முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

 

 

வடித்த கவிதைகளை

வரலாறுகண்ட

ஒரு வாரஇதழுக்கு

அனுப்பினேன்

தேரவில்லை

 

நூலாக்கினேன்

 

கவிக்கோவின்

கட்டைவிரலாம் நான்

அணிந்துரை சொன்னது

 

என் கவிதைகள்

குறிஞ்சி மலர்களாம்

குற்றாலச் சாரலாம்

ஒரு திரைக்கவி மெச்சினார்

 

பைரனின் நகலாம் நான்

ஒரு பேராசிரியர் புகழ்ந்தார்

 

மின்சாரம் எனக்குள்

மிருதங்கம் இசைத்தது

 

விழாவில்

கொஞ்சம் விற்றது

மிச்சம் தோற்றது

இன்றுவரை

கேட்பார் எவருமில்லை

 

என் கவிதைகளை

தேர்வு செய்யாத

அந்த வாரஇதழ்களின்

வாசகர் கவிதையை

நட்சத்திரக் கதைகளை

வாசிக்கிறேன்

 

தம்பட்டமில்லாத

‘தம்டிரைவ்’ அமைதியில்

யாரிந்த எழுத்தாளர்கள்

வாசகர்களின் இதயத்தால்

இவர்கள் துடிப்பது

படிப்பதில் புரிகிறது

 

‘உன்னையே நீ அறிவாய்’ என்ற

உலகஞானியே வாழ்க

என்னை நான் அறிய

முயல்கிறேன்

 

தொட்டிச் செடிகளைத்தான்

நான் நந்தவனம் என்கிறேன்

குளத்தங்கரையில்

மொண்டு குளிக்கிறேன்

 

இப்போது புரிகிறது

முகப்புகழ்ச்சிகள்

முகவரியல்ல

ஓர் உவமையே முகவரியாய்

‘செம்புலப் பெயல்நீரார்’

 

நான் நம்புகிறேன்

எனக்குள் உதிப்பார்

இன்னொரு ‘நீரார்’

 

அமீதாம்மாள்

Series Navigation