வற்றும் கடல்

Spread the love

கு.அழகர்சாமி

ஆர்ப்பரிக்கிறது

அது-

ஆச்சரியத்தில் ததும்பும்

குழந்தையின்  விழிகளில்

தளும்பி

வழிகிறது அது.

அலையலையாய்க் 

குழறுகிறது.

அதே போல்

குழறுகிறது குழந்தையும்.

என்ன 

அது?

விடாது

வினவுகிறார் தந்தை.

உணர்ந்த குழந்தை உச்சரிக்காது

திகைக்கிறது.

கடல்’-

கற்பிக்கிறார் தந்தை.

வார்த்தை கற்ற குழந்தையின் விழிகளில்

வற்றுகிறது கடல்.

கு.அழகர்சாமி

Series Navigationகவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்கவிதைகள்