மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்

 

                                                டாக்டர் ஜி. ஜான்சன்

கொழுப்பு என்று தமிழில் சொல்வது பல பொருள்களைக் குறிக்கிறது. உணவில் கொழுப்பு நிறைந்தது என்று சிலவற்றைக் கூறுகிறோம். அதிக கொழுப்பு உட்கொண்டால் உடல் பருமன் கூடிவிடும் என்கிறோம். ஒருவன் வீண் வம்புக்குப் போனாலும் அவனுக்கு கொழுப்பு அதிகம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் FATS என்கிறோம்.

ஆனால் மருத்துவத்தில் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் என்று கூறினாலும், கொழுப்பை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுக்கு தமிழில் இன்னும் பொருத்தமான கலைச் சொற்கள் இல்லை. அவை வருமாறு:

* கொலஸ்ட்டெரால் – Cholesterol

* லைப்போ – புரோட்டீன் Lipo -Protein

* ட் ரைக்கிளிசரைட் – Trigliceride

இந்த மூன்ற ரக கொழுப்புகளும் மொத்தமாக லைப்பிட்ஸ் ( Lipids ) என்று அழைக்கப்படுகின்றன. இதனால்தான் இரத்தப் பரிசோதனைகளில் Lipids Profile என்று குறிக்கப்படுகிறது .

கொலஸ்ட்டெரால் என்பது இரத்தத்தில் கொழுப்பில் காணப்படும் வெண்ணெய் போன்ற பிசுபிசு தன்மைகொண்டது. இது உடலில் அனைத்து திசுக்களின் ஆரோக்கியமான செல்களின் (cells ) வளர்ச்சிக்கு தேவையானது. ஆனால் இதன் அளவு அதிகமானால் இரத்தக் குழாய்களின் சுவரில் படிந்து இரத்த ஓட்டத்தைத் தடைபண்ணிவிடும் ஆபத்து உள்ளது. இது இருதயத் தமனிகளில் நிகழ்ந்தால் மாரடைப்பு ஏற்படலாம்.

 

அதுபோன்று மூளையில் நிகழ்ந்தால், மூளை தாக்கம் ( stroke ) ஏற்பட்டு பக்கவாதம் ( hemiplegia ) உண்டாகலாம்.

இவ்வாறு இரத்தத்தில் அதிகமான அளவு கொலஸ்ட்டெரால் இருப்பதை ஹைப்பர்கொலஸ்ட்டெராலீமியா ( hypercholesterolemia ) என்று பெயர் . இது மரபணு, வழியாக வந்தாலும், வாழ்க்கை முறை, உணவு போன்றவற்றால் ஏற்படுவதால் உடற்பயிற்ச்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்து முதலியவற்றால் கட்டுப் படுத்தலாம் .

இரத்தத்தில் கொலஸ்ட்டெரால் அளவு:

சராசரி அளவு – 5.2 மில்லிமோல் / லிட்டர்

உயர்வு – 5.2 – 6.2 மில்லிமோல் / லிட்டர்

அதிக உயர்வு – 6.2 மில்லிமோல் / லிட்டருக்கு மேல்

 

 

கொலஸ்ட்டெரால் இரத்தத்தில் புரதத்துடன் ( protein ) சேர்ந்துதான் பயணிக்கிறது . .இவை கொழுப்பு புரதம் ( lipoprotein ) என்று அழைக்கப்படுகிறது. இவை இரு வகையானவை.

* குறைந்த – அடர்த்தி கொழுப்பு புரதம் ( low – densty lipoprotein – LDL )

இதை தீய கொலஸ்ட்டெரால் என்று அழைக்கிறோம். இது இரத்தக் குழாய்களில் செல்லும்போது அதன் உட்சுவர்களில் படிந்து அவற்றை கடினமாக்குவதுடன், அவற்றின் சுற்றளவையும் குறுகலாக்குகிறது.

இரத்தத்தில் இதன் அளவு

சராசரி அளவு -1.8 மில்லிமோல் / லிட்டருக்கு குறைவு

ஓரளவு குறைவு – 2.6 மில்லிமோல் /லிட்டருக்கு குறைவு

சுமாரான அளவு – 2.6 – 3.3 மில்லிமோல்/ லிட்டர்

லேசான உயர்வு – 3.4 – 4.1 மில்லிமோல் / லிட்டர்

உயர்வு – 4.1 – 4.9 மில்லிமோல் / லிட்டர்

அதிக உயர்வு – 4.9 மில்லிமோல் / லிட்டருக்கு மேல்

* உயர் – அடர்த்தி கொழுப்பு புரதம் ( high – density lipoprotein – HDL )

இதை நல்ல கொலஸ்ட்டெரால் என்கிறோம். இது இரத்தத்தில் உள்ள அளவுக்கு அதிகமான கொலஸ்ட்டெராலை சேகரித்து கல்லீரலுக்கு ( liver ) கொண்டுபோய் சேமித்து வைக்கிறது.

இரத்தத்தில் இதன் அளவு

போதுமானது – 1.7 மில்லிமோல் / லிட்டருக்கு குறைவு

லேசான உயர்வு – 1.7- 2.2 மில்லிமோல் /லிட்டர்

உயர்வு – 2.3 – 5.6 மில்லிமோல் /லிட்டர்

மிக உயர்வு – 5.6 மில்லிமோல்/ லிட்டருக்கு மேல்

 

 

* ட்ரைகிலிசரைட்ஸ் ( triglycerides )

இவை வேறு வகையான கொழுப்பாகும். உணவில் அதிகமான கேலோரி அல்லது வெப்ப அலகு ( calories ) இருக்க நேர்ந்தால் அது அப்படியே ட்ரைகிலிசரைட்ஸ் என்ற கொழுப்பாக மாற்றப்பட்டு கொழுப்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன.இவை உணவு உண்ணாத இடை வெளியில் தேவைப்படும் சக்திக்கு மீண்டும் வெப்ப அலகுவாக மாறி பயன்படுகின்றன.இந்த கொழுப்பு அதிகமானால் இருதயம் பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால் இரத்தப் பரிசோதனையின்போது இந்த கொழுப்பின் அளவும் பார்த்தாகவேண்டும்.

 

இதன் சராசரி அளவு – 1.7 மில்லிமோல் ( millimol ) /லிட்டர்

எல்லை அளவு ( borderline ) – 1.8 – 2.2 மில்லிமோல்

உயர்வான அளவு – 2.3 – 5.8 மில்லிமோல்

அதிக உயர்வான அளவு – 5.7 மில்லிமோலுக்கு மேலானது

கொலஸ்ட்டெரால் அளவைப பார்க்க இரத்தம் கொடுக்குமுன் 9 முதல் 12 மணி நேரமாவது வெறும் வயிறுடன் இருக்க வேண்டும்.

இரத்தத்தில் கொலஸ்ட்டெராலின் அளவை இதன்மூலம் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். காரணம் இதன் அளவு உயர்வாக இருக்க நேர்ந்தால், இருதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் காரோனரி தமனிகளில் அது படிந்து தடித்து அடைப்பை உண்டுபண்ணி இரத்த ஓட்டத்தை தடைபண்ணி மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.

 

கீழ்க் கண்டவைகள் இருதய நோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றன:

* இதற்குமுன் மாரடைப்பு உண்டானது

* கழுத்து பகுதியில் தமனி அடைப்பு

* கைகளில் அல்லது கால்களில் தமனி அடைப்பு

* நீரிழிவு நோய்

இவற்றுடன் கீழ்க்கண்ட ஆபத்து அறிகுறிகளில் ஏதாவது இரண்டு இருப்பின் மாரடைப்பு உண்டாகும் சாத்தியம் மிகவும் அதிகமாகிறது :

* புகைத்தல்

* உயர் இரத்த அழுத்தம்

* குறைவான நல்ல கொலஸ்ட்டெரால் HDL

* உயர்வான தீய கொலஸ்ட்டெரால் LDL

* பரம்பரையில் இருதய வியாதி

* வயது – 45 வயதுக்குமேல் ஆண்கள் , 55 வயதுக்குமேல் பெண்கள்

 

கொலஸ்ட்டெரால் அளவைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை .அவை பின்வருமாறு:

* உடல் பருமன் குறைத்தல்

* ஆரோக்கிய உணவு வகைகள் உட்கொள்ளுதல்

* உடற்பயிற்சி

* புகைத்தலை நிறுத்துதல்

* அளவான மது

 

இவருடன் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொலஸ்ட்டெரால் குறைக்கும் மருந்துகளையும் உட்கொள்வது இன்றியமையாதது.

( முடிந்தது )

Series Navigationநீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்அவசரம்