மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014

1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி

நீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி அறுக்கிறவனிடம் போய்ச் சொன்னால், “ஏதோ அய்யனாரப்பன் பேரைசொல்லி வாய்க்கு ருசியா சப்பிடலாம்னு நெனைச்சா அதுக்கும் வேட்டு வைக்கிற, போய்யா போய் வேலையை பாரு” என்பான். மேலை நாட்டில் “கடவுள் இறந்துவிட்டார்” என்று சொல்லவும் கடவுள் இருக்கிறார்” என்று சொல்லவும் அறிஞர்கள் வேண்டும். இந்திய ஞானம் “மூத்தோர் சொல் அமுதம்” என்பதில் பிறந்தது. மூத்த அரசியல் வாதி, மூத்த எழுத்தாளர், எங்கா தாத்தா சொன்னார், எங்க அப்பா சொன்னார், அவரே எழுதிவிட்டார் என்ற புலம்பல்கள் நமக்கு அதிகம். பூர்வபட்சம், சித்தாந்தம் என்பதெல்லாம் இந்திய மரபில் அரத்தமற்ற சொற்ககளாவே இருந்து வந்திருக்கின்றன. அனல் வாதம் புனல்வாதம் என்பதெல்லாம் மேடையைவிட்டு இறங்கினால், நீர்த்துபோகும், மூச்சடங்கிவிடும். இந்தியத் தத்துவங்கள் வளர்ச்சியடையாமைக்கு அதை யாரும் தொட்டுவிடக்கூடாதென்கிற பழமைவாதமும் ஒரு காரணம். நியாயமான அனுபவங்களுக்கு தலை வணங்கவேண்டியதுதான், வயதுக்கு அல்ல. முரண்படவேண்டிய சித்தாந்தத்திற்கு, முரண்பட வேண்டிய அதிகாரத்திற்கு முரண்படுவதுதான் அறிவு. தலை ஆட்டுவது அறிவின் பண்பாகது.

நீட்சே, கடவுள் இறந்துவிட்டார் என்றதுபோல “படைப்பாளி இறந்துவிட்டார்” என்ற ரொலான் பர்த் புதைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன, ஆனால் அவர் பெயரை பிரான்சு உச்சரிக்க மறந்தாலும் நாம் மறப்பதில்ல்லை. “படைப்பாளி இறந்துவிட்டார்” இறந்துவிட்டார் எனச்சொல்லியே கல்லறையில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படியானதொரு “சாகாவரம்” வேண்டியே இக்கருத்தை அவர் முன்வைத்திருப்பாரோ என்ற ஐயமும் எழாமலில்லை. செர்ழ் தூப்ரோஸ்கி என்ற மற்றொரு பிரெஞ்சு எழுத்தாளர்: “சுயசரிதையில் படைப்பாளி மறுபிவி எடுப்பதில் வியக்க என்ன இருக்கிறது, அவர் இறந்தார் எனச் சொல்லப்படுகிறபோது” என்றொரு சமாளிப்பை வைக்க, ரொலன்பர்த் தம் பங்கிற்கு ஒரு சுயசரிதையை எழுதி (Roland Barthes par Roland Barthes) அவருடைய சித்தாந்தத்தை அவரே பொய்யாக்கினார். நல்ல படைப்பாளி இறப்பதில்லை. ஒரு நல்ல படைப்பில், அது வாசிக்கப்படும் தருணத்தில் ஆசிரியன் குறுக்கிடுவதில்லை. வாசிப்பவனின் கற்பனைக்கு வழிவிட்டு அவன் ஒதுங்கிக்கொள்கிறான். ‘படைப்பாளி இறந்துவிட்டார்’ என்ற ‘பர்த்’தின் கூற்றை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி பேரிலக்கியங்களை படைத்தவர்கள் அனைவருமே சாகாவரம் பெற்றவர்கள். கம்பன் முதல் பாரதிவரை இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், அவர்கள் மரிப்பதில்லை.

பதினந்து நாட்களுக்கு முன்பு அருந்ததிராய் பிரச்சினையில் யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘பாரதிபுரம்’ நினைவுக்குவந்தது, எழுதியிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இறந்ததாக செய்தி. இந்திய இலக்கிய ஆளுமைகள் என்றதும் சில பெயர்கள் தவிர்க்கமுடியாதவை, ‘யு.ஆர் அனந்தமூர்த்தி’ அவைகளுள் ஒன்று. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஓர் அறிவு ஜீவி. எழுத்தாளர்களெல்லாம் அறிவு ஜீவிகள் அல்ல ஆனால் அறிவு ஜீவிகள் எழுதுகிறபோது அந்த எழுத்துக்கு கூடுதல் மகத்துவம் கிடைக்கிறது. மேற்கத்திய எழுத்தாளர்களில் பெரும்பானமையோர், தத்துவவாதிகளாகவோ, மொழி வல்லுனர்களாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். அந்த மேதமையும் நுண்ணறிவும் அவர்கள் எழுத்திலும் வெளிப்படும். யு.ஆர் அனந்தமூர்த்தி அத்தகைய இனத்தைசேர்ந்தவர். அவர் படைப்புகளை வாசித்துமுடித்தபின்னும் அவர் எழுத்தைவிட்டு விலகமுடியாதது அவரது பலம். பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறோம், பல பெண்களைச் சந்தித்திருக்கிறோம், தினசரி நடந்துபோகும் பாதையில் பார்த்துப் பழகிய காட்சி சித்திரங்கள் பல. இருந்தும் சில மனிதர்கள், சில பெண்கள், சில ஆசிரியர்கள், சில காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அனந்த மூர்த்தியின் கதைமாந்தர்களும் அப்படியானவர்கள். ‘சமஸ்காராவை’ எழுதும் துணிச்சல் சராசரி எழுத்தளர்களுக்கு வராது. அதுவேறு மனம். ஆங்கிலத்தில் ‘the Great’ என்ற சொல்லை வரலாற்றாசிரியர்கள் பின்னொட்டு ஆக சிலருக்குச் சேர்ப்பார்கள். அவர்கள் சரித்திரத்தை மாற்றி எழுதியவர்கள். இந்த நூற்றாண்டிற்கு கொர்பச்சேவ், மாண்டெலா இருவரும் உதாரணம். இலக்கியத்திலும் அவ்வாறான படைப்பாளிகள் இருக்கவே செய்கிறார்கள். மலரைக்கூட சூடவேண்டியவர்கள் சூடினால் தான் பெருமை. யு.ஆர் அனந்தமூர்த்தியை அழகுபடுத்தி ஞானபீடபரிசு தன்னை உயர்த்திக்கொண்டது. சமஸ்காராவும், பாரதி புரமும் உள்ளவரை யு.ஆர் அனந்தமூர்த்தியும் வாழ்வார். அவருக்கு இறப்பில்லை.

2. Vengeance sans fin ( தொடரும் பழிவாங்கல்) ஒரு ஜெர்மன் திரைப்படம்:

பால்டிக் கடலையொட்டிய அமைதியான கிராமமொன்றில் நடக்கும் கதை. ரா•ல்ப், ஹன்ஸென் என்ற இரண்டு குடும்பங்கள், அக்குடும்பத்தைசேர்ந்த பிள்ளைகள், ஒருமேயர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள். நாம் எல்லோரும் அலுத்துக்கொள்கிற அல்லது வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகள் குறுக்கிடாதவரை, நமது மனது சித்திரம் தீட்டி வைத்திருக்கிற சராசரி நாள். கணவன், மனைவி, நான்கு வயது சிறுமிகொண்ட ஒரு குடும்பத்தின் வழக்கமான காலை: டாய்லெட், பிரேக்•பாஸ்ட், அவசகரகதியில் அலங்காரம், உடுப்புகள், சினுங்கள், சேட்டை, கோபம், கொஞ்சல், சிக்கனமான வார்த்தையாடல்கள் போன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட காலை- ஒரு விபத்து காத்திருக்கிறது என்பதை நிமித்தமாகச் சொல்லப் போதாத காலை. விபத்துகளைச் சந்தித்தவர்களை கேட்டோமெனில். “எப்போதும்போலத்தான் அன்றைக்கும் அலுவலகம்போனேன், அவன் குறுகே வந்தான, ப்ரேக்கை மிதித்தேன், வண்டி நிதானமிழந்து மரத்தில் மோதி… என்ற பதிலை விம்மலும் வெடிப்புமாகக் கண்களைத் துடைத்து முடிப்பார்கள். அதுபோலவே ஒரு வாகனவிபத்து நிகழ்ந்து இரு குடும்பங்களின் வாழ்க்கைமுறையை கிழித்துப்போடுகிறது. விபத்தில் பலியான உயிரின் குடும்பம் மட்டுமல்ல விபத்துக்குக் காரணமான குடும்பமும் அல்லாடுகிறது. கிராமமே ஒரு குடும்பத்திற்கு எதிராக அணி திரளும் அவலத்திற்கு அந்த பெருநிகழ்வு காரணமாகிறது.

ஹன்ஸென் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் வழக்கம்போல ரொட்டிவாங்க கிராமத்திலிருக்கும் ஒரே கடைக்கு செல்கிறார்கள். ரொட்டிக் கடைக்கு எதிரே, பிள்ளைகள் முதுகில் ஏறி விளையாட சைத்தான் ரூபத்தில் குட்டியானையொன்று காத்திருக்கிறது. சிறுமி லிஸா தாயிடம்” ஆனை முதுகில் ஏறி சவாரி செய்யப்போகிறேன் என்கிறாள். தாய் அனுமதித்துவிட்டு, ரொட்டிக் கடைக்குள் நுழைகிறாள். அதே ரொட்டிக் கடையில் ஊதியத்திற்கு பணிசெய்கிறவளாக ரால்•ப்ப்பின் மனைவி. திருமதி ஹஸ்ஸன் ரொட்டி வாங்கிக்கொண்டு திரும்பவும் அந்த விபத்து நிகழ்கிறது. ரொட்டிவிற்கும் பெண்மணியும் பார்க்கிறாள். ரொட்டிவாங்கிகொண்டு திரும்பிய பெண்மணியும் பார்க்கிறாள். விபத்துக்குக் காரணமானவன் ரா•ல்ப். அவன் ஓட்டிவந்த காரால் உயிர் இழந்த சிறுமி ரொட்டிவாங்கவந்த திருமதி ஹன்ஸனின் ஒரே மகள். விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிவந்த ரா•ல்ப்பிற்கு நடந்தது விபத்து, எதிர்பாராமல் நடந்தது. விபத்தில் மாண்ட சிறுமியியின் குடும்பத்திற்கு அவன் கொலைகாரன். ரால்•ப் நியாயப் படுத்துவதுபோல வாகனத்தை ஓட்டிவந்த அவனுக்கு திடீரென்று ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலே விபத்துக்குக் காரணமென மருத்துவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் ஊரும் மனிதர்களும் அக்குடும்பத்தை வெறுக்கின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? திரைக்கதை இரு குடும்பங்களையும் கருத்தில்கொண்டு இருவேறு படிமங்களை எதிரெதிராக தீட்டி காட்சிபடுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் விபத்தில் பலியான சிறுமியால் கணவன் மனைவி தாம்பத்ய வாழ்க்கையே தள்ளாடுகிறது. ஏதோ இதுவரை அவர்கள் வாழ்க்கையே சிறுமிக்காக பிணைக்கப்பட்டிருந்ததுபோல. இன்னொரு பக்கம் நடந்த விபத்திற்குத் தாங்களும் பொறுப்பென குற்ற உணர்வுடன் குமுறும் குடும்பம். இது எத்தனை நாளைக்கு? எரிமலையென்றால் இன்றோ நாளையோ வெடித்தே ஆகவேண்டுமில்லையா? விபத்து ஏற்படுத்திய ரா•ல்ப் வீட்டின் சன்னல் கண்ணாடி கல்லெறியில் உடைபடுகிறது. அவனுக்கு வேலை கொடுத்த நிறுவனம் “உன்மீது குற்றமில்லையென நீதிமன்றம் ஏற்கட்டும்” அதன் பிறகு பணிக்கு வரலாம் என்கிறது. அவன் மனைவியை, “நீ பணிக்கு வந்தால் வடிக்கையாளர்கள் கடைக்கு வரமாட்டார்கள் எனக்கூறி” ரொட்டிக்கடை வேலை நீக்கம் செய்கிறது. ஆஸ்மா நோயில் அவதியுறும் அவர்கள் இளையமகனை பள்ளிப் பிள்ளைகள் பாடாய்ப் படுத்துகிறார்கள். கடலோரம் தனது காதலிக்காகக் காத்திருக்கும் அவர்களின் பெரியமகன் ஏமாற்றத்துடன் திரும்புகிறான். இறுக்கமான சூழலில், ரால்ப்ப்பும் – மனைவியும்; பெரிய மகனும் ரால்ப்பும் தினசரி வாழ்க்கையை யுத்தகளமாக மாற்றிகொள்கின்றனர். ஒரு நாள் வீட்டு சன்னல் கண்ணாடியை பழுதுபார்க்க முனையும் ரால்ப் மண்ணில் இறந்து கிடக்கிறான், தலையின் பின்புறம் அடிபட்டிருக்கிறது. புலன் விசாரணை செய்யும் காவலதிகாரி ஹன்ஸன் குடும்பத்தை முதலில் சந்தேகிக்கிறார்.பின்னர் அந்த சந்தேகம் ரா•ல்பின் குடும்பத்தின் மீதே விழுகிறது. படம் முழுக்க முழுக்க இருபெண்களின் உடல் மொழியை நம்பியிருக்கிறது. ரால்ப் மனைவியாக நடிக்கிற பெண்மணியும், விபத்தில் மகளைப் பறிகொடுத்த தாயாக வரும் பெண்மணியும் பிரம்மிக்கவைக்கிறார்கள். தண்டனைகள் வலிகளை அதிகரிக்க உதவுமேயன்றி குறைக்க உதவாது என்பதை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தை ரசிக்க கண்கள் போதும், மொழி அவசியமல்ல:

http://www.arte.tv/guide/fr/047883-000/vengeance-sans-fin
—————————————————–

Series Navigationதினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி