‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

 

 

  1. மெகாத்தொடரெனும் மகாத்துயர்.

 

அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு

நகைவாங்கி முடித்திருந்தார்கள்.

இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில்

அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன.

முதல் தொலைக்காட்சிச் சேனலிலிருந்து ஆறுபேர் ஆளுக் கொரு தீப்பந்தமேந்திக்கொண்டு

தெருத்தெருவாக திருடர்களைத் தேடிக்கொண்டு மாட்டுவண்டியில் சுற்றினார்கள்.

பெயரறியாத் திருடர்களின் பெயர்களை உரக்கப் பாடிக்கொண்டே சென்ற அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.

ஒரு திருப்பத்தில் திடீரென எதிர்ப்பட்ட திருடர்களில் ஒருவனை அவனுடைய கூட்டாளிகளுக்கே அடையாளம் தெரியவில்லை.

அரைநிமிடத்திற்கு முன்பு ‘இனி இவருக்கு பதில் இவர்

இந்தத் திருடர் பாத்திரத்தில் வருவார்’ என்று சின்னத்திரை யில் சிந்நேரம் ஓடிக்கொண்டிருந்த அறிவிப்பை

அவர் கவனிக்கத்தவறிவிட்டார்.

நடுத்தெருவிலமர்ந்தபடி அவர்கள் கோடிகளைப் பரப்பி பங்குபோட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

மாட்டுவண்டியில் அவர்களைத் தேடியபடியே வந்தவர்கள்

நடுவீதியில் இறைந்துகிடந்த பணத்தைப் பார்க்காமல் அந்தப்புறமாய் ஒதுங்கிச்சென்றார்கள்.

பார்த்துவிட்டால் பின் மெகாத்தொடரை முடித்துவிடநேருமே….

முடிந்தால் இன்னும் நாலு வருடங்களுக்கோ நாற்பது வருடங்களுக்கோ (நான் இருக்கமாட்டேன் என்பதால் நானூறு வருடங்களுக்கோ என்று சொல்வது நியாயமாகாது!)

நீளவேண்டியவையல்லவா மெகாத்தொடர்கள்?

ஆற அமர கோடிகளை எண்ணிமுடித்து நிமிர்ந்தவர்களுக்கு அத்தையம்மா

(அத்தை என்பதுதான் முக்கியமே தவிர யாருடைய என்பதல்ல. அத்தை ஒரு குறியீடு, அடைமொழி, மெகாத்தொடர்களுக்கான தனி அகராதி; வாதி; பிரதிவாதி இன்னுமுள மீதி….)

அன்போடு தங்க லோட்டாக்களில்

தேனீர் கொண்டுவருகிறாள்.

ஆசைதீரக் குடிக்கும் திருடர்கள் அரையுயிராய்

மயங்கிச் சாய்கிறார்கள்.

சாவதற்கு முன் கோடிகளைத் தொலைத்த அந்தக் குடும்பத் தைத் தேடி தங்கள் சேனலிலிருந்து அந்த இன்னொரு சேனலுக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து

பணத்தை ஒப்படைத்து

‘நல்லபடியாகத் திருமணத்தை முடியுங்கள். நாங்கள் நல்லவர்களாகிவிட்டோம் – இதோ வெறும் கைகளோடு விடைபெற்றுக்கொள்கிறோம் என்று ஒரே குரலில் நாத்தழுதழுக்கக் கண்கலங்கக் கூறுகிறார்கள்.

அதிலொருவன் மட்டும் அடக்கமாட்டாமல் கேட்டுவிடு கிறான். ”அதுசரி, அடித்தட்டு வர்க்கக் குடும்பமென்று அடிக்கடி அழுதவாறே அடிக்கோடிட்டுக் கூறிக்கொள்ளும் உங்களுக்கு இத்தனை கோடிகள் எப்படிக் கிடைத்தன?”

அதைக் கேட்ட அந்தக் குடும்பம்

அத்தை கொடுத்த விஷம் சரியாக வேலை செய்யவில்லை யென

மருந்துக் கம்பெனி மீது நஷ்ட ஈடு வழக்குபோட்டதில் இன்னும் சில கோடிகள் அவர்களுக்குக் கிடைத்ததாகவும் அதைக்கொண்டு அவர்கள் தங்கள் மெகாத்தொடரின் இரண்டாம் பகுதியை ஒளிபரப்பப்போவதாகவும் கூறப்படுகிறது.

 

 

  1. வாசிப்பு

கவிதைவாசிப்புக்காணொளியொன்றில்

யாருடையதோ ஆவியின் குரல்

கவிதையை வாசித்துக்கொண்டிருந்தது.

அரண்டுபோய் இன்னொரு கவிதைவாசிப்புக்

காணொளிக்குச் சென்றால்

அங்கே கிசுகிசுப்பாய் வாசிக்கும் பிரயத்தனத்தில்

ஒரு குரல்

நெடுநாள் நோயாளியொருவரின் பலவீனமாய்

பாதிச்சொற்களைக் காற்றுக்குத்

தத்தம் செய்து

கவிதையின் கருப்பொருளை

மொத்தமாய் காலிசெய்தது.

ஒருவரிடமுள்ள காதலின்

லயிப்பையும் உயிர்ப்பையும் பேசும்

கவிதையை

பார்க்குமெல்லோரிடமுமான காமமாக்கிக் கிறங்கிக்கொண்டிருந்தது

இன்னொரு காணொளிக்குரல்.

தெளிவு என்ற பெயரில்

ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்குமிடையே

மாமாங்கத்தை விரிப்பதான கால அளவில்

மிக மிக நிதானமாய் வாசித்துக்கொண்டிருந்த

குரலில்

ஓடிவந்து ஆரத்தழுவ முடியாதபடி காதலி முதுமையடைந்துகொண்டிருந்தாள்.

அரற்றல், கேவல், பிளிறல், வீறிடல், அடிவயிற்றிலிருந்தெழும் ஆங்காரவோலம்

அனைத்துமனைத்தும் பனிமூட்டத்துக்

குள்ளிருந்து

தெரியும் வடிவங்களாய்…….

அந்தரவெளிப் பயணக் கொந்தளிப்புமொரு

எந்திரத்தொனியில் வெளிப்படுவதே

நயத்தக்க கவிதைவாசிப்பாக…….

சுயமழிந்தும் சுரீர்க்கூர்மையடைந்தொரு

சூட்சுமவுயிராகியும்

ரசவாதம் நிகழவேண்டி

தனியறையோரம் அமர்ந்து

தனது வானவில்லின் மீதிருக்கும்

முள்ளிலும் மலரிலுமாய்

எதிரொலிக்கும் கவிதையை

வாசிக்கும்போது

அதெப்படியோ

அத்தனை இசைவாத்தியங்களும்

அத்தனை இயற்கைக் காட்சிகளும்

அத்தனை கனகச்சிதமாய்ப் பொருந்தி

இழைந்தோட _

நோயும் மருந்துமாகும் கவிதையில்

ஊடுபாவும் நானும்

குழைந்துருகிப் பெருகிவழிந்தோட……

 

 

 

  1. மெய்நிகர் உண்மை

          [VIRTUAL REALITY]

எல்லோரும் எல்லோருடனும்

நட்பாயிருக்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும்

‘லைக்’ இடுகிறார்கள்.

எதிரெதிர் கருத்துடையவர்களோடு

தோளணைத்துப் புன்சிரித்துக்

கொண்டிருக்கிறார்கள்.

நேரெதிர் கருத்துடையவர்களை

ஒரே தராசுத்தட்டில் வைத்து

சரிசமாகப் பாராட்டுகிறார்கள்.

சில கொச்சை வார்த்தைகளை

தன்னிசையாயும் திட்டமிட்டரீதியிலும்

தெறிக்கவிட்டு

எதிர்க்கருத்தின் குரல்வளையை

நெறித்துவிடுவாரையும்

அந்த நெறிக்கப்படும் குரல்வளைகளின்

சொந்தக்காரர்களையும்

ஒரேயளவாய்ச் செல்லங்கொண்டாடி

‘லைக்’ குறியிடுகிறார்கள்;

’லவ்’ குறியிடுகிறார்கள்.

தன்வய முன்னிலைப்படுத்தல்களுக்கும்

வன்மம்நிறை அவதூறுகளுக்கும்

குந்துமணியளவு வித்தியாசமும் பாராமல்

புன்னகைக்கும், பொக்கைவாயை விரியத்

திறந்து சிரிக்கும் ‘இமோஜி’க்களைப்

பரிசளிக்கிறார்கள்.

தார்மீகக்கோபமென்பாரையும்

தட்டிக்கொடுக்கிறார்கள்

தரங்கெட்ட சொல்லுதிர்ப்பாரையும்

தோளணைக்கிறார்கள்

பொல்லாங்கு சொல்வார்,

போக்கிரிகள்,

பச்சைப் பொய்யர்கள்

பல்வண்ணக் கதைஞர்கள்

பதாகைகளை ஏந்தியேந்தியே

சமூகப்போராளிகளாகிவிடுவோர்

செத்த பாம்பை சுழற்றியடித்து

சுத்த வீரர்களாகிவிடுவோர்

சங்கநாதம் தம் கண்டத்திலிருந்தே

எழும்புவதென்று சாதிப்போர்

தடுக்கிவிழுந்து பட்ட காயத்தின்

தழும்பை

விழுப்புண்ணென இட்டுக்கட்டும்

வழியறிந்தோர்

அழும்போதும் செல்ஃபியெடுக்கத்

தவறாதவர்கள்

அப்பிராணிகளாகக் குறிபார்த்து

அம்பெய்துவோர்

அந்திவேளையழகை யனுபவித்து

சிந்துபாடியபடியே

அவனை யிவளை உந்தித்தள்ள வாகான

மலையுச்சியைத் தேடி

யலைந்துகொண்டிருப்பவர்கள்

எல்லோரும்

எல்லோருடைய நட்புவட்டத்திலும்

நல்லவிதமாய்ப் பொருந்தி

நல்லவிதமாய் ‘லைக்’கிட்டவாறு

அன்பின் வழியது உயிர்நிலை யெனும்

உன்னத இலக்கையெட்டிவிட்டோமா?

அஞ்ஞானம் நீங்கியெல்லோரும்

ஆன்ற ஞானநிலையெய்திவிட்டோமா…

சின்னதாய் உதிக்கிறது சொல்ப ஆனந்தம்…

இன்னொரு நாட்டில் போர் ஆரம்பம்.

இரண்டு சின்னஞ்சிறு செய்திகளில்

சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற இரு

சின்னஞ்சிறுகுழந்தைகள்

நாயடி பேயடி அடிக்கப்பட்டிருப்பது

தெரியவருகிறது.

சின்னஞ்சிறு சிறுமியும் வளரிளம்பெண்ணும்

அறிந்தவர் தெரிந்தவர் உற்றார் உறவினரால்

அடைக்கலம் புகுந்த ஆதரவில்லத்துப்

பாதுகாவலரால்

இரண்டுவருடங்களுக்கு பாலியல் வல்லுறவு

செய்யப்பட்டிருப்பதை இன்றும் நேற்றும்

இரண்டு நாளிதழ்களில் வாசிக்க நேர்கிறது….

இன்னுமின்னுமின்னுமாய்…..

எல்லோரும் எல்லோருடனும் ஒரேயளவாய்

நட்பு பாராட்டியவாறே லைக்கிட்டுக்கொண்டிருக்கும்

டைம்லைன்கள்

இன்னுமின்னுமின்னுமாய்…..

 

 

  1. மொழிபெயர்ப்பாளரின் முதுகெலும்பு

மொழிபெயர்ப்பாளர்களுக்கான சுயம்வரம்

நடக்கப் போவதாய்

முரசறைந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

வில்-அம்புப் பயிற்சியில் வித்தகர்களே போல்

சொல்லம்புப் பயிற்சியில் தேர்வு நடத்தப்படு மாயிருக்கலாம்

அரசபரம்பரையினரை மணமுடிப்பதென்றால்

சும்மாவா?

அதுவும் மொழிபெயர்ப்பாளர் சாமான்யரல்லவா!

இருமடங்காக முதுகுவளையப் பழகாத

மொழிபெயர்ப்பாளர்கள்

மொழியெனும் இன்காற்றுக்குத்தான்

மண்டியிடுவேனென்று

மறுத்துரைக்கக்கூடும் _

கழுவேற்றத்தோடு அவர்களை

வழியனுப்பிவைப்பதற்காய்

வெட்டப்படும் குழிகள்.

 

 

Series Navigationசொல்லவேண்டிய சில…..இசையோடு, காட்சியோடு பாடல் : ஆடும் அழகே அழகு
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *