மனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்

ஒற்றை ஆளாகப் பரணிலிருந்து பொம்மைப்பெட்டிகளை இறக்கப் போன வருடமே சிரமப்பட்டதை நினைவில் கொண்டு, என்னிடமும் என் தம்பியிடமும்                                                  ” போதும் போதும் உங்க பராக்கிரமமெல்லாம்.  ஓடற காவேரித் தண்ணில லைட் வெளிச்சம் நடுங்கற மாதிரி, பொட்டிய எறக்கிவைக்கிற வரைக்கும் ஒடம்பு முழுக்க நடுங்கித் தவிச்சது ரொம்ப நன்னாயிருந்தது. பொம்மையெல்லாம் பொழைக்குமான்னு பட்ட கவலையெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும் ” என்று சொல்லி எப்போதும் அவளுடன்  ஒத்துப்போகாத என் சின்னக்காவையும் பிரச்சனைகளைத் தவிர்க்க எப்போதும் ஆமாம் போடும் என் தர்ம பத்தினியையும் அவள்கூற்றுக்குத் தலையாட்டத் துணைக்கு அழைத்துகொண்டு  என் தம்பியிடம் அக்கௌண்டன்சி ட்யூஷன் படிக்க வரும் பையன்களை பொம்மைப் பெட்டிகளையும் ஸ்டீல் படிகளையும் இறக்கிவைக்க அமாவாசைக்கு முதல் நாளே வரச்சொல்லிவிட்டாள் என் அக்கா. படிகளை அடுக்கி பொம்மைகளை அதில் அம்மா சொல்லிக்கொடுத்த கிரமத்தில் வைத்து அதன்பின் அம்மா சொல்லிக்கொடுக்காத வகையில் தன் கற்பனைக்குத் தோன்றிய வகையில் வயல்காடு, காவிரிப் பாலம், கருடசேவை, மலைக்கோட்டை கிரிக்கெட் மேட்ச் என என்னென்னவோ செய்துவைத்தாள். எல்லாவற்றிற்கும் எந்தெந்த இடங்களில் விளக்குகள் எந்த வகையில் போடவேண்டும் என என் தம்பிப் பார்த்துக்கொள்ள ஏதோ எனக்கு கொலுவைப்பதில் வேலையே இல்லை எனும்படியாக எல்லோரும் பார்த்துக்கொண்டார்கள்.

 

ஆனால் உண்மையில் இவர்கள் கொலுவைத்துக்கொண்டாடியதில் திண்டாட்டம் எனக்குத்தான். தள்ளித் தள்ளி வைத்திருந்த மரப்பெட்டிகளிலிருந்து ” பிள்ளையார் பொம்மையை எடு, பெரிய பெட்டியைத் தள்ளிவை, இந்த பொம்மையையா கேட்டேன் அதை எடு என்று இவர்கள் மாற்றி மாற்றி ஏவிய வேலைகளைச் செய்ததுபோக, மஹாளய அமாவாசையின் நிரல்களெல்லாம் காலையில் முடிந்தபிறகு சாப்பிட்டுவிட்டு கொஞ்சம்  உட்கார்ந்த தருணத்தில்,  ” டவுனுக்குப்போய் கொஞ்சம் சாமன்லாம் வாங்கவேண்டியிருக்கு. போலாமா?” என்று கேட்டாள் என் மனைவி. அப்படிக்கேட்டால், வண்டியை எடு என்று அர்த்தம். ” சித்த படுத்துண்டுட்டு, சாயந்தரம் நாலு மணிவாக்கில போலாமா”? என்று கேட்டவுடன், ” எப்படிப்பா இப்படி உங்களால தூங்கிண்டே இருக்கமுடியறது”‘? என்று அடாவடியாகப்பேசி என்னை அப்போதே கிளப்பிவிட்டாள்.  வந்த தூக்கத்தை குளிர்ந்த நீரால் துடைத்தெறிந்துவிட்டு கிளம்பும்போது, ” என்ன வாங்கணும்னு லிஸ்ட்டெல்லாம் வெச்சுண்டு இருக்கியா? அங்க வந்து யோசிச்சு யோசிச்சு போன கடைக்கே திரும்பத் திரும்பப் போகக்கூடாது ” என்று என் சின்ன எதிர்ப்பை வேகமாய் ஆரம்பித்து , ” ஏன்னா, இப்பவே நீங்கள்ளாம் ரொம்ப டயர்டா இருக்கேள். அப்புறம் அங்கேவேற அலைஞ்சு கஷ்டமாய்டப்போறது!” என்று அவள் முறைத்த உக்ரத்தைத் தாங்காது சட்டென்று கியரை மாற்றிக்கொண்டேன்.

 

ஆனால், கடைக்குப் போனபிறகு நான் சொன்னதுபோல்தான் ஆகிவிட்டது. ஆஃபிஸ் நட்பு, அக்கம்பக்கத்து பெண்மணிகள் என மொத்தம் ஐம்பது பேர் கொலுவிற்கு வருவார்கள் என்று எஸ்ட்டிமேட் போட்டு, அதற்குத்தக்க ‘ கிஃப்ட் மெட்டீரியல்ஸ் ‘ , ஜாக்கெட் பிட், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, வளையல்கள்,தலைக்கு வைத்துக்கொள்ளும் க்ளிப் என்று ஏதேதோ வாங்க நினைத்திருந்த பொருட்கள் இவர்கள் கேட்ட அளவில் ஒரே மாதிரியில் இல்லாதுபோக, வேறு வேறு கடைகளுக்கு ஏறி இறங்கும்படியாகத்தான் ஆகிவிட்டது. அதைத்தவிர, ” எல்லோருக்கும் எப்படி ஒரேமாதிரி கிஃப்ட்டைக் கொடுக்கமுடியும்? எனக்கு, கம்ப்யூட்டர் செண்ட்டர் சீனுவாத்தில, வெள்ளி குங்குமச் சிமிழ் கொடுத்தா. அவாளுக்குப் போய் முப்பது நாப்பது ரூபாய்க்கு எல்லாருக்கும் குடுக்கிற ப்ளாஸ்டிக் டப்பாவக் குடுக்க முடியுமா”? என்று அங்குவந்தவுடன்தான் தோன்றிய ஞானோதயத்தில் என் சின்னக்கா கேட்க, என் மனைவியும் அவளின் ப்ரத்யேக நட்பு வட்டாரத்திற்கும், முதல்முறை வீட்டிற்குவரும் அலுவலகப் பெண்மணிகளுக்கும் ஒரே மாதிரி கிஃப்ட் கொடுத்தால் நன்றாக இருக்காது என்று சொல்ல என் பெரியக்காவிற்கு அப்படி ஏதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாததால் அவளால், இவர்களுக்கு ஈடாக ஒன்றும் சொல்லமுடியாது ” இதுக்குத்தான் நான் வரல, நீங்களேபோய் என்ன புடிச்சிருக்கோ வாங்கிண்டு வாங்கோன்னு சொன்னேன் ” என்று அவளின் அதிருப்தியைக் காட்டினாள். என் சின்னக்காவோ  இதைக்கேட்டு வந்த கோபத்தில், ” கிளம்பும்போதே இவன் வாயை வெச்சாம் பாரு ” என்று சொன்னதைக்கேட்டு நான் மீண்டும் கடைக்கு வெளியே போய்விட்டேன்.

 

இவர்களின் குழப்பம் போதாதென்று, கடைக்கு வந்திருந்த வேறொரு வயதானவர் ” என்ன கொலுவுக்கு வரவாளுக்கு கிஃப்ட் வாங்கப்போறேளா? இப்படிச் சின்னக் கண்ணாடியா வாங்காதீங்கோ. நீங்க குடுக்கற கிஃப்ட்டை அவா வேற யாருக்கும் திருப்பிக் குடுக்காம அவாளே வச்சுக்கிற மாதிரி இருக்கணும் ” என்று எம்.பி.ஏ மாணவர்களுக்குக் க்ளாஸ் எடுக்கிற மாதிரி சொல்லிக்கொண்டே செல்ல, கடைக்காரன் வேறு கொடுக்கிற டிப்ஸில் என் குடும்பத்தினரின் எஸ்ட்டிமேட்டில் அடிக்கடி நிறைய ரிவிஷன் நடந்துகொண்டிருந்தது. என் மனைவி அடிக்கடி வெளியேவந்து, ” ஏடிஎம் கார்ட் கொண்டுவந்திருக்கேளில்லியோ “? என்று கேட்டுச் செல்லும்போதெல்லாம் எஸ்ட்டிமேட்டின் ரிவிஷன் தெரிந்துகொண்டிருந்தது.  பரிசுப்பொருட்கள் மட்டுமின்றி, ஜாக்கெட் பிட்டுகளிலும் நிறைய தரம் பிரித்து வாங்கவேண்டியிருந்தது. ” பொம்மனாட்டிகளுக்கு ரவிக்கை பிட் கொடுக்கிற மாதிரி கூட வர ஆம்மனாட்டிகளுக்கு ஒரு ஷர்ட் பிட் வேண்டாம், ஒரு பனியனாவது வச்சுக் கொடுக்கக்கூடாதா “? என்று நான் கேட்டபோது ” நவராத்திரிங்கிறது பேசிக்கலா பொம்மனாட்டி ஃபங்க்ஷன் தெரியுமோல்லியோ”? என்றாள் என் பெரியக்கா.  ” சரி அப்படின்னா, சிவராத்திரிக்காவது எங்களுக்கு வச்சுக் குடுப்பேளா”? என்று என் தம்பி கேட்க ” போடா அச்சுபிச்சு பேச்செல்லாம் பேசாதே! எல்லாம் இவனப் பாத்து கத்துண்டியாக்கோம் ” என்று என்னை இடித்தாள்.

 

கொலு பார்க்க அழைத்தவர்களெல்லாம் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். முதல் இரண்டு நாட்கள் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் போயிற்று. அதன்பின், இவர்கள் மற்றவர்களை அழைக்கப்போக, அழைத்தவர்கள் இங்கு வர என்றிருந்த அரேஞ்ச்மெண்டில் கொஞ்சம் நேரக்குழப்பம் வந்துவிட, வெளியே எங்கேயும் போகாது வீட்டிலேயே இருந்து கவனித்துக் கொண்டிருந்த என் பெரியக்காவிற்கு அடிக்கடி கரண்ட் போய்வந்ததாலும் யார் யாருக்கு என்ன கிஃப்ட் என்று கவரில் பெயர் எழுதி வைத்திருந்தாலும் அவளுக்கு நிறைய பேர்களைத் தெரியாததால் வந்தவர்களுக்கு என்ன கிஃப்ட் கொடுப்பது என்று தெரியாமல் மாற்றி மாற்றிக் கொடுத்ததில், சிறப்பு விருந்தினர்களுக்கு ஆர்டினரி கிஃப்ட்டும் ஆர்டினரி அழைப்பாளர்களுக்கு லக்கி ப்ரைஸும் அடிக்க கொலுவில் கொஞ்சம் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தக் குழப்பத்தைச் சரிக்கட்ட, சிறப்பு ஆட்களின் வீட்டிற்கு மீண்டும் ஒருமுறை ” எதேச்சையாகப்” போய் கிஃப்ட்டைக் கொடுத்துவிட்டு வரவேண்டியதாயிற்று. பரிசுப்பொருட்கள் மாறியதில், எந்தக்கடைகளில் வாங்கினார்களோ அந்தக் கடைகளுக்கே சென்று அதே பொருட்களை நான் வாங்கச்சென்ற போது கடைக்காரர் மிகமகிழ்ந்து, ” எனக்குத் தெரியும் சார். இந்த மெட்டீரியல்ஸ இன்னும் வாங்க வருவீங்கன்னு ” என்றார். போன கொலுவரை, என் வீட்டினருக்கு வந்த கிஃப்ட் பொருட்களை வீட்டிற்கு வருபவர்களுக்கு ” வைத்துக் ” கொடுக்கும் வழக்கம் எல்லோரையும் போல்தான் இருந்தது. ஆனால் இந்தமுறை வந்திருந்த ஒரு மாமி, என் பெரியக்காவிடம் , “மாமி!  இந்த கிஃப்ட், போனதடவை உங்க தம்பி ஆம்படையா எங்காத்துக்கு வந்திருந்தபோது கொடுத்தது ” என்று சொன்னதை உடனே புரிந்துகொள்ளாது, அவள் நீட்டின தட்டிலிருந்து குங்குமத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு மேலும் ஒருதடவை சத்தமாகச் சொன்னபோதுதான் புரிந்துகொண்டு ” ஐயையோ! சாரி மாமி! இந்தப் பக்கம் புதுசா வச்சிருக்கிறத மறந்துபோய் பழசு வந்ததை  எடுத்துண்டு வந்துட்டேன் . ரியலி சாரி மாமி ”  என்று சொல்லிவிட்டு உள்ளே போனவள் ஏதோ ஞாபகமாய் வெளியே வந்து ” ப்ளவுஸ் பிட் அதே மாதிரி உங்காத்துதாவே  வந்துடலயே ” என்று கேட்டபோது, அந்தப் பெண்மணியும் அதை ஒருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, இல்லையென்று தலையாட்டிவிட்டு சென்றாள். இதை என் சின்னக்காவிடம் சொன்னபோது அவள், ” ஏண்டி அதப் பாத்துக்கொடுத்திருக்கக் கூடாதோ ” என்றபோது மீண்டும் ஒருமுறை கொலுவில் புயல் அடித்தது

 

பரிசுப்பொருட்களில் நேர்ந்த மிக்ஸ்-அப் , சுண்டல் கொடுப்பதிலும் நடந்தது. ஆனால் இந்த மிக்ஸ்-அப் வேறு மாதிரியானது. தினமும் ஏதோ ஒரு தான்யத்தில் சுண்டலை என் பெரியக்கா செய்துவிடுவாள். ஒரே ஒரு நாள் புட்டு உண்டு. ஆனால் இங்கிருந்து மற்ற வீடுகளுக்குப் படையெடுத்து கவர்ந்து வந்த சுண்டல்களின் வகை பிரித்து இங்கு வருபவர்களுக்கு செய்து வைத்திருக்கும் சுண்டலோடு ஏதோ ஒரு கணக்கில் செய்யும் டிஸ்ட் ரிப்யூஷனில் குளறுபடி ஏற்பட்டு யாரிடமிருந்து வாங்கி வந்தோமோ அவர்களுக்கே அவர்கள் வீட்டு சுண்டல் போய்விடுவது அல்லது நமக்குக் கொடுத்தவர்கள் அவர்களின் வீட்டுச் சுண்டலை சாப்பிட்டுவிடுமுன்,  அவர்கள் நமக்குக்கொடுத்த சுண்டலை நாம் நம் வீட்டுக்கு வந்தவர்களிடம் கொடுக்க, அப்படி வந்தவர்கள் நமக்குக் கொடுத்தவர்களுக்குக் கொடுப்பது என நடக்கும் விளையாட்டு டி-20 விளையாட்டின் ஸ்வாரஸ்யத்தை மிஞ்சிவிடுவதாக இருந்தது.

 

இதுபோக, கொலுவிற்கு வந்தவர்களை, ” பாடுவேளோல்லியோ? ஒரு பாட்டு பாடுங்கோ ” என்று சம்பிரதாயமாகப் பாடச்சொல்லிக் கேட்டுவிட்டு அவர்கள் பாடுகிறார்களா இல்லையா என்று கூடக் கவலைப்படாமல் உள்ளே சுண்டலைப் பார்க்க போய்க்கொண்டிருந்தாள் என் அக்கா. கிச்சனிலிருந்து வந்து, பாடவே பாடாமல் பாட்டும் தெரியாமல் உட்கார்ந்தவர்களைப் பார்த்து , ” அதுக்குள்ளேயேமா பாடி முடிச்சுட்டேள் “? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்கும் மாமிகள் கொலு பொம்மைகள் போலவே இருந்தார்கள்.

நாலைந்து பேர் ஒரே சமயத்தில் கொலு பார்க்க வந்திருக்கும் சமயங்களில், யாராவது சொன்னபின்னும் பாடாமலிருந்தால், அடுத்தவரைப் பார்த்து, ” நீங்களாவது பாடுங்கோளேன் ” என்று கெஞ்சலாக வற்புறுத்தும் சமயங்களில் , ” நாழியாயிடுத்து. மழை வேற வர்றமாதிரி இருக்கு . நாங்க கெளம்பறோம் ” என்று கொலுவை ஒழுங்காகப் பார்க்காமல் வந்தவர்கள் கிளம்பிவிடுவார்கள். ஸ்டார்ட்டிங்க் ட்ரபிள் இருக்கும் சிலபேர் ஆரம்பத்தில் பாடுவதற்கு யோசித்தாலும் பாட ஆரம்பித்தபின் நிறுத்துவதற்கு யோசிக்காமல் இருப்பார்கள். அவர்களையெல்லாம் என் பெரியக்கா பத்து நிமிடத்தில் வெற்றிலை பாக்கு தட்டைக்காட்டி  நிறுத்திவிடுவாள். என் நண்பன் நடராஜனின் குழந்தைகள் இரண்டும் கொலுவிற்கு வந்து பாடியபோது கொட்டியமழையைவிட அவர்களுக்கு சிறப்பான பக்கவாத்தியம் இருந்திருக்க முடியாது என்றுதான் தோன்றியது.

 

இப்படி யாராவது பாடும்போதெல்லாம், மனித உருவங்கள் போலவே குரல்களும் எத்தனை தினுசாக இருக்கின்றன என்ற ஆச்சர்யம்தான் மேலோங்கி நிற்கும். கொலுவின் விதவிதமான பொம்மைகளைப் போலவே மனிதர்களும் எப்படி ஒன்றாகவும் பலவாகவும் இருக்கிறார்கள். இந்த நவீன யுகத்தின் அளவற்ற  பொழுதுபோக்கு சாத்தியங்களின் மத்தியிலும் பொம்மைகளை அடுக்கி வைத்து, அழகு படுத்தி , ஊரை அழைத்து சுண்டல் செய்துகொடுத்து என எதெல்லாம் செய்தாலும், ” நவராத்திரிக்கு  வெத்தெல பாக்கு வாங்கிக்க எங்காத்துக்கு வாங்கோ ” என்று அழைத்து குங்குமம் கொடுப்பதில்தான் கொலுவின் வெற்றி ரகசியம் இருப்பாதாகத் தோன்றுகிறது.

 

 

                  —  ரமணி

Series Navigationஇயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்இப்படியிருந்தா பரவாயில்ல