முகமூடி

Spread the love
எஸ்.ஹஸீனா பேகம்
எவரேனும்
எனக்கொரு முகமூடியை கொணர்ந்து தாருங்கள்.
ரத்தநாளங்களை
vவறண்டுபோக செய்யக்கூடிய
புகலிடம் தேடித்திரியும்
விரட்டியடிக்கப்பட்ட மக்களின்
மரண ஓலங்கள்
எனது செவிப்பறைகளை தீண்டிடாதவாறு
காதுகளை பஞ்சினால்
அடைக்கப்பட்டதை போன்றதொரு
செவிட்டு முகமூடியொன்றை
கொணா்ந்து தாருங்கள்.
சாதியின் பெயரால்
துகிலுறிக்கப்படும் திரௌபதிகளின்
நிா்வாண கோலங்களை
அசட்டைகளற்று கடந்து சென்றிட
எனக்கோர் குருட்டு முமூடியை
கொணர்ந்து தாருங்கள்.
நெடுஞ்சாலைப்பரப்புகளில்
சிதறுண்டு கிடக்கும்
எவனோ ஒருவனின்
விபத்துக்குள்ளான சடலத்தையும்,
விடிகாலைப்பொழுது முதலே
டாஸ்மாக் தரிசணம் வேண்டி
வரிசையில் காத்துக்கிடந்து
தேசத்தை செங்குத்தாக தூக்கி நிறுத்தவல்ல பெருங்குடிமகன்களையும்
அந்த ஆட்சியா் அலுவலக வளாகத்தினில்
வாயில் கருப்பு துணியை கட்டியவாறு
நீதி கேட்டு அடம்பிடித்து நிற்கும்   இளம் பெண்ணையும்
வெகு அலட்சியமாக கடந்து சென்றிட
எனக்கொரு பிததனின் முகமூடியையும் தந்துதவுங்கள்.
இந்த தேசத்தினில்
அயோக்கியனுக்கொரு  யோக்கிய முகமூடியும்
காமுகனுக்கொரு ஆன்மீக் முகமூடியும்
போராடடக்காரனுக்கொரு குண்டர் முகமூடியும்
வஞசக அரசியல் வியாபாரிகளுக்கொரு
காந்தீய முகமூடியும்
அணிவித்து அழகு பார்க்கும்
பாரத தாயே
எனக்குமொரு
முகமூடியை கொணர்ந்து தாராயோ…
– எஸ்.ஹஸீனா பேகம்.
Series Navigationசுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் மலேசியா பயணத்தில்பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்