மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…

Spread the love

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

6235              புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரியின்(1968) முதல் கவிதைத் தொகுப்பு ‘சங்கராபரணி’ இதில் 50 கவிதைகள் உள்ளன. புதிய சிந்தனைகள் வழி அழகான படிமங்கள் உருவாக்குதல், மொழியை லாவகமாகக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கவை. எனினும் இருண்மையும் அமைந்துள்ளது. கருப்பொருள் தேர்வில் வித்தியாசம் காணப்படுகிறது.

 

‘தெய்வ உடல்’ வித்தியாசமான– நான் அறிந்தவரை எந்தப் பெண் கவிஞரும் கையாளாத கருப்பொருள்.– பூப்பெய்திய ஒரு பெண் தனியே படுத்துறங்கும் முதல்நாள் அனுபவம் இதில் பேசப்படுகிறது. கனவுத் தன்மையும், புதிய படிமமும் காணப்படுகின்றன.

 

தலைகீழ் விருட்சமாக

உடல் தழைத்துக் கிளை பரப்பி

வேர்கள் மேகத்தை உறிஞ்சி ஜீவிக்கின்றன.

 

புதிய உணர்வுகள் அழகான படிமம் வழி முன் வைக்கப்படுகின்றன. பிள்ளைப் பருவம் முடிந்து அதற்கு முற்றிலும் உடலும் மனமும் கொள்ளும் மாறுதல் ‘தலைகீழ் விருட்சம்’ என்று உவமிக்கப்படுகிறது.

 

உடல் தழைத்தல், கிளை பரப்புதல், வேர்கள் மேகத்தை உறிஞ்சுதல் போன்றவை பல்வேறு மனநிலைகளின் குறியீடாக அமைந்துள்ளன. இரவில் அந்தப் பெண் கனவிலிருந்து விழிக்கிறாள்.

 

எலி கீறிய காலில் குருதி கசிகிறது

கரப்பான்கள் எகிறிப் பறக்கின்றன

முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை

எப்படிப் பார்ப்பது?

 

பழைய வீடு. அதில் எலி, கரப்பான்களின் நடமாட்டம் வழக்கமானது. முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகள் என்ற குறிப்பு அச்ச உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இதுவரை கவிதையில் காணப்பட்ட பூடகத் தன்மை ஆயாவின் சொற்களால் உடைபடுகின்றது.

 

வீட்டுகுள்ளிருந்து அம்மாவின் குரல்

‘என்ன பாப்பா’

‘இப்பத்தான் தனியா படுக்கிறாள்

மாசாமாசம் பழகிடும்’ என்றாள் ஆயா

கவிதை கீழ்க்கண்டவாறு முடிகிறது.

 

இருளில் கரைந்து கொண்டிருக்கிறது

பஞ்சபூத உடல்

 

விடியற்காலை தூக்கம் இளம் வயதினருக்கு ஒரு வரம். அந்தப் பெண் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் இருக்கிறாள். இக்கவிதையில் வெளியீட்டு முறை அழகாக அமைந்துள்ளது. கவிதையின் தலைப்பு ‘தெய்வ உடல்’. இது எப்படிப் பொருந்தும்? ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று கண்ணதாசன் சொன்னதுபோல், பெண், குழந்தை பெற்றுத் தரும் தகுதி உடையவள் என்பதால் ‘தெய்வ உடல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதோ?

 

மெல்லிய பூடகத் தன்மையுடன் கருப்பொருள் சற்றே ஆழத்தில் உறைந்து நிற்கும் கவிதை ‘மந்திர கணம்’ எனவே இது மந்திரம் போல் இருக்கிறது. கரு உருவாதல் பற்றிப் பேசப்படுகிறது எனலாம்.

 

உச்சரிக்கப் படாத ஒரு சொல்லாய்

நீ இருந்தாய்

உன் இருப்பின் பிரமாண்ட

பேரமைதியில் அதிர்வுற்று

உன்னை விளித்த அக்கணம்

உன் மௌனக் கார்வை

உன்னை சிருஷ்டிக்கும்

மந்திரமெனில்

காலம் மனம் கொள்ளும்

இக்கவிதையில் சொற்செட்டு கச்சிதமாக அமைந்துள்ளது.

 

‘வார்த்தையின் வாடை’ காதல் சார்ந்த மென்னுணர்வுகளை கவிதைக்குச் சமமான அழகான உரைநடையில் தருகிறது. மொழிநடையில் நுணுக்கம் இயல்பாகத் தலைகாட்டி அழகூட்டுகிறது.

 

புத்தக அடுக்கில் விரல்கள் நடுங்கி

பதறும் கண்களால்

என்ற சொல்லாட்சி நயமானது.

 

மூடிய நூலகத்தின் வாயிலில் நிற்கும்

விழிகளை முதுகில் சுமந்தபடி

என் இருப்பிடம் மீள்கிறேன்.

 

என்ற வரிகளில் அசாதாரணப் படிமம் ஒரு நன்முத்திரையாய் விழுந்து சிறப்பிக்கிறது.

 

இருள் அப்பி மூடிய அறைக்குள்

கதறும் மௌனம்

என்பதில் கவிதை சொல்லியின் மனப் புழுக்கம் அப்படியே வாசகன் மனத்திற்கு இடம் மாறுகிறது.

 

கடக்கும் பாதையில் உனது உடம்பின் வாடை

பின் தொடர நூலகம் அடைகிறேன்

என்பது காதலின் இனிமையை மனச்சுவரில் ‘போஸ்டர்’ அடித்து ஒட்டிவிட்டது.

 

‘உன் நினைவுகள் கரைந்து கொண்டிருக்கும் மாலைப் பொழுதில்’ என்று சொல்லும் பெண், ‘நீ பேசினாலும் உன்னிடம் நான் பேசிவிடமாட்டேன்’ என்பது பெண்களுக்கே உரிய ‘பிகு’! ‘வார்த்தையின் வாடை’ என்ற கவிதைத் தலைப்பு புதுமையானது.

 

நூலகம் எரிந்து கொண்டிருக்கிறது

கோடானு கோடி அலறல்கள்

அடைபட்ட உள்ளிலிருந்து

 

என்னும் முத்தாய்ப்பு தொனிப்பொருள் தருகிறது. பல காதலர்களின் மனத் தவிப்பு பகிர்ந்தும் பகிரப்படாமலுமாய் இருக்கிறது என்பது குறிப்பாகும்.

 

புத்தகத் தலைப்பான சங்கரபரணி ஆறு பற்றி இரண்டு கவிதைகள் உள்ளன. முதல் கவிதையில் ஆற்றில் குளித்து மகிழ்ந்த – உயிர் பிழைத்த சம்பவம் உட்பட–பால்ய கால நினைவுகள் பட்டியலிடப்படுகின்றன. விலங்கு மீன் எனப் பாம்பைப் பிடித்தது ரசமானது.

 

மொட்டை துளிர்த்த மயிர் பற்றி

சுழலிலிருந்து இழுத்துப் போட்டார்கள்

சாணி பொறுக்கும் வச்சலா அக்காவும்

சரளா அக்காவும்

 

என விபத்து குறிக்கப்படுகிறது. இரண்டாவது கவிதை ‘சங்கராபரணி நான் வளர்ந்த ஆறு’ ஆற்றைப் பெண்ணாக பாவித்து வியந்து போற்றுவதே கருப்பொருளானது.

 

எனது மடியில் கை கால் உதைத்துத்

தளும்பிக் கொண்டிருக்கிறாள்

 

என்பது ஆறு நேசமிக்க குழந்தையாய்ப் பார்க்கப்படுகிறது.

 

வயலைத் தாண்டி ஓடிச்சென்று பார்த்தேன்

புதிய உடலுடன் ஓடிக்கொண்டிருந்தது எனது ஆறு

பால் மணத்துடன்

 

எனக் கவிதை முடிகிறது.

‘பால் மணத்துடன்’ என்ற சொற்கள் சிறப்பான பொருள் தருகின்றன. இந்த ஆர்வம்தான் பின்னாளில் ‘நீரின்றி அமையாது உலகு’ எழுதத் தூண்டியிருக்குமோ?

 

‘உடலுக்குள் ஒரு காடு’ ஓர் இருண்மைக் கவிதை. குறியீடுகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருப்பொருளை உணர முடியவில்லை.

 

சிறு வார்த்தை முளைக்க

தழைக்கும் பச்சை

வெளி நிறைக்க

கிளையில் கூடுகட்டும் பறவைகள்

என்ற வரிகளில் வெளியீட்டு முறை இடியாப்பச் சிக்கலை உருவாக்குகிறது.

 

‘தன்னை அவிழ்த்துக் கொள்ளும் உடல்’ என்ற தலைப்பு அழகாக இருக்கிறது. இதில் ‘தரையெல்லாம் தாமரை மொட்டவிழும்’ என்ற வரி நா.பார்த்தசாரதி நாவலிலிருந்து, பிரபுதேவா நடித்த திரைப்படத்தில் இடம் பெற்று இப்போது மாலதி மைத்ரி கவிதையில் வந்து நிற்கிறது.

 

‘பாம்புகளுடன் சில பொழுதுகள்’ கவிதையில் பாடு பொருளுடன் தன்னைக் கரைத்துக் கொள்கிற புதிய உத்தி – புருவம் உயர்த்தும் வியப்பு – குறிப்பிடத்தக்கது.

 

பாம்பு

என்ற சொல் என்னுள்

விதைக்க வேர்விட்டுக் கிளைத்து

உடல் சிலிர்த்தும் பனிவிருட்;சம்

மகுடியாய் வசீகரிக்கத் தோலுரியும் நான்

 

‘பச்சை நகரம்’ கவிதையில் மொழியாளுமை நன்றாக இருக்கிறது.

 

இரை ஏமாற்றிய பசியுடன் பறவை

வானத்தைத் தன் சிறகுகளில்

சுருட்டி அமர்ந்திருக்கிறது.

என்னும் படிமம் (கவிதை: அதனதன் உலகம்) தனித்தன்மையுடன் ஒளிர்கிறது.

 

‘சூரியன் சிரிக்கும் வானம்’ என்ற புதிய பார்வை கவித்துவ ஒளி சொரிகிறது.

 

நிறைவாக சில கவிதைகளில் காணப்படும் தெளிவின்மை வாசகனைப் பின்னுக்கு இழுக்கும்; போக்கு கொண்டதாக இருக்கிறது. ஆனாலும் பல நல்ல கவிதைகளை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் தொகுப்பு இது!.

Series Navigationஇதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்ஜென்