மே 17 விடுதலை வேட்கை தீ

எரிந்த சாம்பலில்
எஞ்சியவர்கள் நீங்கள்

குற்றுயிரும் கொலையுயிருமாய்
குவிக்கப்பட்ட குவியலிலிருந்து
கொஞ்சமாய்
உயிர்த்தவர்கள் நீங்கள்

நந்திக் கடலேரியில்
நாதியற்றவர்களாய்
மிதந்தவர்களின் மிச்சம்
நீங்கள்

முள்ளிவாய்க்காலில்
உங்களின் குருதியாறு பாய
கொட்டும் குண்டுகளோடு
தீக்குளித்தேறியவர்கள்
நீங்கள்

உற்றாரை
பற்றிய கைகளோடு
பறிகொடுத்தவர்கள் நீங்கள்

நின்ற இடத்தில்
கால்களை விட்டுவிட்டு
நினைக்கா ஓரிடத்தில்
இழுத்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்

ஆலாயிருந்து
அலைத் துரும்பாய்
அடித்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்

நாற்பதாயிரம்
இறந்த உடல்களுக்கு மேல்
எழுந்து நிற்கிறீர்கள்
நீங்கள்

உடற்குறையும் மனக்குறையும்
உங்களுக்கு மட்டுமல்ல
தமிழை
உச்சரிக்கும் ஒவ்வொருக்கும்

பெற்றோர்களை
பெற்ற பிள்ளைகளை
அண்ணன் அக்கா
அன்புறவுகளை இழந்து

இழந்தவர்களுக்காக இன்றைக்கு
ஏற்றுகிறீர்கள் தீபங்கள்

இனத்தையே கொளுத்தியவன் முன்
இன்னும்
இருக்கிறோமென்று

தன்
இருப்பை
நெருப்பாய்

ஏற்றுகிறீர்கள் தீபங்கள்

உங்கள்
கண்ணீரில் எரிகின்றன
கண்களின் தீபங்கள்

அழுது அணைந்திடாமல்
அழுதும் எரிகின்றன
தீபந்தங்களாய்

உங்கள்
விழிகளில்
விடுதலை வேட்கை தீ

பட்டுக்கோட்டை தமிழ்மதி
thamathi@gmail.com

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3உட்சுவரின் மௌன நிழல்…