வர்ண மகள் – நபகேசரா 

Spread the love

 

 

கட்டுரை – அழகர்சாமி சக்திவேல் 

ஆப்பிரிக்கக் கண்டம், வறுமை நிறைந்த பல வளரும் நாடுகளை, தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். மதங்களின் பிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும், இத்தகைய ஏழ்மை நிறைந்த நாடுகளில், சமூக முன்னேற்றம் என்பது, மெல்ல நகரும் ஆமை ஓட்டத்திற்கு இணையாகவே, இன்றளவும் இருந்து வருகிறது என்பதையும் நாம் அறிவோம். சர்வாதிகாரம், ஏழ்மை, சுகாதாரமின்மை, பசிக்கொடுமை, பிறந்ததும் இறக்கும் குழந்தைகள், பெண்ணடிமை போன்ற பல சமூகப் பிரச்சினைகளில் உழலும் ஆப்பிரிக்க நாடுகளின் ஊடே, ஒட்டிக்கொண்டு இருக்கும் இன்னொரு சமூகப் பிரச்சினை, ஓரினச்சேர்க்கைக்கு எதிரான அதன் கடுமையான சட்டங்கள் ஆகும். இந்த ஆப்பிரிக்க ஓரினச்சேர்க்கை சட்டங்களுக்கு எதிராக, இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கும், ஒரு உலகப் புகழ் பெற்ற வர்ண மகளான, உகாண்டா நாட்டின் மகிழ்வி, செல்வி கசா ஜாக்குலின் நபகேசரா குறித்தே, இந்தக் கட்டுரை, விரிவாகப் பேசுகிறது. 

 

ஓரினச்சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம் என்று வகைப்படுத்தி இருக்கும், உலகின் சுமார் 72 நாடுகளில், சுமார் 32 நாடுகள், ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இருக்கின்றன. முக்கியமாக, சூடான், மௌரிடானியா போன்ற நாடுகள், ஓரினச்சேர்க்கையை தண்டிக்கும் விதமாக, மரண தண்டனையை சட்டமாக்கி வைத்து இருப்பது, ஒரு பெரும் சமூகக் கொடுமை ஆகும். வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால், பெரும்பாலான ஆப்பரிக்க நாடுகள், ஐரோப்பிய காலனி ஆதிக்கத்துக்குள் இருந்தவை என்பது நமக்குத் தெரிந்து போகும். அப்படி, காலனி ஆதிக்கத்துக்குள் இருந்து வெளிவந்த, பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், அவர்கள் சொந்த நாட்டின் வளர்ச்சிக்கேற்ப, பற்பல காலனிச் சட்டங்களை, இப்போது கைவிட்டுவிட்டன. எனினும், ஓரினச்சேர்க்கை போன்ற காலனி காலத்தில் பிறப்பிக்கபட்ட சட்டங்களை மட்டும், இன்னும் பல ஆப்பிரிக்க  நாடுகள், மாற்றாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், “ஓரினச்சேர்க்கை கலாச்சாரம் என்பது, மேற்கத்திய நாடுகளில் இருந்து உருவான ஒரு மோசமான கலாச்சாரம்” என்ற மூடநம்பிக்கையே. அது தவிர, மதவாதிகள் போதிக்கும், ஓரினச்சேர்க்கை எதிர்ப்புப் பிரச்சாரங்களும், ஓரினச்சேர்க்கை எதிர்ப்புச் சட்டங்களுக்கு, இன்னொரு முக்கியக் காரணம் ஆகும். இத்தகைய, ஆப்பிரிக்க ஓரினச்சேர்க்கை கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக, குரல் கொடுத்த ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்கள், பலரை நாம் இங்கே குறிப்பிடமுடியும் என்றாலும், உலகம் போற்றும் முதல் ஆப்பிரிக்கப் பெண் சமூகப் போராளியாக அறியப்படுகிறவர், செல்வி கசா ஜாக்குலின் நபகேசராதான். போராட்டமே தனது முழு வாழ்க்கையாக வாழ்ந்த, வாழ்கின்ற,  செல்வி நபகேசரா குறித்து, நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்வோம். 

 

ஆப்பிரிக்கக் கண்டத்தின், உகாண்டா நாட்டில் பிறந்த பெண்மணிதான் செல்வி நபகேசரா. இவரது தந்தை, உகாண்டா நாட்டின், ஒரு பிரபல வங்கியின், தலைமை அதிகாரியாய் பதவி வகித்தவர். இவரது தாய், உகாண்டா நாட்டின், ஒரு பிரபல கணினிப் பொறியாளர் ஆவார். வசதியான, ஒரு உயர்தட்டு வர்க்கத்தின் செல்வச்செழிப்பில், நபகேசரா வளர்ந்தாலும், நபகேசராவின் பதின்மவயதில் ஆரம்பித்த, லெஸ்பியன் கவர்ச்சி, அவருக்குப் பல இன்னல்களையும், பற்பல தடைகளையும், அவர் வாழ்வில் பெற்றுத் தந்தது. பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே, தன்னோடு படிக்கும், சக மாணவித் தோழிகளுக்கு, காதல் கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவராய், நபகேசரா இருந்து இருக்கிறார். “என்னோடு படித்த மற்ற மாணவிகளுக்கு, நான் காதல் கடிதம் எழுதும்போதுதான், என்னுள் இருக்கும் அந்த லெஸ்பியன் உணர்வை, என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது” என செல்வி நபகேசராவே, பிறிதொரு நாளில், நினைவு கூர்ந்து இருக்கிறார். ஆண்கள் அணியும் பேண்ட் சர்ட், ஆண்கள் அணியும் பேஸ் பால் தொப்பி என, ஆண்கள் போலவே உடை அணிந்து வெளியே செல்லும், நபகேசராவின் விருப்பத்திற்கு, அவரது பெற்றோர்கள், ஒருபோதும் தடை சொன்னதில்லை.  

 

ஆனால், அவர் படித்த கல்வி நிலையங்கள், நபகேசராவின் தாய் தந்தை கொண்டிருந்த முற்போக்குக் கொள்கைகள் போல, பாலியல் கல்விக் கொள்கைகள் எதுவும் கொண்டிராததால், செல்வி நபகேசரா, அவர் படித்த கல்வி நிலையங்களில், பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. பதின்மவயது லெஸ்பியன் கவர்ச்சிக்குள் அகப்பட்டுக்கொண்ட நபகேசரா, மற்ற பதின்மவயதுப் பெண்கள் மீது காட்டிய வெளிப்படையான ஆசை உணர்வுகளால், பல பள்ளிகள் அவரை, வெளியில் துரத்தின. பல்வேறு இன்னல்களுக்கு இடையே, தனது உயர்நிலைக் கல்வியை முடித்த செல்வி நபகேசரா, பின் தனது பட்டப்படிப்பைத் தொடர விரும்பியபோது, அங்கேயும் அவருக்கு, பல எதிர்ப்புகள் காத்து இருந்தது.  

 

கணக்கியலையும், வணிக மேலாண்மையையும் பாடமாக எடுத்துப் படித்த நபகேசராவிற்கும், அவர் படித்த, உகாண்டா நாட்டின் கும்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கும் இடையே, பற்பல பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்த தர்க்கங்கள், சிறு சிறு சண்டைகள் போன்றவை, அவ்வப்போது தொடர்ந்தவண்ணம் இருந்தன. நபகேசரா, கல்லூரியில் தங்கிப் படிக்கும் பெண்கள் விடுதிப் பக்கம் போகக்கூடாது என, எழுத்து மூலமான நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அது மட்டுமல்லாது, ஆண்கள் அணியும் பேண்ட், தொப்பி போன்ற ஆணுடைகள் அணிந்து, கல்லூரிக்கு வரக்கூடாது என்றும், நிர்பந்திக்கப்பட்டார். விதிகளை நபகேசரா மீறாமல் இருக்க, தினமும் அவர், கல்லூரி நிர்வாகத்தின் முன்னர், ஒருமுறை ஆஜர் ஆகவேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டார். மற்ற பெண்களிடம் இருந்து தன்னை விலக்கி, தன்னை ஒரு குற்றவாளி போல அடையாளம் காட்டும், இது போன்ற விதிகளுக்கு, நபகேசரா பலத்த எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தபோது, பல்கலைக்கழக நிர்வாகம், நபகேசராவை, கல்லூரியில் இருந்த நீக்க முடிவெடுத்தது. அதன் காரணமாய், நபகேசராவின் தாய், கல்லூரிக்கு அழைக்கப்பட்டார். 

 

நடக்கப்போகும் விபரங்களை சரியாகப் புரிந்து கொண்ட, நபகேசராவின் தாய், பல்கலைக்கழக நிர்வாகத்திடம், “என் மகளுக்கு, இந்த வகை லெஸ்பியன் நோய் இருப்பது உண்மைதான். இந்த நோய் குணப்படுத்த முடியாதது. எனவே, என் மகள் நபகேசராவை, பட்டப்படிப்பு முடிக்க அனுமதியுங்கள்” என்று வேண்டிக்கொள்ள, கும்பா பல்கலைக்கழகம், வேறு வழியின்றி, நபகேசராவின் பட்டப்படிப்பைத் தொடர, அனுமதி கொடுத்தது. இந்த நிகழ்வை, பிறிதொரு நாளில் நினைவு கூர்ந்த செல்வி நபகேசரா, “எனது தாய், தான் பல்கலைக்கழகத்தின் முன்னே, என்ன பேசப்போகிறார் என்பதை எனக்கு முன்னரே தெரிவித்து, என்னை சமாதானப்படுத்தி வைத்து இருந்தார். இப்படிப்பட்ட முற்போக்கான தாயையும், தந்தையையும் நான் பெற்றிராவிட்டால், இந்த அளவிற்கு, மூன்றாம் பாலின சமூக வளர்ச்சிக்காக உழைத்து இருக்க முடியுமா என்று, எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லி இருக்கிறார்.  

 

அதன் பிறகு, உகாண்டாவின், கம்பாலா பல்கலைக்கழகத்தில், கணினியியலில் இன்னொரு பட்டம் பெற்றபோதும், நபகேசரா, தனது வெளிப்படையான லெஸ்பியன் வாழ்க்கைக்காக, பற்பல அவமானங்களை, எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை, டாக்சியில், இன்னொரு பெண்ணோடு பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அந்தப் பெண்ணின் லெஸ்பியன் எதிர்ப்புணர்வால், டாக்சியில் இருந்து, வலுக்கட்டயாமாக இறக்கிவிடப்பட்ட நபகேசரா, அடையாளம் தெரியாத இன்னொரு நபரால், கூர் ஆயுதங்களால், தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இது போன்ற அனைத்து அவமானங்களால் வெகுண்டு எழுந்த செல்வி நபகேசரா, உகாண்டாவின் மூன்றாம் பாலின ஆதரவுக் குழுவைத் தொடங்கினார். Freedom and Roam Ugandaa (FARUG) ஃபாருக் என்ற அந்த மூன்றாம் பாலின ஆதரவுக்குழு, உகாண்டா நாட்டில் தொடங்கி, பின் நபகேசராவின் கடுமையான முயற்சியால், ஆப்பரிக்கக் கண்டம் முழுமைக்கும் மூன்றாம் பாலின ஆதரவுச் சேவை செய்யத் தொடங்கியது. 

 

உகாண்டா நாட்டைப் பொறுத்தவரை, ஒரு ஆண், இன்னொரு ஆணோடு கொள்ளும் உடலுறவு, கிரிமினல் குற்றமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் கொள்ளும் உடலுறவு, குற்றம் என, உகாண்டா வரையறுக்கவில்லை. இருப்பினும், உகாண்டாவின் மத ஆதிக்கம், நபகேசராவின் லெஸ்பியன் வாழ்க்கையை, சமூக நிந்தனை செய்தது என்பது உண்மை. தனது கல்லூரிப்படிப்பை, தட்டுத்தடுமாறி முடித்த செல்வி நபகேசரா, உகாண்டாவின் இந்த வகைக் கொடுமைகளை, வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்தார்.  

 

2009-இல், ஓரினச்சேர்க்கைக்கு எதிராக, உகாண்டா ஒரு கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்த நினைத்தது. அந்தச் சட்டத்தின் படி, ஓரினச்சேர்க்கை செய்யும் எந்த உகண்டா நாட்டவரும், கொல்லப்படுவார்கள். இந்தச் சட்டத்தின் கொடுமையை அறிந்துகொண்டு, உலகம் பலத்த எதிர்க்குரல் எழுப்பியபோது, உகாண்டாவின் இந்தச்சட்டம் அமல்படுத்தப் படாமலேயே, மறைந்து போனது. இருப்பினும், Rolling Stone ரோலிங் ஸ்டோன் என்ற உகாண்டாவின் பிரபல பத்திரிக்கை, மேற்கண்ட சட்டத்தின் அடியைப் பின்பற்றி, “உகாண்டாவின் 500 ஓரினச்சேர்க்கையாளர்கள்” என்று வகைப்படுத்தி, 500 உகாண்டா ஓரினச்சேர்க்கையாளர்களின் பெயர்களை, பத்திரிக்கையில் வெளியிட்டு, “இவர்களைத் தூக்கிலிடுங்கள்” என, தனது பத்திரிக்கையில் எழுதியது, அவ்வாறு, அந்தப் பத்திரிகை வெளியிட்ட குற்றவாளிகள் பட்டியலில், நபகேசராவின் பெயரும், அவரது நண்பர் டேவிட்டின் பெயரும் இருந்தது. அதுமட்டுமல்ல, அந்தப் பட்டியலில், இருந்த பலரும், தாங்கள் பார்த்துகொண்டு இருந்த வேலைகளை, பரிதாபமாக இழந்தார்கள். பற்பலரின் அவச்சொல்லுக்கும் ஆளானார்கள். அதுகண்டு கொதித்துப்போன நபகேசராவும், நபகேசராவின் நண்பரான டேவிட்டும், பலத்த எதிர்க்குரல் எழுப்பினார்கள். விசயம், நீதிமன்றம் வரை செல்ல, உகண்டா நீதிமன்றம், நபகேசராவுக்கு ஆதரவாக, தனது தீர்ப்பை வழங்கியது. இருப்பினும், அந்தத் தீர்ப்பு வந்த ஆறு மாதத்திலேயே, நபகேசராவின் நண்பர் டேவிட், கொல்லப்பட்டார். டேவிட்டைக் கொன்றவர், குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறை சென்றார். இந்தக் கொலை நிகழ்ச்சிக்குப் பிறகும், நபகேசரா, தனது சமூகப் பணியை விடாது தொடந்தார். டேவிட்டின் கொலைக்குப் பிறகு, உகாண்டாவின் பல மூன்றாம் பாலினத்தவர், தங்கள் கூட்டை விட்டு வெளியே வந்து, நபகேசராவுடன் இணைந்து கொண்டார்கள். 

 

அதன்பிறகு, நபகேசரா Kuchu Times குச்சு டைம்ஸ் என்ற மீடியா இயக்கத்தைத் தொடங்கினார். இந்த மீடியா, உகாண்டா மட்டுமல்ல, ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளுக்கும், தனது மூன்றாம் பாலின, வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளை, இன்றளவும் வழங்கிவருகிறது. குச்சு என்ற வார்த்தை, ஆப்பரிக்க மூன்றாம் பாலினத்தவரை அடையாளப்படுத்த உதவும், ஆப்பிரிக்க வார்த்தை ஆகும்.  “ஆப்பிரிக்கக் கண்டத்தின் குச்சுக்களும், வாழப்பிறந்தவர்களே” என்ற உணர்வோடு, அந்த இயக்கத்தை ஆரம்பிக்க பெரிதும் பாடுபட்டவர் செல்வி நபகேசரா. அத்தோடு நிறுத்தாமல், மீடியா ஆரம்பித்த அடுத்த வருடமே, Bombastic பம்பாச்டிக் என்ற மூன்றாம் பாலினப் பத்திரிக்கையையும், நபகேசரா தொடங்கினார். இந்தப் பத்திரிக்கையின் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறுபட்ட மூன்றாம் பாலினத்தவரின், உண்மை அவலங்களை, அவர்தம் நேரடிப் பேட்டிகளின் மூலம், உகாண்டாவிற்கும், மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும், நபகேசரா உணர்த்த ஆரம்பித்தார். இதன் மூலம், மூன்றாம் பாலினம் குறித்த கட்டுகதைகளை வெளியாக்கிக் கொண்டிருந்த ,ஆப்பரிக்க மதவாதிகளும், மற்ற மதவாதப் பத்திரிக்கைகளும், ஊமையாகிப் போயினர். மூன்றாம் பாலினம் குறித்த விழிப்புணர்வு, ஆப்பிரிக்கக் கண்டம் மட்டுமின்றி, உலகம் முழுதும் பரவ, நபகேசரா, பலவகைகளிலும், தனது பணியைத் தொடர்ந்தார். 

 

நபகேசரா, தனது சீரிய சேவைக்காக, பல உலக விருதுகளை வென்றுள்ளார். 2011-இல், மனித உரிமைக்கான, மார்டின் என்னல் விருது, 2013-இல் நுரேம்பெர்க் மனித உரிமை விருது போன்ற விருதுகளை வென்றுள்ள நபகேசரா, அமைதிக்கான மாற்று நோபல் பரிசு என்றழைக்கப்படும், ஸ்வீடனின் புகழ்பெற்ற மாற்று நோபல் விருதை, 2015-இல் வென்றுள்ளார் என்பது, நாம் இங்கே சொல்ல விரும்பும், நபகேசராவின் இன்னொரு சிறப்பு ஆகும். 

 

நபகேசரா பிறந்த உகாண்டா நாடு, நபகேசராவிற்கு இன்றளவும் ஒரு பாதுகாப்பான நாடில்லைதான். மூன்றாம் பாலினத்தவரை, இன்றளவும் நிந்தனை செய்யும் ஆப்பரிக்க கண்டத்தை விட்டு வெளியேறி,  மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழும் ஆப்பரிக்க மூன்றாம் பாலின சமூக ஆர்வலர்கள் பலர் இருக்கையில், இன்றளவும், தான் பிறந்த உகாண்டா நாட்டை விட்டு வெளியேறாமல் வாழும் நபகேசரா, நிச்சயம் ஒரு தனித்துவம் நிறைந்த, தைரியம் நிறைந்த லெஸ்பியன் பெண்மணி என்று, நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

 

“நான் பட்ட வேதனைகளை, அவமானங்களை, எனது மூன்றாம் பாலின ஆப்பிரிக்கப் பிள்ளைகளும், எனது ஆப்பிரிக்கப் பேரப் பிள்ளைகளும், இனி சந்திக்கப் போவதில்லை. அவர்களது பாதுகாப்பின் பொருட்டு, நான், என் தாய்நாட்டில் இருந்துதான் ஆகவேண்டும். மூன்றாம் பாலினம் குறித்த மன மாற்றங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில், மெல்ல நகரலாம். ஆனால். ஆப்பரிக்கக் கண்டத்தின், மனநிலை மாறுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை” என்கிறார், செல்வி நபகேசரா.  

 

அஹிம்சை வழியில் போராடிய, ஆப்பிரிக்கக் காந்தி நெல்சன் மண்டேலாவைத் தெரிந்து வைத்து இருக்கும் நாம், இனி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வர்ணமகள் நபகேசராவையும் தெரிந்து வைத்துக்கொள்வோம். வாழ்க நபகேசரா. 

 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationநான் கூச்சக்காரன்வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும்