மாய க்குகை

Spread the love

அந்தக்குகை

அப்படியொன்றும்

இருட்டானதாக இல்லை

தொலைதூரத்திலிருந்து

பிடித்து வந்த

நட்சத்திரங்களை

கயிறுகளில் கட்டி

தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள்.

மின்மினி  வெளிச்சத்தில்

குகையின் பிரமாண்டம்

பயமுறுத்தியது.

நடக்க நடக்க

நீண்டு கொண்டே போன குகையில்

வெளியை செல்ல  வாசல்

எங்காவது இருக்கும்.

ஒருவேளை யாரும் திறக்காமல்

பூட்டியே இருப்பதால்

கதவுகளும் சுவர்களாய்

காட்சியளிக்கலாம்.

புறப்பட்ட இடத்திற்கே

வந்து விட்டதால்

பெருமூச்சு விடும் கால்கள்

இடறி விழுந்த வேகத்தில்

திறந்தது கதவு.

கண்ணைக்கூசும் வெளிச்சம்

கடலலை சப்தம்

காற்றாடி அறியாத

காற்றின் தரிசனம்

கையூன்றி எழுந்து நிற்பதற்குள்

நட்சத்திரங்கள்

பறந்து போயின.

குகை எங்கும்

இருள் கவிந்தது.

ஒற்றைக்கண் அரக்கன்

பக்கத்தில் வருகிறான்.

பைங்கிளி யாய்

அவன் தோள்களில் நான்.

சிறகுகளின்றி.

Series Navigationநவீன அடிமைகள்தண்ணி மந்திரம்