மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35

Spread the love

40.     மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. கடந்த சில தினங்களாக தெற்கே யுத்தமென்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் கொலைகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும், காட்டு விலங்குகளைப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக வெட்டிமடிவதற்கும் ராஜகிரிபோல, தில்லை கூத்தபிரான்போல, காவற்காட்டு மரங்களைப்போல இவளுமொரு ஊமை சாட்சி. பசியால் வாடும் வீரர்கள் மீது கடும் வெயிலும் தாக்குதலை நடத்துகிறது. வீரர்களில் பலர் கூர் மழுங்கிய வேல்களை ஏந்தியிருந்தனர்.  உடைந்த வாள்களைக் கொண்டு சண்டையிடுகிறார்கள். இறப்பைத்தவிர அவர்களுக்கு ஓய்வுகளில்லை. ஓயாமல் உறங்காமல் போரிட்டு மாய்கிறார்கள். இரவில்கூட எதிரிகளின் முகங்களையும், இறந்து பேய்களான வீரர்களின் நடமாட்டத்தையும் வேறுபடுத்ததெரியாமல் மனிதர்கள் பித்தர்கள்போல வாளைச்சுழற்றுவதையும் பார்க்கிறாள். செத்த உடல்களை யானைகளும் குதிரைகளும் துவம்சம் செய்ய வண்டல்மண் பிரதேசம் இரத்தத்தில் தோய்ந்து செம்மண் வெளியாய் சிவந்திருக்க்கிறது. காவிரி குருதியாகக் கொப்பளித்து ஓடுகிறது. கல்லணை இரத்த சமுத்திரமாக தளும்புகிறது. பல்லிடுக்கில் நாக்கும், பிதுங்கிய கண்களுமாக மனித தலைகள், ராட்சத மரவட்டைபோல வெட்டுண்ட ஆனைகளின் தும்பிக்கைகள், ஈறுகவ்விய பற்களும் ஈக்களுமாக குதிரை தலைகள். அவிழ்ந்த கூந்தலும், கையில் தீவட்டியும் ஏந்தியபடி, ஐயா என மகனைப் பார்த்தீர்களா? அண்ணா என் ஒரே மகனை பார்த்தீர்களாவென கேட்டவண்ணம் உயிரற்ற உடல்களையும் முனகும் குரல்களையும் தாண்டிச்செல்கிறாள்.

செண்பகம் உறக்கம் கண்டு ஒருகிழமைக்கு மேலிருக்கக்கூடும். இன்றைய தினம் என்ன நாளென்று கூட நினைவுபடுத்த முடியாமல் சோர்ந்திருந்தாள். விழித்திருக்கிறோமா உறங்குகிறோமா என்பதைக்கூட சன்னலின் மறுபக்கத்தில் பூனைபோல நடமாடும் அடிமைப்பெண்களின் நிழற் சலனங்களைக்கொண்டு அனுமானிக்கவேண்டியிருந்தது. இரையை எதிர்பார்த்து கரை சேர்ந்த முதலைபோல தலயணையில் முகம்புதைத்திருந்தாள். நீர் அருந்த துறைக்கு அவள் எதிர்பார்க்கும் விலங்கு வருமென்பதை அறிவாள். கடுமையான பசியுடன் கண்களில் கொலைவெறியைத் தேக்கி இரையை அடித்து கால்களிற் இடுக்கி, எலும்பும் சதையுமாக நாயக்கரை விழுங்க துஷ்டதேவதைபோல அவள் தயார். விலங்கு கால் ஊன்றுமிடம், சேரற்ற இறுகிய மணற்பரப்புடன் கூடிய கரை, தீ நாக்கு நெளியும் கண்களால் நீர்ப்பரப்பை முழம்போடத்தெரிந்த விலங்கின் ஞானம், தலைதாழ்த்தியதும் காத்திருந்ததுபோல நாசியில் சீறிக்கொண்டு வெளிப்படும் அனற்காற்று, காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அஞ்சிவிலகும் நீர்ப்பாசிகள், சிவந்த ஈறுடன் கூடிய பற்களின் கட்டுக்காவலை மீறிக்கொண்டு வெளிப்படும் சதைப்பிண்டமென விலங்கின் அனிச்சைசெயல்களை முழுவதும் அறிவாள். எல்லோரும் சொல்வதுபோல ஊழ் வினையின் பயனா? உள்மனம் இடித்துரைப்பதுபோல சித்ராங்கிக்கு இழைத்த துரோகமா? தங்கள் சங்கடங்களைச் சொல்லி அழும் மக்களின் குறைகளை இவள் ஆசீர்வதித்துக்கொடுக்கும் திருநீரும், குங்குமமும் நிவர்த்திசெய்கிறபோது, இவள் தலைவலி மாத்திரம் தீராமல் குடைச்சல் கொடுப்பதேன்.

 

மரணக்கிணற்றில் பச்சைப்பிள்ளையுடன் சாகக்கிடந்தவளை கொள்ளிடத்து பாளையக்கார இளைஞனும், அந்நிய சமயத்தான் ஒருவனும் காப்பாற்றி ராஜகுருவிடம் சேர்ப்பித்த அன்றிரவும் இதுபோலவே முன்னிரவு இரண்டு நாழிகைக் கடந்திருந்த வேளையில் விளக்கை அணைக்கலாமா என்று கேட்ட அடிமைப்பெண்ணிற்குப் பதில் சொல்வதுபோல, ‘கொஞ்சம் பொறு’வென்று தெருக் கதவருகே கரகரப்பானதொரு குரல் கேட்டது. அஞ்சி கதவுக்குப்பின்னே ஒளிந்த அடிமைப்பெண்ணை சமாதானப்படுத்திவிட்டு, கைவிளக்குடன் எட்டிப்பார்த்த செண்பகம் வந்திருந்த மனிதர் அரசாங்கத்தின் முக்கியஸ்தரென்று தோற்றத்தைக்கண்டு முடிவு செய்தாள். உள்ளே வந்தவர் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நேரிடையாகவே பேசினார். தமது தமக்கைக்குப் பிறக்கவிருக்கும் சிசு ஆணெனும் பட்சத்தில் விஜயநகரமன்னர் வெங்கடபதியின் மூத்த தாரத்தின்வசம் ஒப்படைப்பதெனவும், அவள் பின்னர் தனக்குப்பிறந்த குழந்தையென அரசரை நம்பவைத்து விஜயநகர பேரரசுக்கு அவனை வாரிசாக்கும் திட்டத்துடனிருந்ததாகவும், பிறந்தது பெண்மகவென்பதால் செண்பகத்தின் உதவி கேட்டுவந்திருப்பதாகவும் தெரிவித்தார். அநாதைபோல பிறந்த தன் புத்திரனுக்கு இப்படியொரு அதிர்ஷ்ட்டம் வீடு தேடிவந்து கதவைத் தட்டுமென செண்பகம் ஒருபோதும் நினைத்ததில்லை. “ஐயா எனக்கு யோசிக்க அவகாசம் கொடுங்கள்”, என்கிற பதிலைத் தராமல், உடனே சம்மதித்தாள். இராஜகுருவிடம்  தெரிவித்த சம்மதத்தின் பலனை இரண்டொருதொரு தினங்களில் கிருஷ்ணபுரம் அரசாங்கம் வழங்கிய ராஜமரியாதைகளும், சன்மானங்களும் தெரிவித்தன. விஜயநகர சிற்றரசர்களிலேயே ஜெகராயர் வலிமையானவரென்றும், வருடத்திற்கு அறுபதினாயிரம் பொன் வருவாயையும், படையில் இருபதாயிரம் வீரர்களையும் கொண்டுள்ள ஜெகராயர் வெகு எளிதாக சிக்கமநாய்க்கனுக்கு முடிசூட்டிவிடமுடியுமென இராஜகுருவும், கிருஷ்ணப்ப நாயக்கரும் கூறியதை நம்பாமலிருக்கமுடியவில்லை.

 

வெகு காலத்திற்குப்பிறகு நேற்றிரவும் விளக்குகளை அணைப்பதற்கு முன்பாக இராகவ ஐயங்கார் வந்தார். அவசரம் கருதி அகால வேளையில் தொந்தரை செய்வதாகக்கூறி உள்ளே நுழைந்தவர் நடந்ததனைத்தையும் விளக்கிச்சொன்னார். கோவலன் மரணச்செய்தியை சுமந்துவந்த மாதரியை இராஜகுருவின் பேச்சும் செயலும் நினைவூட்டின. போகும்போது கிருஷ்ணப்ப நாயக்கருக்கும், செண்பகத்தின் புத்திரனுக்கும் கிரகம் சரியில்லையென்பதையும் தெரிவிக்காமல் போகவில்லை. எவருக்கு என்ன இருணமோ அதுதானே வாய்க்கும். ஏழைப்புலவன் மகள் இந்திரலோகத்திற்கு ஆசைபட்டது பெரும் தவறு. எத்தனை கனவுகள், எவ்வளவு திட்டங்கள். ஒவ்வொரு கல்லாகப் பார்த்து மயாசுரன் சூட்சமத்துடன் எழுப்பிய மாளிகை மணல்வீடுபோல இடிந்து விழுந்திருக்கிறது. நினைவிற் தூபமிட துகள்கள்கூட மிஞ்சவில்லை.

 

சம்பவங்கள் அனைத்ததுமே இவள் நினைத்ததுபோல வேலூரில் நடந்திருக்கிறது. கிருஷ்ணபுரத்தில் உலவும் வதந்திக்கும் உண்மையில் நடந்ததற்கும் தொடர்பில்லை. மன்னர் வெங்கடபதி இறக்கும் தறுவாயில் வாரிசு என்று அறிவித்த ஸ்ரீ ரங்கரை பதவிலிருந்து இறக்கி அவ்விடத்தில் சிக்கம நாய்க்கனை அமர்த்த மன்னரின் மூத்த மனைவி வையாம்பிகாவும் அவள் சகோதரர்களும் திட்டமிட்டே காய்நகர்த்தியிருக்கிறார்கள். புதிய மன்னர் தளவாய்களில் சிலரை பதவிலிருந்து விலக்க அவர்கள் ஜெகராய சகோதரர்களுக்கு வேண்டியவர்களாக இருக்கவே, காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களைப்போலவே புதிதாய் பட்டத்திற்குவந்த மன்னரிடம் வெறுப்புற்றிருந்த வேறுசில முக்கிய சிற்றரசர்களுடன் இணைந்து முதலில் ஸ்ரீ ரங்கர் வெங்கடபதிபோல அறவீடு வம்சத்தவரல்ல என்ற வதந்தியைப் பரப்பி, சிக்கம நாய்க்கனுக்கு பட்டம் சூட்டுவதே முறையென்று சொல்லிபார்த்திருக்கிறார்கள். பலன் பூஜ்யமென விளங்கிக்கொண்டதும் ஜெகராயர் தமது படையுடன் அரண்மனையைச் சூழ்ந்திருக்கிறார். முதல் வாசலில் ஆயிரம்வீரர்களை நிறுத்திவிட்டு, ஆயிரம்பேர்கொண்ட மற்றொரு படையை பிறவாசல்களில் காவலுக்கு நிறுத்தியிருக்கிறார். புதிய மன்னரை சிறைவத்து; தாம் சொல்வதுபோல நடந்துகொண்டால் உயிருக்குப்பிரச்சினையில்லையெனக் கூறியிருக்கிறார். அவர் வைத்த நிபந்தனை உடனடியாக சிக்கம நாய்க்கனை மன்னராக அறிவிக்க வேண்டுமென்பது. வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்ததுபோல எச்சம நாய்க்கன் காரியத்தைக் குட்டிசுவராக்கியிருக்கிறான். இவ்வளவிற்கும் அவனிடமிருந்த வீரர்கள் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டாதென்கிறார்கள். புதிய மன்னருக்கும் அவன் குடும்பத்தாருக்கும் ஜெகராயரால் ஆபத்திருக்கிறதென்பதை எச்சம நாய்க்கன் அறிந்திருக்கவேண்டும். அவர்களைக் காப்பாற்ற வண்ணானொருவன் துணைகொண்டு அழுக்குப்பொதியில் வைத்து ஸ்ரீ ரங்கரின் இளையமகனைக் காப்பாற்றி இருக்கிறான். ஜெகராயன் சிறிது அவசரப்படாமல் இருந்திருக்கலாம். எச்சம நாய்க்கன் தயவால் ஸ்ரீ ரங்கர் இளைய மகன் காப்பாற்றப்பட்டுவிட்டான் என்ற கோபத்தில், நிதானமின்றி மன்னரையும் அவர் குடும்பத்தினரையும் கொன்றிருக்கிறான்.  இப்படுகொலை ஜெகராயனுக்கும் சிக்கம நாய்க்கனுக்கும் எதிரான சூழலை விஜயநகர அரசாங்கத்தில் உருவாக்கியிருக்கிறது. நேற்றுவரை ஜெகராயனுக்கு தோள்கொடுத்தவர்கள் எச்சம நாய்க்கனோடு சேர்ந்தார்கள். ஜெகராயனும், சிக்கமனும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள காட்டில் ஒளிந்துகொள்ள வேண்டியதாயிற்று.

 

எச்சம நாயக்கன் ஜெகராயன் கூட்டத்தை ஒழித்தாலன்றி பிரச்சினகள் தீராதென முடிவெடுத்திருக்கவேண்டும். தமது மைத்துனன் தல்மையில் ஒரு படையைத் தெற்கே அனுப்பியிருக்கிறான். கல்லணைக்கருகே தோப்பூரில் நடந்த யுத்தத்தில் எதிர்பார்த்ததுபோலவே இரு அணிகளும் மோதிக்கொண்டன: மதுரை, கிருஷ்ணபுர நாயக்கர்கள் ஜெகராயர் அணி. தஞ்சை ரகுநாத நாயக்கர் இறந்த வெங்கடபதிக்கு ஏற்கனவே விசுவாசமாக நடந்துகொண்டவர் அதுவும் தவிர வெங்கடபதி தமது வாரிசென்று அறிவித்த அவரின் சகோதரர் மகனும், ஜெகராயனால் கொலையுண்ட ஸ்ரீ ரங்கரின் பால்ய நண்பர். எனவே எச்சம நாய்க்கருடன் அவர் கைகோர்த்துகொண்டார். மதுரை நாயக்கர் எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க கல்லணையை உடைத்திருக்கிறார், இருந்தும் போரின் முடிவில் மதுரை முத்துவீரப்ப நாயக்கரின் படைகள் தஞ்சை நாயக்கரிடம் தோற்றன. தகவலறிந்த ஜெகராயர் தமது படைகளுடன் தஞ்சையை நோக்கி முன்னேற கோபமுற்ற ரகுநாதநாயக்கர் நடத்திய தாக்குதலில் ஜெகராயரும் அவர் கூட்டாளிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மதுரைநாயக்கரை கைதுசெய்து தஞ்சை நாயக்கர் முன் நிறுத்தினார்களாம், இரகுநாதர் அவரை மன்னித்திருக்கிறார்.  ஜெகராயர் சகோதரர் எத்துராஜர், கொள்ளிடத்து சோழகன், கிருஷ்ணப்ப நாயக்கர் படைகளைக் கூட்டுசேர்த்துக்கொண்டு தஞ்சைநாயக்கர்மீது கொள்ளிடத்தருகே தாக்குதல் நடத்தப்போவதாக செய்தி.

 

– “இந்த யுத்தமேனும் நமக்குச்சாதகமாக முடியட்டுமென பிரார்த்தனை செய், கிருஷ்ணபுரத்தில் நாளை எதுவும் நடக்கலாமென்கிற பயப்பிராந்தியை இராஜகுரு செண்பகத்தின் மனதில் விதைத்துவிட்டுச்சென்றிருக்கிறார். அவளால் என்ன நடக்கப்போகிறதென்பதை உத்தேசமாக ஊகிக்க முடிந்தது. தஞ்சை இரகுநாதர் நாயக்கர் புத்திசாலி, அவர் கிருஷ்ணப்ப நாயக்கரல்ல.

41.    செண்பகம் தாம் எழுதிவரும் கிருஷ்ணமணி தீபிகையைப் புரட்டினாள் 41வது பிரகரணத்தை எழுதினால் நூல் முடிந்தது. நடந்த யுத்தம் மட்டுமல்ல இனி நடக்கவிருக்கும் யுத்தத்தின் முடிவுகளையும் அவளால் ஊகிக்க முடிந்தது. கிருஷ்ணப்பநாய்க்கர் கல்லடிபட்டபட்ட நாய்போல வாலைச்சுருட்டிக்கொண்டு உடலைக்குறுக்கிக்கொண்டு பின்காலை உயர்த்தி, உலர்ந்த விதைகொட்டைகள் தெரிய ஓடிவருவார்.

பின்னிரவு தொடங்கி இரண்டு நாழிகை கழிந்திருக்கும். கதவைத் தள்ளித் திறக்கும் ஆளரவம்கேட்டு செண்பகம் விழித்தாள். நிலாவொளியை, சாளரத்தை மறைத்துத் தொங்கும் மெல்லிய திரை அசைத்தது. கதவருகே விழுந்திருந்த கையளவு வெளிச்சத்தில் பெருச்சாளிகள்போல இரண்டு கால்கள். திடுக்கிட்டு எழுந்தவள்.

– யாரெங்கே? – என்றாள்

– மெதுவாகப்பேசு, கிருஷ்ணப்பன் வந்திருக்கிறேன். தொண்டைகம்மியிருந்தது. நாயக்கர் கோப்பப்படும் நேரங்களைத் தவிர்த்து பிறநேரங்களில் பெண்குரல் சாயலில் தொனிக்கும்.

– வாருங்கள்! உங்களை எதிர்பார்த்தேன்.

– உறங்கியவளை எழுப்பிவிட்டேனா?

– இல்லை விழித்திருந்தவளை எழுப்பி இருக்கிறீர்கள்.

– கோபமா?

– கோபமா? எனக்கா? கலகலவென்று நகைத்தாள்.

கிருஷ்ணப்ப நாயக்கருக்கு எச்சம நாயக்கன் நகைப்பே தேவலாம் போலிருந்தது. சிரிப்பு செண்பகத்திற்குரியதல்ல. அது கமலக்கண்ணியின் சிரிப்பு. அச்சிரிப்பின் பேதத்தை அறிந்தவர் இராகவ ஐயங்கார் ஒருவர்தான். “மரணக்கிணற்றிலிருந்து காப்பாற்றி கொள்ளிடத்து வாலிபனும், பறங்கியனும் அழைத்துவந்தது பிணத்தை அல்லவேயென நாயக்கரிடம் வெளிப்படையாகவே ஒரு முறை கேட்டவர் அவர். மனதிற்குள் அச்சம்பவத்தை நினைவு கூர்ந்ததும், உடல் அச்சம்பவத்தை எதிர்கொண்டு நடுங்கியது.  சாளரத்தின் வழியே விசுறுவதுபோல காற்று உள்ளே நுழைந்தபோதும் நெற்றியிலும் பிடரியிலும் வேர்த்தது.

– ஏன் நிற்கிறீர்கள். அமருங்கள்.

கட்டிலருகே போட்டிருந்த ஆசனத்தைக் காட்டினாள். அவர் அமைதியாக சென்றமர்ந்தார். தோளிற்கிடந்த உத்தரீயத்தைக்கொண்டு வேர்வையை ஒற்றி, அதன் ஒரு முனையை இடது கையிலிருத்தி அவளை கம்பீரமாகப் பார்த்தார். அவர் நினைப்பிற்கு மாறாக நிலவொளிக்கு முதுகைக் காட்டிக்கொண்டு இருட்சரன்போல அமர்ந்திருந்தார். நாயக்கரிடம் கண்ட இந்த நிஜத்திற்கும் அவர்நினைப்புக்குமான முரண் செண்பகத்தின் உள்மனதில் ஏளனக் குமிழ்களாக புறப்பட்டன. உதடுகளில் கண் சிமிட்டும் நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெல்லிய இழைகளாக அவை கன்னக்குழியிற் குதித்து மறைந்தன. கிருஷ்ணப்ப நாயக்கரின் மௌனம் செண்பகத்திற்கு எரிச்சலை தந்திருக்கவேண்டும்:.

– எங்கோ கிடந்தவளுக்கு உயிர்பிச்சை அளித்து உப்பரிகையில் அமர்த்தினீர்கள், நாளை மீண்டும்  அவளை தெருவில் வீசலாம், யார் கண்டது.

– இல்லை செண்பகம் நீ கோபத்திலிருக்கிறாய். எதிரிகளுடனான யுத்தம் முடிந்தபாடில்லை. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைத் தவிர வேறு எவருடனும் உரையாடுவதற்கு சாத்தியமில்லை என்கிற இந்நெருக்கடியான சூழ்நிலையிலும் தேடிவந்திருக்கிறேனென்பதை நீ உணர்ந்தவளாக இல்லையென்பதுதான் மனதிற்கு சஞ்சலத்தைத் தருகிறது.

– சிக்கமன் எங்கே? என் மகன் எனக்கு வேண்டும். மன்னருக்கு அழகு, செய்தசத்தியத்தை மீறாமலிப்பது. என்னையும் என்மகனையும் இதுநாள்வரை ஏமாற்றியதுபோதும். இனியும் உம்மை நம்ப நான் தயாரில்லை.

– சிக்கமன் என்னவானானென்று தெரியவில்லை. ஜெகராயர் அவன் பாதுகாப்புகருதி எங்கேனும் எங்கோ ஒளித்துவைத்திருக்கலாம். ஜெகராயர் சகோதரர் எத்துராஜருக்கு அதுபற்றிய உண்மைகள் தெரிந்திருக்கும். அதுவரை சிறிது பொறுமையாயிரு.  ஒன்றிரண்டு சண்டைகளில் எதிரிகள் ஜெயித்திருக்கலாம், ஆனால் இறுதியில் வெற்றிபெறப்போவதென்னவோ நாங்கள்தான். மீண்டும் சிக்கமனை விஜயநகர சிம்மாசனத்தில் அமர்த்தாமல் நாங்கள் ஓயப்போவதில்லை.

– உமது போர்த்தந்திரமும் வாள் சுழற்றும் ஆற்றலும் அறிந்தவளென்பதால்ந் நம்பிக்கையில்லை. இதென்ன பார்த்தீர்களா? குறுவாள். இத்தனை நாள் நான் உயிரோடிருந்தது யாருக்கென நினைக்கிறீர். அவனும் இல்லையென்றானபிறகு இனி வாழ்ந்தென்ன ஆகப்போகிறது.

– அவசரப்படாதே, எத்துராஜரிடவ் பேசுவதற்கு போதியசந்தர்ப்பங்கள் அமையவில்லை. இரண்டொருநாட்களில் உண்மையென்னவென்று தெரிந்துவிடும்.

– அந்த உண்மை சிக்கமனை அழைத்துவரவேண்டும், அதற்கு சாத்தியமில்லையெனில் இங்கே வரவேண்டாம். அநேகமாக நானும் உயிரைவிட்டிருப்பேன்.

– இதுதான் உன் முடிவா? கிருஷ்ணமணி தீபிகையின் கதி.

– அதைப்பற்றி இப்போதென்ன பேச்சு. சிக்கமனை என் கண்ணிற்காட்டுங்கள் பிறகு பேசுவோம்.

– அதுவரை நூலை எங்கே என்னசெய்வதாய் உத்தேசம்?

– நான் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டால், நூல் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. சாமர்த்தியமிருந்தால் தேடி கண்டுபிடியுங்கள்.

– யுத்தபிரச்சினைகளால் எனது சரீரமும் மூளையும் கொதிப்படைந்து கிடக்கிறது. அவைகளை குளிர்விக்க உன்னால் தான் முடியும். இருவரும் உறங்கலாமா?

– கதவு திறந்திருக்கிறது, நீங்கள் புறப்படுங்கள்.

– செண்பகம் உனக்கு திமிர் அதிகம். யாரிடம் பேசுகிறாய் என்பதை யோசித்துதான் பேசுகிறாயா?

– நான் யோசித்துதான் பேசுகிறேன், நீங்கள்தான் நான் யாரென்பதை பல நேரங்களில் மறந்து போகிறீர்கள்.

– விளங்கவில்லை.

– நான் செண்பகமில்லை, கமலக்கண்ணியெனச்சொல்லவந்தேன். இடிமுழக்கமிட்டு அவள் சிரித்தது அன்றிரவுக்குப்பிறகும் பல நாட்கள் மலைகளில் எதிரொலித்தன.

‘(தொடரும்)

———————————————————

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22மாமியார் வீடு