பொறுப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 15 in the series 17 அக்டோபர் 2021

                           

வேல்விழிமோகன்

ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. அவருக்கு பேசத்தெரியாது என்று இதுவரையிலும் நினைத்துக்கொண்டிருந்தவர் இன்றைக்கு பேசத்தெரியும் என்று அந்த மைக்கின் முன்பாக நிரூபித்துவிட்டார். அவர் பேசுவதை கேட்டு மாவட்டம் முகத்தை இறுக்கிக்கொண்டு கவனித்தபோது அவர் உதிர்த்த ஒரு சில வார்த்தைகள் அவரை சந்தோழப்படுத்துவதை கவனித்து இன்னும் ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தியபோது அவர் அவரையறியமால் கை தட்டுவதை கவனித்து தன்னை எப்படி மைக்கின் முன்பு நிறுத்திக்கொள்வது என்று புரிந்துகொள்ள முயற்சித்தவராக திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தார்..

அவர் நகரும்போது முன்புறம் இருந்த கூட்டம் தட்டிய கை தட்டிலில் எழுந்த சத்தம் இவரை மீண்டும் மாவட்டத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. அந்த மேடையின் ஒரு பக்கமாக கடைசி இருக்கைக்கு பின்புறமாக போய் நின்றுக்கொண்ட அவர் அந்த மாவட்டம் தன்னை நோக்கி ஏதோ சைகை செய்வதை பக்கத்திலிருந்தவர் சொல்லி பார்த்தபோது ஏதும் புரியவில்லை..

ஆனால் வெறுமனே தலையசைத்து சிரித்து புன்னகைத்து மறுபடியும் தலையாட்டியபோது பக்கத்திலிருந்து ஆள் “என்னா சொல்றாரு புரியுதா..?”

“புரியுது..”

“சபாஷ்னு சொல்லுறாரு..”

“புரியுது..”

“மாவட்டம் இப்படிதான் ஆரம்பிச்சுது… கூட்டத்தோட ஒருத்தரா இருந்த ஆளு.. அப்ப மாவட்டமா இருந்த ஆளுதான் இப்ப அவருக்கு ஆலோசகரே.. கட்சில  இருந்த ஓய்வு ஆயிட்டாலும் அவருக்கும் ஒரு இடம் தேவப்படுது பத்திரிகைல.. அதனால அப்பப்போ பெட்டி செய்தியா வந்துட்டு போவாரு இவரோட போஸ் கொடுத்து.. இன்னும் சொல்லப்போனா அவர ஓரமா உக்கார வச்சதே இவருதான்னு சொல்லறாங்க..”

“அரசியல்னா அப்படிதான்..”

“உன்னைய மாதிரிதான் பேச ஆரம்பிச்சு வட்டம்.. மாவட்டமுன்னு ஆனவரு அவரு..”

“புரியுது..”

“இனிமே உம்மேல ஒரு கண்ணு வச்சுருவாரு..”

“அப்படியா..?”

“எப்படிய்யா கண்டுபுடுச்ச வார்த்தைகள..?” என்றபோது ஒரு சாதாரண அறிவிப்பாளராக இல்லாமல் எதுகை மோனையில் தொடர்ந்து பேசுவது எந்தவித பயிற்சியோ திட்டமிட்டோ செய்யாமலே வந்ததை உணர்ந்து அவர் “அதுவா வந்துச்சி..” என்றார்.. அப்படி சொன்னபோது அவருக்கு தான் ஒரு படி உயர்ந்துவிட்டதாக தோன்றியது. இன்னும் முடிவு இருக்கிறது. அதற்கு ஒரு வட்டத்தை விட்டிருக்கிறது. அந்த வட்டம் எப்பவும் முடிக்கும்போது மாவட்டத்தை பார்த்தபடி ஒரு திருக்குறள் சொல்லி அவரை அதற்குள் கொண்டுவந்து ஒரு புரட்டு புரட்டியெடுத்து திக்குமுக்காட வைத்து அலங்கார தேரில் கூட்டிக்கொண்டு போவது போல ஒரு பிரம்மையை உண்டு பண்ணி அந்த உலகத்தில் சஞ்சரிக்க வைத்து பிறகு நிஜ உலகத்துக்கு கொண்டு வரும்போது மாவட்டத்துக்கு புல்லரிப்பு அப்போதுதான் ஆரம்பித்திருக்கும்..

அதனால் அவர் நெளிந்தபடியே கூட்டத்தின் முடிவில் எழுந்திருக்கும்போது அந்த வட்டத்தை பார்த்து அருகில் வரவழைத்து கூட்டம் எழுந்திருக்கும்போதே அந்த வட்டத்தின் கையை பிடித்துக்கொண்டு பேசும்போது கூட்டம் பரபரப்பாக பேசுவது வாடிக்கையாக போய்விட்டது. இந்த தருணத்தை விடமுடியாமல் தொடர்ந்து தக்க வைத்து முடிவுரையை முடிவு உரையாக மாற்றிக்கொள்ளாமல் போராடிக்கொண்டிருந்த அந்த வட்டம் இப்போது இவரை திரும்பி பார்த்து புன்னகைத்தபோது உள்ளுக்குள் எரிச்சலுடன் புன்னகைத்த மாதிரி இருந்தது.

இவரும் சாதாரணமாக புன்னகைத்துவிட்டு மீண்டும் கூட்டத்தை கவனித்தபோது அடுத்த ஆளுக்கு கூட்டம் லேசாக கைதட்டி அவர் உட்கார்ந்த பிறகு கடைசி முடிவுரைக்கு வட்டத்தை அழைக்க இவர் நகர்ந்து மைக் பிடித்தபோது மாவட்டம் கூப்பிடுவதாக யாரோ அவரிடம் ஓதினார்கள்..

அவர் திரும்பி பார்த்து அதை உறுதி செய்து பக்கத்தில் போய் “அண்ணாச்சி..?” என்றார் வயது குறைவான அந்தாளை.. அவரும் ஆமோதித்து “முடிவுரைய நீங்களே சொல்லிடுங்க..”

“அப்படீங்களா..?”

“ஆமா..”

“வட்டம்..?”

“அவனும் சொல்லட்டும்..” என்றபோது இவர் புரியாமல் பார்த்தபோது மாவட்டம் பக்கத்தில் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார். இவர் திரும்ப வந்து மைக்கை பிடித்து வட்டத்தின் பெயரை சொல்லாமல் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலுமான பெயர்களை படபடவென்று உச்சரித்து ஒரு சரவெடி போல மாவட்டம் செய்ததாக மாவட்ட நன்மைகளை ஒற்றை சொற்களில் அடுக்கியபோது மாவட்டம் இதெல்லாம் நாம் செய்ததா என்கிற குழப்பத்தை மறைத்து ஒரு மிடுக்கு தானாக தோன்றுவதை உணர்ந்து இவரை மரியாதையுடன் பார்த்தபோது இவர் சட்டென்று “இப்போது வட்டம் முடிவுரை வழங்குவார்..” என வேகமாக தன்னிடத்திற்கு திரும்பியபோது அந்த வட்டம் தன்னிடத்தை இவர் எடுத்துக்கொண்டு கூட்டத்தை ஆர்ப்பரிக்க வைத்ததற்காக உள்ளுக்குள் புழுங்கி ஆனால் இயலாமை சிரிப்புடன் எழுந்து நகர்ந்து மைக்கை பிடித்தபோது அந்த கூட்டம் பாதி எழுந்திருந்தது.

அந்த வழக்கமான வந்து உட்காரும் கூட்டம் வட்டத்தை பார்த்து கொட்டாவி விட்டபோதுதான் வட்டம் தான் ஒரே மாதிரியாக பேசக்கூடாது என்று புரிந்து குரலை கனைத்து பேச ஆரம்பித்தாலும் அதே மாதிரியான வார்த்தைகளும் அதே மாதிரியான பாவனைகளும் வந்து விழுவதை அவராலேயே தடுக்க முடியாமல் பரிதாபமாக பேசும்போது கூட்டம் கலைய ஆரம்பித்திருந்தது..

இப்போது கூட்டத்தில் ஒரு ஆர்ப்பரிப்பு.. வட்டம் புரியாமல் கூட்டம் பார்த்த பக்கமாக பார்த்தபோது மாவட்டம் அவரின் கையை பிடித்தபடி பேசிக்கொண்டிருப்பது தெரிந்து பேச்சை அத்துடன் நிறுத்திக்கொண்டு தானும் கூட்டத்தோடு கூட்டமாக கரைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அப்பால் நகர்ந்தார்..

அந்த மாவட்டம் அவரின் கையை பிடித்தபடி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது தனக்காக கூட்டம் ஆர்ப்பரிப்பதை உள்ளுக்குள் கவனித்தவாறு இருந்தபோது அதை மாவட்டமும் கவனிப்பதை கவனித்து அதை திசை திருப்ப சட்டென்று மாவட்டத்தின் கையை விடுவித்து அவரது காலில் விழுவது போல குனிந்தபோது மாவட்டம் தன்னிச்சையாக அவரை தூக்கி அவரை பார்த்து சொன்னார்..

“ஒரு பொறுப்பு இருக்கு.. தர்றேன்..”

                                 0000

மாவட்டத்தின் வீடு சந்தை பேட்டையில் அந்த பெரிய தண்ணீர் கேன் சப்ளை செய்யும் இடத்தில் பக்கத்தில் இருக்கிறது. எளிமையாக இருக்கும். உள்ளே கார்.. ஜீப் போன்றவை போக முடியாது. வெளியே பந்தல் போட்டு ஏழெட்டு இருக்கைகள் போக நான்கைந்து பெஞ்சுகளும் இருக்கும். மண் தரையில் தினமும் மேலோட்டமாக சுத்தம் செய்து உட்புறம் கட்சி நிறத்தில் துணிகளும்.. புகைப்படங்களும்.. அந்த பழைய என்பீல்டு வண்டியில் கட்சி கொடியுடன் கூடிய நான்கைந்து மர ஓவியங்களும் இருக்கும். அந்த வண்டிதான் அவர் கட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் என்று பேசிக்கொள்வார்கள். ஒரு சிலர் இன்னும் மேலே போய் அவர் கட்சிக்கு வந்து பெரியாள் ஆனதற்கே அந்த வண்டிதான் காரணம் என்று பேசிக்கொள்வார்கள். அதை அவர் பத்திரமாக வைத்திருப்பதாகவும் தினமும் அதை சாமி போல கும்பிடுவதாகவும் அவரைப்பற்றிய கதைகளில் ஒன்றாக இருக்கிறது. இவர் அந்த வீட்டுக்கு போனபோது ஒரு ஞாயிற்றுக்கிழமை நன்றாக வெயில் அடிக்கும் நேரத்தில் பதுங்கி.. பதுங்கி போனது போல போனபோது அந்த பந்தல் காலியாக இருந்தது பார்த்து சோர்வடைந்து ஆனால் அந்த தெருவின் கடைசியில் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் கட்சி வண்டி நிற்பதை பார்த்து தெம்புடன் வீட்டை மறுபடி பார்த்தார்.

ஒரு அகலமான பெண் தோன்றி சிரித்தபடி “வாங்க அண்ணாச்சி..” என்றது ரெடிமேடாக அவளுக்கு பழகிவிட்டது என்பதை உணர்ந்து “அண்ணாச்சிய பாக்க வந்தேன்..” என்றபோது இவருக்கு மாவட்டத்தை விட தனக்கு வயது அதிகம் என்பதை ஒரு முறை நினைத்துக்கொண்டார்..

அந்தம்மாளும் அதை உள்வாங்கி ஆனால் அதே பழக்கப்பட்ட பார்வையால் அவருக்கு அதே சொல்லி வைத்த மாதிரி பதிலை தந்தாள்.. “அய்யா தூங்கிட்டிருக்காரு..”

“ஓ..”

“நாளைக்கு வந்திடுங்க..”

“சரிம்மா..” என்றபோது அந்தம்மா அங்கு இல்லை. அந்த வீட்டின் இடதுபுறம் ஒரு மேடை போட்டு சின்னதாக கற்சிலை மாதிரி இருந்தது. கூர்ந்து பார்த்தபோது அது கட்சித்தலைவரின் சிலை என்று தெரிந்தது. இதற்கு முன்பு பலமுறை வந்திருந்தாலும் இதை கவனிக்காதது அவருக்கு வருத்தமாக இருந்தது. இப்போது அவர் வந்த வழியில் திரும்பி நடந்தபோது அந்த குறுகிய தெருவில் நிறைய வீடுகள் அடைபட்டிருப்பதை கவனித்தார். ஒரு டீக்கடை அருகில் வரிசையாக நான்கைந்து ஆப்பிள் மண்டி மாதிரி இருந்தது. தள்ளு வண்டிகளில் ஆப்பிள்களை அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு ஆள் இவரை பார்த்து “ஆப்பிள் வாங்கிக்கறீங்களா..? கிலோ எம்பது ரூபாதான்..”

“வேணாமுங்க..”

“எழுபத்தஞ்சுக்கு தர்றேன்..”

“வேணாமுங்க..” என்றபோது காக்கி சட்டை போட்ட ஒரு ஆள் அந்த நகராட்சி வண்டியில் காகிதமும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிரம்பியிருந்ததை ஓரமாக தள்ளி கிழிந்து ஓரமாக ஒதுங்கியிருந்த ஆப்பிள் அட்டைகளை பொறுக்கி இன்னொரு புறமாக தள்ளிக்கொண்டிருந்தான்.. ஒரு ஆயா துடப்பத்துடன் ஒரு மண்டியின் வாசலை பெருக்கிக்கொண்டிருந்தது. எந்த வீட்டிலிருந்தோ இந்தி பாட்டு வாசலுக்கு வந்து “லால்லா…ல்லல..ஏஏக்க்க” என்றது.. கீழே மட்டமாக இருந்த இடத்தில் ஒரு ஆள் குந்தி உட்கார்ந்து பீடி அடித்துக்கொண்டிருந்தான். தெரு முனையில் விளம்பரத்தில் இரண்டு பையன்கள் அந்த நவீன பைக்குக்கு அரை நிர்வாண சிரிப்பை காட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு ஆட்டோ நிதானமாக கடந்து போனபோது மறுபடி இந்தி பாட்டு கேட்டது. இப்போது பின்பக்கம் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது அந்த முனையில் அந்த வீட்டுக்கு எதிரில் அந்த மாவட்டம் சற்று தள்ளி நின்றிருந்த வண்டியை நோக்கி இன்னும் நான்கைந்து நபர்களுடன் சுத்தமான வெள்ளை உடைகளோடு நடப்பது தெரிந்து இவர் ஏறக்குறைய அங்கு போக வேக நடை நடந்தார். அந்த மாவட்டம் வண்டியை நெருங்குவதும் கதவை திறந்து உள்ளே உட்காருவதும் மற்றவர்களில் இரண்டு பேரு கூடவே உட்கார்ந்து மற்றவர்கள் வணக்கம் சொல்ல கையேந்தும்போது அந்த மாவட்டம் எதிரில் பார்த்து “யாரோ ஓடி வர்றாங்க போல..” என்று கண்களை கூர்மையாக்கியபோது உதடுகளில் ஒரு புன்னகை வந்தது.

“நம்ம.. டி.ராஜேந்தர் சாரு..”

“ஆமாங்க..” என்ற ஒருத்தன் இவரை பார்த்து “மெதுவா வாய்யா..”

“வந்துட்டேங்க..” என்று மூச்சு வாங்கியபோது மாவட்டம் அவர் முகத்தை பார்த்து “இன்னும் சாப்புடலை போல..”

“இல்லீங்க.. உங்கள பாக்கத்தான் வந்தேன்..”

“தூங்கிட்டுதான் இருந்தேன்.. பசங்க வந்து எழுப்பிட்டாங்க..”

“இல்லீங்க.. செத்த நேரத்துக்கு முன்னாடிதான் வந்தேன்.. அதாவது பத்து நிமிசம் ஆயிருக்கும்..”

“அப்படின்னா அவளுக்கு தெரிஞ்சிருக்காது. பெரியம்மா பொண்ணு வந்துருக்குது. உள்ளாற பேசிட்டிருந்திருப்பாங்க.. வர்றீங்களா..?”

“ஆமாங்க..” என்று இவர் படபடப்பாக பின்புறம் பார்த்தபோது முன்புறமாக இருந்த மாவட்டம்.. “செத்த நேரம் நில்லுங்க நம்ம பசங்களோட.. நான் ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துடறேன்..” என்றபோது அவரிடமிருந்து அந்த வழக்கமான செண்ட் வாசனை வந்ததை கவனித்து இவர் “சரிங்க..”

“நடப்பா..” என்றதும் அந்த கார் ஒரு வித வாசனையுடன் தேர் மாதிரி நகர்ந்ததும் இவர் மற்றவர்களை பார்த்து “அண்ணன் சொன்னதை செய்வாரு போல.. அப்படியே குழந்த மாதிரியே பேசறாரு..”

ஒருத்தன் “அவரு அப்படித்தான்..”

“எங்க போறாரு..?”

“பக்கத்துல நகைக்கட திறப்பு விழாக்கு..”

“அப்பறம் வந்டுதுவாரா..?”

“ஆமா.. அண்ணாச்சி ஒரு சந்தேகம்..?” என்றவன் மஞ்சள் சட்டையணிந்து லேசாக தாடி வைத்திருந்தான். இவர் பையனை நினைவூட்டினான். பிரியாணி வாசனையும் தாழப்பூ வாசத்தில் பீடா வாசனையும் வந்தது. இவர் மாவட்டதை கேட்டபோது இவர்கள் உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் என்று தோன்றியபோது அந்தம்மாவின் பொம்மை சிரிப்பு நினைவுக்கு வந்தது.

இவர் அதை புறம்தள்ளி மஞ்சள் சட்டையிடம் “அய்யா எனக்கு பொறுப்பு தர்றதா சொன்னாரு..”

“அப்படியா..?”

“ஆமாப்பா.. போன வாரம் மீட்டிங்குல..”

“அந்த குப்பச்சி நகர் மீட்டிங்கிலேயா..?”

“ஆமா.. கைய புடுச்சுட்டு..”

“அவரு எப்பவுமே கைய புடுச்சுட்டுதான் பேசுவாரு.. கொரானாக்கு அப்பறம் அதெல்லாம் விட்டுட்டாரு..” என்றபோது மற்ற இரண்டு பேர் மஞ்சள் சட்டையிடம் “நீ இங்கேயே இரு.. நாங்க தண்ணி வாங்கிட்டு வந்திடறோம்..”

“மினரல் வாட்டருக்கு நாட்டு மருந்து கடைப்பக்கமா போகனும்.. கொஞ்சம் தூரம்.. டூ வீலர்ல போயிட்டு வந்திடுங்க..”

“ஆட்டோ வருது.. நீ அக்காக்கிட்ட சொல்லி மாடில அண்ணனுக்கு நைட்டுக்கு பெட்டு போடச்சொல்லு.. அப்பதான் வர்றவங்க தங்கறதுக்கு சரியா இருக்கும்..”

“அண்ணனுக்குமா..?”

“ஆமா.. அவங்க வந்தா அவரும் மாடிலதான் படுப்பாரு..”

“எவங்க..?” என்று இவர் கேட்டதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்கள் வேறு விழயத்துக்கு தாவினார்கள்.. இன்னொரு ஆள் “அந்த கத்திய வாங்கிட்டு வந்திடவா..?”

மஞ்சள் சட்டை “அது வேணாம்.. ரொம்ப அறுக்குது..”

“அப்படின்னா வேற கத்திதான் பாக்கனும். அண்ணனுக்கு அந்த கத்தியதான் புடிக்கும். வேற கத்திக்கு எங்க போறது..? கடைல வாங்கினா நல்லாருக்காது. அந்த மாதிரி வராது. அண்ணனுக்கு அந்த கத்தியோட கைவாட்டு பிடிக்கும்.. இல்லைன்னா அன்னிக்கு அந்தாள..” என்று இவரை பார்த்தபடி சட்டென்று நிறுத்தி அந்த இன்னொரு ஆள் “பெருசு.. பந்தல்ல உக்காந்திட்டிரு..”

“சரிங்க..”

“இவன் இருப்பான்..” என்று மஞ்சள் சட்டையை காட்டி “எல்லாத்துக்கும் அண்ணனுக்கு பக்க பலமாக நாங்க இருக்கோமுல்ல..” என்று சொற்களை உதறியவாறு சட்டை காலரை தூக்கிவிட்டபடி நடந்தபோது “ஆட்டோக்காரன் எப்போ வருவான்..” என்று பேசிக்கொண்டார்கள்..

இவர் அந்த மஞ்சள் சட்டையை பார்த்தபோது “பயப்படாதீங்கோ..”

“அப்படியில்லை.. கத்தி அது இதுன்னு..?”

“அதெல்லாம் கோழி அடிக்கறப்பதான்..”

“எப்ப..?”

“அதான் சொன்னேனே.. கோழி அடிக்கறப்பன்னு..”

“அன்னிக்கு அந்த ஆள..ன்னு ஏதோ சொன்னாங்களே..?”

“அப்போ பயப்படறீங்களா..?” என்றபோது அந்த வீட்டின் முன்னாடி நின்று அந்தம்மா வெளிப்பட்டு “அவரு போயிட்டாரா..?”

“ஆச்சு அண்ணி.. மறுபடியும் வந்திருவாரு..”

“முந்திரி பருப்பு தீந்துப்போச்சு.. பத்து கிலோக்கு பத்தாம வேணும்..”

“சொல்லிடறேன் அண்ணனுக்கு..”

“இல்ல.. நீ கடைக்கு போயிட்டு வாங்கிட்டு வந்திடு..”

“அந்த கண்ணாடி கடைலதானே..?”

“ஆமா..” என்றபோது இவரை பார்த்து “இவரு யாரு..?”

“கட்சிக்காரு..” என்றதும் அந்தம்மா அதே சிரிப்பு சிரித்து “வாங்க அண்ணாச்சி..”

“அய்யாவ பாக்க வந்தேன்..”

“சாப்புட்டு இப்பதான் போனாரு.. உக்காருங்கோ..” என்று பந்தலை காட்டி மஞ்சள் சட்டையிடம் “முந்திரிய மறந்துடாத..”

“சரி அண்ணி..” என்றவன் கூட்டாளிகளை பார்த்தபோது அவர்கள் அந்த சந்தில் ரொம்ப தள்ளி போய்விட்டதை பார்த்து மொபைலை எடுத்து ஒரு சில நொடிகள் கழிந்து “அப்படியே முந்திரி வாங்கிட்டு வந்திடு..”

“……………”

“இல்ல.. கண்ணாடி கடைல..”

“…………”

“கண்ணாடி கடைலன்னா கண்ணாடி கடைல இல்ல.. லூசு.. அந்த பஜார் ஸ்டோர்லதான்.. கண்ணாடிய சுத்தி வச்சிருக்கறதால கண்ணாடிக்கட.. புருயுதா..?” என்றவன் எரிச்சலுடன் மொபைலை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு “நீங்க ஒண்ணு செய்யுங்க..” என்றான் இவரிடம்..

“சொல்லுங்கோ..”

“முந்திரி வாங்கிட்டு வந்திடுங்கோ.. அவனுங்க தண்ணிக்கு போறானுங்க..”

“கேன் தண்ணிக்கா..?”

“ஆமா.. நைட்டுக்கு நாலு பேரு வர்றாங்க மாடில தங்க.. அவங்களுக்கு.. முந்திரி இல்லன்னா அண்ணனுக்கு புடிக்காது.. அவரு முந்திரி பைத்தியம்.. அண்ணிக்கு அதெல்லாம் நல்லா தெரியும்..”

“வாங்கிக்கலாமுங்க.. அப்பறம் அந்த கத்தி கத.. யாரோ ஒரு ஆளு..ன்னு சொல்லிட்டு நிறுத்திட்டாங்களே..?”

“அதுலேயே இருங்க.. அதாவது அண்ணனுக்கு கோழிய அறுக்கறதுன்னா ரொம்ப புடிக்கும்.. அவரா அறுப்பாரு.. அவரா வெட்டுவாரு.. அவருக்கு உள்ளாற கைய விட்டு சுத்தமா பிசகாம குடல உருவறது புடிக்கும்.. அப்படிதான் செய்வாரு.. கடக்காரன் தோத்தான் போங்க.. அந்த ஈரலு.. பித்தப்பைன்னு அலுங்காம இழுத்து பிரிச்சு ஈரல பாதி வேக்காட்ல அப்படியே சாப்புடுவாரு..”

“சுட்டா..?”

“ஆமாங்க.. காலு கீது பாருங்க காலு.. அதக்கூட விடமாட்டாரு.. அப்படியே நெருப்புல வாட்டி கொதகொதன்னு பல்லால இழுத்து கடுச்சு.. ம்.. அதுக்கெல்லாம் ஒரு இது வேணுமுங்க..”

“என்னாது..?”

“நாக்கு.. நமக்கு இருக்குதா..? நீங்க கடிப்பீங்களா கால..?”

“அத சாப்புடமாட்டேனுங்க.. ஆனா தலைய நெருப்புல போட்டு..” என்பதற்குள் அவன் மறுபடியும் குறுக்கிட்டு “ஆமாங்க.. அதேதான்.. அவரு தலைய வாட்டிட்டே இருக்கும்போது கருகல் வாசன வரும் பாருங்க.. அப்ப மொளகா தூளு உப்பு போட்ட தண்ணில விட்டு நல்லா நனைச்சு மறுபடி ஒரு முற ஆவி வர்ற மாதிரி நெருப்புல காட்டி தொப்பு.. தொப்புன்னு பக்கத்துல நாலு அடி அடிச்சு அப்படியே ஒரு பக்கமா கடிச்சு இழுத்து மெல்லுவாரு பாருங்க.. ம்.. அதுக்கெல்லாம் ஒரு இது வேணுமுங்க..”

“எது..?”

“நாக்கு.. சொன்னேனே.. மறுபடியும் கேட்டுக்கிட்டு..”


“அது கெடக்குதுங்க.. அந்த ஆளை பத்தி ஏதோ சொல்ல வந்து..?”

“ம்.. அதுவா.. இவரு ஒரு கோழிய வெட்டிட்டு இருந்தப்ப ஒரு வட்டம் ஏதோ சொல்லிருச்சு.. அப்படியே ஒரு பார்வ பாத்தாரு.. அப்பறமா கத்திய காட்டி வெட்டிப்போடுவேன்னு சொன்னாரு.. எல்லாரும் பயந்துட்டோம்.. அப்படி அவரு கோவிச்சுக்கிட்டத நாங்க பாத்ததே இல்ல..”

“அப்பறம்..?”

“அந்த வட்டம் தண்ணில இருந்தான்.. மறுபடி சிரிச்சுட்டே ஏதோ சொன்னான்.. ம்.. அந்த வண்டிய பத்திதான்.. அந்த என்பீல்டு வண்டிய பத்திதான்.. அத கேட்டதும் அவரு வேகமா எழுந்து அந்த கத்திய தூக்கி..”

“தூக்கி..?” என்று படபடத்தபோது அவன் குறுக்கிட்டு “பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்ல.. கால்ல விழுந்துட்டான் தொப்புன்னு.. நாங்க அவர புடுச்சுக்கிட்டோம்.. வீராசாமி மாதிரி ஆயிட்டாரு..”

“வீராசாமியா..?”

“அதாங்க.. டி.ராஜேந்தரு வீராசாமி.. ஜட்டியோட ஆடுவாரே..?”

“கத்தியோட..”

“ஜட்டியோடவும்..”

இவர் தன் உதடுகளை ஈரப்படுத்தியபடி “அவரு என்னைய என்னான்னு கூப்புட்டாரு..?”

“எப்போ..?”

“வண்டிக்கிட்ட இருந்தப்ப..”

“யாரோ வர்றாங்கன்னு சொன்னாரு..”

“வந்ததுக்கு அப்பறமா..?”

“சிரிச்சாரு..”

“இல்லீங்க.. எனக்கு ஒரு பட்டப்பேரு வச்சாரே..?” என்றபோது அவன் யோசித்து பிறகு சிரித்தபடி “அத விடுங்க.. வாங்க .. முந்திரி பருப்பு வாங்கிட்டு வந்திடுவோம்..”

“நீ மறந்துட்டப்பா..” என்றபோதுதான் அவர் இத்தனை நேரம் மஞ்சள் சட்டையை “..ங்க..” போட்டது நினைவுக்கு வந்து ஆனால் அதெல்லாம் சகஜம் என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு அவன் “நீ..” என்பதற்கு ஏதாவது முகத்தில் காட்டுவானோ என்பது போல பார்த்தபோது அவன் அதை கண்டுக்கொள்ளாமல் “முந்திரிக்கு போலாம்.. அண்ணி கோச்சுக்கும்..”

“நான் சொல்லட்டா..?”

“சொல்லுங்க..”

“டி.ராஜேந்தரன்னு சொன்னாரு..” என்றபோது சட்டென்று “அண்ணன் வெட்டப்போனது நம்ம லோக்கல் வட்டத்தையா..?”

“இல்லீங்க.. இது வேற வட்டம்.. அந்தாளுக்கு அந்த என்பீல்டு மேல ஒரு கண்ணு.. அதான் அண்ணன் வந்த அவனைய..” என்றபோது பாதியில் நிறுத்தி “சரி.. நீங்க இங்கேயே இருங்க.. நான் போயிட்டு வந்துடறேன்..”

“இல்லீங்க வர்றேன்..” என்றபோது அந்த ஆட்டோ வந்து நின்று அந்த இரண்டு பேர் இறங்கி ஒரு அட்டைப்பெட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே வந்து வீட்டுக்குள் போகாமல் பக்கத்தில் மாடியேறும்போது பெட்டிக்குள் பாட்டில்கள் மோதிக்கொள்ளும் சத்தம் கேட்டது..

இவர் மஞ்சள் சட்டையை பார்க்க அவன் அவர்களிடம் “யாருக்கும் சொல்லிடாதீங்க..”

“நீ சொல்லாத..” என்றான் ஒருத்தன் திருப்பி. இப்போது அவன் இவரை பார்த்தபோது இவர் “மினரல் வாட்டருன்னு சொன்னீங்க..”

“அதுக்கு நாங்க வச்சுருக்கற பேரு தண்ணி கேன்தான்.. ஒரு பாட்டலு தரச்சொல்லட்டா..?”

“வேணாமுங்க..”

“ஏன்..?”

“பழக்கமில்லை..”

“சரி போலாமா முந்திரிக்கு..?” என்றபோது வெளியே அந்த வண்டி வந்து நிற்கிற மாதிரி சத்தம் கேட்டது. மஞ்சள் ஓடிப்போய் எட்டிப்பார்த்து அப்புறம் நிதானமாக இவரை பார்த்து “வேற வண்டி.. வாங்க போவோம்..”

“சரிங்க..” அவன் யோசித்து “நேரா கண்ணாடி கடைக்கு போங்க.. நான் போன் போட்டு சொல்லிடறேன்.. முந்திரிய வாங்கிட்டு வந்திடுங்க..”

“நானா..?”

“ஆமாங்க..”

“பணம்..?”

“அதெல்லாம் கணக்குல போயிடும்.. நீங்க எடுத்துக்கிட்டு வந்தா சரி..?”

“எப்புடி..?” என்று அவர் கேட்டதும் அவரை நேராக ஒரு நொடி பார்த்து “உங்களுக்கு பொறுப்பு தர்றதா சொன்னாரா அண்ணன்..?”

“ஆமா..”

“அப்ப செய்யுங்க.. அண்ணாச்சிக்கிட்ட நான் பேசறேன்.. செய்வாரு.. நிறைய பேரை ஏத்தி விட்டிருக்காரு.. உங்களையும் செய்வாரு.. அவருக்கு புடுச்சாதான் இப்படி பொறுப்ப தர்றதா சொல்லுவாரு.. நீங்க வேற நல்ல மனுசனா தெரியறீங்க..”

“நான்தானே மேடைல அறிவிப்பு செய்யறது..”

“அப்படியா..?”

“ஆமா.. சொல்லி காட்டட்டுமா..” என்றவர் குரலை கனைத்துக்கொண்டு “ம்.. அடுத்து இப்போது மன்னாடி.. சே.. மன்னாதி  மன்னனும்.. வீராதி வீரனுமான..” என்றபோது மஞ்சள் சட்டை குறுக்கிட்டு “யாரு..?”

“அண்ணன்தான்..” என்றபோது இவரை கண்கொட்டாமல் பார்த்து பிறகு திரும்பி வேறெங்கோ பார்த்து சொன்னான்..

“அப்ப நிச்சயம் உங்களுக்கு பொறுப்பு உண்டு..”

                                 0000

முந்திரி வாங்க அவர் மட்டும்தான் போனார். அப்போது கவுன்சிலர் ஞாபகம் வந்தது. அவன்தான் இவரை கட்சிக்குள் கொண்டு வந்தான். இவர் பேசுவதை பார்த்து அறிவிப்பு வேலையை செய்ய வைத்தது  அவன்தான். தனியாக இவர் பேசிக்கொள்வதை பார்த்து உண்மையிலேயே கட்சி பக்தி அதிகமாகி விட்டதாக நினைத்துக்கொண்டான். கட்சி சந்திப்பின் போது ஒரு ஓரமாக நின்று இவர் வேடிக்கை பார்ப்பதை நிறைய முறை பார்த்திருக்கிறான். இவர் பெரும்பாலான முகங்களை தெரிந்து வைத்திருந்தார். இவருக்கு கட்சி கூட்டத்தின் அறிவிப்பு வேலை கிடைத்ததே தற்செயலாகத்தான்.. இவராக மேடையின் ஒரு ஓரமாக ஒரு முறை நின்றிருந்தபோது இவரை கூப்பிட்டு சொல்ல சொன்னார்கள் யாரோ. இவர் உள்ளூர் கட்சி கூட்டத்தில் முப்பது நிமிடம் பேசியது மொபைலில் எடுக்கப்பட்டு பரவி ஒரு சில நாட்களுக்கு சலசலப்பை உண்டு பண்ணியிருந்தது. காரணம் பிசிறு தெரியாத அந்த குரல்.. ஏற்ற இறக்கத்துடன் கூடிய மென்மையில்லாத அந்த குரல் பாதிப்பு கட்சிக்குள் இவர் மீதான கவனத்தை திருப்பும் என்று இவர் நினைத்து பார்த்ததில்லை.

அதன் பிறகுதான் அது நடந்தது. அறிவிப்பு பேப்பரை கையில் கொடுத்து பேச சொன்னபோது பயமோ.. தயக்கமோ இல்லாமல் அவர் பேசினதும் அந்த சாதாரண அறிவிப்பிலேயே அவர் ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தி கூட்டத்துக்கு கொக்கி போட்டதையும் ஒரு சிலர் கவனித்து அவரை இன்னும் மெருகேற்றுகிற மாதிரி தொடர்ந்து அறிவிப்புக்கு பயன்படுத்திக்கொண்டார்கள்..

இப்பொது அவர் முழுமையான பெரிய பேச்சுக்கும் பெரிய அளவிலான கூட்டத்துக்கும் தயாராக இருந்தார். அதற்கான அடையாளத்தை சென்ற வாரம் மாவட்டத்துக்கு முன்பு வெளிப்படுத்தியபோது அவரும் அதை கவனித்து “பொறுப்பு தர்றேன்..” என்கிற வரைக்கும் போனதை அவரால் நம்பமுடியவில்லை. அந்த பொறுப்பு அவரை முழுமையாக கட்சியில் தன்னை நிலைநிறுத்தும் என்று குடும்பத்தில் இரவு முழுக்க பேசிக்கொண்டிருந்தார். அதன் பிறகு இன்னும் பேசி பழகவேண்டும் என்று வழக்கம் போல தனியாக இருக்கும்போது “அன்புடைய..” என்று ஆரம்பித்து வார்த்தைகள் தேடி.. தேடி அடுக்கு வார்த்தைகளாக மாறி தனக்குத்தானே புல்லரிக்க வைத்துக்கொண்டார்..

அவர் முந்திரி வாங்க வந்தபோது அந்த மஞ்சள் ஏன் அந்த கடைக்கு கண்ணாடிக்கடை என்று பெயர் வைத்தான் என்று புரிந்தது. தன்னுடைய ஊரில் சாதாரண மளிகைக்கடையில் ஆரம்பித்து பெரிய பலசரக்கு கடை வரைக்கும் பார்த்த அவருக்கு கண்ணாடி மாளிகைக்குள் ஏசி குளிர்ச்சியில் ஏறக்குறைய நூறு மீட்டர் நீளத்தில் சற்று அகலமாக நிறைய பெண்களுடன்.. பெண்களுடனேயே பொருள்கள் மலிந்து கிடந்தது ஆச்சரியப்படுத்தியது. நுழை வாயிலிலேயே இவரை நிறுத்தி விசாரித்து ஒரு மூட்டையை அவரிடம் தள்ளி “எடுத்துட்டு போயிடுங்கோ..” என்று சொன்னபோது அவர் விழித்தார். “முந்திரிதானே இது..?” என்றார்..

“ஆமாங்க.. அம்பது கிலோ..”

“அம்பதா..?”

“ஆமாங்க.. காசு கொடுத்துருவாங்க.. நாங்க பாத்துக்கறோம். அவங்க கஸ்டமருங்க எங்களுக்கு. அவரு வீட்ல வேல செய்யறீங்களா..?” என்றதும் இவர் கோவமாகி “ஏங்க.. என்னைய பாத்தா அப்படியா தெரியுது..?”

“பெரும்பாலும் அப்படிதான் வருவாங்க..”

“அதுக்காக..”

“சரி..சரி.. தூக்குங்க..”

“தூக்கிட்டு..?”

“கிளம்புங்க..”

“ஆட்டோல அனுப்புச்சு விடுவாங்கன்னு சொன்னாங்க..” என்றார் இவராக. அவர்கள் இரண்டு பேர் சிரித்து “பின்ன தூக்கிட்டு போகவா சொன்னோம்.. வெளிய நிக்குதுங்க பாருங்க வண்டி.. வாடக பேசிட்டு எடுத்துட்டு போயிடுங்க..”

“என்னாங்க இவ்ளோ பெரிய கடைய வச்சுக்கிட்டு.. நீங்களா எடுத்தாந்து போட மாட்டீங்களா..?”

“அதெல்லாம் அம்பது அறுபது ஐட்டம் வாங்கினா..” என்றவர்கள் ஒரு பையனை கூப்பிட்டு “வெளிய ஆட்டோல வச்சுட்டு வந்துருப்பா..”

“சரிங்க..” என்று இவர் அந்த பையனின் பின்னாடியே போனபோது அந்த பையனும் இவர் பையனைதான் ஞாபகப்படுத்தினான். அவனுடைய கைகள் உறுதியாக இருந்தது. சாதாரணமாக எடுத்து தோள் மீது வைத்து அந்த கண்ணாடி கதவை திறந்து வெளியே போனபோது இவருக்குதான் மூச்சு வாங்கியது. வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்களின் முதலிடத்தில் இருந்த வண்டியில் அவனை கேட்காமலேயே பின்புறமாக மூட்டையை போட்டுவிட்டு இவரிடம் “ஒரு பத்து ரூபா கொடுங்க..” என்றபோது இவர் விழித்து “காசெல்லாம் கேப்பீங்களா..?”

“பத்து ரூபாதானே கேட்டேன்..” என்று அவன் சலிப்புடன் இவரின் வேட்டியை பார்த்தவாறே திரும்பி போனதை இவரும் வேடிக்கை பார்த்து அந்த டிரைவரிடம் சிரித்து “ஒரு நிமிசம் கூட இல்ல.. அதுக்கு பத்து ரூபாயாம்..” என்று சிரித்தபோது அவன் அதை ரசிக்காமல் “எங்க..?”

“மாவட்டம் ஊட்டுக்கு..”

“சந்தப்பேட்டையா..?”

“ஆமாங்க..”

“நூறு ரூபா ஆகும்..”

“அவங்க கொடுத்துடுவாங்க..”

“சரி உக்காருங்க..” என்று அவர் அந்த மூட்டைய ஒட்டி உட்கார்ந்ததும் அவன் “என்னா வேல செய்யறீங்க அங்க..?” என்று வண்டியை கிளப்பிக்கொண்டே கேட்டது அவருக்கு பிடிக்கவில்லை..

“வேல செய்யலீங்க..”

“பின்ன..?”

“கட்சிக்காரன்..”

“அப்படியா..? பொறுப்புல இருக்கீங்களா..?”

“இதுக்கு மேலதான்..”

“நூறு ரூபாய வாங்கிக்கொடுத்துடுங்க.. காத்திருக்க முடியாது..” என்றதும் இவர் சற்று நெளிந்து “அதெல்லாம் கொடுத்துடுவாங்க..”

“ஒரு முற போயிட்டு ரொம்ப நேரம் வெயிட்டிங்கல வச்சுட்டாங்க.. ஆட்சில இருக்கற திமிரு.. இவரு எப்படி பெரியாள் ஆனாருன்னு உலகத்துக்கே தெரியும்.. அந்த என்பீல்டு வண்டி இல்லன்னா இவரு கவுன்சிலரா கூட ஆயிருக்கமாட்டாரு.. எல்லாம் வண்டி செஞ்ச மாயம்.. எங்க வச்சிருக்காரு அந்த வண்டிய..?”

“தெரியாதுங்க..”

“யாருக்கும் தெரியாதுங்க.. ஆனா தினமும் அத பூஜிக்கறதா சொல்லறாங்க.. இப்ப மினிஸ்டரா இருக்குது பாருங்க அந்த போக்குவரத்து துறைக்கு..”

“ஆமாங்க..”

“அந்தம்மாவ அந்த என்பீல்டுல பின்னாடி உக்கார வச்சுட்டு ஓட்டிட்டு நைட்ல சென்னைல மெரினா ரோட்ல ஓட்டிக்கிட்டு போவாருன்னு சொல்லுவாங்க..”

“அப்படியா..?”

“ஆமாங்க.. அந்தம்மா ஆசிர்வாதம் உண்டுங்க இவருக்கு.. இவருக்கு வர வேண்டிய மினிஸ்டர் போஸ்டிங்க அந்தம்மாவுக்கு இவரா தள்ளி விட்டுட்டதா சொல்லுவாங்க..”

“ஏன்..?”

“தோத்துட்டாரு இல்ல எம்எல்ஏ எலக்சன்ல.. நடுவுல எங்கேயாவது யாராச்சும் செத்தா ஆயிடலாமுன்னு பாக்கறாரு.. அப்ப அந்தம்மா போஸ்டிங் இந்தாளுக்கு வந்திடும்..”

“நல்ல கணக்குதான்..”

“வந்தாச்சுங்க..” என்று அவன் வண்டியை அந்த தெருவில் திருப்பியபோது இவரு குனிந்து அந்த கார் இருக்கிறதா என கவனித்தார். இல்லை என்றபோது இவருக்கு இன்னும் காத்திருக்கவேண்டும் என்று தெரிந்து ஒரு சலிப்பு வருவதை உணர்ந்தார். ஆனால் அதை வெளிக்காட்டாமல் ஆட்டோ அந்த இடத்தில் நின்றபோது முன்புறம் யாரும் இல்லாததை கவனித்து டிரைவரிடம் “எடுத்து போட்டுருப்பா..”

“இல்லீங்க.. அது உங்க வேல..”

“மஞ்சா சட்டைய காணோமே..” என்று மேலே அந்த ஒற்றை அறையில் லேசாக பேச்சு குரல் வருவதை கேட்டு அடுத்து என்ன செய்வது என்று நின்றபோது கீழே அந்தம்மா வெளிப்பட்டு “அண்ணாச்சி.. அவரு இல்லை..” என்று அதே சிரிப்புடன் சொன்னபோது இவரை தெரியாமல் பார்ப்பதை உணர்ந்து “முந்திரி வந்துருக்கும்மா..”

“பசங்க இல்லையா..?” என்று மேலே பார்த்து “சரி.. தூக்கிட்டு வந்துருங்க..”

இவர் தயங்கி.. “கனமா இருக்குதும்மா..”

“டிரைவர புடிக்க சொல்லுங்க..” என்றபோது அவன் சலிப்புடன் “சரி வாங்க..” என்று இவரை கூப்பிட்டபோது இவர் அதே சலிப்புடன் பக்கத்தில் நகர்ந்து “தூக்குப்பா..”

“புடிங்க..” என்று இறக்கிவிட்டு சட்டென்று முழுக்க தூக்கி அவர் முதுகில் வைத்தபோது “புடிங்க.. புடிங்க..” என்றது அந்தம்மாள்..

இவர் அதை எதிர்பார்க்கவில்லை. ஏறக்குறைய முதுகில் விழுந்த மூட்டையோடு விழித்தார். அந்தம்மாள் உடனே முகத்தில் கோபத்தை காட்டி “உள்ளாற வாங்க.. வெயிட்டு..”

“சரிம்மா..” என்று நகர்ந்து உள்ளே நுழைந்தபோது அந்தம்மாள் ஒதுங்கி “இப்படிக்கா போங்க..” என்று இன்னொரு அறையை காட்டியபோது அந்த செண்ட் வாசனையை உணர்ந்து அதை தவிர்க்கமுடியாமல் அந்த அறைக்குள் போனபோது இருட்டாக இருப்பதை கவனித்து மூட்டையை ஒரு பக்கமாக வைத்து கண்கள் அந்த இருட்டுக்கு பழக்கமாகி ஒரு ஓரமாக தற்செயலாக கவனித்தபோது முன்புறம் சுவர் ஓரமாக அந்த வண்டியை கவனித்தார். அழுக்கு படர்ந்து நிறைய ஒற்றடைகள் படர்ந்து நூல் நூலாக வண்டியை சுற்றி தொங்கியபடி அந்த சீட்டில் அட்டை மாதிரி அழுக்கு ஒட்டிக்கொண்டிருப்பதை கவனித்து இவர் அப்படியே நின்றபோது அந்தம்மாள் “இன்னும் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு வந்திடுங்க..”

“சரிம்மா..” என்று மூட்டையை இன்னும் ஓரமாக தள்ளியபோது அவருக்கு மூச்சு வாங்கியது. மறுபடி அந்த வண்டியை கவனித்தார். பெரும்பாலும் அந்த அறையை திறக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது. இருட்டில் மற்ற இடங்களில் நான்கைந்து பீரோக்கள் சின்னதாக இருப்பதையும் அந்த அறையின் இரண்டு சன்னல்கள் இறுக்கமாக மூடியிருப்பதையும் கவனித்து இங்கு ஏன் முந்திரி மூட்டையை வைக்க சொல்லுகிறது இந்தம்மா என்று யோசித்தபடி வெளியே வந்தபோது அந்தம்மா அந்த அறையை பூட்டி “காசு கொடுத்துட்டீங்களா..?”

“இல்லைம்மா..”

“எவ்வளவாம்..?”

“நூறு..”

“நூறா..?” என்று வெளியே இவருடனேயே வந்து அந்த டிரைவரை பார்த்து சிரித்தபடியே “ஏம்பா.. நூறு ரூபாயா இதுக்கு போயிட்டு..?”

“நூறூ ரூபான்னுதான் சொல்லிட்டு வந்தேன்..” என்றபோது அந்தம்மாள் இவரை பார்த்து “நீங்க எதுக்கு நூறு ரூபான்னு பேசனீங்க..?” என்றபடி இடுப்பிலிருந்த பர்ஸை எடுத்தபோதுதான் அவர் அந்த இடத்தை கவனித்து பர்ஸ் வைக்கிற இடமாக அந்த இடம் மாறிவிட்டதை கவனித்து அந்த இடத்தில் அதற்கான அடையாளமும் இருப்பதை பார்த்து உடனே கண்களை விலக்கி “நீங்க அம்பது ரூபா கொடுங்க.. போதும்..” என்றார் உதாராக..

“இந்தாங்க..” என்று ஐம்பது ரூபாயை இவர் கையில் அழுத்திவிட்டு அந்தம்மாள் உள்ளே போனபோது இவர் விழித்தபடி ஆட்டோ டிரைவரை கவனித்தார். அவன் “சீக்கரம் வாங்க பெருசு..”

இவர் அப்படியே நின்றிருந்தார். அந்த டிரைவர் வண்டியை கிளப்பி இவர் முகத்தை திரும்பி பார்த்தபோது இவர் அந்த ஆட்டோவை நெருங்கி ஐம்பது ரூபாயை நீட்டியபோது அவன் முறைத்தான். வண்டியை அணைத்து “கூப்புடுய்யா அந்தம்மாவ..” என்று கோவமாக ஆட்டோவை விட்டு இறங்கியபோது “என்னா அண்ணாச்சி பிரச்சன?” என்று மாடியிலிருந்து குரல் வந்ததை கவனித்து திரும்பி பார்த்தார்.

மாடியில் அந்த மஞ்சள் சட்டை.. கையில் பீர் பாட்டிலுடன்.. டிரைவர் “நூறு ரூபான்னு கூட்டிக்கிட்டு வந்துட்டு அம்பது ரூபா தர்றாரு..”

அந்த மஞ்சள் சட்டை சங்கடத்துடன் “என்னா அண்ணாச்சி.. இதுக்கு கூட பிரச்சன பண்ணிட்டு..?”

“இல்லப்பா.. அந்தம்மாதான் அம்பது ரூபாய..” என்று முடிப்பதற்குள் அவன் தொடர்ந்து “குடுத்துட்டு மேல வாங்க.. சீக்கரமா..” என்று பாட்டிலை தூக்கி காட்டி சிரித்தான். இவர் விழித்து பிறகு அந்த சிரிப்புக்கு இன்னொரு சிரிப்பை தந்தபோது அவருடைய ஒரு கை மேல் பாக்கெட்டில் பணத்தை தேடியபோது அந்த மஞ்சள் சட்டை காணாமல் போனான்.. நாற்பது ரூபாயை பத்து பத்தாக எடுத்து மொத்தமாக அந்த டிரைவரிடம் நீட்டியபோது அவன் அதை பிடுங்கிக்கொண்டு வண்டியை கிளப்பிக்கொண்டு போனபோது “எல்லாம் பிச்சக்கார வேசம்..” என்று திட்டியபடி போனான்..

இவர் இப்போது அந்த மாடிப்படியை கவனித்தார். அந்த என்பீல்டு ஞாபகம் வந்தது. மாவட்டம் இப்போதைக்கு வருகிற மாதிரி தெரியவில்லை. பாக்கெட்டில் மீதி பத்து ரூபாய்தான் இருக்கிறது. வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு சரியாக இருக்கும். அந்த பத்து ரூபாயை எடுத்து கீழே வேட்டி மறைவுக்குள் ஜட்டிக்குள் வைத்துக்கொண்டு மாடியேறினார்..

தனக்கு குடிப்பழக்கம் இல்லையென்பது அவருக்கு தெரியும். ஆனால் மேலே போய் ஒரு சில நொடிகள் கழிந்து அவர்களிடம் ஏதோ பேசுவது கீழே கேட்டது..

“முந்திரிய வறுத்து தரச்சொல்லவா அண்ணிக்கிட்டே உங்களுக்கு..?”

                                        0000

 

 

Series Navigationபெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்சன்னல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *