மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )


 
                                                                        

” ரூமேட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ” என்பதை நாம் ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் என்று கூறலாம். இது உடலின் சுய எதிர்ப்பு ( Autoimmune ) காரணத்தால் உண்டாகிறது. சுயஎதிர்ப்பு என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி உடலின் ஏதாவது ஒரு பாகத்தையே சுயமாக எதிர்ப்பதாகும். அப் பகுதியை உடலுக்கு கெடுதி தரக்கூடியது என்று தவறாக புரிந்துகொண்டு  அதை எதிர்ப்பதாகும். இவ்வாறு உடலுக்குள் ஒரு பகுதியில் போராட்டம் நடப்பதால் அப்பகுதி வீங்கி வலியை உண்டுபண்ணுகிறது. இந்த நோயில் உடலின் எதிர்ப்புச் சக்தி குறிப்பாக கைகால் மூட்டு எலும்புகளைத் தாக்குகிறது. இதனால் கைகளிலும் கால்களிலும் இரண்டு பக்கத்திலும் ஒரே மாதிரியான பாதிப்புகள் உண்டாகலாம்.
இந்த நோய் உலகில் 1 சதவிகித மக்கள் தொகையினரை பாதிக்கிறது. அதில் குறிப்பாக 30 வயதிலிருந்து 50 வயதுடையோரை இது அதிகமாகப் பாதிக்கிறது.

                                 ரூமேட்டாய்ட்  எலும்பு அழற்சி நோயின் தன்மைகள்

மரபணுவும் சுற்றுச் சூழலும் இந்த நோய்க்கு முக்கிய காரணங்கள். அவற்றில் சில:
* பெண்கள் –  ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாலியல் ஹார்மோன்களின் பங்கு இதில் உள்ளது என்று நம்பப்படுகிறது.
* குடும்பம் – குடும்ப பரம்பரையில் இந்த நோய் இருந்தால் அதன் வழித்தோன்றல்களிடையே இந்த நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
*. மரபணு – மரபணுக்கள் வழியாகவும் இந்நோய் தோன்றுகிறது.

                                                                  நோய் இயல்

மூட்டு எலும்புகளைச் சுற்றிலும் மூட்டு உறைச் சவ்வுப் படலம் உள்ளது.இது மூட்டு பாதுகாப்புக்கு பயன்படுவது. இந்த நோயில் இந்த சவ்வுப் படலத்தில் அழற்சி உண்டாகிறது. அதனால் அங்கு வீக்கம் உண்டாகிறது.இது நாளடைவில் கட்டியாக மாறி மூட்டு எலும்புகளில் புண் உண்டாக்கிவிடுகிறது. இது வலியை உண்டுபண்ணுகிறது

                                                                      அறிகுறிகள்

* மூட்டு வலியுடன், காலையில் எழுந்ததும் மூட்டுகள் இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வும்,துவக்கத்தில் உண்டாகும்.
* கைகளயும் கால்களிலும் விரல் மூட்டுகள் வீக்கமுறும்.
* மூட்டு செயலிழப்பும் மூட்டு நழுவுதலும் உண்டாகலாம்..
* இதுபோன்ற பாதிப்புகள் மணிக்கட்டு,முழங்கை,தோள்பட்டை, கழுத்து, முழங்கால், கணுக்கால் போன்ற மூட்டுகளுக்கும் பரவும்.
* மூட்டுக்குள் நீர் தேக்கம் உண்டாகியும் கடும் வலி  உண்டாக்கலாம்.
* மூட்டுப் பகுதியின் தசை நார்களையும் பாதிக்கலாம்.
* சில வேளைகளில் ஒரு மூட்டு மட்டும் வீக்கமுற்று கடும் வலியைத் தரலாம்.

                                                                இதர   அறிகுறிகள்

          *  பொது – காய்ச்சல், களைப்பு, உடல் எடை குறைவு
          * கண்கள் – வீக்கம் ,சிவந்துபோதல்
          * நரம்புகள் – முதுகுத் தண்டு நரம்புகள் பாதிப்பு , நரம்புகளில் அழற்சி
          * இரத்தம் – இரத்த சோகை, இரத்தக் கசிவு, மண்ணீரல் வீக்கம்,
          * நுரையீரல் – நீர் தேக்கம், சிறு கட்டிகள், தசைநார் வீக்கம்.
          * இருதயம் – நீர் தேக்கம், அழற்சி, வீக்கம்.
          * சிறுநீரகம் – கொழுப்பு படிதல், வலி .
          * இரத்தக் குழாய்- அழற்சி, காலில் புண்கள்,

                                                                                            பரிசோதனைகள்

          முக்கிய அறிகுறிகளான மூட்டு வீக்கம், மூட்டு வலி, காலையில் மூட்டு இறுக்கம், கட்டிகள் போன்றவற்றுடன், சில பரிசோதனைகளையும் வைத்து நோய் உள்ளதை உறுதிப்படுத்தலாம்.அவை வருமாறு:
          *  இரத்தப் பரிசோதனை –  ஈ.எஸ்.ஆர்., சி.ஆர்.பி. என்பவை உயர்ந்து காணப்படும்.
          *  இரத்தத்தில் சுய எதிர்ப்புச் சக்தியின் அளவு.உயர்ந்திருக்கும்.
          *  எக்ஸ்ரே பரிசோதனை – இதில் மூட்டு வீக்கம், மூட்டு எலும்புகளுக்குள் நடுவே இடைவெளி குறைவு, மூட்டு எலும்புகள் தேய்ந்துள்ளது, எலும்புகளில் துளை விழுந்துள்ளது போன்ற மாற்றங்கள் காணலாம்.
          * மூட்டு உறைச் சவ்வு நீர் பரிசோதனை – இதில் வெள்ளை இரத்த செல்களின் அளவு உயர்ந்திருக்கும்.

                                                                                             சிகிச்சை முறைகள்

          ரூமேட்டிக் மூட்டு அழற்சியை குணப்படுத்தக்கூடிய சிகிச்சை இல்லை. ஆனால் நோய் பரவுவதையும் வலியைக் குறைப்பதற்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.பாதிக்கப்பட்டுள்ள கைகளுக்கும் கால்களுக்கும் பயிற்சிகளும் தரப்படுகின்றன. இந்த சிகிச்சையில் ரூமேட்டிக் நோய் நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர், பயிற்சி வைத்திய நிபுணர் தொழில் பயிற்சி நிபுணர் ஆகியோரின் கூட்டு முயற்சி தேவைப்படும்.தற்போது உள்ள சில சிகிச்சை முறைகள் வருமாறு:

          * வலி குறைக்கும் மருந்துகள் – பல்வேறு வலி குறைக்கும் மருந்துகள் உள்ளன. மருத்துவர் கூறும் மருந்தை உட்கொள்ளலாம். ஆனால் இந்த வலி குறைக்கும் மருந்துகள் வலியை மட்டுமே குறைக்குமே தவிர, நோய் தொடர்ந்து பரவுவதைக் குறைக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.அதோடு இவற்றை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிற்றில் புண் உண்டாகும் ஆபத்தும் உள்ளது. ஆகவே இவற்றை உணவு உட்கொண்டதும்தான் எடுக்கவேண்டும்.
          * வீக்கம் குறைக்கும் மருந்துகள்- இவற்றை ஸ்டீராய்டு மருந்துகள் என்போம். இவை வீக்கத்தையும், மூட்டுக்குள் நீர் தேக்கத்தையும் துரிதமாக குறைக்கவல்லவை. ஆனால் நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் ஆபத்தான பக்க விளைவுகள் உண்டாகலாம்.இதை ஊசி மூலமும் மூட்டுக்குள் செலுத்தி உடனடி நிவாரணம் பெறலாம்.. அனால் அடிக்கடி இவ்வாறு செய்துகொண்டால் மூட்டு மேலும் வேகமாக பாதிப்புக்கு உள்ளாகலாம்.
           * ரூமேட்டாய்ட் எதிர்ப்பு மருந்துகள் – சலபாசேலசின் ( sulfasalazine ), மெத்தோட்ரெக்சேட் ( Methotrexate ) போன்ற மருந்துகளை மருத்துவரின் மேற்பார்வையில் பயன்படுத்தலாம்.
          ஆகவே இந்த நோயை முழுதாக குணப்படுத்த முடியாவிட்டாலும் தகுந்த சிகிச்சை மூலமாக ஓரளவு கட்டுப் படுத்த முடியும்.
          ( முடிந்தது )

                                                            

3 Attachments

Preview attachment alisonoleft.jpg

Preview attachment angela2.jpg

 

Series Navigationஊர்வலம்ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு