போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28

சரித்திர நாவல்

பலமுறை அந்த இளைஞன் புத்தரின் குடிலுக்குள் எட்டிப் பார்த்துப் பின்னர் திரும்ப வந்து வாயிலில் உள்ள ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டான். ஏன் வந்தோம் என்ற ஒரு பரிதவிப்பு அவனிடம் தெரிந்தது. எப்படி இந்த புத்தரால் இப்படி மணிக் கணக்கில் தியானத்தில் அமர முடிகிறது? புத்தருக்காக அவருடைய சீடர்கள் யாருமே காத்திருக்காமல் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருப்பது வியப்பாக இருந்தது.

எவ்வளவு நேரம் காத்திருப்பது? விசித்திரமான இந்த சாமியார் கூட்டத்தைக் காண வேண்டும் என்று ஏன் தோன்றியது? மகத நாட்டில் இவர்களின் நடமாட்டம் அதிகமாகத்தான் போய் விட்டது. அவன் பொறுமையை முற்றிலும் இழந்து கிளம்ப முடிவு செய்த நேரத்தில் தான் மெலிந்த உருவமும் தீட்சண்யமான கண்களும் காவி உடையுமாகக் குடிலில் இருந்து புத்தர் வெளிப்பட்டார். அவர் நடக்கும் போது பாதம் நிலத்தில் பதிகிறதோ என்னுமளவு அதிர்வின்றி நடந்தார். அவனைத் தாண்டியும் அவர் நடந்த போது தான் “தங்களைத் தான் காண வந்தேன்” என்றான் அவன் அமர்ந்த நிலையிலேயே புத்தரை நோக்கி. “பெரியவர்களுக்கு வணக்கம் சொல்லி எழுந்து நிற்க உங்கள் குடும்பத்தில் யாரும் கற்றுத் தரவில்லையா?” என்றார் சாந்தமான தெளிவான குரலில்.

“ஏன் இல்லை? ஒரு பிராமணனுக்குத் தன் குலப் பெரியவர் அன்றி ஏனையவரை வணங்கும் கட்டாயம் இல்லை”

“அப்படியா? நான் வந்த வழியில் ஒரு பாம்பு நெளிந்தால்?”

“பாம்பா? எங்கே?” என்றபடி பதறியபடி எழுந்து நின்றான். நகர்ந்தான்.

“அது பிராமணப் பாம்பா என்று யோசிக்காமல் எழுந்து விட்டாயே இளைஞனே?”

“பாம்பே இல்லை. ஏன் அதைக் குறிப்பிட்டீர்கள்?”

‘இல்லாத ஒரு பாம்பு உனக்குள் அச்சமும் பதட்டமும் தருகிறதே? ஏன் இளைஞனே?”

“உயிருக்கு அஞ்சாமல் யாராவது இருப்பார்களா புத்தரே?”

“இங்கே உள்ள எல்லா பிட்சுக்களும் உயிருக்கு அஞ்சாதவரே”

“எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள் புத்தரே?”

“உயிர் வாழ, உயிரைக் காத்துக் கொள்ள என்ன வேண்டும்?”

” இது என்ன அசட்டுத்தனமான கேள்வி? உணவு, உடை, உறையுள், பணியாட்கள், மன்னனின் படை, மருத்துவர் இவை தான்”

“ஒரு நாளுக்கான ஆடை உடலில், மறு நாளுக்கான ஆடை கொடியில், அடுத்த நாளுக்கான உணவு கூட இங்கே சேமிப்பில் இருக்காது. நீ குறிப்பிட்ட வேறு எதுவும் இங்கே கிடையாது. உயிருக்கு அஞ்சி யாரும் இங்கே இல்லை என்பதற்கு இதை விட அத்தாட்சி வேண்டுமா?”

“இது என்ன வாழ்வு? தினசரி தெருத் தெருவாகப் பிட்சை எடுத்துக் கொண்டு?”

