ரேபீஸ்

 

டாக்டர் ஜி.ஜான்சன்

இரவு பத்து . அவசரப் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல்.

நான் அன்று அவசர அழைப்பு மருத்துவர்( on call doctor ). இரவு முழுதும் வரும் அவசர நோயாளிகளைப் பார்த்து தேவையெனில் வார்டில் சேர்க்கவேண்டும். அதன் பின்பு வார்டு மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொள்வார்கள்.

நான் வீட்டில்தான் இருப்பேன். நோயாளி வந்தால் மட்டுமே வெளியேறுவேன். அவசர அவசரமாகப் புறப்பட்டு அவசரப் பிரிவிற்குச் சென்றேன்.

சிவகங்கை திருப்புத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை அப்போது சுற்றுவட்டார மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வந்தது. ஏழை எளியோருக்கு இலவசை சிகிச்சை தரப்பட்டது. அதே வேளையில் வசதி படைத்தொரிடமிருந்து சிறு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பொது மருத்துவமனை அது, மருத்துவம், அறுவை சிகிச்சை, பெண்கள் வியாதி, மகப்பேறு, குழந்தை வைத்தியம், கண் , தொழு நோய்ப் பிரிவு என்று முந்நூறு படுக்கைகள் கொண்ட வசிதிகள் இருந்தன. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்து இயங்கியது.

தொடக்க காலத்தில் ( 100 வருடங்களுக்கு முன் ) சுவீடன் நாட்டு மருத்துவர்கள் இங்கு பணி புரிந்தபோது மேல் நாட்டு பாணியில் இதை நடத்திவந்தனர். அவர்கள் நிரந்தரமாக திரும்பிப் போனபின்பும் அதே முறையில்தான் அனைத்தும் இயங்கியது.

 

அவசரப் பரிசோதனை அறையில் இரவு தாதியர் பலர் ஒரு கட்டிலைச் சூழ்ந்திருந்தனர். அந்த கட்டிலில் மித்திரன் படுத்திருந்தார். அவர் குளிரில் நடுங்குவது தெரிந்தது. ஆனாலும் அறை வேப்பமாகத்தான் இருந்தது .  அவருடைய மனைவி மரியம்மாள் சோகத்துடன் அருகில் நின்றார்.

” என்ன மித்திரன்? என்ன ஆனது? நேற்று பார்த்தபோது நன்றாகத்தானே இருந்தீர்கள்? இப்படி நடுங்குகிறீர்களே? ” அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கொதித்தது.

” ஆமாம் டாக்டர். கொஞ்ச நாளாக ஒரு மாதிரிதான் இருந்தது. இன்றுதான் இப்படி.” அவரால் அதிகம் பேச முடியவில்லை.

” இல்லையே? நேற்று இரவு சிஸ்டர் பாலின் வீட்டு பிறந்தநாள் விருந்தில் நன்றாகதானே இருந்தீர்கள்? ”

” அப்போதே எனக்கு சாப்பிட குடிக்க பிடிக்கலை டாக்டர். வேறு வழி இல்லாமல்தான் சமாளித்தேன்.. இப்போ என்னால் முடியலை டாக்டர். ”

சுற்றி இருந்த தாதியர் விலகிச் சென்றனர். அவசரப் பிரிவு தாதி அமுதா மட்டும் உடன் இருந்தாள் .

” டெம்பெரேச்சர் 40 டிகிரி செல்சியஸ் . பீ. பி . 130/ 90 ” என்று தெரிவித்தாள்.

மித்திரனை பரிசோதனை செய்து பார்த்ததில் வேறு ஏதும் தெரியவில்லை. இரத்தப் பரிசோதைகள் செய்து பார்த்தால்  ஏதாவது புலப்படும் என்ற நோக்குடன் அவரை படுக்கையில் சேர்த்தேன்.

” சரி இரவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் மித்திரன். காலையில் பார்ப்போம் .” அவரிடமிருந்து விடை பெற்றேன்.

மருத்துவரின் அறைக்குச் சென்று குறிப்புகளை எழுதி முடித்தேன். அமுதா அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எனக்கு மிகவும் அபிமானமானவள். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அவள் என் மாணவியாக இருந்து தாதி ஆனவள்.

அவள் எங்கள் தாதியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றபோது நான் மருத்துவ வகுப்புகள் எடுத்துள்ளேன். அப்போது அவள் வகுப்பில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தவள்.

பளிச்சென்ற பொன்னிற மேனியும் கறுகறுவென்று கார்மேகக் கூந்தலும் கொண்டவள் அமுதா.தாதியர்களில் தனி அழகுடன் பவனிவரும் இருபது வயதுடைய பருவ நிலா அமுதா!

” தேநீர் வேண்டுமா டாக்டர்? ” என்று கேட்டதற்கு சரி என்றேன்.

சிறிது நேரத்தில் தேநீர் கிண்ணத்துடன் அருகில் வந்தாள் .

தேநீர் அருந்திய போது மித்திரனின் குரல் கேட்டு இருவரும் அவரிடம் சென்றோம்.

” டாக்டர்.. ரொம்ப குளிருது . அந்த பேன் ( fan ) வேண்டாம் . குளிர் காத்து பிடிக்கலே. ” கெஞ்சாத குறையாகக் கேட்டார். உடன் அமுதா அந்த சுழல் மின்விசிறியை நிறுத்தினாள்.

பொதுவாக இதை வைரஸ் காய்ச்சல் என்றுதான் சிகிச்சை தருவோம். அப்போது டெங்கி காய்ச்சல் அப் பகுதியில் இல்லை இதுபோன்று இரவு நேரத்தில் குளிர் காய்ச்சல் வந்தால் மலேரியா அல்லது பைலேரியா ( filaria ) காய்ச்சலாக இருக்கலாம். அதனால் நள்ளிரவு இரத்தப் பரிசோதனை செய்வது வழக்கம்.அதையும் செய்யச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

இரண்டு மணியளவில் அமுதா தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரத்தப் பரிசோதனையில் மலேரியா, பைலேரியா இல்லை என்று தெரிவித்தாள். இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்ற முடிவுடன் படுத்துவிட்டேன்.

காலை எட்டு மணிக்கு மீண்டும் வார்டு சென்றபோது, மித்திரன் வேறு விதமாகக் காணப் பட்டார். எதையோ இழந்து போனேவர் போல் பரபரப்புடன் எழுவதும், படுப்பதுமாக இருந்தார்.கண்களும் ஒரு நிலையில் இல்லாமல் இங்குமங்கும் மாறிமாறி பார்த்தன. ஒருவகையில் சுயக் கட்டுப்பாடு இழந்தவராகவும் தென்பட்டார்.

அதிகமான காய்ச்சலில் ஒரு சிலருக்கு டெலிரியம் ( delirium ) ஏற்படுவதுண்டு.டெலிரியம் என்பது நச்சுத்தன்மைமிக்க குழப்ப நிலை ( toxic confusional state ) என்றும் அழைக்கப்படும்.மூளையின் செயலிழப்பால் கவனம் செலுத்துவது பாதிக்கப்பட்டு, இதுபோன்று , பார்ப்பதும் கேட்பதும் புரியாமல் உண்டாகும் குழப்பமான மனநிலை இது. அதிகமான கிருமித் தோற்றாலும் ( infection ), இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவிவிட்டாலும் ( septicaemia ) இதுபோன்று டெலிரியம் தோன்றலாம்.

ஆனால் மித்திரனுக்கு நேற்றுதானே காய்ச்சல். ஒரு நாளில் இப்படி மூளையையோ இரத்தத்தையோ எந்த காய்ச்சலும் பாதிக்கும் வாய்ப்பு இல்லையே என்று அவரைவிட நான் அதிகம் குழம்பி போனேன்!

இரவு செய்த இரத்தப் பரிசோதனைகளில் வெள்ளை இரத்த செல்களின் ( white blood corpuscles ) அளவு 10.000 மேல் உயர்ந்து கிருமித் தோற்றுதான் ( infection ) என்பதை உறுதிப் படுத்தியது. ஆனால் அது என்ன கிருமி?

செபுராக்சிம் எண்டிபையாட்டிக் ( Cefuroxime ) ஊசி மருந்தை ட்ரிப் வழியாக தந்து விட்டு வெளிநோயாளிகள் பிரிவிற்கு சென்று நோயாளிகளைப் பார்க்கத் துவங்கினேன்.

சுமார் பாத்து மணியளவில் சிஸ்டர் பாலின் என்னைக் காண வந்தார்.

” டாக்டர், உங்களிடம் ஒன்று சொல்லணும். மித்திரன் பற்றியது. ” பரபரப்புடன்தான் அவர் காணப்பட்டார்.

” வாங்க சிஸ்டர் உட்காருங்கள். சரி சொல்லுங்கள் சிஸ்டர். நானும் அவரைப் பற்றிதான் எண்ணிக் கொண்டிருந்தேன்.அவரின் காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இது சாதாரண காய்ச்சல் இல்லை ”

சிஸ்டர் பாலின் மருத்துவமனையில் பல வருடங்கள் பணிபுரியும் மூத்த தாதி. என்ன கூற வந்துள்ளார் என்று அவரைக் கூர்ந்து பார்த்தேன்.

” டாக்டர். எனக்கு ஒரு சந்தேகம்.இரண்டு வாரத்துக்கு முன் மித்திரன் ஒரு நாய்க் குட்டியை எங்கிருந்தோ தூக்கிவந்து வளர்க்க எண்ணினார்  ஆனால் அன்றே அது அவரின் விரலைக் கடித்து விட்டது. அவர் உடன் கழுவி ஹேண்டி பிளாஸ்ட் ( handy plast ) போட்டுக்கொண்டார். என்னிடம்  சொன்னபோது உடன் ஒரு ஏ.டி .டி . ( A.T .T .) போட்டுக் கொள்ளச் சொன்னேன். பொட்டுக்கொண்டாரா என்று தெரியலை . எனக்கு என்னமோ அதனால் ….? ” அவர் கூறி முடிக்காமல் மழுப்பினார்.

நான் உடன் இருக்கையில் இருந்து எழுந்து விட்டேன்.

” வாருங்கள் சிஸ்டர் வார்டுக்கு .” வேகமாக வெளியேறினேன். அவரும் பின்தொடர்ந்தார்.

” ஆமாம் சிஸ்டர். அவர் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு சின்ன பிளாஸ்டர் போட்டிருந்தார். நான் அது பற்றி ஏதும் கேட்கவில்லை..” போகும்போது அவரிடம் கூறினேன்.

மித்திரன் அறுவை சிகிச்சை அறையில் ( operation theatre ) உணர்வு அகற்றுநராக ( anaesthetist ) பணிபுரிபவர்.ஆண் தாதியரான அவர் சிறப்பு பயிற்சி பெற்றவர். அவருடைய மனைவி மரியம்மாளும்கூட அதே பிரிவில் பணி புரியும் தாதிதான்.

வார்டில் அப்போது மரியம்மாள் இருந்தார்.

” சிஸ்டர் பாலின் அந்த நாய்க் குட்டி பற்றி சொன்னார்கள். உடன் ஊசி போட்டுக்கொண்டாரா? ” அவரைப் பார்த்து கேட்டேன்.

” நானும் சொன்னேன் டாக்டர். இவர் குட்டி நாய்தானே என்று சொல்லிவிட்டார். ஏன் டாக்டர் அது பற்றி கேட்கிறீர்கள்? ” அவரின் மனதிலும் அந்த சந்தேகம் இப்போது வந்திருக்கலாம்.

” அந்த நாய்க் குட்டி வீட்டில் இப்போது எப்படி உள்ளது? ” இது எனது அடுத்த கேள்வி.

” ஆத்திரத்தில் அதை அடித்துக் கொன்றுவிட்டார் டாக்டர்.”

மித்திரன் செய்த பெரும் தவறு இது! கிடைத்த ஒரேயொரு தடயமும் இப்போது கை நழுவி விட்டது!

அப்போது மித்திரன் மூச்சு திணறுவது தெரிந்தது. உடன் நகர்த்தும் எக்ஸ் -ரே ( portable X -Ray ) கொண்டு வந்து நெஞ்சு படம் எடுத்துப் பார்த்தேன். நுரையீரலில் நீர் கோத்துள்ளது ( pulmonary oedema ) தெரிந்தது. உடன் பிராண வாயு தர ஏற்பாடு செய்தேன்.

இதுவரை சாதாரண காய்ச்சல் என்று எண்ணியிருந்த மரியம்மாவின் முகத்தில் முதல்முறையாக பீதி பரவியது.

” இது என்னவாக இருக்கும் டாக்டர்? இப்படி மூச்சு வாங்குதே! ” அவள் கண்கள் கலங்கின.

அப்போது சிஸ்டர் பாலின் ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி அதை மித்திரனிடம் காட்டி குடிக்கச் சொன்னார்.

அதைக் கண்ட அவர், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு , ” அதைக் கொண்டு பொங்கள் ! வேண்டாம்! வேண்டாம் ! ” என்று பீதியுற்ற நிலையில் கத்தினார்.

இது ஹைட்ரோபோபியா! ( hydrophobia ) சந்தேகமே இல்லை! மித்திரனுக்கு ரேபீஸ் ! ( rabies )

ரேபீஸ் என்பது வெறி நாய்க் கடி நோய் ! இது ரேபீஸ் வைரஸ் கிருமியால் உண்டாவது. கடி பட்ட இடத்தில் கிருமி பரவி பெருகி உடன் நரம்பு வழியாக மூளையை தாக்கவல்லது. மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் தொண்டையில் ஆகாரம் நீர் விழுங்க உதவும் நரம்புகள் செயல் இழந்து விழுங்க பயம் உண்டாகும் . இதனால் நீரைப் பார்த்தால் பீதியுறுவர் .இதுதான் ஹைட்ரோபோபியா!

இத்துடன் காற்றும் பீதியை உண்டுபண்ணும்! இதை ஏரோபோபியா ( aerophobia ) என்று பெயர். இதனால்தான் மித்திரன் கூட மின்விசிறியை நிறுத்தச் சொல்லியுள்ளார்!

அப்போது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக டாக்டர் பிரட்ரிக் ஜான் இருந்தார். அவருடன் உடன் தொடர்பு கொண்டேன். அவரும் உடன் விரைந்து வந்தார்.

மித்திரன் பற்றி அனைத்தையும் அவரிடம் கூறினேன் உடன் அவரை மதுரைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.அங்கு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் ராமமூர்த்தியிடம் காட்டலாம் என்று கிளம்பினோம்.

மருத்துவமனை அவரசர விரைவு வண்டியில் ( ambulance ) மித்திரனை ஏற்றுவதில் சிரமம் உண்டானது. அவர் கீழே இறங்கி ஓடப் பார்த்தார். அவரைப் பிடித்து உட்கார வைத்துக் கொண்டு போக நால்வரின் துணையும் தேவைப் பட்டது. அவ்வளவு மூர்க்க குணம் !

டாக்டர் ராமமூர்த்தி மேலும் சில பரிசோதனைகள் செய்து பார்த்தார். அதில் முக்கியமானது மூளை – தண்டுவட – நீர் ( cerebro – spinal – fluid ) பரிசோதனை. இது மூளைப்படல அழற்சி ( meningitis ) உள்ளதா என்பதைப் பார்க்கும் பரிசோதனை. ஆனால் இந்த பரிசோதனை ரேபீஸ் வியாதியை நிச்சயப் படுத்தாது. நோயாளியின் உமிழ்நீரை எடுத்து புளுவோரெஸ்சென்ட் எண்டிபாடி ( fluorescent antibody ) பயன்படுத்தி ரேபீஸ் எண்டிஜென் ( rabies antigen ) உள்ளதா என்று கண்ட பிடிப்பதே நிச்சயமான முறை. இந்த முறை அப்போது மதுரையில் இல்லை. அது செய்யாதபோது நோயாளியின் அறிகுறிகளை வைத்தே ரேபீஸ் தீர்மானிக்கப்பட்டது

ரேபீஸ் நோய் பற்றி மேலும் விளக்கினார் டாக்டர் ராமமூர்த்தி :

” ரேபீஸ் வியாதி இரு வகையானது. வீறுமுள்ள ரேபீஸ் ( furious rabies ) முதல் வகை. இதுவே பரவலாக காணப்படுவது. அடுத்தது ஊமை ரேபீஸ் ( dumb rabies ).இதில் கால்களில் இருந்து மேல்நோக்கி வாதம் ( ascending paralysis ) உண்டாகும். இந்த வகையானது

வெளவால் கடியால் உண்டாவது. வெறி நாய் கடித்து சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரைகூட நோய் மறைந்து இருக்கலாம் ( incubation period ).அதன்பின்பே அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சல், தலைவலி, பலவீனம் போன்றுதான் முதலில் தோன்றும். பத்து நாட்கள் கழித்து பயம், பரபரப்பு, அமைதியின்மை , மன அழுத்தம் அல்லது மன அதிர்ச்சி , இல்பொருள் காண்தல் ( hallucination ) , இயல்புக்கு மாறான நடத்தை ( bizarre behaviour ) , வாதம் போன்றவை ஏற்படலாம்.

இயல்புக்கு மீறிய தூண்டுதல் ( hyper – excitability ) இந்த வகை ரேபீஸ் வியாதியின் முன்னோடி அறிகுறியாகும் பார்வையாலும் செவியாலும் உண்டாகும் தூண்டுதல்கள் ( auditory and visual stimuli ) இதைத் துரிதப் படுத்தும்.

அதோடு, விழுங்கவும்,சுவாசிக்கவும் உதவும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஹைட்ரோபோபியா, ஏரோபோபியா எனும் நீருக்கும் காற்றுக்கும் பீதி உண்டாகும்.

இறுதியில் பத்து முதல் பதினான்கு நாட்களில் வலிப்பு ( convulsion ) , மூச்சு விடுதல் தடைப்பட்டு, இருதயம் தாறுமாறாக துடித்து உயர் பிரியும்!

இவ்வளவும் விளக்கிய அவர் மித்திரன் இறந்து போவது உறுதி என்று கூறிவிட்டார்! இது கேட்ட மரியம்மா அங்கேயே மயங்கி விழுந்தார்! எங்கள் அனைவரின் கண்களும் கலங்கின!

” இப்போது என்னதான் செய்யலாம் டாக்டர்? ” பதற்றமுற்ற நிலையில் அவரை வினவினோம்.

” என்னை மன்னிக்கவும். வேறு ஏதும் செய்ய இயலாது. இவர் இன்னும் மூர்க்கமாகலாம். அப்போது கட்டுப்படுத்துவது சிரமம். பேசாமல் தனி அறையில் ( cell ) பூட்டி வைப்பதுதான் நல்லது. “.

அது கேட்டு நாங்கள் அனைவருமே அதிர்ச்சியுற்றோம்! இப்படியும் ஒரு வியாதியா? இதற்கு மருந்தே கிடையாதா? இவ்வளவு கொடியதா ரேபீஸ்! இதுபற்றி நான் படித்தபோது இதன் கொடூரம் எனக்குத் தெரியவில்லை. நேரில் பார்த்தபின்தான் அதை உணர முடிந்தது.

ஒரு நோயாளியை மரண தண்டனைக் கைதியைப்போல் இவ்வாறு தனி அறையில் பூட்டி வைப்பது பெரும் கொடுமையாகத் தோன்றியது.

திரும்ப திருப்புத்தூருக்குக் கொண்டு சென்று எங்கள் மருத்துவமனையில் பராமரிப்பது என்ற முடிவுடன் விடை பெற்றோம்.

திரும்பும் வழி நெடுக என் மனதில் வேறொரு பீதி குடிகொண்டது.

” அதோடு இவரை சிகிச்சை செய்தவர்கள் கையுறைகள் இல்லாமல் தொட்டிருந்தால், அவர்கள் ரேபீஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. காரணம் ரேபீஸ் கிருமிகள் வியர்வை, எச்சில் வழியாகவும் பரவும் வாய்ப்பு உள்ளது. எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது . ” நாங்கள் புறப்பட்டபோது டாக்டர் ராமமூர்த்தி சொன்னது செவிகளில் ரீங்காரமிட்டன! அமுதாவும் நானும் மித்திரனை அதிகம் தொட்டுள்ளோம். நாங்கள் இருவருமே தொப்புளைச் சுற்றி ஐந்து நாட்கள் எச்.டீ சி வீ ( HDCV ) தடுப்பு ஊசி போட்டுக்கொளவேண்டும். இல்லையேல் …..? நினைக்கவே  உடல் நடுங்கியது. இதுவே மரண பீதி என்பது!

திரும்பியதும் முதல் வேலையாக ஸ்வீடனுக்கு தொலை அழைப்பு ( trunk call ) போட்டு உதவி கோரினோம். அவர்கள் உடன் அடுத்த விமானத்தில் , ” மனித ரேபீஸ் இமுனோகுளோபின் ” ( human rabies immunoglobin ) ஊசி மருந்து அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.அப்போது இந்த ஊசி மருந்து இந்தியாவில் கிடைக்கவில்லை. ஆனால் இது கடி பட்ட உடனே போடவேண்டும்.இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் உடன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வாகனம் அனுப்பப்பட்டது.

மருத்துவமனையில் சகல வசதிகளும் கொண்ட ஈரோப்பியன் வார்டில் ( European Ward ) சேர்த்தோம். அது தனியான ஒரு கட்டிடம் சிவகங்கை மன்னரால் கட்டப்பட்டு அவரின் ராணியின் பிரசவத்திற்குப் பின் தானமாக தரப்பட்டது.

மித்திரனுக்கும் தனக்கு என்ன என்பது ஓரளவு தெரிந்துள்ளது . சில சமயங்களில் அமைதியுற்ற வேளையில் , ” டாக்டர்…கிட்ட வராதீங்க. கடிக்கணும் போல் உள்ளது .” என்று எச்சரிப்பார். அந்த நேரம் அவரின் வாய் ஓரத்தில் எச்சில் வழியும்.

திடீர் என்று எழுந்து வெளியில் ஓடியபோது மிகவும் சிரமப்பட்டு அவரைப் பிடித்து வந்து கட்டிலுடன் சேர்த்து கட்டி வைத்தோம். விடுவிக்கச் சொல்லி கூக்குரலிடுவார்.கட்டிலோடு சேர்ந்து எழும் அளவுக்கு புது பலம் தென்பட்டது. அவரை அமைதி படுத்த வேலியம் ( valium ), மார்பின் ( morphine ), பெத்திடின் ( pethidine ) என்று தூக்க ஊசிகள் போடப்பட்டன. ஆனால் அவை பயன் அற்ற நிலைக்குள்ளாயின! அவரின் மூளை அவ்வளவு துரிதமாக தூண்டப்பட்டிருந்தது!

அன்று இரவு முழுதும் கொஞ்சமும் தூங்காமல் உரக்க கத்திக் கொண்டுதான் இருந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் மித்திரன் சாகப் போகிறார் என்பது தெரிந்து விட்டது.அவர்களும் வார்டைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவ்வப்போது உள்ளே நுழைந்து பார்த்துவிட்டு போயினர்.

அந்த அறை இருட்டாக்கப்பட்டு சத்தமின்றி பாதுகாக்கப் பட்டது.

மறு நாள் உள்ளூரிலும் செய்தி பரவி விட்டது.வரும் நோயாளிகள்கூட அங்கு வந்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் புதுக்கோட்டையில் ஒரு பிரபல நாட்டு வைத்தியர் நாய்க் கடியை குணமாக்குவார் என்று கூறினார். உடன் அவரையும் மருத்துவமனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்த நாட்டு வைத்தியரை அழைத்து வர விரைந்தனர். அப்படி அவரால் குணப்படுத்த முடிந்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருவதாகவும் ஒப்புக்கொண்டோம்!

மித்திரனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற கடைசி முயற்சி அது. அதில் கொஞ்சமும் கெளரவம் பார்க்கவில்லை.

இரண்டு மணி நேரத்தில் நாட்டு வைத்தியர் வந்து சேர்ந்தார். கடி பட்ட விரலை கீறி அதில் பச்சிலை வைத்து ஒரு எலுமிச்சம் பழத்தினுள் விரலை நிழைத்து கட்டு போட்டார். இன்னும் 24 மணி நேரத்தில் விஷம் இறங்கிவிடும் என்றார். இதில் எனக்கு நம்பிக்கை இல்லைதான். வேறு என்னதான் செய்வது ? ஒன்றும் செய்யாமல் ஒரு உயிர் போவதைவிட இதுவும் செய்து பார்ப்போமே என்றுதான் அப்போது தோன்றியது.

மித்திரனின் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

மறு நாள் காலையில் சுவீடன் மருந்து கிடைத்து அதையும் ஊசி மூலம் ஏற்றினோம்.

மித்திரனின் ஆவேசமும், மூர்க்கமும் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. அவரின் மூச்சுத் திணறலும் அதிகரித்தது.

ஆலய சபைகுரு அவருக்காக ஜெபம் செய்து இராபோஜனம் வழங்கினார். மித்திரன் சுய நினைவு இல்லாமல் திமிறிக்கொண்டும் உரக்க கத்துவதுமாகவே இருந்தார்.இரவு பகலாகே தூக்கமே வரவில்லை.

முயற்சிகள் அனைத்துமே தொல்வியுற்ற நிலையில் அவருடைய மரணத்தை , மிகுந்த மன பாரத்துடன் எதிர்நோக்க தயார் ஆனோம்

அவர் படும் துன்பத்தைக் குறைப்பது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. இனி அவர் இப்படி தூங்காமல் விழித்திருந்து ஓலமிடுவது தேவையில்லை என்று முடிவு செய்தோம்.அவர் படும் வேதனைகள் போதும்! நிம்மதியாக நினைவை இழக்கச் செய்வதே மேல் என்ற நிலைக்கு உட்பட்டோம்.

உணர்வு அகற்றுநராக பணிபுரிந்த மித்திரனை அதே முறையில் உணர்வு இழக்கச் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். அவரின் மனைவி மரியம்மாளும் அதற்கு உடன்பட்டார்.

மித்திரன் பயன்படுத்திய அதே உணர்வு அகற்றும் எந்திரம் ( anaesthesia machine ) கொண்டுவரப்பட்டது. அவருக்கு மயக்கம் தரப்பட்டது. அவர் உடன் நினைவிழந்து அமைதியானார். அதன்பின் அவர் மீண்டும் உயிருடன் எழவேயில்லை!

Series Navigationகாவல் நாய்‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’