போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18

Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra)
நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் ” நான் அரச மரியாதைகள் காவல்களுக்கு அப்பாற்பட்டவன். நீங்கள் செல்லுங்கள்” என்று சொல்லி மேலே நடக்க, அவர்கள் பணிந்து நின்று விட்டனர். அவரைப் பின் தொடர முயன்ற நூற்றுக்கணக்கான மக்களிடம் அந்த வீரர்கள் “கௌதம புத்தருக்குத் தனிமையும் ஓய்வும் தேவை. நாற்பத்து ஒன்பது நாள் தவம் முடிந்த அவரைத் தொல்லை செய்யக் கூடாது. இது மன்னரின் ஆணை” என்று சொல்லித் தடுத்தவுடன் அவர்கள் கலைந்து சென்றனர். கிராமணியுடன் வந்த இரு இளைஞர்களை அனுமத்திக்க வேண்டும் என்று கிராமணி வேண்ட அவர்கள் இருவர் மட்டும் அனுமதிக்கப் பட்டனர்.

பௌர்ணமி நிலவொளியில் கிட்டத்தட்ட எலும்புக் கூடு போல, இடுப்பில் உடை தங்காமல் அடிக்கடி நழுவுமளவுத் தெரிந்தார் புத்தர். இளைத்த உடலில் உள்ள எஞ்சிய தென்பையெல்லாம் ஈடுபடுத்தி எப்படி இவர் நடக்கிறார் என வியந்த படியே சற்றே இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்தனர் இரு இளைஞரும். புத்தர் நதியில் நீராடினார். தம்து சிறிய மூட்டையிலிருந்த மாற்று உடைகளை அணிந்தார்.

இப்போது இரு இளைஞரில் ஒருவன் “புத்தரே! என் பெயர் தபுஸ்ஸா. இவன் என் தம்பி பல்லிகா. நாங்கள் வியாபார விஷயமாக கயைக்கு வந்திருந்தோம். தங்கள் தவத்தை அறிந்ததும் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தாங்கள் ஞானம் பெற்று அருளும் அறுபுதத்தைக் காண்பதற்காகக் காத்திருந்தோம். அன்புடன் நாங்கள் கொண்டு வந்த இந்தக் காவி உடையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றதும் ” இதை பிட்சையாக ஏற்கிறேன்” என அதை வாங்கிக் கொண்டார் புத்தர்.

“தங்களுக்கு என எளிதில் ஜீரணிக்கக் கூடிய அரிசி, காய்கறிகளை வேக வைத்தோம். கனிகளும் உள்ளன. தினசரி நீங்கள் தவம் கலைக்கக் கூடும் என்று இரவு வெகு நேரம் காத்திருந்து பிறகே இத்தனை நாளும் உணவருந்தினோம். இதை அன்புடன் தாங்கள் உண்ண வேண்டும்” என்றான் தபுஸ்ஸா.

தமது கப்பரையைக் கழுவி புத்தர் அதை நீட்ட ஒவ்வோரு உணவாக அதனுள் தபுஸ்ஸா போட்டான். அதில் பருக்கைகளாக, சிறிதளவே உண்ட புத்தர் எஞ்சியதை நதியில் மீன்கள் உண்ணும் என்றெண்ணி சேர்த்தார்.

“தாங்கள் சரியாகவே உண்ணவில்லையே கௌதம புத்தரே!”

“நீண்ட உபவாசத்துக்குப் பின் உனவு சகஜ நிலைக்குத் திரும்ப ஓரிரு நாட்களாகும். நீங்கள் போதி மரத்துக்கு அருகே உள்ள மக்களிடம் நான் விரைவில் நான் உணர்ந்தவற்றை அவர்களுக்குக்கு எடுத்துரைப்பேன். துன்பங்களிலிருந்து விடுபடும் மார்க்கத்தை உலகுக்கு சொந்தமாக்குவேன்” என்று கூறுங்கள். “முதலில் என் குருநாதர்களை நான் சந்திக்க வேண்டும்”

அவர்கள் வேகமாகச் செல்லும் காட்சி புத்தருக்கு கௌடின்யன் மற்றும் நான்கு சீடர்களை நினைவு படுத்தியது. அவர்களையும் சந்திக்க வேண்டும். நான் உணர்ந்த மெய் ஞானம் ஆன்மீக தாகமும் அறிவுப் பசியும் உள்ள அந்த இளைஞர்களுக்குப் பிடிபட வேண்டும்”

தபுஸ்ஸாவும் பல்லிகாவும் “நாங்கள் கிராமணி மூலம் மக்களிடம் தங்கள் செய்தியைத் தெரிவித்து விட்டோம்” என்று சொல்லத் தொடங்கி அதை நிறுத்தி விட்டனர். புத்தர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நதிக்கரையில் இருந்த ஒரு கட்டுமரத்தின் மீது நிலவொளியில் அவர் அமைதியின் வடிவமாகத் தோன்றினார். பதில் பேசவில்லை. சகோதரர்கள் இருவரும் மணலில் கட்டுமரத்துக்கு அருகே அவர் அழைத்துப் பேசும் வரை மௌனமாகக் காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் புத்தர் மௌனம் கலைத்தார். “நான் மக்களின் அன்பை உதாசீனம் செய்ததாக ஆகி விடக்கூடாது. அதற்காகத்தான் செய்தி”

இருவரும் மணலில் உடல் புதைய அவர் பாதம் பணிந்தனர். ” நாங்கள் இருவரும் தங்களின் சீடர்களாக விரும்புகிறோம். தாங்கள் அன்புடன் இசைய வேண்டும்”

“தபுஸ்ஸா, பல்லிகா. நான் ஞானம் பெற்ற பின் என்னிடம் சீடரக விரும்பிய முதல் இருவர் நீங்கள். என்னுடன் இருங்கள். நீங்களிருவர், முன்னால் சீடரான கௌடின்யன், பஸ்பா, மஹாநாமா, பஷிகா, அஸ்வஜித் ஆகிய ஐவர் அனைவருமே என் செய்தியைப் புரிந்து அது ஏற்புடையாதா இருந்தால் மட்டுமே என் சீடராகுங்கள். நான் இப்போது ஞானம் பெற்றதற்கு நன்றி கூறி வணக்கம் செலுத்த விரும்புவது என் குருநாதர்களான அமர கலாம மற்றும் உதகராம புட்டர் ஆகியோருக்கு. அவர்களை வணங்கிய பின்னரே நான் உலகத்தாருக்கு என் செய்தியை அளிக்க இருக்கிறேன்”

இரவில் அந்தக் கட்டுமரத்திலேயே புத்தர் படுத்து உறங்கினார்.அதிகாலையில் அவர் கண் விழித்த போது தபுஸ்ஸாவைக் காணவில்லை. பல்லிகா மட்டுமே இருந்தான்.”நீ எப்போதும் அதிகாலையிலேயே எழுந்து விடுவாயா?”

“இல்லை புத்தரே”

“இரவு தூங்கவே இல்லையா?”

“ஆமாம் தவசீலரே. தங்களுக்குக் காவலாக இருக்கும்படி தபுஸ்ஸா கூறியிருந்தான்”

புத்தர் நீராடத் தயாரானார். “சற்றே தாமதிக்க வேண்டும் புத்தரே”

“ஏன்?”

“ஒரு நாவிதனை அனுப்பி வைப்பதாக பல்லிகா கூறிச் சென்றான். நாவிதன் எந்நேரமும் வரக்கூடும்”

தலைமுடியை முடிந்து உச்கிக் கொண்டை இட்ட புத்தர் புன்னகைத்தபடியே மீண்டும் கட்டுமரத்தில் அமர்ந்தார். “தபுஸ்ஸா இரவே கிளம்பி விட்டாரா? வியாபார விஷயமா?”

“வியாபார விஷயமில்லை. தாங்கள் இரு குருநாதர்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவர்கள் இருவரும் தற்போது ராஜகஹத்தில் தான் இருக்கிறாகளா என்று விசாரித்து வரக் குதிரையில் சென்றிருக்கிறான். விரைவில் வந்து விடுவான்”

நாவிதர் வந்து புத்தரின் பாதம் பணிந்தார். புத்தரின் தலை முடியை அப்படியே விட்டு விட்டு முகம் மட்டும் மழிக்கப் பட பளிச்சென்று புத்தரின் முகம் பிரகாசித்தது. அவர் நீராடி வரும் போது பல்லிகாவையும் காணவில்லை. புத்தர் கப்பரையை எடுத்துக் கொண்டு நகரை நோக்கி நடந்தார்.

சற்று நேரத்தில் பல்லிகா அவருக்கென காலை உணவைக் கொண்டு வந்த போது நதிக்கரை வெறிச்சிட்டிருந்தது.

அவரைத் தேடி கயை நகருக்குள் பல்லிகா சென்ற போது அவரை அதிக தூரம் நகர விடாமல் மக்கள் பாதம் பணிந்து கொண்டிருந்தனர். கயை நகரமே பெருமிதம் பூண்டது போல அவரைக் காண வழியெல்லாம் மக்கள்.

கயையில் தங்காமல் மேலும் புத்தர் நடந்து சென்றார். பல்லிகா அவரின் நிழலாக நடந்தான். தபுஸ்ஸா செய்தியோடு வந்து கயையில் தங்களிருவரையும் தேடிக் கொண்டிருக்கலாம்.

புத்தரின் நடையின் வேகம் உடல் பலத்தால் அன்றி ஆன்மீக பலத்தால் விரைந்து இருந்தது. பல்லிகாவால் ஈடு கொடுக்க முடியாதபடி ஒரே நாளில் அவர் பல கிராமங்களைக் கடந்தார். பல்லிகா மூச்சிறைக்க அவரை விட்டு விடாமல் தொடர்ந்தான்.

தபுஸ்ஸா குதிரையில் அவர்களைத் தொடர்ந்து வந்து இறுதியாக வாரணாசிக்கு அருகே அவர்களைக் கண்டு பிடித்தான்.மான்கள் திரிந்து கொண்டிருந்த ஒரு வனத்தில் புத்தர் அமர்ந்திருந்தார். தபுஸ்ஸா அவரை வணங்கியதும் ” சொல் தபுஸ்ஸா. ராஜகஹத்தில் தானே இருக்கிறார்கள் என் குருமார்கள் இருவரும்?”

தபுஸ்ஸா அவரின் பாதம் பணிந்து ” துக்கமான செய்தி புத்தரே. யோகியார் அமர கலாம, உதக ராம் புட்டர் இருவருமே காலமாகி விட்டார்கள்”

புத்தர் மௌனமாயிருந்தார். சில நொடிகள் கழித்து “குதிரையில் சென்ற நீ திரும்பி வாராத போதே கேட்ட செய்தியை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே அவர்களது ஆசிரமங்களுக்குச் சென்று விசாரித்து வருகிறாய் என்று புரிந்து கொண்டு வாரணாசிப் பக்கம் கிளம்பினேன். இது பொய்யாக இருந்திருக்கக் கூடாதா, நான் அவர்களது ஆசிகளை நேரில் பெற்றிருக்கக் கூடாதா என்றே மனம் ஏங்குகிறது. மரணம் யாருக்கும் விதிவிலக்களிப்பதில்லை”

நந்தவனத்தைச் சுற்றி வந்த புத்தர் அதன் முடிவில் ஏரி என்று ஐயப்படுமளவு பெரிய குளம் ஒன்றைக் கண்டு ரசித்தார். அதை ஒட்டி நடந்து வரும் போது ஒரு படித்துறையில் ஐந்து பேர்கள் அமர்ந்திருந்தனர். நடையில் வேகம் கூட்டிப் படிகளில் இறங்கினார். ஐவரும் திரும்பிப் பார்த்தனர்.

கௌடின்யன் அவர் வந்ததைக் கண்டு கொள்ளவே இல்லை. பஸ்பா, மஹாநாமா, பஷிகா, அஸ்வஜித் நால்வரும் எழுந்து நின்று வணங்கினர்.

“கௌடின்யா நலமா?”

“தாங்கள் போகும் வழி தூய சன்னியாசத்திலிருந்து திசை மாறிய பிறகு நாம் என்ன பேசப் போகிறோம் சித்தார்த்தரே?”

“இவர் இப்போது சித்தார்த்தர் இல்லை. பூரண ஞானம் பெற்ற புத்தர்” என்றான் தபுஸ்ஸா சினத்துடன்.

அவனை சாந்தப் படுத்துவது போல் கையமர்த்திய புத்தர் “நாளை மறுநாள் நான் மான்கள் விளையாடும் இந்த நந்தவனத்தில் எனது மார்க்கம் பற்றி முதன் முதலில் பேச இருக்கிறேன். நீங்களும் இதே இடத்துக்கு வந்திருப்பதால் என் செய்தியைக் கேட்க அவசியம் வருவீர்கள் என நன்கறிவேன் ” என்று கூறி விடை பெற்றார்.

“தங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்த அவர்கள் நாளைய மறுநாள் சபைக்கு வருவார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?” என்றான் பல்லிகா.

“கபிலவாஸ்துவில் போகியாக இருந்த இந்த ஐவரும், ராஜகஹத்துக்கு என்னைத் தேடி வந்து என் தேடலின் மீதும் என் மீதும் அளவில்லாத நம்பிக்கை வைத்து சீடர்கள் ஆனவர்கள். அவர்கள் என் மீது கொண்ட வருத்தம் ஒரு அவசரத்தில் எடுத்த முடிவு. வாரணாசி மக்களும் உலகும் முதன் முதலாக என் மார்க்கம் பற்றி அறியும் போது அவர்களும் அவசியம் வரத்தான் செய்வார்கள். என்னை உண்மையாக நேசிப்பவர்களான அவர்கள் என்னைப் பிரிந்தது தற்காலிகமானதே”

மூன்றாம் நாள் மாலையில் மான்கள் மக்கள் குழுமும் சந்தடி கேட்டு வந்த்தின் ஒரு மூலையில் ஒதுங்கின.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட எட்டு அடி உயரமுள்ள ஒரு பெரிய மரத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டியபடி நின்றிருந்தார் புத்தர். சக்கரத்தின் மையத்தில் அச்சுக்கான துளையும், அதைச்சுற்றி நான்கு பெரிய பட்டைகளும் அவற்றைச் சுற்றி ஒரு வட்டமும் அந்த வட்டதுக்கும் சக்கரத்தின் வெளிச்சுற்றுக்கும் இடைப்பட்டு அளவில் சிறியதான எட்டு பட்டைகள் இருந்தன.

“இன்று உங்கள் முன் நிற்பவன் கௌதம புத்தன் என்று அழைக்கப் படுபவன். அவன் ஒரு காலத்தில் ஒரு இளவரசனாக போகங்களும், கொண்டாட்டங்களுமான சூழலில் வைக்கப் பட்டிருந்தான். முதுமை, மரணம், துறவறம் அவன் அறியாதவை.

ஒரு நாள் அவன் முதுமையை, மரணத்தை எதேச்சையாகக் கண்டான். துறவு இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒன்றாக ஒரு துறவியைக் கண்டதும் அவனுக்குத் தோன்றியது. பிறப்பு, இளமை, முதுமை , மரணம் இநான்கிலும் ஒரு சரடாகத் தொடருவது துன்பமே என்பது அவனுக்குப் புரிந்தது. ஆசைப் படும் போது, அதை அடையும் முயற்சியில், அவஸ்தையில் துன்பம். அடைந்த பிறகு அது நிலைக்க வேண்டுமே என்னும் நடுக்கத்தில் துன்பம்.சுகம், பொருள், புகழ் இவற்றுள் எதோ ஒன்றில் பின்னிய ஆசையும், அதன் மறுப்பக்கமான துன்பமும் இடையறாது தொடர்கின்றன. இந்தத் துன்பங்களினின்று விடுதலை எது என்னும் ஆறு வருடத் தேடலின் முடிவில் கயையில் போதி மரத்தடியில் நான்கு உண்மைகளை அவன் உணர்ந்தான்.

முதல் உண்மை மிக எளியது. ஆனால் ஆன்மீகத்தின் அடிப்படையானது. ஆசையே துன்பத்துக்குக் காரணம்.

இரண்டாவது ஆசையின் மற்றொரு லட்சணம். அழியப் போகும் மனிதர், பொருட்கள் அல்லது சுகத்தின் மீது பற்று. இந்தப் பற்று தரும் ஆசையின் நிராசையின் விளைவு இடையறாத் துன்பமே.

மூன்றாவது உண்மை ஆசையை வெல்ல முடியாமல் நம்மைத் தடுப்பது அகம் எனப்படும் நான் என்னும் அகம்பாவம்.

நான் காவது உண்மை: விடுதலைக்குத் தேவையான சக்தியைப் பெற நம்மிடம் உடல், மனம், சொல் என்னும் மூன்றும் தூயதாயிருக்கும் திரிகரண சுத்தி அவசியம் தேவை. இந்தத் தூய நிலையை நாம் அடைய வேண்டுமானால், நமக்கு எட்டு விதமான கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

நமக்கும் சகஜீவிகளுக்கும் நன்மையே நடக்கும் என்னும் நன்னம்பிக்கை தலையானது.
அன்பான சொற்கள், யாரையும் புண்படுத்தாத பேச்சு வேண்டும் என்பது இரண்டாவது நெறி
அடுத்தது நமது லட்சியம் உயர்ந்த நிலையை எட்டும் லட்சியமாக நிலைத்து நிற்க வேண்டும்.
நான்காவது நமது நடத்தை அப்பழுக்கற்றதாக அதாவது தன்னலமற்று, பிறர் நலம் பேணுவதாக இருக்க வேண்டும். அதுவே நன்னடத்தை எனப்ப்டும்.
ஐந்தாவது நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதில் நேர்மை வேண்டும். ஏமாற்றுவது மறையும் போதே உலகில் ஏமாற்றங்கள் மறையும்.
இந்த நெறிகளில் நாம் பிறழாமல் நிலைத்து நிற்பதே தலையாய நெறியான ஆறாவது நெறியாகும்.
ஏழாவது நம் அறிவை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துவதில் திடமாக நிற்பதாகும். அறிவை அழிவுக்குப் பயன்படுத்துவோரே உலகெங்கும் துன்ப முட்களை விதைக்கின்றனர்.
எட்டாவதானது இந்த எல்லா நெறிகளுக்கும் நமக்கு உறுதுணையான தியானம். தியானமே நாம் திரிகரண சுத்தியுடன் வாழப் பக்கபலமாகும்.

நான்கு உண்மைகளும், அந்த உண்மைகள் உணர்த்தும் தடைகளைத் தாண்ட எட்டு நெறிகளுமான இந்த வழியை, புத்தன் என அழைக்கப்படும் இவன் ஒரு கருவியாக பௌத்தம் என்னும் மார்க்கமாக உங்கள் முன் முழு மனதோடு சமர்ப்பிக்கிறான். இந்த நான்கு உண்மைகளை, எட்டு நெறிகளை நாம் எளிதில் நினைவு கூறவே இந்த சக்கரம். இது தர்ம சக்கரமாகும்.”

இப்போது அனைவரும் தர்ம சக்கரத்தை உற்று நோக்கி வியந்தனர்.

புத்தர் தொடர்ந்தார் ” மனிதர்களையோ, மிருகங்களையோ யாரையும் துன்புறுத்தாது வாழ்வதும் இந்த எட்டு நெறிகளில் நிற்கும் போது சாத்தியமாகும். துன்பம் கொடுக்காமல் இருப்பவரே துன்பத்திலிருந்து விடுதலை பெற முடியும். ஆசை அறுபடும் போது துன்பம் தொலைந்து போகும்.

வருணபேதம் பௌத்தம் அறியாதது. நம் சகபயணிகளும் சகோதரரும் ஆன அனைவருக்கும் பௌத்தம் பொதுவானது. பௌத்தத்தை ஏற்று இந்த புத்தன் எப்படித் தானே உணர்ந்தானோ அதற்கு இணையாக இந்த நன்னெறிகள் மூலம் தானும் ஞானம் பெற விரும்பும் எந்த ஒருவரும் பௌத்தத்தில் இணையலாம்.

அவர் உரையை முடித்ததும் கூட்டத்தில் முண்டியடித்து கௌடின்யன், பஸ்பா, மஹாநாமா, பஷிகா, அஸ்வஜித் ஆகிய ஐவரும் அவர் பாதம் பணிந்தனர்.

—————————————————

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !