பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]

 

கடல் நாகராசன் எப்பொழுதும் தேனீயைப் போல சுறுசுறுப்பாய் மிகவும் உற்சாகமாய் ஏதேனும் செய்துகொண்டே இருப்பவர். பல தலைவர்களின் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாள்களைத் தவறாமல் கொண்டாடி வருபவர். அந்த விழாக்களில் மாணவர்களுக்குப் போட்டி வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர்.

அவர் தேனீ எப்படி ஒவ்வொரு மலராகச் சென்று சென்று தேனை எடுத்து வருமோ அதேபோல பல புத்தகங்களைப் படித்து அப்புத்தகங்களில் மலர்களைப் பற்றி உள்ள தகவல்களை எல்லாம் தொகுத்து இந்நூலாக ஆக்கித் தந்து உள்ளார்.

இந்நூலில் உள்ள செய்திகளில் பல நாம் இதுவரை கேள்விப்படாததாகவே உள்ளன. அதனால் நூலை எடுத்ததும் படித்து முடிக்க வேண்டும் எனும் ஆர்வம் ஏற்படுகிறது.

உதாரணமாக பூ என்பதற்கு ஆங்கிலத்தில் flower எனும் பெயர் எப்படி வந்தது கூறுகிறார்.

ஃப்ளோரின் [florin] எனும் இலத்தின் மொழிச் சொல்லுக்கு மலர் என்பது பொருளாம். அந்த இலத்தின் சொல்லில் இருந்துதான் fiower என்பது உருவாகி விட்டது.

அடுத்து குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது போலவே குரங்கிலிருந்து பன்சி எனும் மலரின் பெயர் தோன்றியது என்று இந்நூல் கூறுகிறது. அதாவது அந்த மலர் பார்ப்பதற்கு சிம்பன்சிக் குரங்கின் தோற்றத்தை ஒத்திருப்பதால் அம்மலருக்கு ஆய்வூ வித்தகர் ஆர்.டபிள்யு.உட் பன்சி என்ற பெயரையே சூட்டி உள்ளார்.

விக்டோரியா குருசியன்ஸ் எனும் பெயரில் ஒரு மலர் உள்ளது. இதை லில்லிப் பூ என்றும் அழைக்கிறார்கள்.

இம்மலர் இரண்டு மீட்டர் அகலமான விட்டத்தைக் கொண்டதாம். மேலும் வியப்பான செய்தி என்னவென்றால் அம்மலர் 40 கிலோ எடையுள்ள பொருள்களைத் தாங்கக் கூடியதாம். இம்மலர் ஜெர்மனியில் ‘புருன்ஸ்விக்” பூங்காவில் உள்ளது.

 

அதேபோல உலகின் மிகவும் நீளமான பூ சுமத்திரா தீவில் உள்ளது. அதை 20-05-1818 இல் கண்டுபிடித்த புனித தாமசு ஸ்டாம்பிரட் ராபின்ஸ் தன் பெயரையே அதற்குச் சூட்டி அதை ராபிலிசியா என்றழைக்க ஆரம்பித்தார். இப்பூவின் விசித்திரம் இலையோ தண்டோ இல்லாமல் நேராக வேரிலிருந்தே பூக்கும் தன்மை கொண்டதாகும். இப்பூவின் எடை 12 கிலோ இருக்கும். அதன் வாசம் யாவரையும் மயக்கக் கூடியது.

நாள்தோறும் நாம் பார்க்கும் மருக்கொழுந்திற்கு இலைப்பூ என்றும் தாழம்பூவிற்கு ஓலைப்பூ என்றும் பெயர்கள் உள்ளன.

அன்னாசிப் பழம் என்று சொல்கிறோமே அது பழமே இல்லை. அன்னாசிச் செடி பூக்குமே தவிர பழம் தருவதில்லை. அன்னாசியின் பூவைத்தான் நாம் பழம் என்கிறோம்.

உலக அன்னையர் தினம், உலக மகளிர் தினம் போலவே ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 13—ஆம் நாள் உலக மலர்கள் தினம் என்றழைக்கப் படுகிறது. முதன்முதலில்இதுஆஸ்திரேலியாவில்தான் கொண்டாடப்பட்டது.

இதுபோல பல அதிசய உண்மைகள் இந்நூல் முழுதும் நிரம்பி உள்ளன.

குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்பது நாம் அறிந்த செய்தியாகும். ஆனால் களக்காடு முண்டந்துறை சரணாலாயத்தில் 2500 அடி உயரத்தில் உள்ள செங்குறிச்சி மரம் 24 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்பது நமக்குப் புதிய செய்தியாகும்.

இதேபோல 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ ஒன்று இந்துமாக் கடலில் ரியூனியன் தீவில் காணப்படுகின்றது. அதன்பெயர் காக்டஸ் என்பதாகும்.

பூக்கள்தான் செடி மற்றும் மரங்களில் பூக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 33 அடி உயரம் கொண்ட ஒரு பூச்செண்டே பெரு நாட்டில் பூக்கிறது. அந்நாட்டிலுள்ள காட்டி லோரா மலைகளில் புராய் மண்டி எனும் பெயர் கொண்ட பூச்செண்டு பூத்துக் குலுங்குகிறதாம்.

ஜாவா நாட்டில் உள்ள கஞ்சா பங்கா எனும் செடியில் பூக்கும் பூவின் மகரந்தப் பொடியை முகர்ந்தால் நமக்கு மயக்கம் வந்து விடுமாம். இப்பூவை திருடர்கள் தங்கள் தொழிலுக்குப் பயன் படுத்துகிறார்கள்.

தெ கான்பெக் எனும் மரத்தின் பூவானது காலயில் வெண்மை நிறத்திலும், மதியம் சிவப்பு நிறத்திலும், இரவானதும் நீல நிறத்திலும் காட்சி அளிக்குமாம்.

இன்னும் இந்த நூலில் பூக்களைப் பறிய பொன்மொழிகள், பழமொழிகள், கதைகள் எல்லாம் அடங்கி உள்ளன.

நூலாசிரியர் கடல் நாகராசன் ஆராய்ச்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மொத்தத்தில் மலர்களைப் பற்றி முனைவர் பட்டம் வழங்கக் கூடிய ஆய்வை அவர் மேற்கொண்டு நல்ல நூலைத் தந்துள்ளார் எனத்துணிந்து கூறலாம்.

[அதிசய மலர்கள் 1000—கவிஞர் கடல் நாகராசந்—பாரதி பதிப்பகம்—41, காமராசர் நகர், ஆல் பேட்டை, கடலூர்-607 001—பேசி98653 54678—kadalnagarajan3@gmailo.com—பக்கம்-112—-விலை : ரூ45]

Series Navigationசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​9​