பொய்மை

(1)

பொய்மை

 

காண வேண்டி வரும்

தயக்கம்.

 

கண்டு விடக் கூடாது என்று

முன் எச்சரிக்கை.

 

எதிர் அறையின்

பேச்சரவங்கள்

என்னைத் தீண்டுகின்றன.

 

அவன்

அறைக்குள் இருப்பதை

அவை உறுதி செய்கின்றன.

 

அவனை

நேருக்கு நேர் காணாது

சென்று விடும் வேளையைத்

தேர்ந்து கொண்டிருப்பேன்.

 

மெல்லக்

கதவைத் திறப்பேன்

பூனை போல் வெளியேற.

 

ஓ!

அவன் கதவை

நான் திறந்தது போல்

அவன் கதவை

அவன் திறந்து

வெளியே வருகிறானே

அவனும்

பூனை போல்.

 

இரு பூனைகளும்

இடை வெளியில்

தடுக்கி விழும்.

 

எதிரெதிர் பார்த்துச் சிரித்த

எலிச்சிரிப்புகளில்..

(2)

ஒரு பழைய கதவு திறக்கும்

ஒருக்களித்திருந்த கதவை
மெல்ல மெல்லத்
தள்ளி.

யாரும் இன்னும்
உள்ளே
அடியெடுத்து வைக்கவில்லை.

காற்று
திறந்திருக்குமோ?

காற்றாடை உடுத்திக் கொண்டு
கண்ணுக்குத் தெரியாது
யாராவது
திறக்க முடியுமோ?

எழுந்து சென்று
பார்த்து விடலாமா?

மலர்ந்து கொண்டிருக்கும் வேளையில்
மலரைப் பறிப்பது போன்றன்றோ?
மனம் மறுதலிக்கும்.

கதவுக்கு முன்
எந்தக் கதிரவன்
உதயமாகி விட முடியும்?

கண்கள் பரவசமாகிக்
காத்திருக்கும்.

ஒளிவீசும் கண்கள்
மலங்க மலங்க
’யார் வீட்டுக்’ குழந்தையோ
தன்
”குஞ்சு மணியைப்”
பிஞ்சுக் கைகளில்
பிடித்துக் கொண்டு நிற்கும்.

மெல்லத் தான்
உள்ளே
அடியெடுத்து வைக்கும்.

என்னுள்
திறக்காத
ஒரு பழைய கதவு
கிறீச்சிட்டுத் திறக்கும்.

குழந்தையாய்ச் சிரிப்பேன்
குழந்தையைப் பார்த்து.

கு.அழகர்சாமி

Series Navigationகுடைநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.