மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்

                                                        டாக்டர் ஜி.ஜான்சன்

கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி மண்ணீரலைத் தொட்டுக் கொண்டிருக்கும்.இது சுமார் 18 செ .மீ . நீளமும்,, சுமார் 100 கிராம் எடையும் உடையது.

இதில் இன்சுலின் ( Insulin ) என்ற இயக்கு நீரும் ( hormone ) சிறு குடலில் கொழுப்புகளை செரிமானம் செய்யும் பயன்கள் கொண்ட கணைய நீரும் ( Pancreatic Enzyme ) சுரக்கின்றன.

கணையம் நீரிழிவு வியாதியுடன் ( Diabetes ) நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பை செல்களுக்குள் செல்ல உதவுவது இன்சுலின். இதையே கணையம் உற்பத்தி செய்கிறது. இது குறைவு படுவதால்தான் நீரிழிவு நோய் உண்டாகிறது.

மது அருந்துவது கணையத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

கணைய வீக்கத்தை கணைய அழற்சி ( Pancreatitis ) என்கிறோம். பல்வேறு காரணங்களால் கணைய அழற்சி உண்டானாலும், மது அளவுக்கு அதிகமாக பல காலம் அருந்துவது முக்கிய காரணமாகிறது.

கணைய அழற்சியில் வயிற்று வலியுடன், இரத்தத்திலும் சிறுநீரிலும் கணைய நீர் அதிகம் காணப்படும்.

பித்த தொடர்புடைய நோய்கள் ( biliary diseases ) 50 சதவிகிதமும், மது அருந்துவதால் 20 சதவிகிதமும், காரணம் தெரியாமல் 20 சதவிகிதமும் கணைய அழற்சி உண்டாகலாம்.

கணைய அழற்சியை உண்டுபண்ணவல்ல சில காரணிகள் வருமாறு:

* மது

* பித்தப்பைக் கற்கள்

* கணையத்தின் தலைப் பகுதியில் புற்றுநோய்

* முன் சிறுகுடல் அடைப்பு

* சில மருந்துகள் உட்கொள்ளுதல்

* புட்டாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி

* இரத்தத்தில் அதிகமான கொழுப்பு

* இரத்தத்தில் அதிகமான கேல்சியம்

* கல்லீரல் செயலிழப்பு.

 

கணைய அழற்சியின் அறிகுறிகள்

* திடீர் கடுமையான வாயிற்று வலி. இந்த வலி வயிற்றின் மேல்பகுதியிலோ அல்லது வலது பக்கத்திலோ எழலாம். பெரும்பாலும் நிறைய உணவு அருந்திய பின்போ ( விருந்து ) அல்லது மது அருந்திய பின்போ 12 முதல் 24 மணி நேரத்தில் இந்த வலி உண்டாகலாம் .

* இந்த வலி தொடர்ந்து வலித்து தோள்பட்டைகள், முதுகு, வயிற்றின் கீழ் பகுதிகளுக்கும் பரவலாம்.

* குமட்டலும் வாந்தியும்.

* அதிர்ச்சி ( shock )

* வேகமான நாடி

* குறைந்த இரத்த அழுத்தம்

* இருதயப் படபடப்பு

* சிறுநீரக செயலிழப்பு

* விரைவான சுவாசம்

* திசு ஆக்ஸ்சிஜன் குறைபாடு ( hypoxia )

சில வேளைகளில் கணைய அழற்சியால் உண்டாகும் கடும் வயிற்று வலி மாரடைப்பு , பித்தப்பை அழற்சி போன்றவற்றால் உண்டாகும் வலியை ஒத்திருந்து குழப்பத்தை உண்டு பண்ணலாம்.

கணைய அழற்சியால் பித்தக் குழாயில் அழுத்தம் ( bile duct compression ) உண்டானால் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

 

கணைய அழற்சிக்கான பரிசோதனைகள்

* வயிற்றுப் பரிசோதனை – இதை மருத்துவர் மேற்கொள்வார். வலி உண்டான பகுதி, வீக்கம் முதலியவற்றை நிர்ணயம் செய்வார்.

* இரத்தப் பரிசோதனை – இதில் இரத்தத்தில் உள்ள கணைய நீர் ( serum amylase ) அளவு அறியப்படும். இதன் அளவு அதிகமாக இருப்பின் அது கணைய அழற்சி எனலாம்.

* சிறுநீரகப் பரிசோதனை – 24 மணி நேர சிறுநீர் சேர்க்கப்பட்டு அதில் கணைய நீரின் அளவு அறியப்படும்.

* எக்ஸ் -ரே – வயிறு, நெஞ்சு படங்கள் எடுக்கப்படும்.

* கதழ் ஒலி பரிசோதனை – ultrasound examination

* கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை – computed tomography ( CT Scan )

 

கணைய அழற்சிக்கான சிகிச்சை முறைகள்

கணைய அழற்சியால் உண்டாக்கும் அதிர்ச்சி ( shock ) , நுரையீரல் செயலிழப்பு ( respiratory failure ) போன்ற ஆபத்தான விளைவுகளால் உண்டான மரணங்கள் தற்போது குறைத்து வருகிறது. ஆரம்பத்திலேயே முறையான தீவிர சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுவதால் இது சாத்தியமானது.

* மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டபின்பு வாய்வழியாக உட்கொள்ளும் உணவு நிறுத்தப்பட்டு, இரத்தக் குழாய் வழியாக ( IV Drip ) செலைன் ( saline ) செலுத்தப்படும். வயிற்றினுள் குழாய் விடப்பட்டு அதன் வழியாக வயிற்று நீர் அகற்றப்படும்.இதன் மூலமாக வயிற்றினுள் இருந்து காற்றும் அகற்றப்படும்.வயிறு வீக்கத்தை ( உப்பல் ) இது தடுக்கிறது.

* வலி கடுமையாக இருந்தால் இரத்தக் குழாய் வழியாக பெத்திடின் ( Pethidine ) ஊசி மருந்து தரப்படும்.

* தடுப்பு முறையில் எண்டிபையாடிக் ( prophylactic antibiotic ) தரப்படும்.

 

கணைய அழற்சி உண்டாவதை தடை செய்ய முடியாத பல காரணங்கள் இருந்தாலும் , தடை செய்யக் கூடியது ஒன்று உள்ளது; அது மது அருந்துவதை நிறுத்துவது. குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடன் நிறுத்துவது மிகவும் முக்கியமானது.

மதுவால் இன்னும் பல உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன. அவற்றில் முக்கியமானது கல்லீரல். மதுவால் கல்லீரல் இறுக்கி நோய் ( cirrhosis liver ) உண்டாகி மரணமுற்றோர் ஏராளம்.

வயிற்றுப் புண், குடல் புண் போன்றவையும் மதுவால் ஏற்படலாம்.

வயிற்று வலி வந்தாலே மதுவை உடன் நிறுத்தி விடுவது மிகவும் நல்லது.

நோய்கள் வருமுன் காப்பது நல்லதுதானே?

” வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.” …- குறள் 435.

(முடிந்தது )

 

*

Series Navigationகல்யாணியும் நிலாவும்போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25