மூன்றாம் குரங்கு

– கனவு திறவோன்

அவள் வழக்கம் போல
பேசிக் கொண்டிருந்தாள்
அல்லது பேசுவது போல
பாவனைச் செய்து கொண்டிருந்தாள்
இப்படித்தான்
நான் கற்பனை செய்யும் செயலை
அவள் நிஜத்தில் செய்து கொண்டிருப்பதாய்
கனவு காண்கிறேன்!
ஆற்றில் துள்ளிய
கெண்டை மீன்கள்
நீர்நிலை தேடி
அவள் முகத்தில் மிதந்தன…
அவள் நெற்றியிலோ
பளீர் பச்சை நிறத்தில்
பொட்டு இட்டிருந்தாள்
சுத்த சைவ குறியீடு போல!
சாறு குடிக்க
சாத்தான் கீறிய
ஆப்பிள் போல
பிளந்து கிடந்தன
அவள் உதடுகள்
சாலையில் தள்ளாடும்
சைக்கிள் போல
நான் ஊர்கிறேன்…
காலையில் பூத்த கனகாம்பரப் பூக்கள்
உதிர்ந்து நாறிக் கொண்டிருந்தன
அவள் வீட்டு முற்றத்தில்
மீதமிருந்த கோலத்தில்…
என் நேரத்தை எல்லாம் தொலைத்து விட்டு
அவள் நேரத்தைக் கடன் கேட்கிறேன்.
அவளில் இழந்ததை
என்னில் மீட்க விழைகிறேன்.
அவள் வழக்கம் போல
பேசிக் கொண்டிருந்தாள்
அல்லது பேசுவது போல
பாவனைச் செய்து கொண்டிருந்தாள்.
நான் மூன்றாம் குரங்கு போலக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.

Series Navigationபொறிதொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்