This entry is part 8 of 34 in the series 6 ஜனவரி 2013

காகங்கள்
என்னைப் போல்
நிம்மதியற்றவையா?

கறுப்புக் கேள்விகளாய்ப்
பறந்து பறந்து
கரைந்து கொண்டிருக்கும்.

சூரிய வேட்கையில்
கரிந்ததாய்
ஆகாயக் கந்தல்கள்களாய்
அலைந்து கொண்டிருக்கும்.

ஒரு கணம்
‘குபுக்’கென்று
உச்சிமரக் கிளையில் காய்த்தது போல்
உட்காரும்.

அடுத்த கணம்
‘விசுக்’கென்று வெளியில்
ஆகாயச் சில்லை
அலகில் கொத்திப் பறக்கும்.

ஊர் மரத்தையும்
வெறிச்சோட விடுவதில்லை.

மரத்தின்
ஒரு கிளையிலிருந்து
இன்னொரு கிளைக்குத் தாவி
வேறு மரம் போல் பார்க்கும்.
கத்திக் கத்தி
மரத்தின் ’தவத்தைக்’
கலைக்கப் பார்க்கும்.

ஒரு காகமே
மறித்து வந்து
பல காகங்களாகி
மயக்கப் பார்க்கும்.

கழுத்தைச் சாய்த்து
’ஒரு கருவிழியில்’
‘காண்பனவெல்லாம் காண்பனவா?’
என்று
காண்பது போல் இருக்கும்.

எதைத் தான்
கொத்துவதென்றில்லை;
இரவைக் கொத்திக் கொண்டு வந்து
கூச்சலின்றி
ஊர்மரத்தில் அடைந்திருக்கும்

எதை எதையோ எண்ணி
மனத்தில் அடையாது
நீளும் இரவில்
கூச்சலிடும்
ஒரு காகம் மட்டும்.
—————————–

Series Navigationவால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்இரவு விழித்திருக்கும் வீடு