மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

 

தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத்

தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு

வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும்

மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ

அருக்கனென முடிவிளங்க அழகு வீற

அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற

செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல்

சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல்

 

பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய “சீரங்கநாயகியார் ஊசலின் எட்டாம் பாடல் இதுவாகும்.

சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் திருக்கோயில் நிருவாகத்தைத் திறம்பட நிர்வகிக்கப் பத்துக் கொத்துகளை நியமனம் செய்து அருளினார். அவர்களைப் பற்றிக் “கோயில் ஒழுகு” நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் பாட்டனாரான பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதியுள்ள “சீரங்க நாயகர் ஊசல்” நூலின் 22-ஆம் பாடலிலும் இதைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு கொத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர் தத்தம் பணியைச் செய்து வந்தனர். மணியக்காரர், நீர் தெளித்தல் முதலியன செய்வோர், வேத அத்யாபகர், ஸ்தலத்தார், அரையர், ஸ்ரீபாதம் தாங்குவோர், பரிசாரகர், பட்டர், எம்பெருமானுக்குக் காவல் புரிவோர், பந்தம் பிடிப்போர் ஆகியோர் பத்துக் கொத்துகளாக இருந்தனர்.

”தாயே! பத்துக்கொத்தினரும் பெருமையுடன் உம் திருவுள்ளத்துக்கேற்ப தத்தம் பணிவிடைகளைச் செய்து வருகின்றனர். மற்றுமுள்ள பணியாளரும் சூழ்ந்துள்ளனர். தங்கள் திருமுடி சூரியனைப் போல ஒளி வீசுகிறது. அதன் அழகு மிகுந்து காட்சியளிக்கிறது. வானவர்கள் எல்லாரும் மகிழ்ந்து பூமழை பொழிகின்றனர். அடியார்கள் அனைவரும் போற்றுகின்றனர். இப்படிப்பட்ட பெருமைகள் உமக்கு இருப்பதால் சீரங்கநாயகியாரே! மகிழ்ச்சியுடன் ஊசல் ஆடுவீராக” என்று கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்கிறார்.

இப்பாசுரத்தில் பிராட்டியின் திருமுடிக்கு நிகராகச் சூரியன் காட்டப்படுகிறது. பூதத்தாழ்வார் திருமகளை மின்னலுக்கு நிகராகக் காட்டுவார். அவர் தாம் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியை முடிக்கும்போது நூறாம் பாசுரத்தை ’பிராட்டி திருவடிகளே சரணம்’ என முடிக்கிறார். அப்போதுதான், “காரார்ந்த வான் அமரும் மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்” என்று அருளிச் செய்வார். கருமேகங்கள் செறிந்த வானத்திலே மின்னல் போன்று பிராட்டி விளங்குகிறார் என்பது அவர் கூற்றாகும்.

மேலும் பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியின் 57-ஆம் பாசுரத்திலும் இதையே அருளிச் செய்திருக்கிறார். பிராட்டி எம்பெருமானின் திருமார்பில் பொருந்தி இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் எனக்கூற வந்த ஆழ்வார், “பொலிந்து இருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி” எனக் காட்டுகிறார். அதாவது பிராட்டியானவர் செறிந்த இருளை உடைய கார்காலத்து வானத்தில் மின்னல் போலப் பிரகாசிப்பவர் எனக் குறிப்பிடுகிறார்.

”அழகு வீற” என்று இப்பாடலில் பிராட்டியின் அழகு போற்றப்படுகிறது. திருமகளின் தோற்றத்தை, “திவளும் வெண்மதிபோல் திருமுகத்து அரிவை” [2-7-1] என்றும், “பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்” [2-2-9] என்றும் திருமங்கையாழ்வார் போற்றுவார். “வடிவு இணையில்லா மலர்மகள்” [9-2-10] ”கோலத்திரு மாமகள்” [6-9-3] என்றும் நம்மாழ்வார் அருளிச் செய்வார்.

வானத்தில் உள்ள அமரர்கள் பிராட்டியைப் பூமழை பொழிந்து போற்றுகிறார்கள் என இப்பாடல் கூறுகிறது. பெருமானின் திருமார்பில் பொருந்தி இருக்கும் பேறு பெற்றவரன்றோ? பெருமானையே, “அமரர் தொழப்படுவானை, அனைத்துலக்கும் பிரானை” [3-5-9] என்று நம்மாழ்வார் அருளிச் செய்வார்.

அதேபோல அடியார்களைப் பற்றிக் கூறும்போது ”தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல ஆர்ந்த அச்சுதன்” [3-5-11] என்பார் நம்மாழ்வார். அத்தகைய அடியார் உம் பெருமையைப் போற்றிக்கொண்டுள்ளார்கள் என்று இப்பாடலில் கோனேரியப்பனையங்கார் பிராட்டியைப் போற்றி ஊசல் ஆட வேண்டுகிறார்.

 

===================================================================

வளவ. துரையன், 20, இராசரசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர்.6007002

பேச: 93676 31228

மின்னஞ்சல் : valavaduraiyan@gmail.com

=====================================================================

Series Navigationஉடைந்த தேங்காய் ஒன்று சேராதுஅந்தி