வாழ்க்கை ஒரு வானவில் – 22

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

 

முதன்முறை அவனும் ராமரத்தினமும் கடற்கரையில் சந்தித்ததற்குப் பிறகு, அவன் மீண்டும் ஒரு முறை தற்செயலாய் ராமரத்தினத்தைச் சந்திக்க வாய்த்த போது, தன் அப்பா முறுக்கிக்கொண்டிருப்பது பற்றி அவனுக்குச் சிரித்துக்கொண்டே தெரிவித்தான். அவன் அது பற்றிக் கவலையே கொள்ள வேண்டியதில்லை என்றும், எப்படியாவது தன் விருப்பத்துக்கு அவரைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது தன் பொறுப்பு என்றும் அவன் ராமரத்தினத்துக்கு வாக்களித்தான். அவர் மனம் மாறுவதற்குத் தான் காத்துக்கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லை என்றும் அவன் தெரிவித்தான்.

ரொம்பவும் காலதாமதம் அதனால் விளையக்கூடுமெனில், ஏற்கெனவே சொன்னபடி ஒரு கோவிலில் வைத்துத் தாலிகட்டித் திருமணத்தைப் பதிவும் செய்துகொள்ளலாம் என்றும் அவன் தடாலடியாய் முத்தாய்ப்பும் வைத்த போது ராமரத்தினத்துக்கு மலைப்பாக இருந்தது.

ரமணி கதவைத் தட்டிய போது, பருவதம்தான் கதவு திறந்தாள்.

தன் வருங்கால மாப்பிள்ளையைப் பார்த்த கூச்சத்தில் முகம் சிவந்து, “வாங்கோ!” எண்றவள், `ராஜா! யாரு வந்திருக்கான்னு பாரு!” என்று குரல் கொடுத்தபடி உள்ளே விரைந்தாள்

“என்ன இது! புதுசா `வாங்கோ ன்றீங்க? நான் உங்க பழைய ரமணிதான். எதுக்கு இந்தப் புது மரியாதை யெல்லாம்?” என்று சிரித்துவிட்டு அவன் அவளைப் பின்தொடர்ந்து உள்ளே போனான்.

அவனை எதிர்கொண்ட ராமரத்தினம், “எங்கம்மா சொன்னது ஒண்ணும் தப்பே இல்லே. எனக்கே உன்னை நீ போட்டுப் பேசுறதுக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கு!… வா, வா…..” என்றபடி ரமணியின் கையைப் பற்றிக்கொண்டு உள்ளே இட்டுச் சென்றான்.

“ராமு எல்லாம் சொன்னான்… ஓ! உங்களுக்கெல்லாம் அவன் ராஜா இல்லே? மறந்து மறந்து போறது…… அவன் சார்பில நானும் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்றேன். உங்க முடிவு ரொம்பவும் பாராட்டுக்கு உரியது…” என்ற சேதுரத்தினம் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. … ரொம்பவும் புகழாதீங்க…” என்ற ரமணி, “உங்க வாழ்க்கையில நடந்துட்ட பெரிய சோகத்தை பத்தி ராஜா சொன்னான். மனசுக்கு ரொம்பக் கஷ்டமா யிருந்தது. என்ன பண்ண முடியும்? எல்லாம் விதி!” என்றான்.

“ஆமாமா. விதிதான். ஆனா அதே நேரத்துல ராமுவோட நட்பு கிடைச்சுதே! அதைச் சொல்லுங்க. அது பெரிய ஆறுதல். குழந்தையப் பத்தின கவலை இல்லாம இருந்துண்டிருக்கேன்…”

சட்டென்று நினைவு வந்தது போல், “உங்கம்மாவைக் கொஞ்சம் கூப்பிடு, ராஜா!!” என்று ரமணி சொல்ல, அவன் கூப்பிடு முன், பருவதம் வெட்கப்பட்டுக்கொண்டே வந்தாள்.

“இந்தாங்க….”

“எதுக்கு இதெல்லாம்?”

“சாப்பிடத்தான். வேற எதுக்கு?” என்றவாறு அவன் கொடுத்த பழங்கள் அடங்கிய பையைப் பருவதம் வாங்கிக் கொண்டு சமையல்கட்டுக்குப் போனாள்.

மூன்று ஆண்களுக்கும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது அங்கே தூளியில் இருந்த குழந்தை சிணுங்கியது.

“மாலா! மாலா! ஒரு நிமிஷம் வந்துட்டுப் போ. குழந்தை சிணுங்கறா பாரு,” என்று ராமரத்தினம் குரல் கொடுத்தான். ஆனால் அவள் வரவில்லை. கோமதி வந்தாள். அங்கு வந்து ரமணியின் பார்வையில் படக் கூச்சப்பட்டுக்கொண்டு அவள் கோமதியை அனுப்பி வைத்ததை அவன் புரிந்துகொண்டு புன்னகை செய்துகொண்டான். கோமதி குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுக்களைக்குப் போனாள்.

ராமரத்தினம் எழுந்து போய் மாலாவுக்கு மட்டும் கேட்கும் கிசுகிசுப்பான குரலில், “லெட்டர் எழுதுறதுக்கு மட்டும் வெக்கப்பட மாட்டியாக்கும்!” என்றான். மாலா தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.

“என்னடா சொன்னே?”

“சும்மா கேலி பண்ணினேம்மா…. அம்மா! உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்.”

“நானே உங்கிட்ட ஒண்ணு கேக்க உன்னை இங்க கூப்பிடணும்னு நினைச்சேன். ரமணி வந்திருக்கானே! ஞாயித்துக்கிழமையாவும் இருக்கு. மத்தியான நேரமாவும் இருக்கு. ஏதானும் டிஃபன் பண்ணட்டுமா?”

“பண்ணேம்மா. கேக்கணுமா? ரவா கேசரியும் பஜ்ஜியும் பண்ணு. சாதாரணமா பொண்ணு பார்க்க வர்றப்ப முக்கால் வாசி வீடுகள்லே பண்ற டிஃபன் அதானே?”

“எதுக்கும் ஒரு வார்த்தை அவன் கிட்ட சொல்லிடு…என்னமோ எங்கிட்ட கேக்கணும்னியே?”

“ஆகட்டும்….அம்மா! வேற ஒண்ணுமில்லே, ரமணிக்கு மாலாவைப் பார்த்து ஒரு வார்த்தை பேசணும்னு இருக்கும் போலிருக்கு. என்ன சொல்றே?”

“சொன்னானா?”

“இப்ப சொல்லல்லே. அன்னிக்குப் பேசினப்ப சொன்னான். “

“சரிப்பா. பேசட்டும். மொட்டை மாடிக்கு வேணும்னா கூட்டிண்டு போய் விட்டுட்டு வா. வேற எங்கேயும் வெளியில போக வேண்டாம். அதுவும் சரிதான்னு உனக்குத் தோணினா அனுப்பி வை…காலம் ரொம்பவே மாறிடுத்து. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.”

“சரிம்மா,” என்ற ராமரத்தினம் கூடத்துக்குப் போனான்.

“அம்மா கேசரியும் பஜ்ஜியும் பண்றதா யிருக்காங்க. நீ இன்னிக்கு இங்க டிஃப்ன் சாட்பிடணும். சரியா?”

“எதுக்கு வீண் சிரமம்?”

“அதெல்லாம் ஒண்ணும் சிரமம் இல்லே. சரின்னு சொல்லு.”

“சரி…”

“அது சரி, உனக்கு மாலாவைத் தனியாப் பார்த்துப் பேசணுமா?”

“பேசினா நல்லதுதான். அவ வாயிலேர்ந்து உண்மையைத் தெரிஞ்சுக்கிறது நல்லதில்லையா?”

“மாலா! ஒரு நிமிஷம் இங்க வா…”

மாலா வந்தாள்.

“ரமணிக்கு உன்னோட கொஞ்சம் பேசணுமாம். ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போங்க..அங்க போய்ப் பேசுங்க…. எழுந்திரு, ரமணி….”

அவன் எழுந்தான். இருவரையும் அழைத்துக்கொண்டு போய் ராமரத்தினம் மொட்டை மாடியில் விட்டுவிட்டுக் கூடத்துக்குத் திரும்பி வந்து சேதுரத்தினத்துக்கு எதிரில் உட்கார்ந்தான்.

“உங்க வீட்டு நாற்காலிகளை யெல்லாம் இங்க கொண்டு வந்து போட்டுட்டது வசதியாப் போச்சு. இல்லேன்னா எங்க வீட்டு வருங்கால மாப்பிள்ளையைப் பாயில உக்கார வெச்சிருந்திருப்பேன். தேங்க்ஸ்!”

“இருக்கட்டும். இதென்ன பெரிய விஷயம்? …அந்த வீட்டிலே சும்மாக் கிடந்த நாற்காலிகளை இங்க கொண்டு வந்து போட்டேன். இதுக்கெதுக்கு தேங்க்சும் இன்னொண்ணும்?”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்…”

“என்ன, ராமு?”

“அந்த முத்துவோட கம்பெனிக்கு ரிங் பண்ணிப் பேசினேன். அவன் இன்னும் ஹாஸ்பிடல்லதான் இருக்கானாம்…”

“இருக்கட்டும், இருக்கட்டும்….இனிமே ரிங் பண்ணி எதுவும் கேக்காதே. வேணாம். வம்பு…”

“ஆமாமா. இனிமே பேசமாட்டேன், சேது சார். …”

“உங்கம்மா அடுப்படியில வேலையா யிருக்காங்கல்லே? குழந்தையை நான் வேணா வெச்சுக்கறேன்….உங்க சின்னத் தங்கை அவங்களுக்கு உதவி பண்ணட்டும்.”

“கோமதி! குழந்தையை எடுத்துண்டு வந்து சேது சார் கிட்ட குடுத்துட்டுப் போ…”

சின்னப் பாயில் குழந்தையை எடுத்து வந்து கோமதி சேதுரத்தினத்தின் கையில் கொடுத்துச் சென்றாள்.

மடியில் வைத்துக்கொண்ட குழந்தையின் முகத்தை உற்று நோக்கியபடியே, “குழந்தை யார் சாயல்னு நினைக்கிறே, ராமு?” என்று கேட்ட சேதுரத்தினத்தைப் பார்த்துக் குறும்பாய்ச் சிரித்துவிட்டு, “அழகாய் இருக்காளே! அதனால உங்க மிசஸ் சாயல்னு நினைக்கிறேன்!” என்றான் ராமரத்தினம்.

“பார்த்தியா, பார்த்தியா! வார்றியே!”

“சும்மா தமாஷுக்குச் சொன்னேன், சேது சார்! உங்க அழகுக்கு என்ன? ஆனா உங்க மிசஸ் உங்களை விடவும் அழகு. அதான் ஃபோட்டோவில பார்த்தேனே!”

“ஆமா. அவ ரொம்பவே அழகுதான்….”

சமையல்கட்டிலிருந்து கேசரியின் ஏலக்காய் கலந்த நெய் மணமும் பஜ்ஜிகள் என்ணெய்யில் வேகும் கார நெடியும் காற்றில் மிதந்து கூடத்துக்கு வந்தன.

“வாசனை தூக்குறது. உங்கம்மாவுக்குக் கைமணம் ஜாஸ்தி – ஊர்மிளாவுக்கும்தான்… எது பண்ணினாலும் ருசியா யிருக்கும்…”

ராமரத்தினம் ஒன்றும் சொல்லாமல் அவனது முகத்தையே பார்த்தான். அடிக்கடி தன் மனைவி ஊர்மிளாவை நினைவு கூரும் அவனது நிலையை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ..

…. மொட்டை மாடியில் ரமணியும் மாலாவும் எதிரெதிரே சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார்கள். இருவர் முகங்களிலுமே வெட்கம் அப்பியிருந்தது.

சில நொடிகள் மவுனத்தில் கழிந்த பிறகு, “அப்புறம்? …. ஒண்ணும் பேச மாட்டியா? … அதான் லெட்டர்ல எழுதிட்டேனேன்றியா?” என்று அவன் தான் தொடங்கினான்.

அவளது முகத்துச் செம்மை தீவிரமுற்றது. தலையை உயர்த்தி அவனைப் பாராமலே, “நானா முந்திண்டு லெட்டர் எழுதினதை நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லையே?” என்று சன்னக் குரலில் வினவினாள்.

“தப்பா எடுத்திண்டிருந்தேன்னா, இங்க வந்தே இருக்க மாட்டேனே! இப்படி உன்னோட மொட்டை மாடிக்கு வந்து உக்கந்துண்டு பேசவும் மாட்டேனே! இல்லையா?”

“ஆமா… அனா நானா முந்திண்டது கொஞ்சம் அதிக்ப்படிதான்.”

“அப்படி யெல்லாம் நான் நினைக்கவே இல்லே. ஒரு பொண்ணு தன்னோட எண்ணத்தை முதல்ல வெளிப்படுத்தறது பெண்மைக் குறைவான செயல்ங்கிறதெல்லாம் பொண்ணு மேல நாம திணிச்சு வெச்சிருக்கிற சட்டம். … அது இருக்கட்டும், நீ உன்னோட லெட்டர்ல என்ன எழுதியிருந்தே?”

“……” – அவள் கணம் போல் நிமிர்ந்து அவனை நோகிய பின் மேலும் வெட்கத்துடன் தரையைப் பார்த்தாள்.

“என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேன்றே? எங்கப்பா அதை என் கண்ணுல காட்டவே இல்லே… எனக்கும் கேக்கக் கூச்சமா யிருந்தது. ஆனா எனக்கு வந்த லெட்டரை எப்படி நீங்க பிரிச்சுப் படிக்கலாம்னு சண்டை மட்டும் போட்டேன்.” – அவர் அதைத் தாம் கிழித்துப் போடு விட்டதாய்ச் சொன்னதை அவளிடம் தெரிவிக்க அவன் விரும்பவில்லை.

“உங்கப்பாவுக்கு எம்மேல ரொம்பக் கோவம் வந்திருக்கும். வந்தா, அது நியாயம்தான்.”

“என் விருப்பமும் அதுதான்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவர் கோவப்பட்றது நியாயமே இல்லே. அம்மா இல்லாம வளர்ந்த ஒரே பிள்ளையோட ஆசைக்குக் குறுக்கே ஒரு நல்ல அப்பா நிக்க மாட்டார்.”

“அப்படி ஒரேயடியா உங்கப்பாவைப் பழிச்சுட முடியாது. ஒரு பணக்காரக் குடுமத்தோட சம்பந்தம் வெச்சுக்கணும்னு அவர் நினைக்கிறது தப்புன்னு சொல்ல முடியாது. …”

“தப்புதான்! பணத்துக்கு ஆசைப்பட்றதாத்தானே அதுக்கு அர்த்தம்? அதான் லட்சம் லட்சமாச் சேர்த்து வெச்சிருக்காரே! இன்னும் என்ன ஆசை?… பணத்துலேயும் அந்தஸ்துலேயும் என்ன இருக்கு? … அது கிடக்கு. நீ என்ன எழுதியிருந்தே உன் லெட்டர்லே? ”

மீண்டும் தலை குனிந்து மவுனமாக இருந்தாள்

“வெக்கமா யிருக்காப்ல இருக்கு. சரி. ஆனா அந்த லெட்டர்ல நீ என்ன எழுதினியோ, அதை மறுபடியும் எழுதி வை. அடுத்த தரம் வரும்போது வாங்கிக்கறேன்… இல்லேன்னா நீ ஒண்ணு கூடப் பண்ணலாம்… அடுத்த தரம் நான் வரும்போது மறுபடியும் மொட்டை மாடிக்கு நாம வர உங்கம்மா சம்மதிப்பாங்களோ, என்னவோ. அதனால அதை ராஜா கிட்ட குடுத்துடு. அவன் என்கிட்ட சேர்த்துடுவான்…”

“அய்யய்யோ!”

“என்ன அய்யய்யோ! அவன் கிட்ட நானே சொல்லிட்டுப் போறேன். …”

“பின்ன சரி…..”

“அப்ப கீழே போகலாம். `என்னைக் கல்யாணம் பண்ணிக்க் உனக்கு இஷ்டந்தானே?’ ன்னு நான் கேக்குறதுக்கும், நீ `இஷ்டந்தான்’ னு சொல்றதுக்கும் இவ்வளவு நேரமான்னு எல்லாரும் நினைச்சுக்கப் போறாங்க ..” என்றவாறு ரமணி எழுந்து கொண்டான்.

அவளும் புன்னகை செய்தவாறு எழுந்தாள். பின்னர், இருவரும் ஒருவர் பின் ஒருவராகக் கீழே இறங்கி வந்தார்கள்.

திரும்பி வந்த ரமணி நாற்காலியில் உட்கார, மாலா சமையல்கட்டுக்குப் போனாள்.

“என்னடி? பேசி முடிச்சாச்சா? என்ன பேசினீங்க ரெண்டு பேரும்?” என்று பருவதம் சிரித்துக்கொண்டே கேட்ட கேள்விக்கு, “போம்மா!” என்று பதில் சொல்லிவிட்டு, “உன்னோட கேசரி-பஜ்ஜி வாசனை மொட்டை மாடிக்கே வந்துடுத்தும்மா…” என்று மாலா பேச்சை மாற்றினாள்.

“தட்டுகளை எடுத்து அலம்பித் துடைச்சு வை. நீயே மூணு பேருக்கும் கொண்டு போய்க் குடு. நல்ல வேளை. அந்தப் பிள்ளை அவங்க வீட்டிலெ ரெண்டு டைனிங் டேபிள் இருந்ததுன்னு சொல்லி அந்த மடக்கு டேபிளைக் கொண்டு வந்து போட்டது எவ்வளவு சவுகரியமா யிருக்கு! இல்லேன்னா இந்த ஜென்மத்துல நாம் டைனிங் டேபிளெல்லாம் வாங்க முடியுமா?”

“ஏம்மா அப்படிச் சொல்றே? ராஜாவுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்காமயேவா போயிடும்?….”

“பார்க்கலாம்… கடவுள் நிச்சயம் ஒரு நாள் கண் திறப்பார்… காலம் இப்படியே இருந்துடாது…..இன்னைக்குக் குடிசையில இருக்கிறவன் நாளைக்குப் பங்களாவிலே இருப்பான். இன்னிக்குப் பங்களாவில இருக்கிறவன் நாளைக்குத் தெருவுக்கே வருவான். குடிசை கூட அவனுக்குக் கிடைக்காம போயிடலாம். ஒண்ணும் சொல்ல முடியாது….”

“அம்மாவுக்கு இருக்கிற பங்களா ஆசையைப் பாரேன்!” என்று சிரித்த கோமதி, “நான் போய்க் குழந்தையை எடுத்துண்டு வரேன்…” என்ற பின் கூடத்துக்குப் போய்ச் சேதுரத்தினத்திட மிருந்து அதை வாங்கிக்கொண்டு வந்து மடியில் கிடத்தியபடி சமையல்கட்டில் சுவரோரமாய் உட்கார்ந்தாள்.

மாலா தட்டுகளில் சிற்றுண்டி வகையறாவை எடுத்துக்கொண்டு போய்க் கூடத்து மேசையில் வைத்தாள். பின்னர் ஒரு கூஜாவில் குடிக்கத் தண்ணீரும் எடுத்துப் போய் வைத்தாள். அதன் பின் மூவரும் சாப்பிட எழுந்தார்கள்.

பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசிய வண்ணம் சாப்பிட்டு முடித்தார்கள்.

அதன் பின் காப்பி வந்தது. பருகத்தொடங்கினார்கள் அப்போது வாசல் கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டது. ராமரத்தினம் பாதி குடித்த காப்பித் தம்ப்ளரை வைத்துவிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.

திறந்த கதவுக்கு வெளியே முரட்டுத் தோற்றத்துடன் ஒரு நடுத்தர வயது மனிதன் நின்றிருந்தான். “ராமரத்தினம்ன்றது நீதானா?” என்று கேட்ட அவனது மரியாதையற்ற ஒருமை விளிப்பைப் பாராட்டாமல், “ஆமா நாந்தான்.. நீங்க யாரு?” என்று அவன் மரியாதையாகவே வினவினான்.    – தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *