ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 rishipoemm1

2.யாவரும் கேளி(ளீ)ர்

 

 

நாராசம்

 

எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம்

உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும்

ஓசை

கேட்டபடியே….

 

 

 

ஆயாசம்

 

பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்;

பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்;

பெண்களைப் பெண்களுக்காகப் பேசச் செய்கிறோம் என்றார்கள்

பீடமேறிகள் பலவகை என்றேன்

பிடிசாபம் என்று பகைத்துச் சென்றார்கள்.

 

 

வாசம்

 

அன்னார் பேசும் அபத்தங்களையும்

முன்மொழிந்து வழிமொழிந்தால் மட்டுமே

என்னை அங்கீகரிப்பது என்றிருப்பவரிடமிருந்து

விட்டு விடுதலையாகி நிற்கும் நேரம்

பட்டமரத்திலிருந்தும் பெருகும்

பல்லாயிரம் பூவாசம்.

 

 

நாசம்

 

நல்லவர்களை அல்லக்கைகளாக

பொல்லாங்குரைத்து

கல்லாலடித்து

காலால் மிதித்துப் பெறும்

துருவேறிய அறிவில்

பெருகும்

ரத்தக்கட்டிகள்.

 

 

 

ஆபாசம்

 

பாசிஸ்ட் என்று பழித்து முடித்த கையோடு

பாயாசம் செய்து குடித்ததை விவரிப்பார்.

நீசன் என்று திட்டித் தீர்த்தபடியே

யோசனை சொல்வார் உயிராக நேசிக்க

காயமே இது பொய்யடா என்பார்;

காசேதான் கடவுள் என்பார்…

நீட்ஷேயை மேற்கோள் காட்டுவார்.

கோயிலில் சந்திக்க நேர்ந்தால்

ஆயகலைச் சிற்பங்களின் அழகைப் பார்க்கவந்தேன் என

வேர்க்க விறுவிறுக்க விரிவுரையாற்றுவார்;

ஏதும் கேட்டிலனே நான் என்றால்

வேதம் ஓதும் சாத்தான் என்பார்;

நாய் வாலை நிமிர்த்தலாகுமோ என்பார்;

பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பார்;

நிறைய முத்திரை வாசகங்கள் அத்துப்படி அவருக்கு;

நாய் பேய் சாத்தான் – இதில் எது நான் என்பேன்

போய்விடுவார் ஆத்திரத்தோடு.

 

 

 

தேசம்

 

நான்கெழுத்துக் கெட்ட வார்த்தைகளைக் கூட

நாகரிகம் என்ற பெயரில்

நாக்குநுனியில் கட்டித்தொங்கவிட்டுக்கொள்ளலாம்;

ஆனால் ஆகப்பெரிய அறிவாளிகள் சிலரின் அகராதிகளில்

தேசம் நீசச்சொற்களின் உச்சம்.

நாடென்றாலாவது தப்பித்துவிடலாம்.

தாய்நாடென்றாலோ தண்டனை நிச்சயம்.

 

 

சுவாசம்

 

சாக்கடைகளையே சுற்றிவந்தபடி

முகஞ்சுளுக்கி மூக்கைப் பொத்திக்கொள்கிறாய்

பூக்கடைகளின் பக்கமேயிருந்து

நறுமணங்களின் கருணையை நுரையீரலில்

நிரப்பிக்கொள்கிறேன்.

உனக்கும் நறுமணங்கள் புரியும்;

எனக்கும் சாக்கடைகள் தெரியும்.

 

 

பாசம்

 

மாற்றுக்கருத்துகளினால் மோதிக்கொள்ள நேர்ந்தாலும்

அடிவருடியென்று என்னை மிக எளிதாகப் பழிப்பதற்கு முன்

அரைநொடியேனும்

குற்றவுணர்வின் பிடியில்

முற்ற முழுக்க உறையுமல்லவா உன் மனம்!

 

 

நேசம்

 

எண்ணிறந்த யுகங்கள் புறக்கணித்திருந்த பின்

அண்மையேகும் தலைவனிடம்

தீராப் பிரியத்திலும்

கண்ணில் நீர்வழியாமல் சொல்வாள் காதலி:

“ஆதலினால் ஈருடல் ஈருயிரே உண்மை.”.

 

 

 

Series Navigationசரியும் தராசுகள்இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி