மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

சரபோஜி

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.

 

பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

கோபியின் மொழிவளமும் நகைச்சுவையான நடையும் இதை அனைவரும் படிக்கச் சரளமாக்குகிறது. வெளிநாட்டில் வசித்துவரும் ராமநாதபுரத்துக்காரரான இவர் தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு பரவலாக எல்லாத் துறை பற்றியும் எழுதி சேவையாற்றி வருகிறார்.

 

 

அட்சய திரிதியை ( கிருதயுகத்தின் பிறப்பு), மார்கழியும் கோலமும் ( பூசணிப்பூ வைக்கும் காரணம் ), உடைக்கவேண்டியது மண்டைக்கனத்தை ( சிதர்காய்), சிவபெருமானும் நந்திதேவரும் ( திருநடனம் ), அனுமனிஸம் ( பஞ்சமுகம் ), பகையாளிகளான பங்காளிகள் ( கருடன், பாம்பு), மழைக்கு மட்டுமா மாரியம்மா ( ரேணுகை ), இறப்பே திருவிழாவாய் ( தீபாவளி ) , ப்ரம்மாவுக்கு வந்த பயம் (சிருஷ்டி பீஜம் ) , பிள்ளையார் ஸ்பெஷல்( வல்லாளன் கதை ), சனைச்சரருக்கு வாய்த்த சாபம் ( சனீஸ்வரர்) , படுக்கை தூங்குமா ( இலட்சுமணன்), பழத்தால் வந்த பஞ்சாயத்து ( பஞ்சாமிர்தம்), பக்தனால் கடுப்பான பார்வதி (அர்த்தநாரீசுவர வடிவம் ), தந்தைக்குப் பாடம் நடத்திய பிள்ளை ( பிரகலாதன் ), பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் (ஆயுத வழிபாடு), வழி தவறிவந்த பெருமாள் (ஸ்ரீரங்கம்) , போட்டுக்கொடுத்ததால் வந்த வினை கிரஹணம் பீடித்தல்), யானைக்குச் சறுக்கிய அடி (பிரம்மா ), வல்லவனுக்கு வல்லவன் (விநாயக பக்தர்கள் ). ஆகிய தலைப்புகளில் சுவாரசியமான புராண நிகழ்வுகளை காரண காரியங்களோடும் நடுவில் ஊடாடும் நகைச்சுவையோடும் கொடுத்துள்ளார்.

 

நாத்திகர்களின் கேள்விகளைக் கிண்டலடிப்பதும் இந்தக்கால நடைமுறைக்கு ஏற்ப கணினி இன்சூரன்ஸ் பத்ரிக்கைத் துறை போன்றவற்றை எடுத்துக்காட்டாக ஆசிரியர் பயன்படுத்தி இருப்பதும் சிறப்பு. கணவன் மனைவி உரையாடலையும் அங்கங்கே சுவாரசியமாகப் புகுத்து விளக்கமளிக்கிறார்.

 

ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேட்கும் இளைய தலைமுறையினருக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.

 

மொத்தத்தில் மிக ருசியான சாண்ட்விச்தான் என்று படித்தவுடன் சொல்வீர்கள்.

 

நூல் :- ஆன்மீக சாண்ட்விச்

ஆசிரியர் :- மு. கோபி சரபோஜி

 

பதிப்பகம் :- வானவில் புத்தகாலயம்

 

விலை ரூ 80/-

Series Navigationதமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?