முன் வினையின் பின் வினை

எஸ்.கணேசன்

 

 

பதின்வயது மோகம்

அழுக்கைத் தாங்கின

வெள்ளித்திரையைத் தாண்டி

உன்னையும் தாக்கக்

குடும்பமே போர்க்களமாய்ப் போயிற்றே!

 

அளவற்ற செல்லத்தின்

சுதந்திரம் புரியாது

காதலின் அர்த்தத்தை

உன் வழியில் தேடி

நீ அலைந்த இளம்வயது

தாய்தந்தைக்குச் சடுதியில்

மூப்பைச் சாத்தியதே!

 

இளங்கலையில் தேறியிருக்க

வேண்டியபோது நீ

இளந்தாய் ஆகிவிட்டிருந்தாயே!

 

எதை இழந்து

எதைப் பெற்றாய்

என நீ அறியும் முன்

வாழ்க்கை உன்மீது

இருட்டையும் கசப்பையும்

அப்பிவிட்டுச் சென்றுவிட்டதே!

 

அதையும் தாண்டி

காலம்

உன் வேர்களைச் சிதைக்காதிருந்ததில்

இரண்டாம் முறையாய்

நீ பதியன் பட்டபோது

கிழிந்த நாட்களின் வடுக்கள்

உனக்கு எந்தப் பாடத்தையும்

சொல்லாமலா போயிற்று ?

 

எங்களின் அக்கறை பொதிந்த

வார்த்தைகள்

எப்படி உனக்கு

அமிலத்தில் தோய்ந்ததாய்ப் போனது ?

 

போதிமரம் ஒன்றும்

பௌதிக மரமல்ல;

உன் வாழ்க்கை

சொல்லிச் சென்ற

உருவமற்ற தத்துவம்தான்

என்பதை எப்படி

உனக்குப் புரியவைப்பது ?

 

கழைக்கூத்தாடியின்

சாட்டையடி போல

உன் வலியில்

சுகம் காண்கிறாயா ?

 

சுனாமியாய் அழிந்து

சுனாமியாய் அழித்து

படரவிடும் கோரம்

எப்போது நிற்கப்போகிறது ?

 

நேற்று இன்று என்ற நிலையில்

நாளையும் தொடரவேண்டாம் !

இரண்டாவது வாழ்க்கையையும்

கலைத்துவிட்டு

மூன்றாவது கனவுக்கு

உயிர் கொடுக்கும்

உன் முயற்சிக்கு

விதி வீசிச் செல்லும்

பரிகாசங்களுக்கு

உன் குழந்தைகள் அல்லவா

பதில் சொல்லவேண்டியிருக்கும் ?

 

 

எஸ்.   கணேசன்

Series Navigationமரியாதைக்குரிய களவாணிகள்!அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,