வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்

மேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity Diagrams போன்றவை சில உத்திகளாகும். சில சமயங்களில் இதில் எந்த முறையிலும் அடங்காமல் சில விவாதங்கள் நடைபெறும். அதை பற்றி ஜாலியாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நீங்களும் படிச்சு சிரிச்சு சந்தோசமாக இருங்க.

 

முதலில் ஒரு விவாதம் என்பது எப்படி ஆரம்பிக்கிறது என்று பார்ப்போம். ஒரு இணைய இதழில் ஒருவர் “மைசூர் போண்டா” செய்வது எப்படி என்று ஒரு கட்டுரை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவர் படித்துவிட்டு விவாதத்தை இப்படி ஆரம்பிப்பார்.

 

”நீங்கள் மைசூர் போண்டாவை தேர்ந்தெடுத்ததில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது.” விவாதத்தை ஆரம்பிப்பவர்

 

”இல்லீங்க எந்த உள்நோக்கமும் இல்லீங்க” என்று பதிலுரைப்பார் கட்டுரை எழுதியவர்.

 

”மைசூரில் உயர்ந்த சாதியை சேர்ந்த மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களை மைசூர் போண்டா சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருள சொல்லி இருக்கிறார்கள். அந்த உயர் சாதி இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.”

“அய்யோ, அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை. எனக்கு அந்த விசயமே தெரியாதுங்க. நான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஆள் இல்லீங்க. ஒரு நாள் நல்ல மழை. என் மனைவி போண்டா சுட்டாங்க. நல்லா இருந்துச்சு. சரி எல்லாருக்கும் சொல்லலாமேன்னு தோணுச்சு. அதை கட்டுரையா எழுதீட்டேன். அதிலயும் கூட என் மனைவிதாங்க செய்முறை சொன்னாங்க. நான் வேற ஒரு தப்பும் பண்ணலீங்க.”

 

”ஒஹோ, உங்க மனைவிக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? அவரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவரா? நான் சொன்ன விசயம் ஹிண்டுலேய வந்திருக்கே. தெரியாத மாதிரி நடிக்கீறீங்க.”

 

”சே சே. அவங்க அப்படி எல்லாம் இல்லீங்க. என் பையன் கூட போண்டா நல்லா இருக்குன்னு சொன்னாங்க.”

 

”ஓஓஓ. உங்க பையனும் அப்படிதானா? குடும்பமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதா?”

 

”இல்லவே இல்லீங்க. அது போண்டா பற்றிய கட்டுரைதாங்க. நீங்க தவறா புரின்சுகிட்டீங்க.”

 

“அப்படி சமையல் குறிப்பு எழுதனும்னா ஒரு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படின்னு எழுதி இருக்கலாமே?”

 

”சரிங்க. உங்க மனசு புண்பட்டிருந்தா மன்னிச்சுக்கங்க. இனிமேல், பஜ்ஜி செய்யுறத பத்தி எழுதறேன். எனக்கு எதுக்குங்க வம்பு.”

 

அடுத்து அதே எழுத்தாளர் “குடை மிளகாய் பஜ்ஜி” செய்வது எப்படி என்று ஒரு கட்டுரையை எழுதிவிட்டு ஆர்வமாக விவாதத்திற்கு காத்திருக்கிறார்.

 

திரும்ப பழைய ஆள் விவாதத்தை ஆரம்பிக்கிறார்.

”இதிலும் உங்கள் உள் நோக்கம் தெரிந்துவிட்டது”.

 

”ஐயகோ, இதிலுமா? நீங்க சொன்னதால் தானேங்க பஜ்ஜி செய்வது எப்படின்னு எழுதியிருக்கேன்.”

 

”நான் பஜ்ஜி செய்வது எப்படின்னு தானே எழுத சொன்னேன். நீங்க ஏன் குடையை சேர்த்துகிட்டீங்க. அங்க தாங்க இருக்கு மாட்டர். சரி. இதுக்கு பதில் சொல்லுங்க. குடை என்ன கலர்ல இருக்கும்? என் பதிலை உங்கள் பதில் மடல் பார்த்தவுடன் எழுதுகிறேன்.”

 

”இது என்னங்க பெரிய கேள்வி. குடை பொதுவா கருப்பாதாங்க இருக்கும்.”

 

”சரியா சொன்னீங்க. தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் கருப்பா இருப்பாங்கன்னு குத்தி காட்றீங்களா? இது கண்டிப்பா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கட்டுரைதான். நான் உங்கள பஜ்ஜி பத்தி எழுத சொன்னா அங்க எதுக்கு கருப்பு குடை வருது. உயர் சாதி திமிர்.”

 

கட்டுரை எழுதியவர் இதை படித்து விட்டு ரத்த அழுத்தம் அதிகமாக கணினி கீ போர்டை போட்டு உடைத்து மயங்கி விழுகிறார். அவர் குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு போகிறார்கள். டாக்டர் தனியாக அவரிடம் பேசிவிட்டு மருந்து சீட்டை எழுதி கொடுக்கிறார். குடும்பத்தார் மருந்து சீட்டை வாங்கி பார்க்கிறார்கள்.

 

அதில்,

”இணைய இதழ்களில் எழுதுவது, படிப்பதை நிறுத்தவும்” என்று இருக்கிறது.

 

இப்பொழுதெல்லாம் எழுத்தாளர் போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதையே விட்டு விட்டதாக கேள்வி.

பி.கு:  “இக்கட்டுரையில் வரும் சம்பவங்களும் நபர்களும் கற்பனையே. யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல”

Series Navigationசாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம