’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும்

இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி

இடைப்பிளவில்

இன்னொருவனுடைய அன்புக்குரியவளின்

நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து

கழுத்து முறியுமோ என்ற கவலையின்றி

கட்டித்தொங்கவிட்டிருந்தவன்

திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணிடம்

தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்ததைக்

காரணம் காட்டி

அவனை கயவனிலிருந்து அற்புதக்காதலனாக்கிவிட்டபின்

கைக்குக் கிடைத்த அவள் காதலனை

நல்லவன் என்றே சொல்லிக்கொண்டிருந்தால் பின்

வில்லனுக்கு எங்கே போவது?

தோற்றதாலேயே ஒருவனைத் தூயவனாக்கித்

தோள்மீது தூக்கிக்கொண்டாடுபவர்களுக்கு

வெற்றியாளன் எப்போதுமே வெட்கங்கெட்டவன்;

அக்கிரமக்காரன்; அராஜகவாதி.

பாதிப்பாதியாய் இருந்தாலும்

பிடித்த பெண்ணை காததூரம் இன்னொருவன்

கவர்ந்துசென்றாலும்

வாய்மூடியிருக்காமல் வாள்சுழற்றுபவன்

வலிமையை அதிகாரமாகப் பயன்படுத்துபவன்.

மண்ணைக்கவ்வியதாலேயே மகானுபாவன் என்று முடிவு செய்தபின்

அவன் துரத்தித்துரத்தி வெட்டிச்சாய்த்தவர்களின்

வலியெதற்குத் தெரியவேண்டும்.

வெற்றியில் நியாயமானவையும் உண்டென்பதை

முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கற்றுவிட்ட பின்

தோற்றவன் கை வாளும் துப்பாக்கியும்

கொய்தெடுத்த தலைகள்

கணக்கில் வராமல் போய்விடுவதும்

அவை தெறித்துவிழுந்த நிலங்களில் பரவியிருக்கும் ரத்தக்கறை

விழிகளுக்குள் நுழையுமுன்பே அழிந்துவிடுவதும்

வழக்கம்தானே?

வியப்பென்ன இதில்?

நல்லவேளை

நம் கருப்பு-வெள்ளைப் படங்களும் கலர்ப்படங்களும்

கெட்டவர்களாயிருப்பதாலேயே உத்தமர்களாக்கிவிட வில்லை _

நம்பியாரையும் அசோகனையும்

கதைநடுவிலோ முடிவிலோ _

மனம் திருந்தினால் மட்டுமே

மனோகர் O.A.K. தேவர் மனிதர்களாகக்

கொள்ளப்பட்டார்கள்.

விட்டத்தையே வெறித்துப் பார்க்கத் தோதாய்

கட்டாயமாய் சிறைக்குள் தள்ளப்பட்டான்

மொட்ட Boss.

  •  
  • ஆழம்

கிணறின் ஆழமோ குளத்தின் ஆழமோ ஏரியின் ஆழமோ

எதுவும் தெரியாது.

கடலின் ஆழத்தையும் சமுத்திரத்தின் ஆழத்தையும்

இத்தனையித்தனை அடி மீட்டர் கிலோமீட்டர்

என்று படித்தால் மட்டும் பிடிபட்டுவிடுமா என்ன?

அத்தனை சூடாக இருக்கும் ‘ஸ்ட்ராங்க்’ காஃபியின் ஆழம்

கோப்பையின் கொள்ளளவுக்குள் அடங்கிவிடுவதில்லை.

சிறு அமிலச்சொட்டு எட்டும் ஆழம்

சுட்டெரிக்கும் வலி சொல்லப்போமோ?

’உண்டி’ன் ஆழமும் ’இல்லை’யின் ஆழமும் எல்லையற்றதாக ….

சொல்லின் ஆழம் சொல்லக்கூடுமோ?

புல்லுக்கு ஆழம் இல்லையாமோ?

வரு மழையின் ஆழம் வானிலை ஆய்வுத்துறை

வாசிப்பதாமோ?

உறுநினைவின் ஆழம் அறியப்படுமோ?

ஒரு கண்ணீர்த்துளியின் ஆழத்தைக்கூடத் தெரிந்துகொள்ளவியலாத மண்ணாந்தை நான்…..

இருந்துமிருந்துகொண்டிருக்கும் எனக்குள்ளாக

அடுப்பும் கெட்டிலும்

உண்டும் இல்லையும்

கிணறும் கடலும்

கண்ணீர்த்துளியும் அமிலமும்

சொல்லும் புல்லும்

நினைவு மெல்லாமும்.

*** ***

Series Navigationசிலப்பதிகாரத்தில் புலிக்கொடியோன்கள்