மெனோபாஸ்

 

டாக்டர் ஜி.ஜான்சன்

மெனோபாஸ் என்பது என்ன?

மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.

மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?

இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் எய்துகின்றனர்., ஆனால் பெரும்பாலானவர்கள் ( சுமார் 30 முதல் 60 சதவிகித்தனர் )பல்வேறு அறிகுறிகளை எதிர் நோக்குகின்றனர். உடல் ரீதியுடன், மன அளவிலும் மாற்றங்கள் உண்டாகலாம்.அதிக களைப்பு, குறைவான தூக்கம், ஞாபகக்குறைவு , உடல் உறவில் நாட்டமின்மை போன்றவை அவற்றில் சில.

மெனோபாஸின் அறிகுறிகள் என்ன?

* வெப்ப தாக்கம் ( hot flushes ) –

திடீரென நெஞ்சின் மேல்பகுதியில் கடும் வெப்பம் உண்டாகி முகம், கழுத்து பகுதிகளில் பரவும் . இவ்வாறு 2 முதல் 4 நிமிடங்கள் நிலைத்திருக்கும். இந்த வேளையில் அதிகம் வியர்க்கும். இந்த வெப்பம் குறையும்போது குளிரும் நடுக்கமும் உண்டாகும். நெஞ்சு படபடப்பும், மனதில் பரபரப்பும் ஏற்படும் . இது ஒரு நாளில் இரண்டு தடவை அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் உண்டாகலாம்.இது சுமார் 4 வருடங்கள் இவ்வாறு தொடரலாம்.

* இரவு வியர்வை ( night sweats )

வெப்பத் தாக்கம் இரவில் உண்டாகும்போது இரவு வியர்வை ஏற்படும்.இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உண்டானால் தூக்கம் கெடும். இதனால் காலையிலேயே களைப்பு, எரிச்சல், வேளையில் கவனமின்மை, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம் .

* தூக்கமின்மை ( insomnia )

மாதவிலக்கு நின்றுபோகும் வேளையில் தூக்கமின்மை பெரும் பிரச்னையைத் தரும். வெப்ப தாக்கம் அல்லது இரவு வியர்வை இல்லாவிட்டாலும் இது உண்டாகலாம்.

* உலர்ந்த பெண் உறுப்பு ( vaginal dryness ).

பெண் உறுப்பின் உட்சுவர் பகுதி மெல்லியதாகி உலர்ந்து போவதால், உடல் உறவின்போது எரிச்சலும் வலியும் ஏற்படும். இது ஈஸ்ட்ரொஜென் ஹார்மோன் குறைவினால் ஏற்படுகிறது.

* மனச்சோர்வு ( depression ).

கவலை, அன்றாட காரியங்களில் ஆர்வமின்மை , வேலையில் கவனமின்மை, போன்றவற்றால் புதிய பிரச்னைகளை எதிநோக்குவர்.

மறு ஹார்மோன் சிகிச்சை ( hormone replacement therapy – HRT ) என்பது என்ன ?

மெனோபாஸ் அறிகுறிகள் முழுக்க முழுக்க ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படுவதால் அதை மறுபடியும் தரவதே இந்த சிகிச்சை முறை. இதில் ஈஸ்ட்ரோஜென் ( estrogen ) ,புரோஜெஸ்டின் ( progestin ) எனும் இரண்டு விதமான ஹார்மோன்கள் அடங்குகின்றன.இவற்றில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மேனோபாசின் அறிகுறிகளை குணமாக்குகிறது.புரோஜெஸ்டின் என்பது புரோஜெஸ்ட்டெரான் ( progesteron ) மாதிரியான ஹார்மோன். இது கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் கருப்பையின் உட்சுவரை அளவுக்கு அதிகமாக வளரச் செய்துவிடுமாதலால் அதனால் புற்றுநோயாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

இணைவாக்கிய ஈஸ்ட்ரோஜன் மாத்திரை ( conjugated estrogen pill ) 0.625 மில்லிகிராம் அல்லது 0.3 மில்லிகிராம் உட்கொண்டால் மெனோபாஸின் அறிகுறிகளை தீர்க்கும். ஆனால் இதனுடன் புரோஜெஸ்டின் மாத்திரையும் உட்கொள்ள வேண்டும். மெட்ரொக்ஸ்சிப்ரோஜெஸ்ட்டெரான் அசிட்டேட் ( medroxyprogesterone acetate ) , நாரதின்ட்ரோன் ( norethindrone ) ,நோர்ஜெஸ்ட்ரெல் ( norgestrel ) போன்றவை சில உதாரணங்கள்.

திபோலோன் ( Tibolone ) எனும் செயற்கை ஸ்டீராய்ட் மருந்தும் சில நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.

இத்தகைய மருந்துகளை மருத்துவரின் மேற்பார்வையில்தான் உட்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறு ஹார்மோன் சிகிச்சையின் பின்விளைவுகள் என்ன?

ஈஸ்ட்ரோஜென் – புரோஜெஸ்டின் சிகிச்சையில் மாரடைப்பு ( heart attack மார்பக புற்றுநோய் ( breast cancer ), உறைகுருதி ( blood clots ). மூளை தாக்கம் ( stroke ) போன்ற ஆபத்தான பின்விளைவுகள் ( 63 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 5 வருட சிகிச்சைப் பெற்றிருந்தால் ) ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆராய்ச்சியின் ( women’s Health Initiative ) முடிவுகள் கூறுகின்றன.

ஈஸ்ட்ரொஜென் மட்டும் உட்கொண்ட பெண்களுக்கு மாரடைப்பும்,மார்பகப் புற்றுநோயும் உண்டாகும் அபாயம் குறைவாகவே இருந்தது.

மறு ஹார்மோன் சிகிச்சையின் நன்மைகள் என்ன?

* வெப்ப தாக்கம் , இரவு வியர்வை போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

* மெனோபாஸ் எய்தியபின் கால்சியம் குறைவினால் எலும்பு நலிவு ( osteoporosis ) ஏற்படுகிறது. இதனால் முதுகு வளையும்: எலும்பு நலியும்: சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படும். இவர்கள் விழ நேர்ந்தால் பெரும்பாலும் தொடை எலும்பு, இடுப்பு எலும்பு.முதுகுத் தண்டு எலும்பு எளிதில் முறியும் . ஹார்மோன் சிகிச்சை இதிலிருந்து பாதுகாப்பு தருகிறது.

* ஹார்மோன் சிகிச்சை மன அழுத்தத்தைக் குறைக்கிறது..

* ஹார்மோன் சிகிச்சை தூக்கமின்மையை ஓரளவு குறைக்கிறது..

ஹோர்மோன் சிகிச்சை பெற விரும்புவோர், குறுகிய கால சிகிச்சை மேற்கொண்டால் போதுமானது. 5 வருடத்துக்குக் குறைவாக சிகிச்சைப் பெற்றால், மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் குறைவே.மெனோபாஸின் அறிகுறிகள் மறைந்ததும் ஹார்மோன் சிகிச்சையையும் நிறுத்திவிடலாம்.இதை திடீர் என்று நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது நல்லது.

யார் யார் ஹார்மோன் சிகிச்சை பெறக் கூடாது?

* முன்போ தற்போதோ மார்பகப் புற்றுநோய் உ,ள்ளவர்கள்.

* இருதய நோய் உள்ளவர்கள்.

* முன்பு மாரடைப்பு , மூளை தாக்கம், உறைகுருதி போன்றவை உள்ளவர்கள்.

மெனோபாஸ் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. ஒரு சிலருக்கு உடல் உள்ள பாதிப்பு இல்லாமல் இது உண்டாகலாம். வேறு சிலருக்கு மேற்கூறிய மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றி அவஸ்தைக்கு உள்ளாகலாம்.

அவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மறு ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டு

பரிகாரம் காணலாம்.

60 வயதுக்குள் அல்லது மெனோபாஸ் எய்திய 10வருடத்துக்குள் மறு ஹார்மோன் சிகிச்சை

மேற்கொண்டால் பக்கவிளைவுகளால் உண்டாகும் தீமைகளைவிட நன்மையே அதிகம் என்று

தற்போதைய ஆய்வுகள் ( Report in April 2013 ,Climacteric ) கூறுகின்றன.

Series Navigationநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்கோவை இலக்கிய சந்திப்பு அழைப்பிதழ்