன் ஊர் எப்படிப்பட்டது தெரியுமா? தான் பெத்த குஞ்சினையேத் தின்னுகின்ற முதலையோடு, ஆம்பல் பூவெல்லாம் எல்லாம் இருக்கற குளம் இருக்கற ஊராம் அது; அதால அவன் சொல்லக்கேட்டு அதையே உண்மையின்னு நம்பினவங்களை உட்டுட்டுப் போயி அவங்க ஒடம்புல பொன் நிறத்துல பசலை வர்ற கொடுமையை அவ்ன் செய்யறான்” இதான் பாட்டோட வெளிப்படையான பொருளாம்.
முதலை எந்த அளவுக் கொடுமையானதுன்னு 24-ஆம் பாட்டிலியே ”பிள்ளை தின்னும் முதலை”ன்னு சொல்லியிருக்குல்ல; அது அதன் குஞ்சினையே தின்கிற அன்பில்லாதது. அது எப்படி தான் பெத்ததயே தின்னுதோ அதேபோல அவனும் தான் விரும்பி கல்யாணம் செஞ்சவளையே கைஉட்டுட்டுப் போயிடற வழக்கம் கொண்டவன்றது மறைவா சொல்லப்பட்டுள்ள பாட்டு இது.
=====================================================================================
புலவிப்பத்து—2
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர!—நின் மாண்இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே!
[மகிழ்மிக=மதுமயக்கம் மிகுதியாக; யாணர் ஊர= புது வருவாய் உடைய ஊரனே; மாணிழை=மாண்புகள் அமைந்த அணிகலன்; மலிர்நிறை=புதுவெள்ளம்]
அவன் அவங்க ஊட்டுல போயி இருந்தான்ல; இப்ப அவ அவனை ஒதுக்கிட்டா; அதால அவன் திரும்ப கட்டின தலைவிக்கிட்டயே வரான். தலைவிக்கு அவ ஒதுக்கினது தெரியும்; இப்ப அவ சொல்ற பாட்டு இது.
”ஒன் ஊர்ல தெனமும் புதுசுபுதுசா வருவாய் வருமாம்; நீ ஆசைப்பட்டு நெறைய நகை போட்டிருந்த அந்தப் பொண்ணுகிட்ட போனே; அங்கியே இருந்த; இப்ப அவ காவிரி ஆத்துல புது வெள்ளம் போல இருக்கற ஒன்னோட அமார்பைச் சேர மறுத்து ஒதுக்கிட்டா; ஒருவேளை அவ கள்ளு குடிச்சு அந்த மயக்கத்துல அப்படி நடந்துக்கிட்டிருப்பா?”
அவ ஒதுக்கினதாலதான நீ இப்ப இங்க வந்த? கள்ளு மயக்கம் கொறஞ்ச ஒடனே அவ ஒன்னைத் தேடுவா; போன்னு மறைவா சொல்றா.
=====================================================================================
புலவிப்பத்து—3
அம்பணத்[து அன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப்பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன்; பலசூ ளினனே!
[ அம்பணம்=மரக்கால்; செம்பு=சிறு செப்புப் பாத்திரம்; பார்ப்பு=குஞ்சு; சூள்=உறுதிமொழி]
அவனோட தோழன் பாணன் மொதல்ல வரான் ;அவனைப் பத்திச் சொல்லி அவனை சேத்துக்குங்கன்னு கேக்கறான். அப்ப அவனே வந்து நிக்கறான்; அவனிப் பாத்து அவ சொல்ற பாட்டு இது.
”ஒன் ஊருல மரக்காலப் போல இருக்கற தாய் ஆமையோட முதுகு மேல, சின்ன செம்பு போல இருக்கற ஆமைக் குஞ்செல்லாம் ஏறித் தூங்கிக் கெடக்கும்; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவன் நீ; நீ அனுப்பிய உன் தோழன் பாணன் ஒன்னை விட பொய் அதிகமாச் சொல்றவன்; பொய்யான உறுதிகளும் சொல்வான்”
ஆமைக்குஞ்செல்லாம் அதோட தாய் முதுகில் தூங்கும்னு சொல்றது, அதேபோல அவனும் மார்பு மேலத் தூங்கற புள்ளங்கள உடையவன்னு காட்டறதுக்காக. அப்படிப் புள்ளங்களப் பெத்து வளக்கறவன் பொய் சொல்லக் கூடாதுன்னு மறைவா சொல்றா;
புலவிப் பத்து—4
தீம்பெரும் பொய்கை யாமையினம் பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்[கு]
அதுவே ஐய,நின் மார்பே;
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே
இது தோழி சொல்ற பாட்டு; அவன் என்னா செஞ்சாம் தெரியுமா? அவளை உட்டுட்டு அவங்க ஊட்ல போயி ரொம்ப நாளு தங்கிட்டான்; இப்பதான் கட்டினவ ஞாபகம் வந்து திரும்பி வரான்; அப்ப தோழி சொல்றா/
”ஐயனே! இனிமையான பெரிய குளத்துல சின்ன ஆமைக்குஞ்சு தன்னைக் காப்பாத்தாவிட்டாலும் அதோட தாய் மொகத்தைப் பாத்தே வளருது; அதேபோல நீ இங்க இல்லாவிட்டாலும் இவ ஒன் மார்பை நோக்கியே வாழ்ந்து கொண்டிருக்கா; அந்த மகிழ்ச்சியாலதான் உயிரோட இருக்கா; நீஅதைத் தெரிஞ்சு நடந்துக்கோ; அதான் ஒனக்கு நல்ல தருமமாகும்”.
புலவிப் பத்து—5
கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து
வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
யாறுஅணிந் தன்று,நின் னூரே
பசப்பு அணிந்தனவால்-மகிழ்ந!-என்கண்ணே.
[கூதிர்=ஐப்பசி,கார்த்திகை மாதங்கள்; வேனில்=வைகாசி, ஆனி மாதங்கள்
இதுவும் போன பாட்டு மாதிரியே தோழி சொல்றதுதான்; அவ சொல்றா;
”தலைவனே! ஒன் ஊர்ல ஓடற ஆறாலதான் ஒன் ஊரு அழகா இருக்கு. அந்த ஆத்துல கூதிர்காலம்ற மழைக்காலத்துல தண்ணி நெறய ஓடறதால அது கலங்கி இருக்கும்; அதுவே வேனில்னு சொல்ற கோடைக் காலத்துல மழைத்தண்னி வராததால தெளிவா நீலமணி போல இருக்கும்; ஆனா அதுபோல இல்லாம இவ கண்ணெல்லாம் நீ இல்லாததால எல்லாக் காலத்துலயும் பசலையே பூத்திருக்கு”
புலவிப் பத்து-6
நினக்கே யன்றஃ[து] எமக்குமார் இனிதே-
நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டுநீ யருளாது ஆண்டுறை தல்லே
இது தோழி சொல்ற பாட்டுதான். அவன் தலைவிகிட்ட வரத்தான் நெனக்கறான்; ஆனா அங்க இருக்கறவ அதைத் தடுக்கறா; அதனால வராம இருந்துடறான்; ஆனா ஊரு ஏதாவது சொல்லுமேன்னு நெனச்சு வரான்; அப்ப தோழி கோபமா சொல்றா:
“நல்ல நெத்தி இருக்கற இவ ஒன் மார்பை விரும்பினா; அவ விரும்பினபடியே நீ நடக்கற மாதிரி ஊருக்காக இங்க வர்றதைவிட அங்கியே அவ ஊட்லயே தங்கறது ஒனக்கு மட்டும் இனிதல்ல; எங்களுக்கும் நல்லதுதான்”
புலவிப் பத்து—7
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெறு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர!
மாணிழை யாயம் அறியும்-நின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே
[முள்ளெயிற்றுப் பாண்மகள்=முள்ளைப் போலக் கூர்மையான பற்களை உடையவளான பாண்மகள்; கெடிறு=ஒரு வகை மீன்; வட்டி=கூடை; சொரிந்த=கொண்டுவந்து கொட்டுதல்; அரிகாற் பெரும்பயறு=நெல் அரிந்த தாளடியிலே விதைத்த பெரும் பயறு; யாயம்=தோழியர் கூட்டம்]
கட்டினவளை உட்டுட்டு அவன் அவங்க கிட்டப் போயிருந்தான். மறுபடியும் கட்டினவகிட்ட வர விரும்பறான். ஆனா அவ என்ன சொல்லுவாளோன்னு பயப்படறான். அதால தன் தோழனான பாணனை அவகிட்டத் தூது அனுப்பறான். அவளோ மறுப்பு சொல்லித் திருப்பி அனுப்பறா; அவன் மறுபடியும் தோழனோட வந்து அவளைப்பத்திப் பலசொல்லை அன்போட பேசறான்; அவ மனம் வெதும்பி அவன் கேக்கற மாதிரி அவ சொல்ற பாட்டு இது.
“முள்ளுடைய முனை போலக் கூர்மையான பற்களெல்லாம் உடையவதான் அந்தப் பாண்மகள். அவ கெடிற்று மீனைக் கொண்டுவந்து கூடை நிறையக் கொட்டறா; அதுக்குப் பதிலா நெல்லரிந்த வயலிலே விதைத்து வளர்ந்த பெரும்பயறை வீட்டிலிருக்கறவ கொட்டறா; அப்படிப்பட்ட ஊரை உடையவன் நீ! நீயும் ஒன் தோழன் பாணனைப் போலவே நெறைய பொய் சொல்ற; அதை எல்லாம் நகை போட்டிருக்கற தோழிங்க கூட்டத்துக்கு நல்லாத் தெரியும்
புலவிப் பத்து-8
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெரும-நின் பரத்தை
ஆண்டுச் செய் குறியோடு ஈண்டு நீ வரவே
[வலைவல்=வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலில் வல்லவனான; யாண்டுமழி வெண்ணெல்=அறுவடை செய்து ஓராண்டு கழிந்த பழைய வெண்ணெல்]
தலைவியை உட்டுட்டு வேற எடத்துக்குப் போயி அங்கயே ரொம்ப நாள் அவன் தங்கிட்டான்; இப்ப மறுபடியும் இங்க வரான்; அப்ப தலைவி சொல்ற பாட்டிது;
”மீன் புடிக்கற தொழில்ல கெட்டிக்காரனான பாணன் ஒருத்தன் இருக்கான். அவனோட பாண்மகள் ரொம்ப எளமையானவ; அத்தோட வெள்ளையான பல்லு உடையவ; அவ வரால் மீனைக் கொண்டு வந்து கூடை நெறய கொட்டுவா; அதுக்கு வெலையா ஒன் ஊர்ல இருக்கற ஒழவனோட பொண்டாட்டி போன வருசம் அறுத்த வெள்ளையான நெல்லக் குடுப்பா; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவனே! நீ அங்க அவளோட சேந்த குறிகளோட இங்க வர்றது எனக்குப் புடிக்கல”
புலவிப்பத்து—9
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெல் பெறூஉம்
யாணர் ஊர! நின்பாண்மகன்
யார்நலம் சிதையப் பொய்க்குமோ இனியே
[அஞ்சில் ஓதி=அழகிய சிலவாகிய கூந்தல்; அசைநடை=அசைந்து அசைந்து நடக்கும் தளர் நடை;]
தலைவிகிட்ட வந்து தோழி சொல்றா; ”ஒன் ஊட்டுக்காரன் அவனோட தோழன் மூலமாத்தான் அவகிட்ட போயிருக்கறான்.” அப்பறம் அவனோட அதே தோழன் தலைவிகிட்ட வந்து அவனோட காதலையும் பெருமையையும் சொல்லி அவனைச் சேத்துக்கன்னு கேக்கறான். அப்ப அவ தலைவன் கேக்கறமாதிரி சொல்ற பாட்டு இது.
”ஒன் ஊர்ல இருக்கற பாண்மகள் அழகான கூந்தல் கொண்டவ. அதோட அவ தலையில நெறய பாரத்தை சொமந்துகிட்டு அசைந்து அசைந்து வரா; கொஞ்சம் மீனக் குடுத்துட்டு அவ நெறைய நெல்லு வாங்கிப் போயிடுவா அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவன் நீ! ஒன் தோழன் இன்னும் என்ன என்ன பொய்யெல்லாம் சொல்லி யார் யாரையெல்லாம் கெடுக்கப்போறானோ?”
கொஞ்சம் மீனைக் குடுத்து ஒன் தோழன் நெறைய நெல்லை வாங்கிட்டுப் போறான்னு சொன்னதன் மூலம் ஒன் தோழன் கொஞ்சம் பொய் சொல்லி நெறய பேரை உனக்குக் குடுப்பான்னு மறைமுகமா தலைவி பழிச்சுப் பேசறா.
புலவிப்பத்து—10
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே;நின்
நெஞ்சம் பெற்ற இவளுமா ரழுமே
அவன் கட்டினவள விட்டுட்டு அங்க வேற ஊட்ல போயி இருந்துட்டு இப்ப இங்க மறுபடி திரும்பி வரான்; அப்ப அவன்கிட்ட தோழி சொல்ற பாட்டு இது
”வஞ்சின்றது ஒருவகை மரமாம்; அந்த மரமெல்லாம் ஒயரமா வளந்திருக்கற ஊரை சேந்தவன் நீ! இவ ஒன்னையே தன் நெஞ்சிலே சொமந்துகிட்டு வாழறா; நீ அங்க போனதால ஒன்னப் பிரிஞ்சதால அழுவறா; அதப் பாத்த அவளுக்குத் துணையா இருக்கற நாங்களும் வருந்திக் கெடக்கறோம்; இல்லறம் நடக்காததால இங்க இருக்கற பணம் கூடப் பயனில்லாம கெடக்குது;”
இதைப் பாத்தாவது நீ இவமேல அன்பு செலுத்தணும்னு குறிப்பா சொல்றா”
=====================================================================================

Series Navigationபோய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *