விக்கிப்பீடியா – 2

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

“என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”

“எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

“ஏன் கணினியைப் பயன்படுத்தவில்லையா?”

“இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியவதில்லை.”

“ராணி.. கணினியைப் பயன்படுத்தினால் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருக்காது.  நேரமும் மிச்சமாகும்”

“கோபி.. எனக்கு எப்படிச் செய்வதென்று சொல்லிக் கொடு”

“விக்சனரி என்று கட்டற்ற அகரமுதலி இருக்கிறது.  அதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளன.  ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்று வார்த்தைகளைத் தேடிக் கொள்ளலாம்”

“ரொம்ப நன்றி கோபி.. வேகமாகச் செய்ய இது உதவும் என்று எண்ணுகிறேன்.”

இந்த உரையாடலில் சொல்லப்பட்ட விக்சனரி விக்கிப்பீடியாவின் ஒரு அங்கம்.

விக்கிப்பீடியா திட்டம் ஆரம்பித்தப் பத்து ஆண்டுகளில் பல பிரிவுகளாகப் பரந்து விரிந்து வருகிறது.

தேடுவதை எளிமையாக்க இதைப் பல கிளைகளாகப் பிரித்துள்ளனர்.  அந்தக் கிளைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

விக்கி அகரமுதலி

 

விக்கி அகரமுதலி மிகவும் பயனுள்ள அகராதி.  இதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்களும் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.  தமிழில் வார்த்தைகளைக் கொடுத்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் வார்த்தைகளைக் கொடுத்து தமிழிலும் பதங்களைப் பெற ஏதுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேற்கோள்களின் தொகுப்பைக் கொண்டது. மனிதன் வாழ ஆரம்பித்தக் காலம் தொட்டு, மொழியைப் பேச ஆரம்பித்தக் காலம் தொட்டு, பலப்பல கருத்துக்களைக் கூறி வருகிறான்.  அவற்றில் பலவும் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான, பின்பற்றக் கூடிய அறிவுரைகள்.  அவற்றை மேற்கோள்களாக விக்கிப்பீடியா  தருகின்றது. ஆங்கிலத்தில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட மேற்கோள்கள் இணையேற்றப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு மொழிகளில் இருக்கும் மேற்கோள்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் இதில் தரப்பட்டுள்ளன.  இதன் காரணமாக வௌ;வேறு பகுதிகளில் மனிதன் எப்படியெல்லாம் யோசித்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

தற்போது தமிழிலும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் என்று உள்ளன.

 

இது கட்டற்ற மூல ஆவணங்களைக் கொண்டது. உலகில் பிரபலமான பல்வேறு ஆங்கில இலக்கியங்கள்;, நாடகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் மூல உள்ளடக்கங்கள் அதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மூல நூல்கள் உள்ளன.

இது ஒரு இலவச இணைய நூலகம்.  அது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமை) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும். தற்போது 1600 மூலங்கள் மட்டுமே உள்ளன.

தொல்காப்பியம் முதற்கொண்டு, திருக்குறள், எட்டும்தொகை, பத்துப்பாட்டு போன்ற தமிழ் இலக்கியங்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், சமய இலக்கியங்கள், இடைக்கால மற்றும் தற்கால இலக்கியங்கள், சிறுகதைகள், புதினங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் விக்கி மூலம்.  யாவரும் விரும்பிப் படிக்கும் வகையில் எழுதப்பட்ட கல்கியின் புதினங்கள் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்று அனைத்தையும் இதில் பெறலாம்.

சமய இலக்கியத் தலைப்பின் கீழ் குரஆன், திருவிவிலியம், மகா கருணா தாரணி, சைவ வைணவ இலக்கியங்களின் மூலங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கலாம், படி எடுக்கலாம்.

தமிழில் மதுரைத் திட்டம் இத்தகைய இலக்கியத் திரட்டினைத் தருகிறது என்பதை இங்கே அறிந்து கொள்வது நலம்.

விக்கி செய்திகள்

 

தினந்தோறும் நடக்கும் செய்திகளை அவ்வப்போது இதில் ஆர்வலர்கள் இணையேற்றி வருவதால், நமக்கு இது தினசரியாகக் காணும் வாய்ப்பினைத் தருகிறது.  தங்கள் கருத்துக்களை யாரைச் சார்ந்தும் தராமல், நடப்பதை நடக்கும் வண்ணம் தருவதால், உண்மை நிலையை அறிய உதவுகிறது.

உலகின் வௌ;வேறு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் பல, தமிழில் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் ஏற்றப்படுவதால், உலகச் செய்திகள் தரம் மிகுந்த தமிழில் தரப்பட்டு வருகின்றது.

விக்கி நூல்கள்

 

ஆங்கில விக்கி நூல்கள் பகுதியில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன.  அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.  நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொறியியல், அறிவியல் பற்றிய நூல்கள் அதிகமாக உண்டு.  குழந்தைகளுக்கு விக்கி ஜுனியர் என்ற பகுதி புகுத்தப்பட்டு, பல புத்தகங்கள் இணையேற்றப்பட்டுள்ளன.

தமிழ் விக்கி நூல்கள் இன்னும் அத்தனை வளரவில்லை. குழந்தை நூல்கள், குழந்தை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்கள் உதவி செய்தால், இதை மேன்மேலும் வளரச் செய்து, நம் சமூகத்திற்கு உதவலாம்.

விக்கி பல்கலைக்கழகம்

 

ஆராய்ச்சி மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் உதவும் வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.  கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும் இன்னும் தமிழில் இல்லை.  இதை உருவாக்க யாரேனும் முயன்றால் நன்றாக இருக்கும்.

விக்கி இனங்கள்

 

உலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய விவரங்கள் அறிவியல் ரீதியாக தரப்படும் பகுதி இது.  அதில் தற்போது இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்டக் கட்டுரைகள் உள்ளன.  இந்த உயிரினங்களின் கோவை தமிழில் இன்னும் வரவில்லை.

விக்கி பொது

 

பகிரப்பட்ட ஊடகக் கிடங்கில் இப்போது 2 இலட்சத்திற்கும் மேற்பட்டப் படங்கள் இருக்கின்றன.  இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.  வேண்டியப் படங்களை நகலெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேல்-விக்கி

 

விக்கி மீடியா நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தரும் பகுதி இது.  வௌ;வேறு திட்டங்களுக்கு இந்தப் பகுதி அடிகோலுகிறது.  திட்டமிடல், திட்ட ஆய்வு அனைத்தையும் இங்கே பெறலாம்.

ஆரம்பத்தில் விக்கிப்பீடியாவில் தமிழ்க்கட்டுரைகள் பலவற்றை எளிதில் இணையேற்ற ஒரு திட்டம் போடப்பட்டது.  மொழிபெயர்ப்பு மென்பொருளைக் கொண்டு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மாற்றி இணையேற்றம் செய்வதே அது. ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துப் பார்த்தனர்.  ஆனால் அவற்றின் தரம் அத்தனை உகந்ததாக இல்லாததாலும், திருத்தங்கள் செய்வது கடினமாக இருந்த காரணத்தாலும், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆர்வலர்களின் உதவியால் இன்று தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்து கொண்டே வருகிறது.  கலைக்களஞ்சியமாக உலகத் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் பெட்டகமாக விளங்கும் விக்கிப்பீடியா நமக்காக, நம்மவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி.  இது மேன்மேலும் வளர்ந்து அரிய பொக்கிஷமாக ஆக்க நீங்களும் இதில் உங்கள் பங்களிப்பைத் தரலாம்.  அதை எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

 

 

Series Navigationபிஞ்சுத் தூரிகை!தரிசனம்