ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

Spread the love
ப.தனஞ்ஜெயன்
 
365 நாட்களிலும் மழை
 
வேண்டும் என்ற தருணத்தில்
 
வானம் பார்த்து வேண்டினார்கள்
 
கடுமையாகக் காய்ந்து கெடுத்தது
 
வேண்டாம் என்ற பொழுது
 
தீவிரமாகப் பெய்து கெடுத்தது
 
எப்பொழுதும் துயரத்தோடு
 
அழுது தீர்க்கும்
 
உழவனின் கண்களில்
 
என்றுமே ஓயாது
 
பெய்து வருகிறது
 
வருடம் முழுவதும்
 
கண்ணீர் மழை
 
எந்த பருவத்திலும்
 
அவர்களின் இமைகள் ஈரத்தோடும்
 
இதயம் காயத்தோடும் தவிக்கிறது
 
துளிர்த்துக் காய்ந்தும்
 
அழுகியும் போகும்
 
விதைகள் அவர்கள்.
 
 
 
 
 
2. வரிசையாக நில் என்றார்கள்
 
அங்குமிங்கும் அலைந்தேன்
 
அலைக்கு என்று ஒரு வரிசை
 
பறவைக்கு என்று வரிசை
 
எறும்பிற்கோ அழகான வரிசை
 
இந்த வரிசை எங்கிருந்து பிறந்தது
 
ஓ கிரகங்களே நீங்கள்தான்
 
வரிசைக்கு முன்னோடி
 
மண் பிறந்து
 
நீர் பிறந்து
 
மனிதன் பிறந்து
 
இன்னும் வரிசையாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியே
 
நீ வரிசையை எங்கிருந்து கற்றாயோ
 
பெரும் வரிசையில்
 
ஓர் அழகான ஈர்ப்பு
 
ஆப்பிள் வீழ்ந்தது
 
கவனமாய் கடிக்கப்பட்ட ஆப்பிளிலிருந்து
 
வரிசையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது காதல்
 
காலமும் முட்களாய் மாறி
 
வட்ட வரிசையில் சுழலும் போக்கில்
 
வரிசையற்றே அலைகிறது மனது
 
வரிசையான பிறப்புகளும்
 
வரிசையான மரணங்களும்
 
புரிய வைத்தது இந்த வாழ்வின் கோடுகளில் எப்படிப் பயணிப்பது என்பதை.
 
 ப.தனஞ்ஜெயன்.
 
 
 
3.
 
நதி சேர்ந்த கண்கள்
 
இசை தொடும் மனம்
 
எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட கூழாங்கலை இன்று பார்த்தேன்
 
அழகான புன்முறுவலோடு
 
இசைத்தது அதன் இசையை
 
நீர் போக்குவரத்தோடு
 
பார்த்துவிட்டு வந்த பிறகும்
 
அந்த கூழாங்கல்லின் இசை
 
ஓடிக்கொண்டே இருக்கிறது
 
என் உடல் நதியில்
 
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
 
மீண்டும் மீண்டும் இடம் பெயர்தல்.
 
 
ப.தனஞ்ஜெயன்.
 
 
4.
 
தொலைக்காட்சியும் மின்விசிறியும்
 
ஓடிக்கொண்டேயிருந்தது
 
அந்த கணம்
 
சீரியல் பார்த்திருந்த
 
அம்மாவிற்கு வருத்தம்
 
திடீரென்று நின்றுபோன மின்சாரத்தைத் தீட்டித்தீர்த்தாள்
 
தெருவிலிருந்த அப்பா அன்றைய நாளுக்கான சோகத்தைச் சேமித்தவாறே
 
எல்லாம் வெளியே வாங்க என்றார்
 
மின்சாரத்தை
 
திட்டிக்கொண்டே வந்த
 
அம்மாவைப்பார்த்தார் அப்பா
 
சட்டென்று மின்சாரம் வந்ததும்
 
வீற்றென்று மீண்டும் உள்ளே ஓடினாள் அம்மா
 
செல்போனில் உறைந்து போகும் தன்பிள்ளைகளின் கண்களில்
 
எந்த கனவும் இல்லாமல் போனது அப்பாவிற்கு வருத்தம்தான்
 
சதா செல்போனிலும்தொலைக்காட்சியிலும் உறைந்துபோன வாழக்கையை கவனப்படுத்துகிறது
 
காற்று என்றார்
 
கதவு திறந்து இருந்தும் யாரும் வெளிவரவில்லை
 
எல்லோரும் வெளியே வாருங்கள் என்றார்
 
காற்று தன் பாதையில்
 
பயணம் செய்கிறது
 
மனிதர்களின் கவனம் பெறாமலேயே
 
வெளியே அமர்ந்து காற்றோடு பேசிக்கொண்டேயிருந்தார் அப்பா.
 
ப.தனஞ்ஜெயன்
 
 
 
5.
 
 
தொடர்
 
−−−−−−−
 
துளித் துளியான மழை
 
பறவையின் எச்சங்கள்
 
துவண்ட மனதோடும்
 
துள்ளலோடும் விழும் பாத சுவடுகள்
 
என அனைத்தையும் செரித்தும்
 
சாம்பலாக்கியும் கடக்கும்
 
இடைவெளியில்
 
பூத்துக் களிக்கும் நிலம்
 
பிரபஞ்சத்தின் சிறிய அறை
 
இந்த பூமி எனும் சிறிய அறையில்
 
பறந்து வந்து தங்கி
 
மீண்டும் பறந்து போகும்
 
தூரம்தான் இந்த வாழ்வு
 
சொற் குறிப்புகளை நிரப்பிவிட்டு
 
பறக்கிறது ஒவ்வொரு பறவையும்
 
சொற்கள் இறந்துவிடாமல் பற்றிக்கொள்கிறது உடல்.
 
 ப.தனஞ்ஜெயன்.
 
 
 
6.
 
 துயரம்
 
−−−−−−−
 
தீக்குச்சி உரசி எழுதும்
 
நேரத்தில் காற்றின் பலம்
 
தெரிந்தது
 
லேசான தூரலில் ஜன்னல் கண்ணாடியும்
 
நனைந்து போயிற்று
 
பலத்த இடியைக் கண்டு அஞ்சவில்லை பெய்யும் மழை
 
கண்களைக் கிழிக்கும் மின்னலின்
 
வெளிச்சத்தை ரசிக்கவில்லை மழையும் மேகமும்
 
தொடர் மழை
 
சற்று பயம் கலந்து போனது மனதில்
 
ஜன்னலை மூடினேன்
 
அழகான வசந்தம் மழையில் தொடர்ந்தது
 
எரிந்த மெழுகுவர்த்தி அணைந்து போயிற்று தொடர் மழை இரவில்
 
மெல்லக் கண்கள் உறக்கத்தில் தள்ளிய போது நானில்லை
 
மறுநாள் காலை
 
மீண்டும் எழுந்து விட்டேன்
 
அபூர்வம் தானே
 
மீண்டும் தொடர்ந்தது சந்தை வாழ்வு
 
காலத்திற்கு வெவ்வேறு காலணிகளை மாட்டி விடும் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த நூற்றாண்டின் துயரம் மட்டும் அல்ல
 
ஒவ்வொரு நூற்றாண்டின்
 
துயரமும் கூட
 
கத்தரிக்க முடியாத பருவங்களைக் காலம் நகர்த்துகிறது.
 
 ப.தனஞ்ஜெயன்
 
 
 
7.
 
 அணு விதைத்த அறுவடையில்
 
ஆள் மயங்கி தடம் பதித்தது
 
ஒரு பாதை
 
பாதை வழியே மெல்ல நகரும்
 
மனப் பந்து
 
உயிர் மலர்ந்து
 
திரை நீக்கி
 
உதிர்கிறது வாழ்க்கை பூ
 
நரை நகர்த்தி
 
கரை அமர்ந்து ரசிக்கிறது
 
மன அலை
 
கரையருகே அழகான வண்ணத்துப்பூச்சி உச்சி முகர்ந்தது உவர்க்கும் சமுத்திரத்தை ருசி பார்த்தது
 
கடலில் தேன் எடுக்க முடியாமல்
 
கரையருகே
 
பூவைத் தேடியது
 
மனமோ வாழ்வைத் தேடுகிறது
 
இன்னும் உவர்க்கும் சமுத்திரத்தில்
 
வாழ்வின் பயங்கரம்
 
அடிமனதின் ஆழத்தில்
 
நிழலாய் நகர்கிறது
 
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
 
யாருடைய நிழலையும் விரும்பாமல்
 
சுற்றி வருகிறது சூரியன்.
 
ப.தனஞ்ஜெயன்
 
 
 
8.
 
ஒளி இரவை பாடும்
 
பெரும் பாடகன்
 
ஒளியின் கரங்களில்
 
இரவு தவழ்ந்து
 
காலமற்ற கைகளில்
 
அமர்ந்து நகர்த்துகிறது
 
இந்த பிரபஞ்ச வாழ்வை
 
பெரும் தூண்டலோடு.
 
 ப.தனஞ்ஜெயன்.
 
 
 
9.
 
மலர்ந்த பூ
 
விரிந்த இலை
 
எரியும் சுடர்
 
இவற்றின் கனவுகளும்
 
நினைவுகளும்
 
ரகசியமானது
 
மலர்வதற்காக விரிந்து
 
உதிர்ந்தது
 
எரிந்து எரிந்து
 
இருள் சூழ்ந்து
 
இறுதியை முத்தமிட்டது பொருள்கள்
 
விழிச் சாயலிருந்து விலகி நிற்கிறது
 
ஒவ்வொரு பொருளின்
 
நிலையான மௌனங்கள்.
 
 
ப.தனஞ்ஜெயன்.
 
 
 
10.
 
 
 
இந்த இரவு அவ்வளவு
 
அழகாக இல்லை
 
அவளை விரும்பினேன்
 
இது மோன இரவு
 
தூங்கும் மலரைத் தட்டி எழுப்பி
 
முத்தம் தருவதைப்போன்ற இரவு
 
அவள் தூங்குவதைப்போல் நடிக்கிறாள்
 
மெத்தையில் பூக்கள் பூத்துக்கொண்டேயிருந்தன
 
அவ்வளவும் வாசனை
 
அது உன் வாசனை மாயா
 
நீ கனவில் அடிக்கடி வந்தாய்
 
உன்னைக் காதலி என்று
 
அழைத்துவிட்டேன்
 
அதனால் உன் கோபம்
 
எனக்குப் புரிகிறது
 
அறை முழுவதும் உன் நினைவுகள்
 
மாய பூக்களோடு போரிட
 
என் இதய ஆயுதத்தை
 
சுதர்சனமாக்கி எரிந்துவிட்டேன்
 
பூக்களை உதிரச்செய்யும் அளவிற்கு
 
காதல் செய்கிறது காம சக்கரம்
 
ஆடையற்ற இந்த இரவை
 
ஒளி குடிப்பதைப் போல்
 
நான் உன்னைக் குடித்துக்கொண்டே
 
இருக்கிறேன்
 
மன்னித்துவிடு மாயா
 
உன் அனுமதி இல்லாமலேயே
 
உன்னைக் குடிப்பதற்கு.
 
 
ப.தனஞ்ஜெயன்
 
 
 
11.
 
அழகான வெள்ளை இதயமும்
 
வெள்ளை இரத்தமும்
 
கருப்பு ரத்தத்தைக்
 
தனக்குள் அடக்கி
 
அழகுபார்க்கிறது
 
தன் தூய்மையான முகத்தில்
 
எழுதித் தீர்க்கும் வரிகளைச் சுமந்து
 
வேதனையோடும்
 
இன்பத்தோடும்
 
புத்தக உடலாக நீள்கிறது
 
எரிந்து சாம்பலாகி
 
ஆற்றலை வெளிப்படுத்தும்
 
ஒவ்வொரு பக்கத்திற்குள்ளும்
 
வெள்ளைத்தாளும்
 
கருப்பு மையும் விளையாடி மகிழ்ந்து
 
எடிட்டர்களோடு கருப்பு மை தன்னை சரிசெய்து கொள்கிறது
 
வெள்ளைத்தாள் எப்பொழுதும் மேகம் போன்று எழுத்தைப்பொழியும்
 
வெள்ளைத்தாளின் கற்பத்தில் எத்தனையோ எழுத்துகள் மழைபோல் பிறக்கிறது
 
மனிதர்களைப்போலப் பேசவும் செய்கிறது
 
கணத்த இதயத்தோடு
 
காகிதங்கள் இசை குறிப்பின் தீராத பக்கங்களாய் அசைகிறது.
 
 
 
ப.தனஞ்ஜெயன்
Series Navigationசுமைஅழகியசிங்கரின் மூன்று கவிதைகள்