ரிஸானாவிற்கு சவுதிஅரசின் மரணதண்டனை

இலங்கை மூதூரைச் சேர்ந்த இருபத்து மூன்றே வயதான முஸ்லிம் பெண்ணுக்கு சவுதிஅரேபிய அரசு மரணதண்டனை வழங்கி கொலை செய்துள்ளது.சவுதிஅரேபிய குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த சிறிது நாட்களிலேயே சவுதி எஜமானியின் நான்குமாத குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டியபோது வாய்வழியாகவும்,மூக்குவழியாகவும் புரையேறி அக்குழந்தை தற்செயலாக இறந்துள்ளது.. அப்போது .ரிஸானாவுக்கு பதினேழுவயது. 2005 இல் கைது செய்யப்பட்ட அந்த ஏழைப் பெண் ரிஸானா சவுதி அரசால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 2013 ஜனவரி 9 அன்று மரணதண்டனை வழங்கப்பட்டு கொல்லப்பட்டாள். சவுதி அரசு ஷரீஅ சட்டப்படி இந்த தண்டனையை வழங்கியதாக கூறுகிறது.

1)தற்செயலாக நிகழ்ந்த ஒரு மரணத்தை ஷரீஅ கொலைக்குற்றமாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறதா…

2) பணிப்பெண் வேலைக்கு சென்ற இரண்டு வாரங்களிலேயே பதினேழுவயது சிறுமி ஒரு குழந்தையை கொன்றாள் என்றால் ஏதேனும் பொருத்தப்பாடு இருக்கிறதா…

3) போர்க்காலங்களில் தாக்க வரும் எதிரிகளை பழிக்கு பழியாக கொலைசெய்ய குரான் அனுமதிக்கிறது. என்றால் காபிர்களை

அமைதிக் (இஸ்லாம் அல்லாதவர்களை) காலச் சூழலிலும் கொல்ல குரான் அனுமதிக்கிறது என்று கூறுவது அறிவுடமையாகுமா?

4) தற்செயலாக மரணமடைந்த நான்குமாத குழந்தையின் உயிரும்,பெற்றோர்களை துறந்து வறுமையின் காரணமாக அரபுநாட்டில் வீட்டு கொத்தடிமையாக பணிசெய்த இருபத்துமூன்று வயது இளம் பெண்ணின் உயிரும் சமமாகுமா…

கொலை பற்றிய சில குறிப்புகள்

யூதர்களோடான விவாத அரசியலின் ஒரு பகுதியாகவே குரானின் அல்பகரா அத்தியாயத்தின் 178ஆவது வசனம் கொலைபற்றியும் அதற்கு பழிவாங்குதல் பற்றியும் பேசுகிறது.இதில் சுதந்திரமானவனுக்கு பதிலாக சுதந்திரமானவன்,அடிமைக்கு பதிலாக அடிமையும்,பெண்ணுக்கு பதிலாக பெண்ணும் பதிலியாக சொல்லப்பட்டுள்ளது. சவுதிச் சூழலில் நான்குமாத குழந்தைக்கு பதிலியாக முஸ்லிம் பெண் ரிஸானாவிற்கு மரணதண்டனை என்பது இவ்விதத்திலும் குரானிய நெறிப்படி அமையவில்லை.

குரானின் அல் அன் ஆம் அத்தியாயத்தின் 140ஆவது வசனம் அறிவின்றி மடமையினால் தங்களுடைய குழந்தைகளை உயிருடன் புதைத்துக் கொன்றவர்களையும், ஆகுமான உணவினை உட்கொள்ளவிடாமல் தடுத்தவர்களும் வழிகெட்டுவிட்டதாக அன்றைய அரபுலக கலாச்சார நடத்தையை கண்டனம் செய்து விமர்சிக்கிறது.

குரானின் பனீஇஸ்ராயீல் அத்தியாயத்தின் 31ஆவது வசனம் வறுமைக்கு அஞ்சி குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என அறிவுறுத்துகிறது.தொடர்ந்து இடம் பெறும் 33ஆவது வசனம் எவரேனும் அநீதி இழைக்கப்பட்டவராக கொலை செய்யப்பட்டு விட்டால் அப்பொழுது பழிவாங்க அவருடைய வாரிசுக்கு அதிகாரத்தை திட்டமாக நாம் வழங்கியுள்ளோம். எனினும் பழிக்குப் பழி கொலை செய்வதில் அவர் வரம்பு மீறிவிடவேண்டாம் என்கிறது.

மேலும் குரானில் அல்மாயிதா அத்தியாயம் 32ஆவது வசனம் மற்றுமொரு முக்கிய குறிப்பை முன்வைக்கிறது. பூமியில் ஏற்படும் குழப்பத்தை நிறுத்துவதற்காக என்றில்லாமல் ஒரு ஆத்மாவுடைய கொலைக்கு பதிலாக எவரொருவர் மற்றொரு ஆத்மாவை கொலை செய்கிறாரோ அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் அவர் கொலைசெய்தவர் போன்றாகிவிடுவார்.

மேற்கண்ட இறைச்சட்டமான குரானிய கருத்தாடல்களின் வெளிச்சத்தில் ரிஸானாவிற்கு சவுதி அரசால் வழங்கப்பட்ட வாளால் தலை வெட்டப்பட்ட மரணதண்டனை ஒரு அநீதியாகவே வெளிப்பட்டுள்ளது. இதனை மனித சமுதாயத்திற்கும், மனித உரிமைக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு வன்முறையாகவே மதிப்பிடலாம்.

தன்மானமுள்ள உம்மா

சவுதிஅரசின் மரணதண்டனைக்கு ஆளான ரிஸானா நபீக்கிற்கு நிகழ்ந்த அநீதி குறித்து அவரது சொந்த ஊரான முதூரில் மெளனமே மிஞ்சியது.இந்த மெளனத்தை ஒருவித அச்சத்தின் வெளிப்பாடாகவே கருத முடியும்.முஸ்லிம்களின் ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என அப்பிரதேசத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான முஹமது ராஜீஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷரீன் அப்துல் ஷரூர் இதற்கு மாற்றானதொரு கருத்தையே முன்வைக்கிறார்.சவுதி அரேபியாவின் உள்நாட்டுச் சட்டங்களில் நாம் தலையிடமுடியாது. என்றாலும் இந்தப் பிரச்சினையில் ஷரீஆ சட்ட த்தின் அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை என்றும் அந்தச் சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்தச் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ரிஸானாவிற்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனமே என்றும் அவர் தனது பதிவை தமிழோசையில் தெரிவிக்கிறார்.

சவுதிக்கான இலங்கைத்தூதர் அகமது ஜாவேத் ரிஸானாவை காப்பாற்றஇலங்கை அரசும் தூதரகமும் உரியநடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது சரியன்று. சவுதியில் இப்படியான வழக்குகள் வரும்போது அரசுதரப்பு வழக்கறிஞர்களும்,காவல்துறையும் முன்வைக்கும் ஆதாரங்களை நீதிபதிகள் ஆராய்வார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட முடியாது என்றும் தெரிவிக்கிறார்.

சவுதி மன்னருக்கு மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் ஷரீஆ சட்டப்படி இல்லை என்றாலும் நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு அதைச் செய்ய முயற்சி எடுத்தப் பிறகும் பயனளிக்கவில்லை.இலங்கையின் மூன்று தூதுக்குழுக்கள் முயன்றபோதிலும் அக்குடும்பத்தினருடன் பேசமுடியவில்லை என்பதாக தூதர் தெரிவிக்கிறார்.

இஸ்லாமிய அடிப்படையில் குரான் கூறும் மன்னிப்பு என்பது கொலைக்குற்றத்திற்குத்தான் பாதிக்கப்பட்டோரின் மன்னிப்பும் ஈட்டுத்தொகையும் வழங்கப்படவேண்டும்.இது ஒரு தற்செயல் மரணத்திற்குப் பொருந்துவதாக இல்லை.பிரேதபரிசோதனை அறிக்கை இல்லாமை,ரிஸானாவின் வாக்குமூலம் ,மொழிபெயர்ப்புச் சார்ந்த புரிதல் ,இலங்கை அரசின் மெத்தனப்போக்கு ,கடந்த ஐந்து வருடங்களாக பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு மன்னிப்பை கோருவதற்கு உரிய ஏற்பாட்டை செய்யாமை ,சவுதி அரேபிய நீதி பரிபாலனத்தில் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட முடியாத உரிமையின்மை என பல துணைக்காரணிகளும் இப்பிரச்சினையில் செயல்பட்டுள்ளன.

ரிஸானாவிற்கு பதிலாக ஒரு சிங்களப்பெண்ணாக இருந்தால் இலங்கை அரசு இப்படி இருந்திருக்குமா அல்லது குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒரு மேற்கத்திய வெள்ளை இனப்பெண் என்றிருந்தால் சவுதி அரசு இந்த தண்டனையை நிறைவேற்றி இருக்குமா என்பதான கேள்வியும் இங்கு எழாமல் இல்லை.

சவுதிமன்னராட்சி அமெரிக்க ஐரோப்பிய ராணுவ மேலாதிக்கவாதிகளின் காலடியில் ஷரியாவை அடகுவைத்திருக்கும் சவுதிமன்னராட்சி ஏகபோகிகளுக்கு சாதாரண ஏழை எளிய முஸ்லிம்களின் உயிர் ஒரு பொருட்டே இல்லை.இதில் வேறு சவுதி நிதி உதவியில் கொண்டிருக்கும் சில முஸ்லிம் சலபி/வகாபி அமைப்புகளின் ஷரிஆ குறித்த போலி கூக்குரல்கள் மிகவும் கீழ்மையாகவே ஒலிக்கின்றன.

அல்லாஹ்வின் மீது ஆணையாக குழந்தையை நான்கொல்லவில்லை எனபதான ரிஸானாவின் கண்ணீர் வாக்கு மூலம் வெளியாகி உள்ளது. எனினும் ரிஸானா கொல்லப்பட்டுள்ளாள். இந்நிலையில்

சவுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் மரணதண்டனைக்கு ஆளான ரிஸானாநபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற் கொண்டு சவுதிஅரேபியாவின் செல்வந்தர் ஒருவர் ரிஸானாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளதை சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

இதற்கு என்னுடைய மகளைக் கொலைசெய்த சவூதி அரசாங்கத்தினதோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களின் உதவிகளோ தங்களுக்கு வேண்டாம் என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் தாய் அஹ்மது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ள தன்மானமுள்ள ரிசானாவின் தாயார் சவூதியைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். –

ஆரியவதியின் துயரக்கதை

இலங்கை தெற்கு பகுதி வடதெனிய இடத்தைச் சேர்ந்த நாற்பத்தொன்பது வயதான ஆரியவதி சவுதி அரேபிய வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்தபோது அவள் உடல்மீது நிகழ்த்தப்பட்ட சித்தரவதை தாங்காமல் சவுதியை விட்டு தப்பி இலங்கைக்கு திரும்பிவந்திருக்கிறார். ஆர்யவதியின் உடலில் ஆணியறைந்து கொடுமைப்படுத்திய உடல்பகுதிகள் வன் கொடூரம் நிகழ்ந்துள்ளது.. ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஒட்டி சவுதிக்குள் நடக்கும் வீட்டுப் பெண்களுக்கு இழைக்கப்படும் சித்தரவதைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக படுபயங்கரமாய் வெளிவரத் தொடங்கியுள்ளன.சவுதி குறித்த புனிதங்களால் எழுப்பப்பட்ட பிம்பங்கள் வெகுவாக கலைந்து உதிர்ந்து விழுகின்றன.
இங்கே ஆரியவதியின் உடலில் 24 ஆணிகள் அடித்து ஏற்றப்பட்டுள்ளன.
கண் இமை நெற்றிக்கு அருகில் ஒரு கம்பி,வலது கையில் 5 ஆணிகள், ஒரு கம்பி,இடது கையில் 3 ஆணிகள் 2 கம்பிகள்,வலது காலில் 4 ஆணிகள் ,இடது காலில் 2 ஆணிகள் என நீள்கிறது.இதில் கூடிய நீளமுள்ள ஆணியின் அளவு 6.6செமீ. இலங்கைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் திரும்பிவந்த ஆரியவதிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு 13 ஆணிகள் நீக்கப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில் சராசரி 20 சடலங்கள் மாதாந்திரம் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாகவும் இது இயற்கைமரணம்,விபத்து மரணங்களை உள்ளடக்கிய விவரம் என்பதாக ஒரு தகவல் குறிப்பு சொல்கிறது.
இலங்கையர்கள் 1.8 மில்லியன் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இதில் எழுபது சதவிகிதம் பெண்கள். சவுதியில் பணிபுரியும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்களில் நான்கு லட்சம் பேர் இலங்கையர்களாக உள்ளனர்.
மாதாந்திரம் 18 ஆயிரம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர், இதில் இந்தியா இலங்கை,இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த பெண்களே எண்னிக்கையில் மிக அதிகம். பாகிஸ்தான்,பங்களாதேஷ் அரசுகள் வீட்டு வேலைக்கு பெண்கள் செல்வதை தடை செய்துள்ளது.
சவுதி எஜமானர்களின் சித்தரவதையும்,துன்புறுத்தல்களையும் தாங்காமல் இலங்கைப் பணிப் பெண்கள் 400 பேர் தப்பி நாடுதிரும்ப முயன்று தோல்வியடைந்துள்ளனர்.ரியாதின் உலெய்யா முகாமிலே இவர்கள் தடுத்து வைக்க்ப் பட்டுள்ளனர்.சம்பளம் வழங்கப்படாமை ,பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இப் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதாக இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதவிய பதிவுகள்:

1)ஆசியன் டிரிபியூன் டாட் காம்

2)ஏ.பி.எம். இத்ரீஸ் வலைத்தளம்

3)பெண்ணியம் டாட் காம்

4)நியூஜாப்னா டாட்காம்

நன்றி:உயிர்எழுத்து பிப்ரவரி 2013

Series Navigationஅவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை