மிதிலாவிலாஸ்-2

This entry is part 15 of 23 in the series 15 பெப்ருவரி 2015

Yaddana_profile_0

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

பார்க்கில் மழை குறைந்து விட்டது. குழந்தைகள் வீட்டுக்கு ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரத்தில் இருக்கும் வீடுகளின் கேட்டுகள் திறந்து கொண்டிருந்தன. “மம்மி.. டாடி!” பெற்றோரை அழைத்துக் கொண்டு தாம் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெற்றோர்கள் எதிரே வந்து குழந்தைகளை தூக்கி செல்லம் கொஞ்சியபடி உள்ளே அழைத்துப் போய் கொண்டிருந்தார்கள்.

அபிஜித்தின் தாடை எலும்பு இறுகியது.

அவன் பார்வை தம் வீட்டு கேட்டின் மீது அரைவினாடி நின்றன. அந்த கேட் கதவுகள் ஒருபோதும் அப்படித் திறக்கப் போவதில்லை. சிறுகுழந்தையின் பிஞ்சு ஸ்பர்சத்திற்காக, அந்தக் குழந்தையின் அழைப்பைக் கேட்டதும் ஏற்படப் போகும் சந்தோஷத்திற்காக அவனும் மைதிலியும் காத்திருந்தார்கள். ஆனால் அந்த அதிர்ஷ்டம் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. பேண்ட் ஜேபியில் கைகளை வைத்துகொண்டு அவன் பெருமூச்சை அடக்கிக் கொண்டான்.

அதற்குள் மேஜைமீது இருந்த போன் ஒலித்தது. அவன் தலையைத் திருப்பி பார்த்தான். எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டு அறைக்குள் வந்தான். போனை எடுத்ததும் மறுபக்கம் குரலைக் கேட்டு, “யெஸ் மிசெஸ் மாதுர்! நாங்கள் மறக்கவில்லை. மைதிலி தயாராகிக் கொண்டிருக்கிறாள். உங்கள் வீட்டுக்குத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்” என்று போனை வைத்துவிட்டான்.

போனை வைக்கும்போது பக்கதில் இருந்த பைல் தென்பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே வரைந்த படம் ஒன்று இருந்தது. பெண்கள் சமைக்கும் போது போட்டுக் கொள்ளும் ஏப்ரன் அது. நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. ஒரு பாக்கெட்டுக்கு அம்புகுறி போட்டு நூல், ஊசி போன்றவை, இரண்டாவது பாக்கெட் அருகில் சின்னக் குழந்தைகளின் பித்தான்கள், மூன்றாவது பாக்கெட் அருகில் ஆண்களின் பித்தான்கள், நான்காவது பாக்கெட்டின் அருகில் வீட்டுச் காவிக்கொத்தும் வரையப்பட்டு இருந்தன. அபிஜித் அதையே சிரத்தையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சித்தார்த் பேட்டிக்கு வந்ததும் தன் பேக்டரியில் தயாரான புதிய மேடீரியலை காண்பித்து இது நடுத்தரக் குடும்பத்தில் உடனடியாக போகணும். எந்த விதமாக செய்தால் மலிவாக, சுலபமாக பிரமோட் செய்யமுடியும்? டிசைன் வரைந்து குடு. இரண்டு நிமிடங்கள் அவகாசம்” என்றான். அவன் நாற்காலியில் அமர்ந்து பேப்பர், பேனாவை வைத்துக் கொள்வதற்கு சரியாக ஒரு நிமிடம் ஆயிற்று. அடுத்த நொடியில் டிராயிங்கை முடித்துவிட்டு தன் முன்னால் தள்ளினான். அதைப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது. சமையல் அறையில் பெண்கள் பயன்படுத்தும் ஏப்ரன் ரொம்ப குறைந்த விலையில் கொடுக்க முடியும்.

“இதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?”

“நடுத்தரக் குடும்பங்களில் இது ரொம்ப முக்கியமாக தேவை. இது போன்ற வசதிகளை செய்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் பல பெண்கள் தீ விபத்துக்கு உள்ளாகிறார்கள். உங்கள் தயாரிப்பு சமையலறையில் தொடங்கி பெண்களை ஈர்த்துவிட்டால், மற்ற விஷயங்களுக்கு டிமாண்ட் தானே வரும்.” அவன் வார்த்தைகள் நேரடியாக இருந்தன. மறுபடியும் மௌனம் வகித்தான்.

அபிஜித் முகவாய்க்கட்டையின் கீழ் கட்டைவிரலை வைத்துக் கொண்டு அதை கண்ணிமைக்காமல் பார்த்தான். “ஏதாவது விளம்பர வரிகள் எழுது” என்று அவன் பக்கம் தள்ளிவிட்டான்.

சித்தார்த்தா ஒரு வினாடி அந்த டிராயிங்கை பார்த்தான். பிறகு பேனாவை எடுத்து வரைவது போலவே எழுதினான்.

“உங்கள் வருமானத்தில் சிக்கனம்

அதுதான் எங்கள் தாரக மந்திரம்

உங்கள் நலன் எங்கள் கொள்கை

உங்கள் சந்தோஷம் எங்களின் வெற்றி”

அபிஜித் பக்கம் பேப்பரைத் தள்ளிவிட்டு மறுபடியும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அபிஜித்துக்கு திருப்தி ஏற்பட்டது. பைலை மூடிவிட்டு அவன் கையில் கொடுத்தான். தன்னுடைய வீட்டுக்குச் சென்று தன் மனைவியிடம் கொடுக்கச் சொல்லி ஆணையிட்டான்.

சித்தார்த்தா வரைந்த டிசைனில் பெண்களின் பாதுகாப்புக்கும், தேவைகளுக்கும் முக்கியத்துவம் இருந்தது. இத்தனை சின்ன வயதில் அவ்வளவு யோசனை, பெண்களைப் பற்றிய அக்கறை, உடனடியாக செயல்பட்ட முறை அபிஜித்தை கவர்ந்துவிட்டது. உண்மையில் பெண்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் எந்த பிராடக்டும் வெற்றி பெறும் என்பது தன்னுடைய நம்பிக்கை. இந்த விஷயத்தில் தனக்கும், சித்தார்த்தாவுக்கும் ஒரே அபிப்பிராயம் முதல் வினாடியிலேயே ஏற்பட்டு விட்டது. அவனுடைய திறமையைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. திறமை இருந்தால் வியாபாரத்தில் நன்றாக முன்னுக்கு வர முடியும். அதோடு மனித நேயமும் சேர்ந்து கொண்டால் அஸ்திவாரம் பலமாக இருக்கும்.

“நான் ரெடி” என்று மைதிலி அங்கே வந்தாள்.

“மைதிலி! இதைப் பார்த்தாயா?” அவன் பைலைக் காண்பித்துக் கொண்டே கேட்டான்.

மைதிலி டக்கென்று பைலை மூடிவிட்டாள். “முதலில் நாம் கிளம்பணும்” என்று நினைவுப் படுத்தினாள்.

அதற்குள் திரும்பவும் போன் ஒலித்தது. அபிஜித் எடுத்தான். “வாட்!” அவன் முகம் பதற்றமாக மாறியது. “எப்போ? எங்கே? நான் உடனே வருகிறேன்” என்று போனை வைத்துவிட்டான்.

“என்ன ஆச்சு?” மைதிலி கேட்டாள்.

“பிரபாகருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாம். பிளட் ஏற்றணும். அவனுக்கும் எனக்கும் ஒரே பிளட் குரூப். கிளம்பு போகலாம்.”

“அபீ! ப்ளீஸ். நீ லயன்ஸ் கிளப்புக்கு பிளட் டொனேட் செய்து இருபது நாட்கள் கூட ஆகவில்லை.” அவனை தடுப்பது போல் சொன்னாள் மைதிலி.

“பரவாயில்லை வா.” அவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு வேகமாக நடந்தான்.

******

நடுத்தர வர்க்கத்துக்கு கீழ் மட்டத்தில் இருக்கும் குடும்பங்கள் வசிக்கும் இடம் அது. அங்கே வீடுகள் எல்லாம் கீக்கிடமாக, குறுகலான சந்துகளுக்கு நடுவில், இந்த பட்டணத்தில் குடியிருக்க இந்த அளவுக்காவது இடம் கிடைப்பதே பெரும் பாக்கியம் என்பது போல் இருந்தன. வேடிக்கை என்னவென்றால் நடுத்தர மக்கள் வசிக்கு இடத்தில் குவிந்து போகும் குப்பையும் கூளமும் அங்கே தென்படவில்லை. அவரவர் வீடுகளுக்கு முன்னால் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரித்து வந்ததால் அந்த காலனி தூய்மையாக காட்சி தந்தது. குறுகலான அந்தத் தெருக்களில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சகவாசம் செய்வது போல் நாய்களும், பன்றிகளும் அங்கே தெருவில் சுயேச்சையாய் நடமாடிக் கொண்டிருந்தன.

அந்தத் தெருவில் நான்காவது வீட்டில், ஒற்றை அறையில் குடியிருந்த அறுபது வயதுக்கு மேற்பட்ட கிழவி ஒருத்தி வாளியில் இருந்த ஈர ஆடைகளை உயரமாக இருந்த கொடியில் காயப் போடுவதற்காக எம்பிக் குதிக்கும் முயற்சியில் டமால் என்று மல்லாக்க விழுந்தாள். விழுந்ததுமே, “அம்மாடி! செத்துட்டேன் சாமி!” என்று கூக்குரல் போட்டாள். அறையின் பின்பக்கம் இருந்த வராண்டாவில் கால் விரலுக்கு பட்ட காயத்தை துடைத்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தா பாட்டியின் குரலைக் கேட்டு அந்த வேலையை விட்டுவிட்டு அப்படியே ஓடி வந்தான். அறையில் மல்லாக்க விழுந்திருந்த பாட்டியிடம் ஒரே எட்டில் அருகில் வந்து அவள் தோளைச் சுற்றி எழுப்பி விட்டான்.

பயத்தினால் அவளுக்கு மூச்சு இரைக்கத் தொடங்கியது, சித்தார்த்தா போய் டம்ளரில் நீர் கொண்டு வந்து அவளை குடிக்கச் செய்தான்.

“என் உயிர் போய் விடுமோ என்று என் பயம். நான் செத்துவிட்டால் உன்னைப் பார்த்துக் கொள்ளும் நாதி இல்லையே. நீ சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டால்..”

பாட்டியின் புலம்பலைக் கேட்டதும் அவன் கண்களில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

அவன் கால் விரலில் கட்டு இருந்ததைப் பார்த்தவள், விரலுக்கு என்ன ஆச்சு என்று விசாரித்தாள்.

அவன் பதில் சொல்லவில்லை. அலமாரி அருகில் சென்று அங்கே பழைய புடவையால் மூடி இருந்த ஒரு கூடையை எடுத்து கீழே கவிழ்த்தான். அதில் பழைய சல்லடை, பாதி எரிந்த மெழுகு வத்திகள், ஓட்டை பாத்திரங்கள் இரண்டு, பழைய செருப்புகள் மேலும் சில வேண்டாத சாமான்கள் தரையில் உருண்டன. அவன் அவற்றிலிருந்து தேடி ஒரு ஹாவாய் செருப்பை எடுத்து அறுந்து போன அதன் ஸ்ட்ராப்புக்கு பின் போட்டுக் கொண்டிருந்தான். அறையின் மூலையில் அவன் கழற்றிய செருப்பின் ஸ்ட்ராப் வெள்ளை நிறம் என்றால் இது சிவப்பு நிறத்தில் இருந்தது. அவன் இரண்டையும் கால்களில் மாட்டிக் கொண்டு சரி பார்த்தான்.

“என்னடா? செருப்பு தொலைந்து போய் விட்டதா?” கிழவி கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை.

“நான் ஒரு பக்கம் கத்திக் கத்தி செத்துக் கொண்டிருக்கிறேன். நீ ஒன்றுக்கும் பதில் சொல்ல மாட்டாய்.”

அவன் அவள் கத்தலை பொருட்படுத்தவில்லை. போய் கூடையில் சாமான்களை அள்ளி போட்டுவிட்டு அதை மூலையில் வைத்து பழைய புடவையால் அதை மூடினான்.

‘அங்கிள்!” வாசலில் குரல் கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான், அங்கே நான்கைந்து வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். அவன் உடலில் வெறும் நிக்கரைத் தவிர சட்டை இல்லை. அக்குளில் பலகையும், புத்தகமும் இருந்தன.

சித்தார்த்தா திரும்பிப் பார்த்ததும் அவன் சிரித்தான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தாவின் இதழ்களில் சிரிப்பு வந்தது. அந்த முறுவல் அவன் முகத்திற்கு புது விதமான ஒளியைக் கூட்டி அவன் அழகை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது. உள்ளே வரச் சொல்லி கண்ணாலேயே ஜாடைக் காட்டினான்.

“நீ இன்னும் சாப்பிட வில்லை. அதற்குள் இவன் வந்து சேர்ந்துவிட்டான். டேய் சின்னா! சித்தூ இன்னும் சாப்பிடவில்லை. நீ வீட்டுக்கு போ.”

சின்னாவின் கண்களில் ஏமாற்றம் வந்து சேர்ந்தது. சித்தூவின் பக்கம் பார்த்தான், ஏற்கனவே சித்தூ கிழவியின் பக்கம் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான். சித்தூ எழுந்து போய் தன்னுடைய டவலை எடுத்து சின்னாவின் தோளைச் சுற்றிலும் போர்த்திவிட்டு அறைக்குள் அழைத்து வந்தான்.

இருவரும் பாயின் மீது அமர்ந்து கொண்டார்கள். சித்தார்த்தா புத்தகத்தை எடுத்தான்.

“சித்தூ! வந்து சாப்பிட்டு விட்டு போ.” கிழவி கத்தினாள்.

“பாட்டீ! இப்போ பசியில்லை. அப்புறமாக சாப்பிடுகிறேன்.” பதில் சொன்னான் சித்தார்த்தா.

“எப்போது சாப்பிடுவாய்? இப்படி விட்டுவிட்டால் வாரத்தில் ஐந்து நாட்கள் பட்டினித்தான் கிடைக்கணும். இருக்கும் போதாவது சாப்பிடுவிட்டு போகலாம் இல்லையா? அந்த பையலுக்கு வீட்டில் படுக்க இடம் இல்லை. அதனால் படிக்கும் சாக்கு வைத்துக் கொண்டு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான். அது அவன் அம்மாவின் சாமர்த்தியம். நமக்கு மட்டும் ராஜ மாளிகையா? வீட்டுக்காரி இவனை பார்த்துவிட்டு வாடகையை கூட்டச் சொல்கிறாள். ஏன் சொல்ல மாட்டாள்? இரண்டு பேர் என்று சொன்னோம். மூன்று பேர் இருந்தால் சும்மா இருப்பாளா? சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறோம். வாடகையை கூட்டினால் எங்கிருந்து தர முடியும்? இந்த சின்னா ஒருத்தன்! பிசுக்கு போல் ஒட்டிக் கொண்டு விட்டான் உன்னை. அவனை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது உனக்கு.”

சித்தார்த்தா எழுந்து அறையின் கதவை சாத்திவிட்டு வந்தான். சின்னா அதுவரையில் கிழவியின் கத்தலுக்கு கண்களை பெரிதாக விரித்து பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். சித்தார்த்தா தன்னை போகச் சொல்லி விடுவானோ என்ற பயம் அவன் முகத்தில் தெளிவாக தென்பட்டுக் கொண்டிருந்தது.

சித்தார்த்தா திரும்பவும் அவனைப் பார்த்து முறுவலித்தான். கருணை, அன்பு நிறைந்த முறுவல் அது.

அதைப் பார்த்த பிறகு சின்னா சமாதானம் அடைந்தவனாக புத்தகத்தில் கவனம் செலுத்தினான். சித்தார்த்தா பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் குரல் மிருதுவாய் இருந்தது. சின்னாவுக்கு எந்த விதமாக சொன்னால் சுலபமாக புரியுமோ அந்த முறையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதற்குள் கதவை தடதடவென்று சத்தப்படுத்திக் கொண்டே, “சித்தூ! நீ சாப்பிட வருவாயா? மாட்டாயா? உனக்காக நானும் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கிறேன். காலையிலிருந்து பச்சத் தண்ணீர் கூட பல்லில் படாமல் வீட்டை விட்டு கிளம்பிப் போய் மாலையில் வந்தாய். ராத்திரி ஏழு மணி ஆகிறது. இவனை உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாய். என்னைவிட அந்த கடன்காரன் தான் உனக்கு உசத்தி! அப்படித்தானே?” அந்தம்மாள் பெரிய குரலில் கத்திக் கொண்டிருந்தாள்.

சித்தார்த்தா இயலாமையுடன் பார்த்தான். “சின்னா! நீ இதை எழுதிக் கொண்டிரு. நான் இப்பொழுதே சாப்பிட்டு விட்டு வருகிறேன். இல்லா விட்டால் பாட்டி சும்மா இருக்க மாட்டாள்” என்றான்.

சின்னா தலையை அசைத்தான். சித்தார்த்தா வேகமாக போய் கதவைத் திறந்தான். கிழவி இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தாள். அவன் அதை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. நேராக சமையல் பாத்திரங்கள் வைத்த இடத்திற்கு போய் பலகையை போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டான்.

அவள் வந்து சித்தூவின் தட்டில் பரிமாறினாள். தனக்கும் பரிமாறிக்கொண்டாள்.

“உனக்கு இருப்பதே ஒரே ஒரு டவல். அதையும் அந்த கடன்காரனுக்கு போர்த்தி விட்டாயே?” என்று கடிந்து கொண்டாள். அவள் குரலில் கோபமும், பொறுமையற்ற குணமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. “ஒரு வேளை சாப்பாட்டுக்கு வாக்கு இல்லாத பயலுக்கு நம் வீட்டில் ராஜபோகம்.” கோபமாகச் சொன்னாள்.

“சாப்பாட்டுக்கு வக்கு இல்லாதவர்கள் என்றால், நாமும் அவர்களில் ஒருத்தர்தானே?” என்றான்.

“நீ எப்போதும் இப்படித்தான். என் வாயை மூட வைப்பாய்.” மேலும் சாதம் போடப் போனாள்.

சித்தார்த்தா கையை நீட்டி வேண்டாமென்று மறுக்கும் போது, அவள் தோளில் போர்த்திக் கொண்டிருந்த கிழிசல் டவல் நழுவி விட்டது. அவன் உடலில் சட்டை இல்லை.

அதைப் பார்த்ததும் அந்தம்மாளின் கண்களில் நீர் சுழன்றது. அவனுக்கு இருப்பது ஒரே ஒரு சட்டை. வீட்டுக்கு வந்ததும் அதைக் கழற்றி வைத்துவிட்டு டவலை போர்த்திக் கொள்வான். மழை பெய்திருப்பதால் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. இந்த தரித்திரம் எப்போது தான் தீருமோ? அந்தம்மாள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். வருடங்கள் கழிந்துக் கொண்டிருந்தாலும் தரித்திரம் தம்மை விட்டுப் போகவில்லை.

சித்தார்த்தா கையை அலம்பிக் கொண்டான். “அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டாயா?” வியப்புடன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டாள்.