“பிட்சை எடுக்காவிட்டால் உணவுக்காக எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும்?”

“அப்படி செலவு செய்யும் நேரத்தை இவர்கள் தியானத்திலும் நல்லற போதனையிலும் சர்ச்சையிலும் கழிக்கிறார்களே? கவனித்தாயா?”

“வைதீக மதம் போதித்ததைக் கேட்டு நடக்காமல் புதிதாக என்ன தேடுகிறீர்கள்?”

“இல்லை”

“கடோபநிஷதம் படித்திருக்கிறாயா?”

“பகவத் கீதை?’

“இல்லை”

“அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறாய். ஞானம் மதம் வழி வருவதில்லை மகனே”

“பின்பு?”

“தேடலில் வருவது”

“என்ன தேடல்? ஞானம், செல்வம், கல்வி, சௌகரியம் இதற்கெல்லாம் உண்டான அந்தந்த தெய்வங்களின் மந்திரங்களை உச்சாடனம் செய்தால் போதாதா?”

“மந்திர உச்சாடனத்தால் ஒரு கொள்ளையைத் தடுக்க முடியுமா? கொலையை? பஞ்சத்தில் துன்புறும் மனிதனுக்கு உதவ , ஒரு மனிதனுக்காக இன்னொரு மனிதனுக்குள் அன்பு பொங்க அது உதவுமா?” துன்பத்தில் துடிக்கும் ஒரு உயிருக்காக உருக ஒரு மனிதனை அது வழி நடத்துமா?”

இளைஞன் மௌனமானான்.

“மந்திரங்களாலும் சடங்குகளாலும் உலகெங்கும் பரவி இருக்கும் ஆசை, சுயநலம், துன்பம் இவற்றைப் போக்க முடியுமா இளைஞனே?”

“…………………….”

“உன் செல்வம் கொள்ளை போகிறது. உன் உறவினர் அனைவரும் தம் செல்வங்களைக் பங்கு வைத்து உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்களா? பதில் பேசு இளைஞனே”

“யாரும் முன் வர மாட்டார்கள்”

‘அவ்வாறெனில் ஜாதியும் உயர்வு தாழ்வும் பேசுவது எவ்வளவு தவறு? உன் உணவை அதாவது தானியத்தை விதைப்பவன், அறுப்பவன், உன் செருப்பைத் தைப்பவன், உனக்கு மருத்துவம் பார்ப்பவன், உன் சிகையை ஒழுங்கு செய்பவன், உன் சமுதாயத்தைக் காவற் காப்பவன் இவர்களது தயவில் நீ வாழும் போது அவர்கள் உன்னை விட இழிந்தவர் என்று சொல்லும் வைதீகத்தை எப்படி இந்த புத்தன் ஏற்பான்? கூறு மகனே?”

“என்னை மன்னியுங்கள் புத்த தேவரே. நான் பௌத்தம் கூறும் நெறிகளைப் புரிந்து கொள்ள முயலுகிறேன்” என்று அவர் பாதம் பணிந்தான்.

லதாங்கிக்குத் தூக்கமே வரவில்லை. உடல் நலம் மிகவும் சரியில்லை என்று ஆனந்தனுக்கு செய்தி அனுப்பி ஆகி விட்டது. நாளை அவர் வருவார். தான் கோசல நாட்டு இளவரசியாகவும் அவர் கபிலவாஸ்து இளவரசராகவும் இருந்த கடந்த காலத்தில் அவரைச் சந்திக்க வாய்ப்பிருந்தால் இருவருமே பிட்சுவாகவும் பிட்சுணியாகவும் ஆகி இருக்கவே மாட்டோம். எளிய தோற்றம் மென்மையான பேச்சு கனிவான பார்வை. ஆணவம் இல்லாத அடக்கமான போக்கு. முதன் முதலில் ஆனந்தனைப் பார்த்த போது மற்ற பிட்சுணிகளுடன் தானும் காத்திருந்தது நினைவுக்கு வந்தது. பிட்சுணிகளுக்கான எட்டு கட்டளைகளை அவர் விளக்கிக் கூறினார். முதலாவது வினயம். தனக்கு முன்பாக தீட்சை பெற்றவருக்கு எழுந்து வணக்கம் சொல்ல வேண்டும். அப்போது ஆனந்தன் எந்தத் தருணத்திலேனும் மரியாதைக் குறைவாகவோ இங்கிதக் குறைவாகவோ நடந்து கொண்டால் வணங்கத் தேவையில்லை என்றும் கூடவே குறிப்பிட்டது மிகவும் ஆச்சரியமளித்தது.

இரண்டாவதாக மழைக்காலங்களில் மற்றொரு துறவி இல்லாமல் குடும்பத்தினர் மட்டும் இருக்கும் வீட்டில் தங்கக் கூடாது. அப்போது ஒரு இளம் பிக்குனி “பேய்கள் மட்டும் இருந்தால்?” என்று கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டே “உனக்குப் பேயோட்டத் தெரியுமானால் தங்கலாம் ” என்றார்.

மூன்றாதவதாக மனதில் குற்றம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லி மனமாற்றம் அடைய உபோசதா அமர்வு, பிக்குனோவா என்னும் தனிப்பட்ட உபதேசம் இவற்றில் , மூத்த பிட்சுக்களின் நேரம் இருப்பதைக் கேட்டுக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உபதேசம் பெற்றுக் கொள்ளவும். இப்படி பிக்குனோவா உபதேசம் பெற என்று தானே நாளைக்கு ஆனந்தனை வரவழைக்கப் போவது!

நான்காவதாக மழைக்காலத்தின் மூன்று மாதங்களிலும் வெளியில் செல்லாமல் சங்கத்தின் ஆலயத்தில் அல்லது ஆசிரமத்தில் இருந்து, பரவணா நாள் விழா வரும் போது முன் கூட்டியே குறிப்பிட்டு உடனிருப்போருடன் சங்கத்தின் செயற்பாடுகளில் உள்ள நிறை குறைகளை விவாதிக்க வேண்டும்.

ஐந்தாவதாவதானது, பிக்குனிகளுக்கான கட்டளைகள் எதையாவது மீறினால் பிட்சுக்களின் சங்கம் மற்றும் பிக்குனிகளின் சங்கம் இரண்டிலும் மூத்த துறவிகளிடம் வருத்தம் தெரிவித்து 15 நாள் உபவாசம் இருக்க வேண்டும்.

ஆறாவது கட்டளை, இரண்டு வருடம் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்த பிறகே பிக்குனியாக தீட்சை பெற முடியும் என்றார். அவரை இடை மறித்து ஒரு பெண் “ராணி பஜாபதிக்கு மட்டும் உடனே தீட்சை தந்தீர்களே” என்றாள். சற்றும் தயங்காமல் “உங்களுக்கு தீட்சை தர ஒரு பிட்சுணித்தாயாவது வேண்டாமா?” என்றார் ஆனந்தன். ஆனந்தன் மட்டும் இப்போது சம்மதித்தால் இரண்டு வருடமே தேவையில்லை உடனே சங்கத்திலிருந்து விலகிக் குடும்ப வாழ்க்கையைத் துவங்கலாம்.

ஏழாவது கட்டளை ஒரு பிட்சுவை பிட்சுணி அவமதிக்கக் கூடாது அல்லது ஏசக் கூடாது.

எட்டாவது கட்டளை எந்த ஒரு எச்சரிக்கையோ கட்டளையோ பிட்சுணியிடமிருந்து பிட்சுவுக்குக் கிடையாது.

“ஏன் அவர்களை யாருமே எதுவுமே கேட்கக் கூடாதா?” என்று தான் எதிர்க்கேள்வி போட்டது லதாங்கிக்கு நினைவு வந்தது. “ஏன் கேட்க மாட்டார்கள்? என் போன்ற மூத்த பிட்சுக்கள் கண்டிப்பாகக் கேட்பார்கள்” என்று உடனடியாக பதிலளித்தார்.

எந்த ஒரு கேள்வியும் அல்லது இடக்குப் பேச்சும் அவரிடம் கோபத்தை வரவழைக்கவே இல்லை. அவரிடம் தான் பழகும் இரு நபர்களுக்குள் பாகுபாடு காட்டும் பழக்கமே இருக்கவில்லை. லதாங்கிக்கு நாளை தான் தனது காதலை வெளிப்படுத்தினால் அன்புடன் அதை ஏற்பார் என்றே ஊர்ஜிதமாகத் தோன்றியது. எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை.

காலையில் சக பிட்சுணி எழுப்பி “நமக்கான நேரம் முடிந்த பிறகே பிட்சுக்கள் நதிப்பக்கம் வருவார்கள். வா குளிக்கப் போகலாம்” என்றார்.

“நீ போய் வா. எனக்கு உடம்பு சௌகரியமில்லை” என்று லதாங்கி திருமிப் படுத்துக் கொண்டார்.

கனவில் வந்து அணைத்து அன்பைப் பொழிந்த ஆனந்தன் நிஜத்தில் வரப் போகிறார். அவரின் அன்பும் கருணையும் கனிந்து வர மண வாழ்க்கை விரைவில் தொடங்கப் போகிறது. இரவெல்லாம் தூங்காத களைப்புக்கு இந்த இனிய நினைவு தாலாட்டுவதாக இருந்தது.

கண் விழித்துப் பார்த்த போது குடிலின் வாயிலில் ஆனந்தன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். லதாங்கி முகத்தைக் கழுவிக் கொண்டு அவரெதிரே அமர்ந்தார். உள்ளே வந்து எட்டிப் பார்த்த பிறகே அவர் வெளியில் வந்திருப்பார். தூங்காமல் இருந்திருந்தால் மனதில் உள்ளதைத் தனிமையில் ஆனந்தனிடம் பேசி இருக்கலாம். அக்கம்பக்கம் பார்த்தார். யாருமில்லை. அனைவரும் பிட்சைக்காக வெளியே போயிருந்தனர்.

தியானத்தில் ஆழ்ந்திருந்த ஆனந்தனைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. கருணையின் வடிவான இவர், என்னை, என் விருப்பத்தை நிராகரிக்க மாட்டார்.

பிட்சைக்குப் போனவர்கள் திரும்பி வராமல் இருக்க வேண்டுமே என்று கவலையாயிருந்தது. ஒரு வழியாக ஆனந்தன் தியானம் கலைந்து கண் திறந்தார்.

“உன் உடல் நலம் எப்படி இருக்கிறது சகோதரி?”

“சகோதரி என்று அழைக்காதீர்கள்” என்று பதில் சொல்ல எண்ணி அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார் லதாங்கி. ஆனந்தன் எச்சரிக்கையாகி விட்டால் வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.

“உங்களைப் பார்த்த உடனே வந்த நோய் பறந்து விட்டது”

”அப்படியே இருக்கட்டும்.நான் வருகிறேன்” என்று எழுந்தார் ஆனந்தன்.

“தங்களிடம் ஒரு வரம் கேட்கவே உங்களைத் தொல்லை செய்து வரவழைத்தேன்”

ஆனந்தன் லதாங்கியின் கண்களை ஊடுருவி ஆழமாய் நோக்கினார். “வரம் வேண்டுமெனில் தேவையும் ஆசையும் இன்னும் பாக்கி இருக்கின்றனவா?”

‘நம்பி வந்தவரைக் கைவிடலாமா? வரம் தருவேன் என்று சொல்லுங்கள்”

“உன் வேண்டுதல் அல்லது கோரிக்கையை விளங்கிக் கொள்ளாமல் ஒரு ஜோடித் துணியும் திரு ஓடும் மட்டுமே சொந்தமான பிட்சு என்ன தர இயலும்?’

‘உங்களால் தரக் கூடியதே . முதலில் விளங்கிக் கொள்கிறேன்”

இனியும் வளர்த்துவது விபரீதமாகும் என்று புரிந்து விட்டது லதாங்கிக்கு . ” என்னைத் திருமணம் செய்து கொண்டு உங்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பைத் தாருங்கள்”

ஆனந்தன் முகத்தில் எந்த சலனமுமில்லை. “லதாங்கி நீ ராஜ குடும்பத்தினர் தானே பிட்சுணி ஆகும் முன்?”

“ஆம்”

“அங்கே ஒரு விதவையான ஏதேனும் ஒரு ஸ்திரீயைப் பார்த்திருக்கிறாயா?”

“கட்டாயமாக”

“அவர்கள் வாழ்க்கையில் என்ன கட்டுப்பாடுகள்?”

“விசேஷம் பூசை விழாக்களில் கலந்து கொள்ளாது தனித்திருத்தல்”

‘இதே போல ஒரு ஏழைப் படை வீரனின் அல்லது சேவகனின் மனைவிக்கு என்ன நிகழ்கிறது என்று அவதானித்ததுண்டா?’

“இல்லை”

“ராஜ குடும்ப விதவைக்காவது மரியாதையும் பழையபடி ஏவலாட்களும் வசதிகளும் உண்டு. ஆனால் ஏழை விதவையின் வாழ்க்கை ஒவ்வோரு நாளும் துன்பமயமானது. நிராகரிப்புக்களை ஏற்கும் கட்டாயமுள்ளது”

“நான் வேண்டிய வரத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?”

“கட்டாயம் புரியும். சமுதாயம் விதவைக்குக் கொடுத்துள்ள இடம் சரியானதா?”

“இல்லை”

“எது சரியான இடம்? என்ன மாற்றம் தேவை?”

லதாங்கிக்கு இந்த் திசையில் யோசித்ததே இல்லாததால் பதில் என்ன சொல்லுவது என்று தெரியவே இல்லை.

சில நொடிகள் கழித்து ஆனந்தனே தொடர்ந்தார். ” தனது சுக போகத்துக்கும் ஆசைச் சங்கிலித் தொடருக்கும் பொருத்தமில்லாதவர் என்றே ஒரு விதவை ஒதுக்கப் படுகிறார். தனது சகஜீவியின் வலியைப் பரிந்து கொள்ளும் பரிணாமம் வரும் வரை, அதாவது சமுதாயத்தில் பெரும்பான்மையினருக்கு அந்தப் பரிவு வரும் வரை விதவைகளின் நிலை மாறாது. ஆனால் சமூகம் ஏன் பிறரின் வலியைப் புரிந்து கொள்வதில்லை? தனது சுகம், தனது வசதி, தனது சந்தோஷம் இவற்றிலேயே முனைப்பாக இருப்பதால் பிறர் மீது நேயம் காட்ட மனதில் எள்ளளவு இடமும் இல்லை. பௌத்ததில் நாம் உலக நன்மையில் மட்டுமே கவனம் நிலைக்க வேண்டும் என்பதற்காகத் தன்னலத்தை, சுகம் தேடும் வேட்கையை வென்று உலகமெங்கும் அன்பை விதைக்கிறோம். இப்போது சொல். பௌத்தமா? உன் ஆசையா?”

லதாங்கிக்கு மயக்கம் தெளிந்து எழுந்து நின்றது போல இருந்தது. ” சிறிய சறுக்கல். மன்னியுங்கள் ஆனந்தரே”

“உபோசதாவில் வருந்து . அது போதும்”

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25நீங்காத நினைவுகள் – 10