வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – திரை விமர்சனம்

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்.
இயக்கம் : ஸ்ரிநாத்
கதை : ராஜமௌலி
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : சக்தி – ரிச்சர்ட் எம்.நாதன்
நடிப்பு :சந்தானம், ஆஷ்னா, மிர்ச்சி செந்தில், வி.டி.வி.கணேஷ், சுப்பு பஞ்சு, ஜான் விஜய்.

சந்தானத்தின் நாயகப் பிரவேசம். பாதிதான் பரவசம். அளவு சாப்பாடாக, நிறைவில்லாத “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் “
ஒரு நாயகனுக்குரிய அழகுடனும் அசத்தலான உடைகளுடனும் சந்தானம் திரையில் பார்க்க லயிப்பு. அவர் வாயைத் திறந்தால், உண்மையான நாயகனைத் தேடும் ரசிகனின் எதிர்பார்ப்பு. காமெடியனாகவும் இல்லாமல், ஹீரொவாகவும் இல்லாமல் அவர் கோட்டை விட்ட பாதி கிணறு.
சந்தானத்தின் ஓட்டை சைக்கிளுக்கு குரல் கொடுத்திருக்கும் டி.ராஜேந்தரின் சர வெடிகள், அதிர வைக்கும் அதிர்வேட்டுகள். கிராபிக்ஸில் சைக்கிள் விளக்கு காட்டும் நெளியல் நிசமான காமெடி.
குறும்புக் கண்களுடன், மெல்லிடை தேவதையாக அசத்தல் அறிமுகம், புதுமுகம் ஆஷ்னா. அவரது ‘கல கல ‘ நடிப்பு பேஷ் பேஷ் னா!
ஆரம்பக்காட்சிகளில் வரும் ஜான் விஜய், சுப்பு பஞ்சு ரவுஸ் கலக்கல். அவர்களை சீக்கிரமே வெட்டி விட்ட்து படத்திற்கு சறுக்கல்.
யாரப்பா அந்த முறுக்கு மீசை பெரியவர். வில்லத்தன கண்களுக்கும், உதட்டசைவிற்கும் குரல் கொடுத்த டப்பிங் கலைஞருக்கு ஒரு விசில்.
உடல் மொழி காமெடிக் காட்சிகள் தருகின்றன சிரிப்பலைகள். சீரியஸ் காட்சிகள் தருவதோ பெருமூச்சலைகள்.
தெலுங்கில் ஹிட்டடித்த “ மரியாதை ராமண்ணா “. ஹிந்தி மொழியில் நாயக முதன்மையால் ஆனது சுக்கா ரொட்டி. தமிழில் அது ஆகிவிட்டது வறட்டி.
சிறு வயதில் தாய் தந்தையை இழந்த சக்தி ( சந்தானம் ), தண்ணீர் கேன்கள் டெலிவரி செய்யும் இளைஞன். அவனது உற்ற தோழன் ஒரு ஓட்டை சைக்கிள். ஒரு நாள், வேலை போய் விட்ட நிலையில், அவனுக்கு தெரிய வருகிறது அரவங்காட்டில் இருக்கும் ஐந்து ஏக்கர் சொத்து. சொத்தின் வில்லங்கமாக இருப்பது சிங்கராயர் குடும்பத்துடனான 27 வருடப் பகை. அதை அறியாமல், தன் உடைமையான சைக்கிளை தானம் கொடுத்து விட்டு, ரயிலேறுகிறான் சக்தி. அவனோடு பயணிக்கும் வானதி ( புதுமுகம் ஆஷ்னா ), அவனது கலகலப்பால் கவரப்படுகிறாள். சிங்கராயரின் மகள் என்பதை அறியாமல், சக்தியும் அவளூடன் பழகுகிறான். பகைவன் வீடு என்று தெரியாமலே அவன், சிங்கராயர் வீட்டுக்குள் நுழைவதும், வீட்டினுள் அவனை கொலை செய்ய விரும்பாமல், அவன் வெளியேறும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ராயரின் அடியாட்களும், ஒரு பாதிக் கதை. சக்தியின் மீது வானதி காதலாவதும், வழக்கம்போல க்ளைமேக்சில் அவனோடு தன் உயிரையும் விடத் துணிந்து வானதி ஆற்றில் குதிப்பதும், அவளை சக்தி காப்பாற்றி ராயரின் பகையை ஒழிப்பதும் ஃபார்முலா முடிவு.
“ பெத்தவங்க பிரிச்சிடுவாங்கன்ற நம்பிக்கையிலேதானே பொண்ணுங்களே லவ் பண்றாங்க”
“ மொட்டையடிச்சிட்டு குளிக்க மறந்துட்டியா? உடம்புல இவ்வளவு முடி இருக்கு “
“ வஞ்சிரமீன் விக்கற விலைக்கு பாங்குல லோன் போட்டுத்தான் என்னால வாங்க முடியும்”
சந்தானத்தின் ஒரு வரி நகைச்சுவை படமெங்கும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.
சித்தார்த் விபினின் பாடல்களும், பின்னணி இசையும் நேர்த்தி. ரயில் வண்டியில் பாடப்படும் பாடலான “ ரயிலிலே கவிஞனானேன் “ மென்நதி தாலாட்டு. கிராமத்து வீட்டின் பின்னணியில் சந்தானம் ஆடிப்பாடும் “ மண்ணெங்கும் சென்று தேடிப்பாரு “ ஒரு நல்ல கானம். இடையில் வரும் “ சுடிதார்கள் தோட்டத்துக்குள் ஒற்றை தாவணி “ என்கிற வரிகள் நல்ல கற்பனை.
எப்படியும் கொல்லப்போகிறார்கள் என்று தெரியும் கட்டத்தில், தொலைக்காட்சியில் ஒலிக்கும் “ ஆடி அடங்கும் வாழ்க்கையடா “ பாடல் இயக்குனரின் சாமர்த்தியத்தை சொல்கிறது.
சந்தானத்தை நாயகனாக ஏற்றுக் கொள்ள மனமில்லாத ரசிகர்கள், படம் முழுக்க எதிர் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் பல சந்தானங்கள் இருப்பது அந்த கமென்டுகளிலிருந்து தெரிகிறது.
இனிமேலும் விஷப்பரிட்சை செய்யாமல், விஜய் கூட ‘நண்பேன்டா “ என்று கூட்டு சேருவது தான் சந்தானத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.

0

ரசிகன் கமென்ட்: இன்டர்வெல் வரை எக்ஸ்பிரஸ். அப்புறம் கூட்ஸ். சந்தானம் ரயில் மக்கர் பண்ணுதுப்பா!

Series Navigation