மீண்ட சொர்க்கம்

Spread the love

இத்தனை தூரம்

கவிதையற்று வந்தவன் மனதில்

தீக்குச்சி உரசிய சிரிப்பில்

நீ விதைத்த வார்த்தைகள்

வனவாச காலத்து

முடிவைச் சொன்னது.

கழைக்கூத்தாடியின் கவனமாய்ப்

பின்னிய வார்த்தைகள் கொண்டு

எழுதாமலேயே போன அந்தப்

பத்தாண்டுகளின் சூன்யம்

ஞாபகத் துளைகளில்

வழிகிறது.

காலத்தின் மிரட்டல் கேட்டு

வாழ்க்கைக் காட்டில்

பயணமே உறைந்திருந்தது.

இளமையின் வாசலில்

காத்திருந்த கேள்விகளில்

நெஞ்சக்கூட்டினுள்

ஸ்னேகம் சுமந்து நின்றதில்

நினைவே மிச்சம் என்றாலும்

எனக்குள் திரும்பிய

கவிதை அரும்புகள்

வாடிப்போயிருக்கவில்லை.

முகவரி தொலைத்த

காலப்புறாவின் கால்களில்

பிணைக்கப்பட்ட

விதியின் எழுத்துக்களை

எதிர்பாரா தருணத்தில்

நீயே ஏந்திவந்து

தீக்குச்சி உரசிய குரலில்

சிரித்து விதைத்ததில்

என் உயிர்க் கிளைகளில்

கவிதை அசைகிறது.

— ரமணி

Series Navigationஆலமும் போதிக்கும்….!அதையும் தாண்டிப் புனிதமானது…