ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 

 

காளித்துவம்

 

  1. கல்லுக்குள் தேரை

குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்:

“குளிரை வெய்யிலென்றும்

வெயிலைக் குளிரென்றும்

மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?”

“கடலை அருவியென்றும்

அருவியைக் கடலென்றும்

மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?”

குளிருக்கும் வெயிலுக்கும் மூலாதாரமான தட்பவெப்பத்தில்

அதன் அடிவேரான அற்புத இயற்கையில்

இரண்டறக் கலந்த பின்னே

யார் என்பதும் அதிகாரம் என்பதும்

குளிரும் வெய்யிலும் பிறவும்

இருமையற்றதாக

வெறுங்கால் நடைபழகிக்கொண்டிருக்கும்

இறை உறை திரு வுளமெலாம்

மறைபொருளாகி வலம்வரும் அண்டம்

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்….

 

2.யாதுமாகி நின்றாய் காளி!

வெளிபரவித் திரிந்து நிரம்பித்தளும்பும்

காற்றை

வேகவேகமாகத் தமதாக்கிக்கொள்ள

வலமும் இடமுமாய்

வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.

சின்னக் குடுவை முதல்

பென்னம்பெரிய பீப்பாய் வரை

அவரவர் வசதிக்கேற்ப

வழித்துத் திணித்துக்கொண்டு

ஆளுயரக் அண்டாவிலோ

அந்த வானம் வரை உயரமான

தாழியிலோ

நிரப்பிவைக்க முயன்றால் எத்தனை

நன்றாயிருக்கும்

என்று அங்கலாய்த்தபடி

நானே காற்றுக்கு அதிபதி

நானே காற்றின் காதலன்

நானே காற்றின் ஆர்வலன்

நானே காற்றின் பாதுகாவலன்

நானே காற்றைப் பொருள்பெயர்ப்பவன்

நானே காற்றை அளந்து தருபவன்

நானே காற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன்

நானே காற்றைக் கூண்டிலடைத்திருப்பவன்

என்று நானே நானேக்களால்

நன்கு வளர்ந்தவர்கள்

நாளும் மூச்சுத்திணறியவாறிருக்க

நான்கு வயதுக் குழந்தையொன்று

தளர்நடையிட்டுவந்து

நன்றாய்த் தன் காலி உள்ளங்கைகளைத்

திறந்து காண்பித்துச்

சொன்னது:

“என் கையெலாம் காற்று!”

  1. குட்டிப்பெண் காளீஸ்வரி!

கயிறிழுக்கும் போட்டி உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது.

இருபுறமுமிருக்கும் இரண்டு குழுக்களும்

பிறவி வன்முறையாளர்களாய் இழுத்துக்கொண்டிருந்தனர்.

ஒரு குழுவில் ஒருவரது கை

சற்றே தளர

சரேலென்று பின்சரிந்து விழுந்தனர்

இருகுழுக்களில் ஒன்று

சமயங்களில் இரண்டுமே.

ஆளாளுக்குக் கைகொடுத்துத்

தூக்கிவிட்டவாறே

அடுத்த சுற்றுக்குத் தயாராகின்ற

இருதரப்பினருக்கும்

கிடைத்த சிறிது இடைவேளையில்

தேனீர் தரப்படுகிறது.

லோட்டாவின் சூட்டில்

கனன்றெரிகின்றன கயிறின்

கீறல்கள்

வெட்டுக்காயங்கள்

வீங்கிவிட்ட உள்ளங்கைகள்.

பார்த்துக்கொண்டிருந்த சிறுமி

ஒன்றும் புரியாமல் கேட்கிறாள்:

“நீங்களெல்லோரும் ஏன்

இந்தக் கயிறையிழுக்கிறீர்கள்?”

“இதுவொரு போட்டி.

வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

உண்டு”.

“வீரத்திற்கோர் விளையாட்டு இது.”

திக்கற்றவர்களுக்குத் துணைநிற்பதல்லவா

வீரத்தின் சாரம்.

வீணுக்கு இழுக்கவேண்டாம் கயிறை.

அதற்கும் வலிக்குமே!

வாருங்கள் !

கரங்கோர்த்துத் தட்டாமாலை தாமரைப்பூ

விளையாடுவோம்!”

சொன்னவள் நாவில் இனித்த சொற்களைக்

கேட்டவர் காதுகளிலெல்லாம் சுநாதம் பாய

தன் வலி மறந்து கயிறு களிநகைபுரிய

மண் சிலிர்க்க மனம் நிறைய

தோளோடு தோள்சேர்ந்து

வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்

தெய்வங்களாய் மானுடர்கள்.

சிறுமி அகிலாண்டநாயகியின்

பேரானந்தச் சிரிப்பு

வெளியெங்கும் ரீங்கரித்தவாறு.

 

 

  1. போதமாகி நின்றாய் காளி!

சொப்பனங்கள் சொல்லற்கரியவை!

அத்தனை அடர்ந்த

அரூப ஓவியம்போல்….

அடியாழம் தொடும்

இருண்மைக்கவிதைபோல்….

ஒன்றையேனும் ஓரளவேனும்

கோர்வையாய்ச் சொல்லமுடிந்தால்

வரமருளப்பெற்றதாய்!

உறக்கத்தின் விளிம்பில்

விசித்திரமான வாலோடு

தன்னைப்போலொரு நிழலுருவம்

வளையவருவதைப் பார்த்தவள்

விறுவிறுவென அரைவிழிப்பெய்தி

யதை வரிவடிவில் முழுமையாக்கி

முடிக்கப்புறப்பட்டபோது

அவள் தோளில் அத்தனை அழகிய

பஞ்சவர்ணக்கிளியொன்று

வந்தமர்ந்தது!

நெற்றிப்பொட்டில் இரண்டறக்

கலந்தன

சந்திரனும் சூரியனும்!

பெருங்கோபத்தில் அவள்

வெட்டிவீழ்த்திய

கெட்டவர்களெல்லாம்

பேரன்பில் புண்ணியாத்மாக்களாக

மாறி

அவளை சூழ்ந்துகொண்டு

கட்டிக்கொண்டனர்!

மனங் கனிந்துருகி யவள்

விழிகளிலிருந்து

கண்ணீர் தீர்த்தமனைத்தாய்

வழியத்தொடங்கியபோது _

சட்டென்றொரு கடுஞ்சூறாவளி வீசி

கனவின் மேலெல்லாம்

கனத்த போர்வையாய்

படர்ந்து மண்டியது

பெரிய பெரிய பூட்டுகளுடன்

பாழும் தூசி.

சுற்றிலும் அந்தகாரம்.

சிதறடிக்கப்பட்டு

எங்கெங்கோ சிக்கிச்

சுருண்டு கிடந்தன

சொப்பன மென்னிழைகளால்

பின்னப்பட்ட வரிகள்.

வருத்தத்தோடு சிரித்துக்கொண்டாள்

பிரகதீசுவரி

மூவேழுலகும் கனவென்றும் நனவென்றும்

தினந்தினம்

கண்ணாமூச்சியாடிக்கொண்டிருக்கும்

மாகாளியறியாதவையா

மிகுபுயல்கள்?

  •