மரங்கள்

 

தலைகீழாய்ச்

சுவாசிக்கும்

நுரையீரல்கள்

 

மரங்களை வாழ்த்த

வானத்தை உலுக்கினான் இறைவன்

உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்

 

மொத்த உடம்பும்

சிபியின் தசைகள்

 

மரங்கள்  அஃரிணையாம்

போதிமரம் ?

 

சிரிக்கப் பூக் கேட்டது

அழத்  தேன் கேட்டது

 

தான் பெற்ற இன்பமே

வையம் பெறும் மழை

 

அறையும் அரிவாளுக்கு

மறு கன்னம் மரப்பிடி

 

மரத்தை

விழுங்கமுடியாது கடல்

 

கூடுகட்டும் கிளிக்கு

ஆரத்தி சுற்றவே இலைகள்

 

முல்லைக்கு பாரி தந்தது

மரத்தேர்

 

மரங்களுக்கும் நோன்புண்டு

‘இலையுதிர் காலம்’

 

இராமபிரானை

விரட்டியது நாடு

வாரிக்கொண்டன மரங்கள்

 

இலட்சம் பேரைக் கொன்றான்

இலட்சம் மரங்களை நட்டான்

மன்னிக்கப் பட்டான் அசோகன்

 

விலங்கிடம்  மனிதனிடம்

தோள் மட்டுமே தேடும்

கிளைக்கைகள்

 

நீதிமன்றம்

அமைதியானது

ஒரு மரச் சுத்தியால்

 

நேற்றைய மரங்களே

இன்றைய வைரங்கள்

 

வயிற்றைக் கழுவ

இவ்வளவு பாடா?

திகைத்தன சாலையோர

மரங்கள்.

 

மனிதத் தூசுகளை

மழை கழுவுகிறது

 

மரங்களின்  தேவைகள்

மனிதனிடம் இல்லை

 

ஆதாம் காலத்து மரங்களும்

இன்றைய மரங்களும்

ஒன்றே

 

புத்தகங்கள்

மரங்களின் அவதாரம்

 

வீழ்ந்துவிட்ட மரங்களுக்கு

மௌன அஞ்சலியே

புயலுக்குப்பின்  அமைதி

 

மண்ணை மணந்தன மரங்கள்

தாலிகளாகின வேர்கள்

 

அமீதாம்மாள்

Series Navigationபெண்விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும்,  அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.