“சித்தூ!” வெளியிலிருந்து குரல் கேட்டது.

சித்தார்த்தா டவலை எடுத்து சரியாக பார்த்திக் கொண்டான்.

வழுக்கைத் தலையுடன் மாநிறத்தில் இருந்த ஐம்பது வயது ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார்.

அவரைப் பார்த்ததும் சித்தார்த்தா ஸ்டூலை கொண்டு வந்து போட்டான்.

“இன்டர்வ்யூக்கு போய் விட்டு வந்தாயா?” கேட்டார்.

சித்தார்த்தா முகம் கம்பீரமாக மாறியது. தலையை அசைத்தான்.

“என்ன சொன்னாங்க?”

“ஒன்றும் சொல்லவில்லை. ஒரு டிசைன் வரைந்து ரைட் அப் எழுதித் தரச் சொன்னார்கள். தந்தேன்.”

“என் மச்சினனிடம் சொல்லி இந்த வேலையை உனக்கு கொடுக்கச் சொல்லி அபிஜித் சாரிடம் பேசச் சொல்கிறேன்.”

சித்தார்த்தா நிமிர்ந்து பார்த்தான். அந்தக் கண்களில் எரிச்சல், கோபம் வெளிப்பட்டன. “வேண்டாம்” என்றான்.

“வேண்டாமா? இந்த காலத்தில் சிபாரிசு இல்லாமல் வேலை எப்படி கிடைக்கும்?”

“நன்னா சொன்னீங்க” கிழவி நீட்டி முழக்கினாள். “இருந்தாலும் அவனிடம் ஏன் கேட்கணும். நீங்க பண்ண வேண்டிய உதவியை நீங்க பண்ணுங்கன்னு சொன்னேன் இல்லையா.”

சித்தூ பாட்டியின் பக்கம் பொறுமையற்றவனாய் பார்த்தான்.

கண்னயிரத்துக்கு அந்தப் பார்வையின் தீவிரம் புரிந்தது. “சரி ஆகட்டும். வந்தால் வரட்டும். இல்லா விட்டால் போகட்டும். நான் சொல்ல வந்தது என்னவென்றால் இவர்கள் நல்லவர்கள், தெரிந்தவர்கள். அய்யாவின் மனைவி மைதிலியம்மா கூட ரொம்ப நல்லவங்க. அவ்வளவு பணம் இருந்தாலும் கொஞ்சம் கூட கர்வம் கிடையாது. தொழிலாளர் குடும்பங்களுக்கு எவ்வளவோ நல்லது செய்கிறாள். அந்தம்மாளையும் எனக்கு தெரியும்.”

சித்தூ மறுமொழி எதுவும் சொல்லாமல் செதுக்கிய சிற்பம் போல் நின்று கொண்டிருந்தான்.

“ஏதோ உங்கள் தயவினால் எங்களுக்கு இந்த உபகாரம் நடந்தால் உங்க பெயரைச் சொல்லி நானும், அவனும் வயிறார சாப்பிடுவோம். நீங்க தான் கடவுள் என்று நினைத்து கும்பிடு போடுவோம்” என்றாள் கிழவி.

“அடடா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க.” சித்தூவுக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்று உணர்ந்து தடுத்துவிட்டார்.

“ஜெயா கண்ணில் படவே இல்லையே?” கிழவி விசாரித்தாள்.

“பாட்டி வீட்டிற்குப் போயிருக்கிறாள். அனுப்பச் சொல்லி எங்க அம்மா ஒரே ரகளை.”

“அப்படியா.”

சித்தார்த்தா அங்கிருந்து போய் விட்டான். அவன் அங்கிருந்து அறைக்குள் போகும் வரையில் தலையைத் திருப்பி அந்தப் பக்கமே பார்த்தாள் கிழவி. பிறகு உடனே தலையை இந்த பக்கம் திருப்பி, குரலை தாழ்த்தி, “நீங்க அவன் பேச்சை பொருட்படுத்தாதீங்க. சொன்னேன் இல்லையா. அவன் உங்க ஜெயாவுக்கு வருங்கால மாப்பிள்ளை. அவன் எதிர்காலத்தை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டேன். இனி உங்கள் இஷ்டம். என்ன வேலை வாங்கித் தருவீங்களோ? எது செய்தாலும் உங்க மகளின் நல்லதுக்குத்தான்.”

“ஆகட்டும் அம்மா. அதற்காகத்தானே நானும் பாடுபடுகிறேன். அந்த கம்பெனி ரொம்ப நல்லது. அங்கே வேலை கிடைத்தால் ரொம்ப கௌரவம். எப்பாடு பட்டாவது ஏற்பாடு செய்கிறேன். தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ என் மச்சினனுக்கு லஞ்சம் கொடுக்கிறேன். இந்த காலத்தில் பணத்திற்கு கிடைக்காதது எதுவும் இல்லை.”

“ஆமாம் ஆமாம். நீங்க நல்லா இருக்கணும். முதலில் அந்தக் காரியத்தை செய்யுங்க.”

“போகிறேன் பெரியம்மா. ஆமாம்…”அவர் நின்றார். “அந்த சின்னாவை எதுக்காக உங்க வீட்டுக்குள் வர விடறீங்க? அவங்க அம்மா நல்லவள் இல்லைன்னு சொன்னேன் இல்லையா?”

“தலையில் அடித்துகொள்ளாத குறையாக நானும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். வராதே என்று கச்சிதமாக சொல்லி விடுகிறேன்.” வாக்கு கொடுப்பது போல் சொன்னாள். அந்த நிமிடம் அவளுக்கு அந்த சின்னாவின் தோளைப் பற்றி தரதர வென்று இழுத்துக் கொண்டு போய் வெளியில் தள்ள வேண்டும் போல் இருந்தது. இவருக்கும் சின்னாவின் தாய்க்கும் ஒத்துப் போகாது. இவர் சாமர்த்தியம் மிகுந்தவர். வேலை வாங்கித் தருவதாகச் சொல்கிறார்.

சித்தூவுக்கு சின்னாவின் மீது பிரியம். கிழவியின் உயிர் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.

சித்தார்த்தா அறைக்குள் வந்த போது சின்னா சுருண்டபடி பாயின் மீது படுத்துக் கொண்டிருந்தான். பூனைக் குட்டியைப் போல் தூங்கிக் கொண்டிருந்த சின்னாவைப் பார்த்தால் பாவமாக இருந்தது. போர்வையைக் கொண்டு வந்து அவனுக்கு போர்த்திவிட்டான். அலமாரியில் இருந்த புத்தகத்தை எடுத்து வந்து படுக்கையின் மீது உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான். அதைப் படிக்க படிக்க அவன் முகம் மலர்ந்தது. கண்கள் சந்தோஷத்தில் மின்னின. படித்த பக்கத்தையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தான்.

ரொம்ப நேரம் கழித்து பாட்டி அந்த அறைக்கு வந்தாள். பாய் மீது போர்வையை போர்த்திக் கொண்டு சின்னா உறங்கிக் கொண்டிருந்தான். படுக்கையில் போர்வை எதுவும் இல்லாமல் சித்தார்த்தா படுத்திருந்தான். அவளுக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. வாயிலிருந்து சத்தம் வெளிவராமல் சின்னாவை சாபம் இட்டாள். போர்வையை வேகமாக பிடுங்கிக் கொண்டு போய் பேரனுக்கு போர்த்தி விட்டாள். தூங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தாவின் முகத்தை பிரியமாக பார்த்துக் கொண்டே, “உன்னை ஜெயாவுக்குக் கொடுத்து மணம் முடித்து விட்டால் இனி என் உயிர் போனாலும் கவலை இல்லை.” கைகளை கன்னத்தில் நெட்டி முறித்துக் கொண்டே நினைத்துக் கொண்டாள்.

 

Series Navigationவைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…உங்களின் ஒருநாள்….
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *