மிருகக்காட்சி சாலைக்குப் போவது

tamilmanavalanவிலங்குகளைப் பார்ப்பதற்கென்று மெனக்கெட்டு
மிருகக்காட்சி சாலைக்குப் போவதென்பதே
ஒரு பிரத்யேகமான மனோபாவம்
அநேகமாய் மனிதர்களைப் பார்ப்பதற்கு
மறுதலிக்கப்பட்ட சமூகத்தில்
ஐம்பது ரூபாய் நுழைவுச் சீட்டில்
அனுமதிக்கப் படுகிறோம் மிருகங்களைப் பார்க்க
உள்நுழைந்து இடப்புறம் திரும்பியதும்
வண்ணப் பறவைகள் தமக்குள்
குறைபட்டுக் கொண்டிருக்கின்றன
மனிதர்கள் தம்மை உற்றுநோக்கல் குறித்து
வலைபின்னப்பட்ட ஜீப்பில் ஏறி
வலம் வரத் தொடங்குகிறோம்
நம்மின் வருகையறியா மிருகங்கள்
சந்தோஷமாய் இருக்கின்றன
வெகுதொலைவில்
விபத்தென அருகில் வரும் ஒன்றிரண்டு
முறைத்துப் பார்த்துவிட்டு
இடம் பெயர்கின்றன தூரத்துக்கு
எல்லா சிற்றுலாவையும் சோலாபூரியில்
நிறைவு செய்யும்
பண்பாட்டு விழுமியத்தைக் காப்பாற்றி விட்டு
18K பேருந்தில் வந்தமர்ந்த போது
யாரோவொருவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்
நேற்றுக் காணாமல் போன கரடி குறித்தும்
தனிப்படை அமைத்துத் தேடிக் கொண்டிருப்பதையும்
அதிர்ச்சியடைந்து அனிச்சையாய்
சுற்றுமுற்றும் பார்க்கிறேன் பேருந்தினுள்
என்னையே ஒருவன்
கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் அப்போது.

தமிழ்மணவாளன்

Series Navigationஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)