வழிமேல் விழிவைத்து…….!

Spread the love

பவள சங்கரி.

உடலோடும் உணர்வோடும்
விளையாடுவதே
வாடிக்கையாகப் போய்விட்டது.

சூடுபட்ட பூனையானாலும்
சொரணை கெட்டுத்தான்
போய்விடுகிறது.

மடிமீதும் மார்மீதும்
கையணைப்பினுள்ளும்
தஞ்சம் புகுவதே
வாடிக்கை.ஆகிவிடுகிறது.

வெட்கமுமின்றி துக்கமுமின்றி
தேடித்திரிதலே அன்றாடப்
பிழைப்பாய் இருக்கிறது.

எவர் கொடுத்தாலும்
மறுக்க இயலாத
ஏழ்மையாகிவிடுகிறது.

உண்ணும்போதும்
உறங்கும் போதும் கூட
பிரிய மனம் மறுக்கிறது.

நம்மையே நையப்புடைத்தாலும்
விட்டு அகல முடியாமல்
தவிக்கிறது உள்ளம்.

ஓங்கி ஒலித்தாலும்
இதமாக வருடினாலும்
தாங்கிப் பிடிக்கிறது தன்னையே.

வண்ணங்களும் எண்ணங்களும்
வேறுவேறாய் ஆனாலும்
அகல மறுத்து
திண்ணமாய் இருக்கிறது.

காட்டாற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்போது
தோணியாகி காத்துநிற்கிறாய்.

தத்துவங்களாய்ப் பேசி
கட்டாந்தரையையும்
கரும்புக் காடாக்கினாய்!

கவின்மிகு நடையினால்
கனிமொழி உரையினால்
பனிப்பொழிவாய் உறையச்செய்தாய்!

துணைநாடி துவண்டு
விழும் வேளையில்
தோள்கொடுத்து அணைக்கிறாய்.

கவிபாடி காத்து நிற்கையில்
மடிஏந்தி பூத்து நிற்கிறாய்.

விதியின் பாதையில்
வீழ்ந்து விடாமலிருக்க
விருட்சமாய் நீள்கிறாய்.

கள்ளத் தோணியானாலும்
கனிவாய் கொண்டுசேர்க்கிறாய்
கதைகள் பலபேசி.

ஊனின்றி உறக்கமின்றி
பித்தாக்கி பேதையாக்கி
என்ன செய்யப்போகிறாய் மேலும்?

உடன்கட்டை ஏறிவருவாயா
மறுபிறவியில் உடன்வருவாயா
கானல்நீராய் ஓடி ஒளிவாயா?
சொல்வாயா எம் புத்தகக் காதலனே?
***

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமைஅந்த முடிச்சு!