மோடியா? லேடியா? டாடியா?

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

 

சிறகு இரவிச்சந்திரன்

 leaders1

அடுக்கு மொழி சித்தர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ கலைக்கப்பட்டு, அவர் தி.மு.க.வில் இணைந்தவுடன், வார்த்தை விளையாட்டுகளும், சொல் சிலம்பங்களும் காணாமல் போய் விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் ஆளாளுக்கு அவருக்கு வாரிசாக புறப்பட்டு விட்ட விந்தையை என்னவென்று சொல்வேன்.

மோடி மஸ்தான் வித்தையை, குஜராத்தில் காட்டிய, கைதேர்ந்த வசியக்காரர் நமோ, உலகளந்த பெருமாளாக, அடுத்த அடியை மத்திய அரசின் மேலும், மூன்றாவது அடியை பலிச் சக்ரவர்த்திகளான அப்பாவி மக்கள் மீதும் வைக்கத் தயாராகிவிட்ட நிலையில், என் சிந்தனை சீர்கெட்டு அலைந்ததின் விளைவுதான் இந்தப் பகிர்வு.

பூர்வாசிரமத்தில் தான் ஒரு டீக்கடை பையன் என்று பறை சாற்றிக் கொண்ட மோடி, அரசியலின் ஆணி வேரே டீக்கடை பெஞ்சுகள் தான் என்று உறுதியாக நம்பி ஆரம்பித்த விளையாட்டு, நீர்த்துப் போனது, வரலாற்றின் செப்பேடு.

எண்ணி நான்கே பேர் இருக்கும் தமிழக டீ கடைகளில், மோடி பேசுகிறார் என்று, மடிக்கணினியை வைத்துக் கொண்டு, அல்லாடிய பா.ஜ.க. தொண்டர்கள், பார்வையாளர்கள் இல்லாமல் ஜகா வாங்கியது உச்சகட்ட காமெடி.

“ மோடி பேசறாரு.. வாங்க.. என்ன வேணும்னாலும் கேளுங்க “

“ எனக்கு ஒரு பெசல் டீ.. ரெண்டு வடை “

“ அதில்லீங்க.. ஒங்க கொறைங்களை சொல்லுங்க”

“ இந்த பெஞ்சு ஒரு காலு உடைஞ்சி போய் ஆடுது.. அத சரி பண்ணச் சொல்லு.. அப்புறம் டெல்லி நாற்காலியை பாக்கலாம் “

வில்லங்க குமார்கள் கூடும் இடம் டீக்கடைகள் தான் என்பதை அறியாத ‘நமோ’ தொண்டர்கள், மடிக்கணினிகளுடன் பின்னங்கால் பிடறியில் பட ஓடியது ஆக்‌ஷன் அத்தியாயம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விசயத்தில் நிரம்பத் தெளிவு உண்டு. தெரியாத கடவுளை விட, தெரிந்த பிசாசே மேல் என்பதில் அபார நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள். அவர்களிடம் இந்த டிவிட்டர், பேஸ்புக் மேஜிக் எல்லாம் எடுபடாது. தொண்டை கிழிய நாற்பது நாட்கள் கத்தி, ‘ நாற்பதும் நமதே “ என்று கூவினாலும், “ என்னா அது நாற்பது.. இன்னா நாற்பதா? இனியவை நாற்பதா? கட்டிங்கே தொண்ணூறு அத விட கம்மியா எப்படி?” என்று குதர்க்கக் கேள்வி கேட்கும் கோமான்கள், கொடி கட்டிப் பறக்கும் தமிழ் நாடு இது என்பதை மோடி அறிய மாட்டார்.

“ செய்வீர்களா? செய்வீர்களா? “ என்று ஒரு பக்கமும், “ செஞ்சீங்களா? செஞ்சீங்களா?” என்று இன்னொரு பக்கமும், தொண்டைத் தண்ணி வற்ற, தனிப்பெரும் தலைமைகள் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தாலும், பிரச்சாரம் முடிந்த ஒரு  நாள் இடைவெளியில், கிடைக்கிற துட்டை வாங்கி, வூட்டுக்கு நூறு, குவார்ட்டருக்கு நூறு என்று செலவிடும் குடிமகமன், மப்பில் “ என் தலைவருக்குத்தான் என் ஓட்டு “ என்று கத்தி, மொத்த விரல்களையும் பதிவு இயந்திரத்தின் மேல் இறக்கியதில், நான்கைந்து பட்டன்கள் அழுத்தப் பட்டு, மெசின் மெர்சலான கதைகள் நடந்ததுண்டு.

“ தில்லிக்கு அந்த மோடியா? உங்கள் முன் நிற்கும் இந்த லேடியா? “ என்று தன் ஆங்கில அறிவைப் பறை சாற்றிக் கொண்ட அம்மையாரைப் பார்த்து அதிர்ந்து போன இளவல், உடனே ஆளனுப்பி, டி.ஆர். அந்த கூடாரத்திற்கு போய் விட்டாரா என்று விசாரிக்கச் சொன்னதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனக்கும் ஆங்கில[புலமை உண்டு என்பதைக் காட்ட, பேரன் பேத்திகளின் ஆங்கில அரிச்சுவடிகளிலிருந்து, வார்த்தைகளைத் தேடி, அவர் அடுத்து விட்ட பஞ்ச் டைலாக் தான் “மோடியுமில்லை, லேடியுமில்லை, எங்க டாடிதான் “ இதைக் கேட்டு, தொய்ந்து போன தொல்காப்பியர், துவண்டு போனாராம்.

பத்திரிக்கைகளின் கருத்துக் கணிப்பு இன்னொரு தமாஷ். குமுதம் நாற்பதுக்கு நாற்பது என்கிறது. அதை அந்தண வாதம் என்று ஒதுக்கி, நக்கீரன் நாற்பதும் நமதே என்று திராவிடக் கச்சேரி வைக்கிறது. ஈசனே சொன்னது போல் நக்கீரன் சொன்னாலும் குற்றம் குற்றமே. உண்மையில் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாரறிவார்?

இராமாயணத்தையும், ராமர் கோயிலையும் புறக்கணிக்கும் திராவிடப் பிதாமகர், எம்.ஜி.ஆர். ஆட்சியை வீழ்த்த முடியாமல், “ பதிமூன்றாண்டு வனவாசம் போதாதா? “ என்று காவிய வசனம் பேசிப் புலம்பியதை, இன்னமும் மக்கள் மறக்கவில்லை. உள்கட்சி பூசலையே ஒரு நிலைக்குக் கொண்டு வராத சூழ்நிலைக் கைதியான இவர், ஆட்சிக்கு வந்து என்ன கிழித்தி விடப் போகிறார் என்று மக்கள் மனதில் ஒரு எண்ணம் ஓடாதா?

வன்முறை குறைந்திருப்பதை காரணம் காட்டி மோடியை விட நான் தான் வித்தைக்காரி என்று சூளுரைக்கும் அம்மையார், மற்ற புள்ளி விவரங்களை சவுகரியமாக மறைத்து விடுவதை மக்கள் அறிய மாட்டார்களா?

இந்தியாவிலேயே மதுவிலக்கு வெற்றிகரமாக அமுலாக்கப்படும் மாநிலம் குஜராத் எனத் தன் தலைமைப் புகழுரையாக எடுத்துரைக்கும் மோடி, அங்கே கள்ள மார்க்கெட்டில் விற்பனையாகும் சாராயத்தின் விற்பனை, தமிழகத்தை விட அதிகம் என்று பட்டியலிடும் பத்திரிக்கை செய்திகளை மக்கள் படிக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறாரா?

இந்த நிலையில் எங்கேயாவது தனி ஜீப்பில் ஒற்றை விளக்குடன், வெள்ளைக் குல்லா, துடைப்பத்துடன் வலம் கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர், வாலறுந்த நரியாக ஓடிப்போகும் அவலமும் நடந்தேறப் போகிறது.

“ ஒண்ணு கெடைச்சாலும் அது தன் ‘அன்பு’ மவனுக்குத்தான் “ என்று கனவு காணும் மாங்கனி மன்னர், மவுனத்தைக் கலைத்து, ஆதரவை அதிகப்படுத்தினாலும், அசத்தப் போவது மாண்புமிகு வாக்காளன் தான்.

‘எட்டு கட்சி கூட்டணியானாலும், துட்டு மட்டும் நம்ம கட்சிக்குத்தான்’ என்று சூப்பராக திட்டம் போட்ட ‘காக்டெய்ல்’ கலைஞர், நிதி ஆதாரங்களைப் பெருக்கி, நில ஆதாரங்களை கூட்டி விட்டதாக மக்கள் மனதில் ஒரு டிரெய்லர் ஓடுகிறது.

‘வேட்டி கட்டிய ஆள்தான் அடுத்த பிரதமர்’ என்று கலைஞானி சொன்னதற்கு தப்பர்த்தம் கற்பித்துக் கொண்டு, தடைகளை விஸ்வரூபமாக்கிய அம்மை, ஒரு வேளை வென்று விட்டால், கடவுள் தேசத்தின் பாரம்பரிய உடையை அணிந்து அரசாட்சிக்கு செல்வாரோ? எப்படியோ கலைஞானியின் கணிப்பு வெற்றி பெற்று, அவருக்கு கமல விருது அளிக்கப் பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இதில் எதிலும் பட்டுக் கொள்ளாமல் முற்றும் துறந்த முனிவரின் நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, கையறு நிலையில். அதற்கு அமேதியும் போய் விட்டால், இருக்கிற கொஞ்ச நஞ்ச அமைதியும் போய்விடும்.

எல்லா வித்தையும் இருபத்தி நான்காம் தேதி வெளிப்பட்டு விடும். அன்றைக்கு வியாழக் கிழமை. அதை குருவாரம் என்று சொல்வார்கள் தெலுங்கு மொழிக்கார்ர்கள். குருவாரம், யாருக்கு குரு வரமாக ஆகப்போகிறதோ? யாமறியோம் பராபரமே!

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    தங்க.ராசேந்திரன் says:

    மோடியா? லேடியா? டாடியா? பார்த்து விடுவோம் மே-24ல்; மக்கள் என்ன பேடியா…..

    நல்ல பதிவு; திமுகவில் சேர்ந்ததாக சொல்லப்படும் தாடி நடிகர், ஒரு வாரத்துக்குள்ளேயே தங்கள் லட்சியம் நிறைவேறாது என்று தெரிந்தவுடன் இரண்டாம் பேருக்குக்கூட தெரியாத விதமாக வெளியே வந்துவிட்டார் எனக் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *