மெல்ல மெல்ல…

ருத்ரா 
மெல்ல மெல்ல..
புல் தரை ஸ்பர்சிக்கிறது.
பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி
சருக்கி ஆடுகின்றன.
மேக்னா தீக்குழம்பும் தாண்டி
வெண்டைக்காய் பிஞ்சு விரல்களின்
நகப்பூச்சு
கிலு கிலுப்பையை
குலுக்குகிறது.
அதிலிருந்து ஒரு கள்ளச்சிரிப்பு
வெறுமைக்குள்ளும்
பூவாணம் சிந்துகிறது.
பொட்டு பொட்டு வெளிச்சங்களில்
“சரஸ்வதியின்” காய்ந்த உதடுகள்
ஈரப்படுத்திக்கொள்ளுகின்றன.
நாயுருவிகள் கூட‌
என் மேனி வருடி சப்திக்கின்றன.
காற்றின் அடுக்குகளில்
நுரையீரல் நந்தவனங்களில்
வழு வழுப்பாய் புரள்கின்றேன்.
பட்டம் விடும் சிறுவன் தடவிய‌
கண்ணாடித்தூள் கயிற்றில்
ஏதோ ஒரு தொப்பூள் கொடி
மனித நாற்றத்துடன் ரோஜாவின் கூழ் காய்ச்சி
பூசியிருக்கிறது.
கழுத்து அறுபட்டால்
வானத்துக் கழுத்து நரம்புகள் புடைத்து
ஓசை கிளப்பும்.
ஜாக்கிரதையாய் தழுவுகிறேன்.
சப்பாத்திக்கள்ளியின்
சிவப்பு பூக்குண்டு முள் சிலுப்பி
முணு முணுக்கிறது.
என் மீது அப்பிக்கொண்ட‌
தட்டான் பூச்சியின் கண்ணாடி சிறகுகள்
என் மகாநிர்வாணத்துக்கு
ஆப்டிக் ஃபைபரில் பிக்கினி உடுத்துகிறது.
சிறு சிறு வெடிப்புகளின்
நீர்க்கூந்தல்களில் நங்கூரம் பாய்ச்சுகிறேன்.
அவள் தம்பி பொடிப்பயலுக்கு
அவள் சுவாசத்தில் இருந்த என் சுவாசத்தையும்
மௌன முத்தங்களால்
ஊதி நிரப்பி விட்ட‌
வண்ணப் பலூனின் பவனி இது.
உடையும் வரை உலவட்டும்.
உடையாமல் அவள்
உதட்டுத்தீவிலேயே இறங்கட்டும்.
உள்ளே ஒரு அண்டம்.
வெளியே வெறும் சோடா மூடி.
இதிலா
என் ஏழுகடல்கள் அலை குளிக்கும்?
உருண்டு கொண்டே இரு.
உருளும் திஹார்க்கூடம்
அவள் கட்டிய கட்டிடம் இது.
விடுதலை
அவள் மெஹந்திப்பஞ்சு மேகங்களின்
விளிம்புக்கூர்மைகளில்.
பூமிக்குள்ளும் கேட்கும் அவள் லப்..டப்.
வாய்ஸ் சிந்தசைசரில்
அவள் சொல்கிறாள்
ஐலவ்யூயூயூ..டா…..டா…!
====ருத்ரா
Series Navigationஅகமுகம்