பேச்சுப் பிழைகள்

This entry is part 15 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

சில பேச்சுக்கள்

கருக்களைக் கலைக்கும்

கரும்புக்காட்டை எரிக்கும்

என் பேச்சு கூட

பல சமயங்களில்

மணவீட்டில் அழுதிருக்கிறது

மரணவீட்டில் சிரித்திருக்கிறது

நிராயுதபாணியைத்

தாக்கியிருக்கிறது

சிலரை நிர்வாணமாக்க முயன்று

என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது

என் நாட்காட்டியின்

இன்றைய தாளையே கிழித்திருக்கிறது

என் எழுத்தையே

அமிலமாய் எரித்திருக்கிறது

அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்களை

இறுக்கி யிருக்கிறது

விடை சொல்லாமல்

வினாவாகவே நின்றிருக்கிறது

முளைவிதைக்கு

வெந்நீராகி யிருக்கிறது

நெய்து முடித்த பட்டுச்சேலையில்

தீப்பொறியாய் விழுந்திருக்கிறது

ஊமைக் காயங்களால்

பலரை ஊனப்படுத்தி யிருக்கிறது

சுகமான பயணத்தை

கோரவிபத்தாக்கி யிருக்கிறது

மரத்துக்கே தெரியாமல்

வெம்பி விழுந்திருக்கிறது

வாசிக்கத் தெரியாதவன் கையில்

வீணையாகியிருக்கிறது.

திறக்கக் கூடாத கதவுகளைத் திறந்து

அவமானப்படுத்தி யிருக்கிறது

திறக்கவேண்டியதைத் திறக்காமல்

காயப்படுத்தி யிருக்கிறது

நல்ல நாடகத்தை

பாதியிலேயே நிறுத்தியிருக்கிறது

அச்சுப்பிழையாகி

அசிங்கப்படுத்தி யிருக்கிறது

திரியை விட்டுவிட்டு

எண்ணெயை எரித்திருக்கிறது

பேச்சே இல்லாதிருந்தால்

என் வாழ்க்கை இனித்திருக்கும்

பிறவி ஊமைகள்

கொடுத்துவைத்தவர்கள்

அமீதாம்மாள்

Series Navigationநவீன செப்பேடுகட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்

1 Comment

  1. Avatar குணா

    உணர்ந்த எண்ணங்கள். ஒரு கால கட்டத்தில் ஒவ்வொருவரும் உணர வேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *